
மூளை என்னும் முதல்வன்
திரு.A.மோகனராஜூ,சேலம்
உலகில் தனித்திறன் உள்ளவர்கள் பலருண்டு. ஆனால் அனைவரோடும் எவ்வித மாறுபாடும் இன்றி கலந்து பழகி வெற்றியை வசமாக்குபவர்கள் சிலரே உண்டு. உலகின் வளர்ச்சி, நிறுவனத்தின் வளர்ச்சி, நாட்டின் எழுச்சி, ஏன் குடும்பத்தின் மகிழ்ச்சி என்று அனைத்துமே கூட்டாக முயல்வதனால் உண்டாகக்கூடியது எனக்கூறலாம். கூட்டாக அனைவரையும் அரவணைத்துச் செயல்படுவதற்கு எவ்விதக் குணநலன் மிக முக்கியமாகும் என எண்ணும்போது, உடனே அனைவரின் சிந்தையையும் உரசுவது, வேறுபாடு எதுவுமின்றி அனைவரிடமும் பழகக்கூடிய மனவிரிவு நலன் எனலாம். இம்மனநலன் அனைவருக்கும் உள்ளதா? என்ற அறிவார்ந்த வினாவினை எழுப்பினால், வெகு சிலரே என்ற உற்ற புரிதலானது புலப்படும். மனிதர்களிடையே மாறுபாடுகளை ஏற்படுத்தக்கூடிய குறுகியப்போக்குளை திருக்குறளானது
“இகல்” என வரையறைத்துக் கூறும்.
“பகலென்னும் பண்பின்மை பாரிக்கும் நோய்” (குறள்.851) இதனை ஒரு நோய் என்று குறள்
சாடுவதை அறியமுடிகின்றது, இந்நோயை,
“இகலென்னும் எவ்வநோய் நோக்கின்” (குறள்.851) என்ற குறட்தொடரானது, மாறுபாட்டுக் குணத்தைத் துன்பம் தரக்கூடிய நோய் என்று வரையறுக்கின்றது குறள். இந்நோயை நீக்கின் எவ்வகையான ஆக்கங்களைப் பெறமுடியும் என்பதனையும் தீர்வாகத் தருகின்றது குறள்.(854)
“இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலலென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்” (குறள்.854)
துன்பங்களையே தரக்கூடிய இகல் என்ற மாறுபாட்டுணர்வை ஒருவர் போக்கினால் மட்டுமே, இன்பங்களின் முழுமையைப் பழுதற உணர-உய்க்க முடியும் என்ற ஆன்ற தீர்வையும் மிகத் தெளிவாகத் தருகின்றார். மாறுபாட்டுணர்வுக்குப் பல காரணங்களிருப்பினும், சில அதிமுக்கியக் காரணங்கள் ஒட்டுமொத்தக் குழுவுணர்வின் அடிப்படைகளைத் தகர்த்துவிடுகின்றன.
1. தனக்கு மட்டுமே தெரியும் என்ற மிகை உணர்வு.
2. அடுத்தவர்கள் தம்மைவிடத் தரம் குறைந்தவர்கள் என்ற ஆதிக்க உணர்வு.
3. தனக்கு மட்டுமே அனைத்துப் பெருமிதங்களும் சேரவேண்டும் என்ற சுயநல உணர்வு.
4. அனைவரின் ஆற்றலையும் ஒருங்கிணைத்தால் மட்டுமே திறமிக்கச் சாதனைகள் உருப்பெறும் என்பதனை அறிந்தும் செயல்படுத்தாத புல்லறி உணர்வு.
5. இயல்பாகவே தம்மைத் தனிமைப் படுத்திக் கொள்ளும் குறை உணர்வு.
என்றாக, இகல் உணர்வின் வெளிப்பாடுகள் அமைந்து, அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டிய குழுவுணர்வினைச் சிதைத்து விடுகின்றன.
ஒரு நிறுவனம், அரசாங்கத் துறைகள் என அனைத்திலும் ஒரு சிலரின் திறன்கள் மட்டுமே ஒட்டுமொத்த ஆக்கங்களை மக்களுக்குத் தந்துவிடுவதில்லை. அனைத்துப் பணியாளர்களின் ஒட்டுமொத்த கூட்டுமுயற்சியால் மட்டுமே, வரையறுக்கப்பெற்ற திட்டங்கள் பயனுறு செயல்களாகப் பரிணமிக்கின்றன என்பது கண்கூடாக உள்ளமையை அனைவராலும் அறியமுடியும்.
“இன்சொல் இனிதீன்றல் காண்பான்” என்ற குறள் 99 வழி, ஆக்கச் சொற்களால் உடன் இருப்பவர்களை இருத்திக்கொண்டு குழுவுணர்வோடு வெற்றி பெறலாம்.
1. ‘நான் ஒரு தவறு செய்துள்ளேன் எனபதனை ஒப்புக்கொள்கிறேன்’ என்ற ஆறு சொற்கள்
2. ‘நீங்கள் ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்துள்ளீர்கள்’ என்ற ஐந்து வார்த்தைகள்.
3. ‘உங்கள் கருத்தும் அபிப்ராயமும் என்ன?’ என்ற நான்கு வார்த்தைகள்
4. ‘உங்களுக்கு விருப்பம் இருந்தால்’ என்ற மூன்று வார்த்தைகள்
5. ‘மிக்க நன்றி’ என்ற இரண்டு வார்த்தைகள்
6. ‘நாம்’ என்ற ஒரே வார்த்தை.