அறிவியலின் கதை -05
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு

கிரேக்கத்தின் ஆரம்பக்கட்ட சிந்தனையார்களில் ஒருவர் தேல்ஸ். அன்றைக்கு மிலேடஸ் (இன்றைய துருக்கி) என்று அறியப்பட்ட பகுதியில் வாழ்ந்தவர். தொழில் ரீதியாக வணிகர். ஆனால் வானியலிலும் கணிதத்திலும் ஆர்வம் செலுத்தியவர். தேல்ஸ் எழுதிய எழுத்துக்கள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அவரைப் பற்றி பிற சிந்தனையாளர்கள் குறிப்பிட்ட விஷயங்கள் நமக்குக் கிடைக்கின்றன.

அதில் ஒரு பிரபலமான கதை, நட்சத்திரங்களை அவர் ஆராய்ந்தது பற்றியது. வானத்தைப் பார்த்து நடந்தபடியே நட்சத்திரங்களை ஆராய்ந்த தேல்ஸ் அப்படியே கிணற்றில் விழுந்து அடிப்பட்டுக்கொண்டார். அந்த அளவுக்கு தன்னை மறந்து அவர் அறிவியல் ஆய்வுகளில் ஈடுபட்டார் என்று இதன் மூலம் தெரிகிறது.

இவரைப் பற்றி இன்னொரு கதையும் உண்டு. தேல்ஸ் அப்போது பயிரிடப்பட்டிருந்த ஆலிவ் மரங்களை ஆராய்ந்து வந்திருக்கிறார். கவனித்ததில் அந்த வருடம் நல்ல விளைச்சல் இருக்கும் என்பதை முன்பே ஊகித்து அறிந்துவிட்டார். உடனே அந்த ஊரில் ஆலிவ் காய்களை அரைத்து எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் எல்லாச் செக்கு கருவிகளையும் குறைந்து விலைக்கு வாங்கிவிட்டார். இப்போது விளைச்சல் முடிந்தவுடன் எல்லோருக்கும் கருவிகள் தேவைப்பட்டன. ஆனால் ஊரில் உள்ள கருவிகள் அனைத்தும் இப்போது தேல்ஸிடம்தான் இருந்தன. அவரிடம் அதிக விலை கொடுத்து அதை வாடகைக்கு அவர்கள் எடுக்க வேண்டியது இருந்தது.

இந்தக் கதையின் மூலம் அறிவியல் ஞானத்தை பணம் ஈட்ட பயன்படுத்திய முதல் அறிவியலாளரும் அவர்தான் என்று தெரிகிறது. கிரேக்க சிந்தனையாளர்கள் என்றவுடனேயே நம் நினைவுக்கு வரும் சாக்ரடிஸ் வாழ்ந்த காலத்துக்கு முன்பே வாழ்ந்த நபர்தான் இந்த தேல்ஸ்.
இயற்கை நிகழ்வுகளும் தர்க்கமும் தேல்ஸ் எகிப்துக்குச் சென்று அங்கிருந்த கணிதச் சிந்தனைகளை கிரேக்கத்துக்கு எடுத்து வந்தார்.

தான் எகிப்தில் கண்ட இயற்கை சார்ந்த நிகழ்வுகளை தர்க்க (Logically) ரீதியாக விளக்கவும் செய்தார். உதாரணமாக எகிப்தில் விவசாய நிலங்கள் செழிப்பாக இருப்பதற்கும் நைல் நதியில் ஆண்டு தோறும் ஏற்படும் வெள்ளம்தான் என்று அவர் கூறினார். அதேபோல் நில அதிர்வு ஏற்படுவதற்குக் காரணம், பூமிக்கு அடியில் உள்ள நீர் சூடாவது என்று ஒரு விளக்கம் கொடுத்தார். அதாவது நீரை நெருப்பில் வைத்தால் நன்கு சூடானவுடன் கொதிக்க ஆரம்பித்துவிடும் இல்லையா? அப்போது ஒரு சலம்பல் இருக்குமல்லவா? அதுபோல் பூமிக்கு கீழ் உள்ள நீர் சூடாகி சலம்பும்போது நில அதிர்வு ஏற்படுகிறது என்றார் தேல்ஸ்.

தேல்ஸின் இத்தகைய கருத்துக்கள் இப்போது முட்டாள்தனமாகத் தோன்றலாம். ஆனால் அந்தக் காலத்தில் நில அதிர்வுக்கும் எகிப்தில் விளைச்சலுக்கும் கடவுளின் செயலே காரணம் என்று நம்பப்பட்டு வந்த நிலையில் ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்குப் பின்னாலும் கடவுளோ மந்திரமோ அல்ல; இயற்கையின் இயக்கம்தான் காரணமாக இருக்க வேண்டும் என்று தர்க்க ரீதியாக விளக்கம் கொடுக்க முயன்றவர் தேல்ஸ்.

அணுவாதிகள்

தேல்ஸைப்போலவே மிலேடஸில் வாழ்ந்த இன்னொரு நபர் அனக்ஸிமேண்டர். இவர் அண்டத்தில் மிக முக்கியமான பொருள் நெருப்பு என்று கருதினார். அதன்பின் வந்த எம்பெடோகிள்ஸ் எல்லாப் பொருட்களும் நீர், நெருப்பு, நிலம், காற்று ஆகியவற்றால் உருவாகி இருக்கின்றன என்றார். இந்தக் கருத்து மிகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக நம்பப்பட்டு வந்தது. மத்தியக் காலகட்டத்தின் (Medieval Period) இறுதியில்தான் இந்தக் கருத்து முடிவுக்கு வந்தது.

இந்த நிலம், நீர், காற்று, நெருப்பு என்கிற கருத்தைப் பெரும்பாலானோர் ஏற்றுக்கொண்டாலும் சிலர் மட்டும் ஏற்கவில்லை. குறிப்பாக பண்டைய கிரேக்கத்திலும் பண்டைய ரோமிலும் இருந்த அணுவாதிகள் (Atomist) என அறியப்பட்டோர் இந்தக் கருத்தை எதிர்த்தனர். அணுவாதிகள் என்பவர்கள் வேறு யாரும் இல்லை; இந்த உலகில் உள்ள அனைத்துமே அணு (Atom) என்று அழைக்கப்படும் சிறிய துகள்களால் உருவாகியுள்ளன என்று நம்பிய சிந்தனையாளர்களே அணுவாதிகள் என அறியப்பட்டனர். இவர்களுள் முக்கியமான சிந்தனையாளர் டெமோக்ரிடஸ். இவர் வாழ்ந்த காலம் கி.மு. 420 – ஆம் ஆண்டு.

இன்றைக்கு நவீன அறிவியல் நினைத்தே பார்க்க இயலாத அளவு வளர்ந்துவிட்டது. குறிப்பாக நாம் இருக்கும் பேரண்டம் (Universe) குறித்தும், அதிலுள்ள பொருட்கள் குறித்தும் நிறையவே அறிந்து வைத்திருக்கிறோம். அண்டத்திலுள்ள அனைத்தும் அணுக்களால் (Atoms) ஆனவை என்றும், இன்றைக்கு நாம் காணும் உயிரினங்கள் அனைத்தும் முதன்முதலில் தோன்றிய ஒற்றைச் செல் உயிரினங்களில் இருந்து பரிணமித்து (Evolution) வந்தன என்பதையும் இன்றைய அறிவியல் உண்மை என நிரூபித்துவிட்டது. ஆனால் இதற்கான தொடக்கக்கட்ட சிந்தனை, பண்டைய கிரேக்கத்தில் அணுவாதிகளிடம் இருந்தது என்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம்.

டெமோக்ரிடஸ் இந்த அண்டம் முழுவதும் கணக்கிட இயலாத அளவு அணுக்கள் இருக்கின்றன என்றார். அணுக்கள் எப்போதும் இருந்திருக்கின்றன, அணுக்களை உடைக்கவோ அழிக்கவோ முடியாது. நம்மால் பார்க்க முடியாத அளவுக்கு சிறிய அளவில் அவை இருக்கும். அவை வெவ்வேறு அளவுகளில் வெவ்வேறு வடிவங்களில் இருப்பதால்தான் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையில், ஒவ்வொரு சுவையில், ஒவ்வொரு உணர்வைத் தரக்கூடியதாக இருக்கிறது எனக் கூறினார்.

இன்றைக்கு நாம் அதிநவீன எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப்களைப் பயன்படுத்தி அணுக்களைப் பார்க்கிறோம். அன்றைக்கு அதற்கான கருவிகளோ சாத்தியங்களோ ஒன்றுமே கிடையாது. இருந்தாலும் அப்போதே இப்படி ஒரு கருத்தை அவர் முன்வைத்தார் என்பது ஆச்சரியமே.
டெமோக்ரிடஸ் அத்தோடு நிற்கவில்லை. இதைவிட ஆழமான கருத்துக்களையும் கூறினார்.

இந்த உலகில் சுவை, மணம், நிறம், வடிவம் எல்லாமும் இருப்பதற்குக் காரணம் மனிதர்களால் அவற்றை உணர முடிவதால்தான் என்றார். அதாவது உண்மையில் இந்த அண்டத்தில் அணுக்களையும் வெற்றிடத்தையும் தவிர எதுவுமே இல்லை. அதைத்தான் நாம் பருப்பொருள் (Matter) என்றும், வெளி (Space) என்றும் கூறுகிறோம். மனிதர்களின் புலன்கள்தான் (Senses) ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மை கொடுக்கிறது என்பது அவரது நிலைபாடு.