கேட்டலும் அறிதலும் –
திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்

வணக்கம் ஐயா..

வணக்கம் .. வணக்கம்.. எல்லோரும் எப்படிப் பொங்கல் கொண்டாடினீர்கள்..?
ஐயா, நான் சென்ைனயிலுள்ள என் பெரியப்பா வீட்டுக்குப் போயிருந்தேன். திரும்பிவர ரயிலில் டிக்கெட்டே கிடைக்கவில்லை. பஸ்சிற்குக் கூடுதல் கட்டணம் கொடுக்கவேண்டியதாயிற்று. ரயில் கட்டணங்களும் உயர்த்தப்பட்டிருக்கிறது என்று சொன்னார்களே என்றான் அபினாஷ்.
ரயில் கட்டணம் மிகச் சொற்ப அளவே அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ரயிலில் முன்பதிவு செய்து பயணித்திருக்கலாமே. அதிருக்கட்டும். இந்தியாவில் ஒரு ரயில் இலவசமாக இயங்கிக்கொண்டிருக்கிறது தெரியுமா?

இலவசமாகவா..?

ஆமாம் இந்தப் பக்ரா-நங்கல் ரயிலானது, பஞ்சாபின் நங்கல் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் பக்ராவுக்கும் இடையே 13 கி.மீ. தூரம் பயணிக்கிறது. இது அழகிய சட்லஜ் நதி மற்றும் சிவாலிக் மலைகளின் வழியாகச் செல்கிறது. இந்த ரயில் சேவை 1948 – இல் ஆசியாவின் மிக உயரமான அணைகளில் ஒன்றான பக்ரா-நங்கல் அணையின் கட்டுமானத்திற்காகத் தொழிலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது அன்றிலிருந்து இந்த ரயில் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. 1953 – ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட டீசல் என்ஜின்கள் இதில் பொருத்தப்பட்டன.

இதில் இலவசப் பயணம் பற்றிய செய்தியே இல்லையே..

பொறு.. சொல்றேன்.. அணை கட்டி முடிக்கப்பட்டவுடன் பக்ரா-நங்கல் அணையின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவுகூறும் வகையிலும், உள்ளூர்வாசிகளைக் கௌரவிக்கவும் இந்த ரயிலை இலவசமாக இயக்க பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் (BBMB) முடிவு செய்தது. ஒரு மணி நேரத்திற்கு 20 லிட்டர் எரிபொருள் செலவழித்தாலும், இந்தப் பகுதி மக்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அணை கட்டுமானத்தில் பங்கேற்றவர்களின் நினைவாகவும் இந்த ரயில் பயணம் இலவசமாகத் தொடர்கிறது.

இதில் பயணிகள் பயணிக்கிறார்களா ஐயா?

ஆமாம்.. இந்த ரயிலில் தினமும் சுமார் 800 பேர் பயணம் செய்கின்றனர். இந்த வழித்தடத்தில் 3 சுரங்கப்பாதைகள் மற்றும் 6 ரயில் நிலையங்கள் உள்ளன. சிவாலிக் மலைகள் மற்றும் சட்லஜ் நதியின் மீது கட்டப்பட்ட பாலங்கள் வழியாகச் செல்லும் இந்தப் பயணம், சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தைத் தருகிறது. ஆடம்பர வசதிகள் இல்லாவிட்டாலும், அதன் மர சீட்டுகளும், பழமை மாறாத ரயில் பெட்டிகளும் பழங்காலத்திற்கு அழைத்துச் செல்கின்றன. அரசாங்கங்கள் மாறியிருந்தாலும், ரயில்வே அமைப்பில் நவீன மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஒரு சேவை மட்டும் மாறாமல், அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து இலவசமாக இயங்கி வருகிறது. அடுத்து ரமேஷ், பொங்கல் செய்தி சொல்லு..

ஐயா, நான் காணும்பொங்கலுக்கு எங்க பகுதி கடற்கரைக்குச் சென்றிருந்தேன். கடற்கரையில் எங்குப் பார்த்தாலும் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள்.. பார்க்கவே அசிங்கமாக இருந்தன.

உண்மைதான். தமிழகக் கடற்கரை 1,076 கி.மீ. நீளமானது. இது இந்தியாவின் கடற்கரையின் நீளத்தில் 15 சதவிகிதமாகும். நம் கடலோரங்களில் கைவிடப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், நெகிழி (பிளாஸ்டிக்) உள்ளிட்ட குப்பைகள், கழிவுகள் நிறைந்திருப்பதாக ஒரு செய்தி படித்தேன். இது குறித்த ஆய்வை தமிழக அரசின் சார்பில் தனியார் நிறுவனம் மேற்கொண்டது. தமிழகக் கடற்கரையில் உள்ள 13 மாவட்டங்களில் 52 கடலோர கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன.

குப்பைகளில் 47.46 சதவிகிதம் கைவிடப்பட்ட மீன்பிடி உபகரணங்கள், மிதவைகளின் கழிவுகள் ஆகும். இதன் அளவு ஆண்டுக்கு 4,554 டன்னாகும். இதேபோன்று, இந்தக் குப்பைகளில் நெகிழிக் கழிவுகளின் பங்கு 39.64 சதவிகிதமாகவும் நெகிழி அல்லாத பொருள்களின் கழிவுகளின் பங்கு 12.9 சதவிகிதமாகவும் இருந்தன. தமிழகத்தில் 31 சதவிகித கடற்கரைகள் சுகாதாரமற்றதாகவும், 46 சதவிகிதம் தீவிர சுகாதாரமற்றதாகவும் 39 சதவிகித கடற்கரைகளில் அதிக நெகிழிக் கழிவுகளும், 62 சதவிகிதக் கடற்கரைகளில் அபாயகரமான கழிவுகளும் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவை கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுச்றுத்தலாக விளங்குகின்றனவாம்.

கடல் வாழ் உயிரினங்களுக்கு எப்படி ஐயா ஆபத்து?

நாம் ஒருமுறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறியும் நெகிழி உறைகள், பாட்டில்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவை மழைக் காலத்தில் ஓடைகள், கழிவு நீர்க் கால்வாய்கள் மூலம் கடலுக்குள் சென்று சேருவதால் நீர் மாசுபட்டுக் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. காலப்போக்கில் நெகிழிப் பொருள்கள் நுண்ணிய (மைக்ரோ) பிளாஸ்டிக்காக உடைவதால் அவற்றை உணவு என நினைத்துக் கடல்வாழ் உயிரினங்கள் உண்கின்றன. இது அந்த உயிரினங்களுக்குத் தீங்கு விளைவிப்பதுடன் கடல் உணவுகளை உண்ணும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. சுகாதாரமற்ற கடற்கரைகளால் சுற்றுச்சூழல் மட்டுமல்ல, சுற்றுலாவும் பாதிக்கப்படுகிறது. நமது நாட்டில் மட்டுமல்ல, உலக அளவில் எல்லா நாடுகளும் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றன.

அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா?

இந்தப் பாதிப்புகளை எதிர்கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஒன்பது கடலோர மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகளில் மத்திய அரசின் கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் அவ்வப்போது ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கடற்கரைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள், பள்ளி – கல்லூரி மாணவர்கள், தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் ஆகியவை நடத்தப்படுகின்றன. கை விடப்பட்ட மீன்பிடி உபகரணங்களை அளிக்கும் மீனவர்களுக்கு கிலோவுக்கு ரூ.38 வீதம் கடந்த ஓராண்டில் மட்டும் ரூ.9.93 லட்சம் ஊக்கத் தொகையை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதுபோன்ற முதல் மையம் சென்னை காசிமேட்டில் கடந்த ஆகஸ்ட் 2024- இல் தொடங்கப்பட்டது. இதில் கடந்த ஓராண்டில் 26,101 கிலோ கழிவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது; இவற்றில் 23,270 கிலோ மீன்பிடி உபகரணங்கள் அங்கீகரிக்கப்பட்ட மறு சுழற்சி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு மீண்டும் பயன்படுத்துத் வகையில் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சரி.. பொங்கல் பற்றிப் பேசிட்டு இருந்தோம்..