என் பார்வையில் பிரிட்டன் – 03
பேரா. வெ.இன்சுவை

ம்ம ஊரில் மருத்துவர்களில் அதிகம் பேர் சிரிக்கவே மாட்டாங்க. நோயை விட அவர்களைக் கண்டு நாம் அதிகம் பயப்படுவோம். இங்கே ஒரே வரவேற்பு. ஆரம்பகட்ட வேலையைத் துவங்கினார்கள். உடம்பை வளைத்து முதுகுத் தண்டில் ஊசி போட வேண்டும். முயற்சித்தார்கள்; முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள். ஊசியை உள்ளே செலுத்துவதும், பின் எடுப்பதுமாக இருந்தார்கள். வலி பொறுக்க முடியவில்லை. பல்லைக் கடித்து வலி பொறுத்தேன். தாங்க முடியாமல் ‘அம்மா’ என்று கத்தினேன். அம்மா உதவிக்கு வரவில்லை. ‘முருகா’ என்று கூப்பிட்டேன். அவர்களுக்குப் புரியவில்லை. ஒரு வழியாக, லோக்கல் கொடுத்தாச்சு என்று சொன்னார்கள்.
படுக்க வைத்து, கத்தியைக் கொண்டு ஒரு ‘கிழி’ கிழிக்கத் தொடங்கியவுடனே, வலி பொறுக்க முடியாமல் அலறிவிட்டேன். அனஸ்தீசியா போதவில்லை; மிகவும் வலிக்கிறது என்றேன். அவர்கள் உடனே பதறிப்போய், ஒரு மருந்தை ஊசி மூலம் செலுத்தியதும், நான் மயங்கிப் போனேன். அறுவை சிகிச்சை முடிந்து அரை மணிநேரம் கழித்து, கண் விழித்தேன். அறைக்குக் கொண்டுவரப்பட்டேன். நானே போன் செய்து உறவுகளிடம் ‘ஆபரேஷன் முடிந்தது’ என்று சொன்னேன். என்னால் உடலை அசைக்க முடியவில்லை. வாந்தி வரும் போல இருந்தது. கடும் பிரயத்தனப்பட்டு நர்ஸை அழைப்பதற்குள் வாந்தி எடுத்துவிட்டேன். இரவு முழுவதும் வலியோடும், பசியோடும் தனியாகக் கிடந்தேன். நம்ம ஊர் என்றால் எத்தனை பேர் உடன் இருப்பார்கள்! மனசுக்குள் அழுதேன். ‘வேறு நாட்டில் வந்து, இப்படி அனாதையாகக் கிடக்கிறேனே’ என்ற ஆற்றாமை அதிகம் இருந்தது. என் மகனின் தவிப்பையும், கணவரின் வேதனையையும் சொல்லி மாளாது.

விடிந்தது. வலியும், தனிமையும். மருந்து கொடுக்க மட்டுமே அருகில் வந்தார்கள். அன்றைய உணவும் பிடிக்கவில்லை. சிரமப்பட்டு கொஞ்சம் காபி குடித்தேன். போனில் என் மகனிடம் சொன்னேன். சாப்பாடு பிடிக்கவில்லை என்றேன். என் மகன் மருத்துவமனை நிர்வாகத்திடம், நான் வீட்டில் இருந்து உணவு கொணர்ந்து தருவதற்கு அனுமதி கேட்டிருக்கிறார். அவர்கள் மறுப்புச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் நிறைய வாதாடி, மன்றாடி அனுமதி கேட்டிருக்கிறார். அவர்கள் மறுப்பு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவர் நிறைய வாதாடி, மன்றாடி அனுமதி பெற்றுவிட்டார்.

அன்று காலை ஒருவர் என் வார்டுக்கு வந்து என் பெயரைச் சொல்லி ‘‘யார்?’’ எனக் கேட்டார். (என் பெயர் அவர் வாயில் நுழையவில்லை) நான் கையை உயர்த்தியதும், என்னிடம் வந்து ஒரு பையைக் கொடுத்தார்.

‘‘உங்கள் உணவு. உங்கள் மகன் நிறைய வாதாடி, போராடி அனுமதி பெற்றுவிட்டார். அவர் அழுதேவிட்டார். அந்த அன்புக்கு முன் எங்கள் பாலிசி ஒன்றுமில்லை. பர்மிஷன் கொடுத்துவிட்டோம். இந்த மருத்துவமனையின் வரலாற்றிலேயே வீட்டு உணவை அனுமதிப்பது இதுவே முதல் முறை. உங்கள் மகனின் பாசம் வலிமையானது’’ என்று கூறினார். கலங்கிய கண்களுடனும், கனத்த உள்ளத்துடனும் அதை வாங்கிக் கொண்டேன். ஒரு டப்பாவில் நான்கு இட்லிகள், தக்காளித் தொக்கு இருந்தது. என் கணவர், அவருக்குத் தெரிந்த அளவில் சமைத்துக் கொடுத்துள்ளார். என் வாழ்நாளில் நான் சாப்பிட்ட அருமையான, ருசியான உணவு என்று அதைச் சொல்லணும். தேவாமிர்தம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அந்த இட்லிதான் அப்போது எனக்கு தேவாமிர்தம். இன்னும் இரண்டு இட்லி சேர்த்து வைத்திருக்கக் கூடாதா? என்று நினைத்ேதன். மதிய உணவும் கொண்டு வருவதாக மகன் சொன்ன போது சந்தோஷமாக இருந்தது. மருத்துவமனைக்கும் வீட்டுக்கும் இடையே அதிக தூரம்.

அடுத்து இயன்முறை மருத்துவர் வந்தார். அவரைப் பற்றி சொல்வதற்கு முன் அந்த மருத்துவமனையைப் பற்றி சொல்கிறேன். சவுத் ஆம்டனில் உள்ள ராயல் சவுத் ஹான்ஸ் மருத்துவமனை. மிகப்பெரிய மருத்துவமனை. 1835ஆம் ஆண்டு கட்டப்பட்டது. அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை மட்டுமே எடுத்துக் கொண்டார்கள். மற்றபடி சாதாரண உடல் உபாதைகளுக்கு அனுமதி இல்லை. இந்த மருத்துவமனை ஒரு காலத்தில் புற்றுநோய் சிகிச்சையில் உலகத்தரம் வாய்ந்த மையமாகத் திகழ்ந்தது. இது கனிவான மற்றும் அமைதியான சூழலுக்குப் பெயர் பெற்றது. ஆக ‘பெத்த ஆஸ்பிடலில்’ வைத்தியம் பார்த்துக் கொண்ட பெருமை எனக்கு.