ஐந்து ஆறைவிடப் பெரியது 28

திரு.முகில்

னை, வேழம், களிறு, களபம், மாதங்கம், அரசுவா, அல்லியன், ஆம்பல், ஆனை, இபம், இரதி, குஞ்சரம், இருள், தும்பு, வல்விலங்கு, பெருமா, கும்பி, கரி, கயம், தந்தாவளம், கடகம்… இன்னும் ஏராளமான தமிழ்ச் சொற்கள் உண்டு. பிடி, அதவை, வடவை, கரிணி, அத்தினி இவை எல்லாம் பெண் யானையைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள். கயந்தலை, போதகம், துடியடி, களபம், கயமுனி – இவை யானைக்கன்றை விளிக்கும் சொற்கள்.

யானை நம் விலங்கு. ஆதியிலிருந்தே தமிழர்களின் வாழ்வுடனும் பண்பாட்டுடனும் நம்பிக்கைகளுடனும் ஒன்றிணைந்த விலங்கு. பழந்தமிழ் இலக்கியங்கள் எங்கும் யானைகள் நீக்கமற நிறைந்துள்ளன.

தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா அடியான் பணை எருத்தின,
தேன் சிதைந்த வரை போல,
மிஞிறு ஆர்க்கும் கமழ்கடா அத்து,
அயறு சோரூம் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு…

ஒரு கம்பீர யானையின் தோற்றத்தை புறநானூற்றில் அற்புதமாகச் செதுக்கியிருக்கிறார் புலவர் குறுங்கோழியூர்க்கிழார். துதிக்கையை அசைத்துக் கொண்டு, பெருமிதமாகத் தோளை உயர்த்தி நடக்க, அதற்கேற்ப அதன் மீது அணியப்பெற்றிருக்கும் இருபுற மணிகளும் மாறி மாறி ஒலிக்க, வளைந்த தந்தங்களுடன், பிறை போன்ற நெற்றியுடன், சினம் மிகுந்த பார்வையுடன், பரந்த காலால் அடி எடுத்து வைத்து, பருத்த கழுத்துடன் இரும்பைப் போன்ற வலிமையான தலையுடன், தேன் சிந்தும் மலைபோல வண்டு மொய்க்க ஒழுகும் மதநீர் கொண்ட வாலிபக் களிறு!

சோழமன்னன் கிள்ளிவளவனுடைய யானை போர்க்களத்துக்குச் சென்று திரும்பியிருந்தது. கொடிகள் கட்டிய மதில்கள் மேல் பாய்ந்ததால் அதன் கொம்புகளும், பகை மன்னர்களின் மணிமுடிகளை இடறியதால் அதன் கால் நகங்களும் ஒடிந்தும் தேய்ந்தும் போயிருந்தன. இப்படித் தன் அழகை இழந்த நிலையில், அந்த ஆண் யானை, தன் பெண் யானைக்கு முன்னால் வருவதற்கு வெட்கப்பட்டு நகரின் உள்ளே வராமல், புறத்திலேயே நின்றுவிட்டது என்கிறது முத்தொள்ளாயிரம். இது போர்க்காட்சி. மூவேந்தர்களிடமும் யானைப் படைகள் இருந்தன. ஒவ்வோர் அரசரும் தனது வலிமையை நிரூபிக்க யானைப் படைகளையே பெரிதும் நம்பியிருந்தனர் என்பதைச் சங்க இலக்கியங்கள் மூர்க்கமாகவும் தீர்க்கமாகவும் காட்சிப்படுத்துகின்றன.

யானை மரப்பட்டையை உரிக்க மரத்தைக் குத்தும். அதில் பாய்ந்த தன் வெள்ளைக் கொம்புகளை அதனால் பிடுங்க முடியாத நிலையில் தன் துதிக்கையை மரத்தில் ஊன்றித் தள்ளிக்கொண்டு தன் கொம்பை இழுக்கும். அப்போது அதன் துதிக்கை மரத்தில் ஏறும் மலைப்பாம்புபோல் தோன்றும். இப்படிப்பட்ட காட்டில், வறண்ட கோடைக்காலத்தில் அவர் சென்றுள்ளார். அவரை நினைத்து என் கண்கள் மூடவில்லை என்று அகநானூற்றின் 391-ஆம் பாடலில் தலைவனைப் பிரிந்த தலைவி, தோழியிடம் புலம்பித் தவிக்கிறாள். இது அன்றாட வாழ்க்கைக் காட்சி.

‘‘சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற் பட்டுப்பா டூன்றுங் களிறு’’. போர்க்களத்தில் உடல் முழுவதும் காயம்பட்டு இருந்தாலும், யானை உறுதி தளராமல் நிற்கும். அதுபோல மனத்தில் ஊக்கம் உடையவர்கள் அழிவே வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படவே மாட்டார்கள் என்று வள்ளுவரும் ஊக்கமுடைமை அதிகாரத்தில் ஆனையை ஆரத் தழுவுகிறார்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன். யானைப் பசிக்கு சோளப்பொறி. ஆனை கேட்ட வாயால் ஆட்டுக்குட்டி கேட்கிறதா? ஆனைக்கு சிட்டுக்குருவி மத்தியஸ்தம் போனாற்போல. ஆனை படுத்தால் ஆள் மட்டம். ஆனை பார்க்க வெள்ளெழுத்தா? ஆனையை விற்று துறட்டிக்கு மன்றாடுகிறான். யானை வாயில் போன கரும்புபோல. ஆனை வால் பிடித்து கரை ஏறலாம், ஆட்டின் வால் பிடித்து கரை ஏற முடியுமா? தமிழர்களின் பழமொழிகள் எங்கும் யானைகள் வசதியாகவும் வசவாகவும் மேய்கின்றன.

யானைகளைப் போல குடும்பப் பாசம் கொண்ட விலங்குகளைக் காண முடியாது. சுமார் 50 யானைகள் வரை கூட்டமாக இருப்பதுண்டு. கூட்டத்தில் பெண்களே அதிகம். அதில் ஆண் யானைகளுக்கு நிரந்தரப் பொறுப்போ, இடமோ கிடையாது. வயதான பெண் யானையே, கூட்டத்தின் ராஜமாதா. சுமார் 12 வயதான பின் கூட்டத்தில் இருக்கும் ஆண் யானைகள் விலகி விடும் அல்லது விலக்கப்படும். காரணம் எளிமையானது. ஒரே கூட்டத்துக்குள் ஆண் யானை இனப்பெருக்கம் செய்யக்கூடாது என்பதுதான். அதனால், மரபு சார்ந்த நோய்கள் வரும் என்பதையெல்லாம் எந்த ஆய்வும் செய்யாமலேயே யானைகள் இயற்கையாகவே அறிந்து வைத்திருக்கின்றன.

பிரிந்து செல்லும் ஆண் யானைகள், வேறு கூட்டத்துப் பெண் யானையைத் தேடிச் செல்லும். சந்ததியைப் பெருக்கும். பின்பு அந்தக் கூட்டத்திலிருந்தும் விலகி விடும். தனியாகத் திரியும் ஆண் யானைகள் ஒன்று சேர்ந்து சிறு குழு அமைப்பதுண்டு. அதுவும் நீண்ட காலத்துக்கும் நீடிக்காது. தவிர, ஒரு பெண் யானைக்காக, இரண்டு ஆண் யானைகள் போட்டி போடுவதுண்டு. அந்தச் சூழலில் பெண் யாரையும் தேர்ந்தெடுக்க மாட்டாள். ஆண்கள் இருவரும் மோதிக் கொள்ள வேண்டும். ஒருவனை வீழ்த்தி வருபவனையே அவள் ஏற்றுக் கொள்வாள். வீரமே காதல்!

பெண் யானையின் பிரசவ நேரத்தில், குடும்பத்தில் மற்ற பெண் யானைகள் எல்லாம் சூழ்ந்து நின்று உதவும். வயிற்றைத் தும்பிக்கையால் தடவிக் கொடுத்து தைரியம் அளிக்கும். பிற யானைக் கன்றுகள், வரவிருக்கும் புதிய குடும்ப உறுப்பினரை வரவேற்க ஆவலுடன் காத்து நிற்கும். இப்படி உறவுகள் சூழ அங்கே பிரசவம் நிகழும். சொந்தத்தை விட்டுக் கொடுக்குறதுக்கு நான் என்ன மனுஷனா? யானைடா!

கூட்டத்தை விட்டுத் தனியாகத் திரிவதால் ஆண் யானைகள் பொறுப்போ, பாசமோ அற்றவை என்று நினைத்துவிடக்கூடாது. பெண் யானையின் பசியை நீக்குவதற்காக ஆண் யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை, பெண்யானையைப் பருகச் செய்வது அன்பை வெளிப்படுத்துகிறது. பாலை நிலத்தில் வளர்ந்த யாமரங்களின் அடிப்பகுதியைக் குத்தி உடைத்து தன் கூட்டத்தின் பசியைத் தீர்க்க உதவுகிறது என குறுந்தொகை ஆண் யானையின் பொறுப்பைக் காட்சிப்படுத்துகிறது.

கூட்டத்தின் ராஜமாதா யானை, தன் இறுதிக்காலத்துக்குள் தனது மூத்த மகளுக்கு வாழ்வின் நுட்பங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுத்துவிடும். தன் குடும்பம் வலசை செல்ல வேண்டிய பாதைகள், எங்கெங்கே நீர் இருக்கும், எங்கே, எப்போது என்ன உணவு கிடைக்கும், எதுவரை தங்கள் எல்லை என்று அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிடும்.

ஒவ்வொரு யானைக் குடும்பமும் தம் மரபணுவில் பதிந்த நினைவின் பாதையில் பல நூற்றாண்டுகளாக வலசை போகின்றன. நம் பரம்பரை வீட்டையோ, சொத்தையோ யாரோ அந்நியர் வந்து ஆக்கிரமித்தால் ரத்தம் கொதிக்காதா? அதே உணர்வுதானே யானைகளுக்கும். யானை – மனித மோதல் உருவாவது இப்படித்தான். யானைகளின் வலசைப் பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்வது, காடுகளை அழிப்பது, மின்வேலி அமைத்து இடையூறு செய்வதெல்லாம் மனிதனின் ஈனச்செயல்களே. உலகில் யானை இனம் பெருமளவில் அழிக்கப்பட்டது வேட்டையால்தான்.

உலகில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரு கண்டங்களில் மட்டுமே யானைகள் உண்டு. ஆசிய யானைகள் ‘எலிபாஸ்’ என்ற இனத்தைச் சேர்ந்தவை. பூமியில் வாழும் மிகப்பெரிய உயிரினமான ஆப்பிரிக்க யானைகள் ‘லோக்சோடோண்டா’ என்ற இனத்தைச் சேர்ந்தவை. ஆசிய யானைகள் சராசரியாக ஒன்பதடி உயரமும் ஐந்து டன் எடையும் கொண்டவை.

ஆப்பிரிக்க யானைகள் சராசரியாக பதினொரு அடி உயரமும், ஆறரை டன் எடையும் கொண்டவை. ஆசிய யானைகளின் தலையானது ஆப்பிரிக்க யானைகளின் தலையைவிடப் பெரியது. ஆப்பிரிக்க யானைகளே, விலங்குகளில் மிகப்பெரிய காதுகள் கொண்டவை. ஆசிய ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தங்கள் உண்டு. ஆப்பிரிக்க ஆண், பெண் யானைகள் இரண்டுக்குமே தந்தங்கள் உண்டு. ஆகவே, உலக அளவில் அதிகம் வேட்டையாடப்படுபவை ஆப்பிரிக்க யானைகளே.