கேட்டலும் அறிதலும் –
திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்

வணக்கம் ஐயா..

காலையில் ஏழு மணிக்குச் சிறப்பு வகுப்பு வைத்திருந்தேன். பாதிப் பேர் தான் வந்திருந்தீங்க. ஏன் வரல்ல. ரமேஷ் உனக்கென்னாச்சு..

காலையில எழுந்திருக்கமுடியல்ல.. அவ்வளவு குளிர்…ஐயா.

இதெல்லாம் குளிர் என்கிறாய். அப்படின்னா யாகுட்ஸ்கில் இருப்பவங்க எப்படி இருப்பாங்க?
யாகுட்ஸ்க், அது எங்க இருக்கிறது ஐயா?

உலகின் மிகவும் குளிரான நகரம் ரஷ்யாவின் யாகுட்ஸ்க் நகரம். இங்குச் சுமார் 3.55 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். BBC Science Focus தகவலின்படி, ஜனவரி மாதத்தில் யாகுட்ஸ்கின் சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 42 டிகிரி செல்சியஸ்.

மேலும், ஒரு நாளில் நான்கு மணி நேரத்திற்கும் குறைவாகவே சூரிய ஒளி விழுகிறதாம். இந்த நகரத்தில் இதுவரை பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை 1891 பிப்ரவரி 5ஆம் தேதி மைனஸ் 64.4 டிகிரி செல்சியசாம். சமீபத்தில் யாகுட்ஸ்கின் அன்றாட வாழ்க்கையைக் காட்டும் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, 3 – மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ளது. அதில், கொதிக்கும் நீர் கூடச் சில நொடிகளில் பனியாக மாறும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

அப்படின்னா வீட்டைவிட்டு வெளியே எப்படிப் போவாங்க?

சராசரியாக 10 கிலோ எடையுள்ள, பல அடுக்குகளைக் கொண்ட உடைகளை அணிந்தே வெளியே செல்லக் கூடிய நிலை அங்கு உள்ளது. சந்தைகளில் மீன், இறைச்சி இயற்கையாகவே உறைந்து விற்கப்படுகின்றன. புதிய காய்கறிகள் கிடைப்பது கடினம் என்பதால், இங்கு இறைச்சியே முக்கிய உணவாக உள்ளது. திறந்தவெளியில் சில நிமிடங்கள் பயன்படுத்தினாலே, ஸ்மார்ட்போன்கள் தானாகவே அணைந்து விடுமாம். ஒவ்வொருவராகக் கேள்வியைக் கேளுங்க..
குளிராக இருப்பதாலோ என்னவோ வீட்டில் எல்லோருக்கும் உடம்புக்கு முடியல்ல.. அம்மாவுக்குக் கடுமையான ஆஸ்துமா..

நீ சொல்வதைப் போல உன் அம்மாவின் ஆஸ்துமாவுக்குக் குளிரும் காரணமாக இருக்கலாம். அதுமட்டுமில்லாமல் நம் வீடுகளில் பதுங்கியிருக்கும் கரப்பான் பூச்சிகளின் ஒவ்வாமை ஆஸ்துமாவை மேலும் தீவிரமாக்குகின்றன என்று வட கரோலினா மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வினை “ஜர்னல் ஆஃப் அலர்ஜி அண்ட் கிளினிக்கல் இம்யூனாலஜி: குளோபல்” என்ற அறிவியல் இதழ் வெளியிட்டுள்ளது.

அம்மாவை ஆஸ்பத்திரி கூட்டிட்டுப் போனாயா?

போனேன். அம்மாவுக்கு டாக்டர், இன்ஹெல்லர் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்து கொடுத்திருக்காங்க..

நம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க, நாம் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை உண்கிறோம். ஆனால், காபி குடிப்பது சில விதமான ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் வீரியத்தைக் குறைத்துவிடும் என்று ஜெர்மனியின் டூபிங்கன் பல்கலை மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே அம்மாவை, காபி குறைவாகக் குடிக்கச் சொல்.

அம்மாவை டெஸ்ட் செய்த டாக்டர் “இப்பல்லாம் உங்களைப் போன்றவர்களுக்கும் இரத்த அழுத்தம் அதிகமாகிறதுன்னு” என்னைப் பார்த்துச் சொன்னார் ஐயா..

லான்செட் என்ற மருத்துவ இதழ் அறிக்கையின்படி, கடந்த இரண்டு தசாப்தங்களில் 18 – வயதுக்குட்பட்ட குழந்தைகளில் உயர் இரத்த அழுத்தம் இரட்டிப்பாகியுள்ளது. 2000 – ஆம் ஆண்டில், சுமார் 3.2 சதவிகித குழந்தைகள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர், 2020 – ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6.2 – சதவிகிதத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இன்றைக்கு உலகில் 114 – மில்லியன் குழந்தைகள் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அதிகரித்து வரும் ஆபத்தானது, வரும் ஆண்டுகளில் குழந்தைகளுக்கு இதயம் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு வழிவகுக்கும் என்று ஆய்வு எச்சரிக்கிறது.

எதுனால இரத்த அழுத்தம் ஐயா?

நான் முன்னாடியே சொன்னதுபோல உடல் பருமன் முக்கியக் காரணம். பருமனான குழந்தைகளில் 19 சதவிகிதம் பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர், ஆரோக்கியமான எடை கொண்ட குழந்தைகளில் இந்தப் பாதிப்பு 2.4 சதவிகிதம் மட்டுமே. அதாவது பருமனான குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் எட்டு மடங்கு அதிகரித்துள்ளது. அது மட்டுமில்லாமல் உங்களில் பெரும்பாலானோர் இரவு நீண்ட நேரம் தூங்காமல் மொபைல் பார்த்துட்டு இருப்பதால் இரத்த அழுத்தம் மட்டுமல்ல நோய் எதிர்ப்பு சக்தியும் குறையுது.