சிந்தித்தார்கள்! வென்றார்கள்! –22

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்
‘‘நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என்பது முக்கியம் இல்லை. உங்கள் குடும்பப் பின்னணி ஒரு பொருட்டும் இல்லை. ஒரு சிந்தனை, புரட்சிகரமான சிந்தனை, ஒரு சிறந்த கண்டுபிடிப்பு, ஒரு தொழில் புரட்சிக்கு வழிவகுக்கும். எனவே உங்களை உண்மையான சந்தோசம் கொள்ளச் செய்கிறது எதுவோ, அதைச் செய்யுங்கள்’’ என்று சொன்னவர் கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் நிறுவனங்களின் முதன்மைச் செயல் அதிகாரி திருமிகு. சுந்தர் பிச்சை அவர்கள்.
நமது வயது எப்படியோ, அப்படி நாம் பின்னோக்கிச் சென்று பார்க்கலாம். ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்குத் தெரியும் கிராமத்தின் தபால் நிலையத்தில் (போஸ்ட் ஆபிஸ்) மட்டும் தான் தொலைபேசி இருக்கும். அவசர அழைப்போ, அயல்நாட்டு அழைப்போ அழைத்த பின்பு, வீட்டில் வந்து செய்தியைச் சொல்லி, அதன் பிறகு தபால் நிலையம் சென்று காத்திருந்து, வரும் அழைப்புக்குப் பதில் சொல்ல வேண்டும்; செய்தியைப் பெற வேண்டும்.
கிராமத்தில் ஒருவர் இறந்துவிட்டால் அருகிலுள்ள நகரத்துக்குச் ெசன்று ‘தந்தி’ என்று சொல்லும் (Telegram) அடிக்க வேண்டும். அது ஊர்போய்ச் சேர்ந்து சில மணிநேரம் கழித்தே உறவினர்கள் வந்து சேர்வார்கள். இது 1970, 80-களின் நிலை.
ஐம்பது வயதில் உள்ளவர்கள், அதன்பிறகு தொலைபேசி, தொலைகாட்சியை முதன்முதலில் பார்த்து வீட்டிற்குக் கொண்டு வந்த நாளில் கொண்ட பரவசங்கள் பல. அப்போதெல்லாம் கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் ெவள்ளிக்கிழமை தூர்தர்ஷன் வழங்கும் ஒலியும், ஒளியும் பார்ப்பதற்கும், ஞாயிற்றுக்கிழமை மாலை வரும் ஒரு படம் பார்ப்பதற்கும் ஊரே கூடி நிற்கும். தங்கள் கிராமத்துக்கே, வீட்டிற்கே சினிமா தியேட்டர் வந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு. இடையிலே மின்சாரம் போய்விட்டால் மக்கள் மனதில், முகத்தில் அப்படியொரு சோகம்.
அதன்பிறகு இடுப்பு பெல்ட்டில் ‘பேஜர்’ என்ற கருவியைக் கட்டிக் கொண்டு வலம் வந்த காலம். இவையெல்லாம் இன்று வளரும் தலைமுறைக்குச் சொல்ல வேண்டும். கடந்த 60 – ஆண்டுகளில் உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் அபாரம், ஆச்சர்யம் என்றால் மிகையில்லை.
இன்று நொடியில் உலகில் நடப்பதை அறிந்துகொள்ளும் தொலைநுட்ப வளர்ச்சியைப் பெற்றுள்ளோமே இதன் பின்னால் பலரின் உழைப்பும், சிந்தனையும் அடங்கியுள்ளது.
‘கூகுள்’ தொழில்நுட்பப் புரட்சி
உலகின் மக்கள் அன்றாடச் செய்திகளையும், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட செய்திகளையும் உடனே அறிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளார்கள். கணினியின் கண்டுபிடிப்பு உலகில் இந்த 20 மற்றும் 21 – ஆம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய சாதனையைச் செய்துள்ளது.
மிகப்பெரிய நிறுவனங்களான மைக்ரோசாப்ட், ஆப்பிள், ஐபிஎம், ஆர்குட், டிவிட்டர் போன்றவைகள் உலகின் இன்றைய துரிதப் புரிதலுக்கு வழிகாட்டியுள்ளன.
அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உலகம் இன்று இல்லை. இன்று காணும் உலகம், இன்னும் அறுபது ஆண்டுகளில் இப்படி இருக்கப் போவதில்லை என்பதை வளரும் செயற்கை நுண்ணறிவின் வேகம் கூறுகின்றது.
இந்த மிக வேகமான உலகின் மாற்றத்திற்குக் காரணமான மனிதர்களில் மதிக்கப்படும் ஒரு மனிதர் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த, மதுரை மண்ணில் பிறந்து, சென்னையில் வளர்ந்து உலகளவில் புகழ்பெற்றவர் சுந்தர் பிச்சை. சுந்தர் பிச்சை, கூகுள் மற்றும் ஆல்ஃபபெட் என்னும் இரு பெரிய நிறுவனங்களின் தலைவர்.
கூகுள் நிறுவனத்தை உருவாக்கியவர்கள் செர்கெய் ப்பிரின் மற்றும் லாரி பேஜ் என்பவர்கள். 1995 – ஆம் ஆண்டில் 19 – வயதே முடிந்திருந்த இவர்கள் இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (Ph.D.) படிப்பதற்காக ஆய்வுத் துறை மாணவர்களாகச் சேர்ந்திருந்தார்கள். இருவரும் நண்பர்களாகிவிட்டார்கள். செர்கெய் ப்பிரின் கலகலப்பாகப் பேசுபவர். பேஜ் அவ்வளவு எளிதில் பேசமாட்டார். ஆனால் இந்த இருவருக்குள்ளும் உலகின் பல்வேறு விஷயங்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய பகிர்தல்கள் தினம் தினம் நடந்து வந்தன.
படிப்போடு வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்து வந்தார்கள். அப்போது
1990 – களில் இணையம் ஓரளவு மேற்கத்திய நாடுகளில் பரவலாகி இருந்தது. அந்த இணையங்களில் தகவலைத் தருவதற்கு லைகோஸ் (Lycos), வெப்கிராவலர் (Webcrawler), யாகூ (Yahoo), இங்க்டோமி (Intomi), இன்போசீக் (Infoseek) போன்ற தேடு பொறிகள் இருந்தன. இவற்றின் மூலம் செய்திகளைப் பெற பல மணிநேரங்கள் செலவு செய்ய வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நாம் ஏன் தீர்வுகாணக் கூடாது என்ற தேடலில் ப்பிரின்னும், பேஜ்ஜும் இறங்கினார்கள்.
இதற்கு உதவி செய்திட இவர்களது பேராசிரியர்கள் சிலரும் முன்வந்தார்கள். எளிதில் இணையப் பக்கங்களைக் காட்டும் இணைப்புகளைப் பேக்ரப் (Backrub) என்ற ஒன்றைக் கொண்டு உருவாக்கினார்கள். நன்றாக வேகமாகச் செயல்பட்ட இந்த ஒன்றை வைத்து ஒரு புதிய தேடு பொறியை உலகிற்கு வழங்கினார்கள். இதுதான் 1998 – ஆம் ஆண்டு, பல செய்திகளை மக்கள் எளிதில் பெற்றுக் கொள்ள உதவிய கூகுள் தேடு பொறியாகும் (Google Search).
‘கூகோல்’ என்பது ஒரு எண்ணைக் குறிக்கிறது. அதாவது ‘1’ என்ற எண்ணுக்குப் பின்னால் நூறு பூஜ்ஜியங்களைக் கொண்ட ஒரு எண், நீண்டு (1000…..) போகும். இந்த எண் எப்படி எண்ணில்லாத அளவீட்டைக் கொண்டு வருமோ, அதுபோல ‘கூகுள் தேடு பொறியும்’ எண்ணில்லாத பல தரவுகளை நமக்குத் தேடித் தரும் என்ற பொருளில் இந்தப் பெயரை வைத்தார்கள். உண்மைதான், இன்று கூகுளில் தேடித்தான் பலவற்றை நாம் பெறுகின்றோம். கூகுள் தேடு பொறிக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். அதன் உருவாக்கத்தில் உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் கோடி. இன்று கூகுள், மைக்ரோசாஃப்ட் பிங், யாகூ, பை்டு, யான்ெடக்ஸ், டக்டக்கோ, ஆஸ்க், நாவர் என்று பல தேடு பொறிகள் இருக்கின்றன. ஆனாலும், ‘கூகுள்’ முதலிடத்தில் கோலோச்சுகிறது.
வெற்றிப் பாதைகள்
‘கூகுள்’ நிறுவனத்துக்குப் பெயர் வைத்தால் மட்டும் போதுமா? இந்தத் தேடு பொறியைப் பரவலாக்கினால் தானே பலனடைய முடியும்? இதற்கான நிதியைத் தேடினார்கள் செய்கெய் ப்பிரின் மற்றும் லாரி பேஜ்.
கணினித் தொழில் உச்சத்தில் இருந்த இடம் சிலிகான் பள்ளத்தாக்கு. அங்கே இருந்த ஜான் டூயர் மற்றும் மைக்கேல் மோரிட்ஸ் என்று இரு முதலீட்டாளர்களையும் 25 – மில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டி ஒப்பந்தம் போட்டார்கள். ‘கூகுள்’ நிறுவனத்தை உலகளவில் கொண்டு செல்ல அவர்களுக்கு இந்த முதலீடு உதவியது.
கூகுள் தேடுபொறி நிறுவனம் தொடக்கக் காலத்தில் பல சவால்களை எதிர்கொண்டது. அதேசமயம் தங்களுக்கென சில கட்டுப்பாடுகளைக் கொண்டே பயணித்தது. தங்கள் நிறுவனத்துக்குப் பொறியியல் பட்டம் பெற்றவர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்தியது. அதிலும் மிக மிகத் திறமையானவர்களை மட்டுமே வேலைக்கு எடுத்தார்கள். அதன் முதல் தலைமை நிர்வாகியான எரிக் ஷிமிட் கூட அப்படித்தான் தேர்வு செய்யப்பட்டார். இன்று இதன் தலைவராக சுந்தர் பிச்சை திகழ்கின்றார்.
சுந்தர் பிச்சை 1972 – ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 – ஆம் தேதி மதுரையில் ரகுநாத பிச்சை மற்றும் லட்சுமி அம்மையாருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். தாய் தட்டச்சு செய்பவராக இருந்தார். தந்தை ஒரு பிரிட்டிஷ் தனியார் நிறுவனத்தில் மின்பொறியாளராக இருந்தார்.
சுந்தர் பிச்சை தனது பத்தாம் வகுப்பினை சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயா பள்ளியில் முடித்தார். தொடர்ந்து 11 மற்றும்
12 – ஆம் வகுப்பினை சென்னை IIT – யில் உள்ள வனவாணி பள்ளியில் முடித்தார். படிப்பில் மிகவும் கெட்டி. எப்போதும் படித்துக் ெகாண்டேயிருக்கும் பழக்கமுடையவர். ரிக்ஷாவில் அமர்ந்து பள்ளிக்கு வரும்போதும் கூட மிகவும் ஆர்வமாகப் படித்துக் கொண்டே வருவாராம். தேர்வு மதிப்பெண்களை வாங்குவதற்கு ஓடோடி வருவாராம். அப்போது முகத்தில் எப்போதும் மாறாத புன்னகை அவரிடம் வெளிப்படுமாம்.
அவரது பள்ளி நண்பர்கள் அவரைப் பற்றிக் கூறும் போது ‘‘மிகவும் ஆர்வமுள்ள, எப்போதும் படிப்பு படிப்பு என்று படிக்கின்ற பழக்கமுள்ள ஒரு மாணவராகவே இருந்ததால், அவர் நிச்சயம் ஐ.ஐ.டி.யில் சேர்ந்துவிடுவார் என்று எல்லோரும் நினைக்கக் கூடிய அளவில் இருந்தார்’’ என்று பகிர்ந்து கொள்கிறார்கள். அவரது தந்தை, ‘‘எங்கள் மகன் நன்கு படிக்க வேண்டும் என்று நாங்கள் ஒரு போதும் சொல்ல வேண்டிய தேவையிருக்கவில்லை. சுந்தர் பிச்சை தானாகவே அதைச் சிறப்பாகச் செய்தார்’’ என்று தன் மகனைப் பற்றிக் கூறியுள்ளார். நமது மாணவச் செல்வங்கள் மேற்கண்ட பகுதியை மீண்டும் வாசித்துக் கொள்ளுங்கள்.
வனவாணியில் பள்ளிப் படிப்புப் படித்த போதே தொழில்நுட்பக் கல்விக்குத் தயாரித்த சுந்தர் பிச்சை காரக்பூர் ஐ.ஐ.டி.யில் இளங்கலை உலோகவியல் படிப்பை விரும்பி ஏற்றார். இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் ஐ.ஐ.டி. இது என்பதை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
1946 – ஆம் ஆண்டு ஹுமாயுன் கபீர் மற்றும் ஜோகேந்திர சிங் ஆகிய இரண்டு கல்வியாளர்கள் அமெரிக்காவின் மாசாசூப்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (MIT) போல ஒன்று இந்தியாவில் இருந்தால் நன்றாக இருக்குமே என்று சிந்தித்தார்கள். அந்தச் சிந்தனையை வங்காளத்தின் முதல்வரான பி.சி. ராயிடம் சொன்னார்கள். அவர் அன்றைய பிரதமர் நேருவிடம் இதனை எடுத்துரைத்தார். விளைவாக
1950 – ஆம் ஆண்டு கொல்கொத்தாவில் முதல் ஐ.ஐ.டி ஆரம்பிக்கப்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை அடைத்துச் சித்திரவதை செய்த சிறைப்பகுதியான ஹிப்ஜியை ஐ.ஐ.டி. தொடங்க இடமாகத் தேர்வு செய்தார்கள். இது காரக்பூர் அருகில் அமைந்ததால் காரக்பூர் ஐ.ஐ.டி. என்று பெயர் பெற்றது. நமது அன்றைய கல்வியாளர்களின் கனவு பல தொழில்நுட்ப நிறுவனங்களைக் கொண்டு வந்தது. இந்தப் புகழ்பெற்ற நிறுவனத்தில் சுந்தர் பிச்சை சிறந்த மாணவராகத் திகழ்ந்தார்.
உலோகவியல் பொறியியலில் இவர் பெற்ற அறிவு கணினிப் பயன்பாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த சிலிக்கான் மின்கடத்திகளின் தன்மையையும், பயன்பாட்டையும் அறிய வேண்டிய தெளிவைக் கொடுத்தது. தொடர்ந்து தனது கல்லூரிப் பேராசிரியரின் வழிகாட்டுதலில் பெற்ற உதவித் தொகையோடு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். இன்ஜினியரிங் மற்றும் மெட்டீரியல் சயின்ஸ் படித்தார். படிக்கச் செல்ல விமானக் கட்டணத்துக்கே வழியில்லை. அவரது தந்தை தன் ஓராண்டுக் காலச் சம்பளத்தைக் கொண்டே விமானச் சீட்டை எடுத்துக் ெகாடுத்தார்.
இந்த ஸ்டான்போர்டில் தான் கூகுளைத் தொடங்கிய செர்கெய் ப்பிரின் மற்றும் லாரி பேஜ் படித்தார்கள். எம்.எஸ். முடித்ததும் சுந்தர்பிச்சை முனைவர் பட்டம் படிக்காமல் வார்ட்டன் தொழில் பள்ளியில் MBA படித்து முடித்தார். இந்தப் படிப்பும் முழுக்க முழுக்கக் கல்வி உதவித் ெதாகையால் தான் சாத்தியமானது.
ஐ.ஐ.டி. கோரக்பூரில் கல்வி பயின்ற போது காதலித்த இராஜஸ்தானைச் சேர்ந்த அஞ்சலி என்பவரை பெற்றோர்கள் விருப்பத்துடன் திருமணம் செய்து கொண்டார். அஞ்சலி வேதிப் பொறியியல் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் சுந்தர் பிச்சை கல்வி பயின்ற போது தன் காதலியுடன் ஆறு மாதத்துக்கு ஒரு முறையே பேசுகின்ற சூழலில் இருந்தார் என்று கூறியுள்ளார். காரணம், அன்று வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பேசிட தொலைபேசிக் கட்டணம் மிகவும் அதிகம். இப்படி வறுமையுடன் கூடிய வாழ்வில் கடின உழைப்பைப் படிப்பில் காட்டி முன்னேறியவர் தான் சுந்தர் பிச்சை.