நம்பிக்கையே வாழ்க்கை! 22


‘அமுதா’ B. பாலகிருஷ்ணன்

தேட வேண்டும்.

‘தேடுங்கள் கிடைக்கும்’ – என்றார் ஏசுபிரான்.

எதையும் தேடினால்தான் கிடைக்கும். தானாக வரும் என்றிருப்பவன் சோம்பேறி.
தானாக வருவது இரவும், பகலும், வெயிலும், மழையும், முதுமையும் மரணமும்.

உழைப்பவனைத் தேடி சீதேவி (செல்வம்) வருவாள்.
உழைக்காதவனைத் தேடி மூதேவி (வறுமை) வருவாள்.
தேடுபவன் கண்டடைகின்றான்.
தேறாதவனெல்லாம் தேடாதவனே!

வாழும் வழிமுறைகளைத் தேடவேண்டும்.

ஒரு மரத்தின் வேர்கள், எப்படி எட்டுத் திசையும் நீரைத் தேடி நீள்கின்றனவோ, அதைப்போல ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்.
‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.’
இருப்பது போதும் என்று எண்ணினால், சுறுசுறுப்பு மங்கிவிடும். புதிய சிந்தனைகள் பிறக்காது,

இருப்பதும் கரைந்து இன்னல்தான் உருவாகும்.
‘தேடாது அழிக்கின் பாடாய் முடியும்’ என்கிறது ‘கொன்றை வேந்தன்’.
‘ஆளைத் தேடு, ஆஸ்தியைத் தேடு’ என்பது பழமொழி.

ஆஸ்தியை மட்டும் தேடி, அனுபவிக்காமல் ேபானால் என்ன பலன்…?
ஆண்டு அனுபவிக்கத்தான் பொருள்தேட வேண்டும்.

அடைகாத்து வைத்துவிட்டு பொட்டுன்னு போயிட்டா என்னத்த சம்பாதிச்சு என்ன பிரயோஜனம்?
‘தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்’

‘சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்’ என்கிறது ‘உலக நீதி’.
மகிழ்ச்சியைத் தேடிப் போகிறேன் என்று, மதுவிடமும், மங்கையிடமும், புகையிடமும், தன்னை அடகு வைக்கும் மனிதன், ஆரம்பத்தில் அவை ஆனந்தமாய்த் தோன்றினாலும், பின்னாளில் வட்டியும் முதலுமாக மீளாத துன்பத்தையும், துயரத்தையும் தரும் என்று புரியாமல் போகிறானே!
மனதிற்குள்ளே மகிழ்ச்சியைத் தேடுபவன் புத்திசாலி.