
நம்பிக்கையே வாழ்க்கை!
‘அமுதா’B.பாலகிருஷ்ணன்
வெட்கப்பட்டால்தான்… மனிதன் மானத்தோடு அலைகிறான் என்று அர்த்தம்.
இல்லையென்றால்…
‘‘அவன் ஒரு வெக்கங்கெட்ட பய… அவனையெல்லாம் மனுஷன்னு சொல்றதே மகாதப்பு’’-ன்னு உலகம் ஏசும்.
‘‘வெட்கம் மான அவமானத்துக்குக் கட்டுப்பட்டால்தான் மரியாதை. இதுதான் சான்றோர்களுக்கு உயர்ந்த அணிகலன்கள். இல்லையெனில் பெருமிதமாக நடக்கும் நடையே கூட ஒரு நோய் போல்தான்’’ என்கிறார் திருவள்ளுவர்.
‘‘அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணி அன்றோ பீடுநடை’’ குறள்.
தப்பு செய்ய வெட்கப்பட வேண்டும்.
தவறான பாதையில் செல்ல வெட்கப்பட வேண்டும்.
பொறுப்பில்லாமல் வாழ்ந்தால் வெட்கப்பட வேண்டும்.
தப்பு செய்வது, தவறான பாதையில் செல்வது, பொய் சொல்வது, பொறுப்பில்லாமல் வாழ்வது, இதெல்லாம் வெட்கப்பட வேண்டிய விஷயமல்லவா…
‘‘In a Country well governed, poverty
Is something to be ashamed of.
In a country badly governed,
wealth is something to be ashamed of’’ – என்கிறார் சீனத் தத்துவஞானி கன்ஃபியூஷியஸ்.
‘‘நல்லாட்சி நடக்கும் நாட்டில் வறுமை வெட்கப்படும்; மோசமான ஆட்சி நடக்கும் நாட்டில் செழுமை வெட்கப்படும்’’ என்பது பொருள்.
நாட்டில் மட்டும்தானா…? வீட்டில்…?
சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அங்க இங்க கடன வாங்கி ‘தாம் தூம்’னு செலவு பண்ணி கையில காசில்லாம கண்ணுமுழி பிதுங்க நிற்கும் போது கடன்காரன் வந்து கதவைத் தட்டினா வெட்கப்பட்டு வேதனைப்பட்டுத் தலையைத் தொடங்கப்போட்டுக்க வேண்டியது வரும்.
சிலர் அத்தியாவசிய செலவுகளுக்கும் சிக்கனம் பார்த்து, அப்புறம் நாலு பேர் மத்தியில வெட்கப்பட்டு நிக்கறதும் உண்டு.
ெவட்கப்பட வேண்டிய விஷயத்திற்குச் சிலர் ஓர் அசட்டுச் சிரிப்பு சிரிப்பாங்க. சிலர் எட்டு கோணலா நெளிவாங்க. சிலர் ஒரு முறைப்பு முறைச்சு, அப்படியெல்லாம் அது ஒண்ணும் தன்னைப் பாதிக்கலைங்கிற மாதிரி காட்டிக்குவாங்க.
என்னதான் திட்டினாலும், கொட்டினாலும் யாருக்கு வந்த விதியோன்னு வெட்கமில்லாம அலையிற ஜென்மங்களும் உண்டு.