
நம்பிக்கையே வாழ்க்கை!
‘அமுதா’B.பாலகிருஷ்ணன்
முகஸ்துதி, புகழ்ச்சி, உற்சாகப்படுத்துதல், ஊக்கப்படுத்துதல், தட்டிக் கொடுத்தல், பெருமைப்படுத்துதல்… எல்லாமே பாராட்டின் அங்கம்தான்.
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனும், பிறரிடம் எதிர்பார்ப்பது பணத்தையும்விட பாராட்டைத்தான்.
ஐநூறு ரூபாய் அதிகமாகக் கொடுத்து, ‘நீயெல்லாம் ஒரு மனுஷனா’ன்னு சொல்லிப் பாருங்க, அவன் மனம் வாடிப் போயிடும். நீங்க அதிகமாகக் கொடுத்ததற்குக் கூட அர்த்தமில்லாமப் போயிடும்.
ஐம்பது ரூபாய் கம்மியாக் கொடுத்து, ‘‘பிரமாதம்… உன் திறமைக்கும், அறிவுக்கும் ஆயிரமென்ன அதுக்கு மேலயும் கொடுக்கலாம்… இருந்தாலும் இந்தச் சின்னத் தொகையை நீ மறுக்காம ஒத்துக்கணும்’’னு சொன்னால் அந்த முகம் அப்படியே பூரிச்சிப் போயிடும்.
பாராட்டுறதுல பஞ்சம் வைக்கக் கூடாது. மனசாரப் பாராட்டணும். பாராட்டும், பாசமும் அடி மனசிலேர்ந்து வரணும். அநேகம் பேருக்கு உதடு பாராட்டும், உள்ளம் குமுறும்.
அருமையாப் பாராட்டுவாங்க, ஆனா அடிமனசு எரிஞ்சுகிட்டு இருக்கும்.
அளவுக்கு மீறி பாராட்டுனாங்கன்னா, நம்மள ஏதோ கவுக்கப் போறாங்கன்னு அர்த்தம்.
உலகத்துல அதிகமா சுட்டிக்காட்டப்படறது குறையைத்தான். பாராட்டுறதுக்கு மட்டும் பஞ்சம் தான்.
நூற்றுக்கு தொண்ணூறு பேர் குறை சொல்றதிலேயே குறியா இருப்பாங்க. நூற்றுக்குப் பத்து பேர்தான் பாராட்டுவாங்க. அந்தப் பத்து பேர்லயும் பாதிப் பேர் தான் மனசாரப் பாராட்டுவாங்க.
காரணம்,
அடிமனசுல பொறாமை ங்கிற ஒரு சிறு ரேகை ஓடிக்கொண்டுதான் இருக்கும். அப்படியில்லாம மனசாரப் பாராட்ட பரந்த மனமும், உயர்ந்த குணமும் வேண்டும்.
இது எத்தனை பேருக்கு இருக்கு…!
சிலர் பதவிக்காகப் பாராட்டுவார்கள்.
சிலர் உதவிக்காகப் பாராட்டுவார்கள்.
தகுதியே இல்லா தவர்களை ‘இப்படிப் பாராட்டுறீங்களே ஏன்’னு கேட்டால்,
‘காரியம் ஆகணுமே’ன்னு சொல்லுவாங்க.
சிலர் நிர்ப்பந்தத்திற்காகப் பாராட்டுவாங்க.
சிலர் நிதர்சனமாகப் பாராட்டுவாங்க.
சிலர் உள்ளன்போடு பாராட்டுவாங்க.
சிலர் வேண்டா வெறுப்பா பாராட்டுவாங்க.
சிலர் கனிவோடு பாராட்டுவாங்க.
சிலர் கடனேன்னு பாராட்டுவாங்க.
அளவோடு பாராட்டினால் அகம் மகிழும்.
அளவுக்கு மீறிப் பாராட்டினால் முகம் சுழிக்கும்.
இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி ‘ஐஸ்’ வைத்தால் அவருக்கு ஜில்லென்னு இருக்கும், அடுத்தவங்களுக்கு எரிச்சலா இருக்கும்.
தேவையில்லாமல் ‘இந்திரனே’, ‘சந்திரனே’ன்னு தூக்கி வைத்துப் பேசினால், கேட்பவர்களுக்குக் கேலியும் கிண்டலுமாகிவிடும்.
‘தகுதிக்கு அதிகமாக ஒருவனைப் பாராட்டுதல், அவனைக் கொலை செய்வதற்குச் சமம்’ – என்கிறார் நபிகள் நாயகம்.