நம்பிக்கையே வாழ்க்கை!
‘அமுதா’B.பாலகிருஷ்ணன்

சிலர் பாராட்டுவார்கள், பலர் வாழ்த்துவார்கள்.என்ன இது… பாராட்டும் வாழ்த்தும் ஒன்றுதானே…!

இல்லை… சிறு நூலிழை வித்தியாசம் உண்டு.

வெற்றி பெற்றால், சாதனை படைத்தால், சரித்திரம் படைத்தால் – பாராட்டு!
இயற்கையாக ஏதாவது நிகழ்ந்தால், இறைவன் பார்த்து நமக்கும் அளிக்கும் வரங்களுக்கு
வருவது – வாழ்த்து.

போட்டியில் ஜெயித்தால் பாராட்டு.

பிறந்த நாள் வந்தால் வாழ்த்து.

தொழிலுக்கு அதிபதியானால் பாராட்டு.

இல்லத்துக்கு அதிபதியானால் வாழ்த்து – திருமண வாழ்த்து!
முயற்சியின் முன்னேற்றத்திற்குக் கிடைப்பது பாராட்டு.

தானாக நிகழும் நிகழ்ச்சிக்குக் கிடைப்பது வாழ்த்து.
பொங்கல் வாழ்த்து. தீபாவளி வாழ்த்து.
புத்தாண்டு வாழ்த்து… இப்படி… இன்னும் பல.
நேரிலே புகழ்வது பாராட்டு.

நெடுந்தூரத்திலிருந்தாலும் புகழ்வது வாழ்த்து!
பாராட்டில் போலித்தனம் இருக்க வாய்ப்புண்டு.

வாழ்த்த நினைப்பவர்கள் மனதில் வஞ்சகம் இருக்காது.

நெஞ்சார வாழ்த்துவார்கள்.

வாயார வாழ்த்துவார்கள்.

வாழ்த்தில் போலி இருக்காது.

காரணம் – இங்கிருப்பவரை, எங்கிருப்பவர் வேண்டுமானாலும் வாழ்த்தலாம்.
‘‘மகராசன் நல்லா இருக்கணும்.’’

‘‘எம்புள்ள எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்’’ – என்று உலகின் ஒரு கோடியில் உள்ளவரைக்கூட மனசார வாழ்த்தலாம்.

இவர் மனசுக்குள் வாழ்த்துவது அவருக்குத் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை.
ஆனால் பாராட்டு என்பது, பாராட்டப்படுபவர்க்குத் தெரிய வேண்டும். அப்பொழுதுதான் அவருக்கு ஒரு மகிழ்ச்சி, உற்சாகம். மேலும் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும.
80 மார்க் எடுத்ததற்கு ஆசிரியர் பாராட்டுகிறார், பெற்றோர் பாராட்டுகின்றனர். நண்பர்கள்… எல்லோரும் பாராட்டுகின்றனர் – அடுத்த முறை 90 மார்க் எடுத்து மேலும் பாராட்டுப் பெற வேண்டும் என்ற வேகம் வரும்.