
நம்பிக்கையே வாழ்க்கை! 23
‘அமுதா’B.பாலகிருஷ்ணன்
தடைபோடலாமா?
கூடாது!
எதற்குத் தடை விதிக்கப்படுகிறதோ, அதற்கு ஒரு மோகமும் வேகமும் ஏற்படும்.
இந்தப் புத்தகத்தை விற்பனை செய்யக் கூடாது, இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது என்று தடை விதித்தால், அதைத்தான் பார்ப்பதற்கு ஆர்வம் அதிகமாக இருக்கும்.
ஒரு தியேட்டர் வாசலில், ‘டேய்… இது வயது வந்தவர்களுக்கு மட்டும், நீயெல்லாம் படம் பார்க்க உள்ளே போகக்கூடாது’-ன்னு ஒரு பதினைந்து வயது பையனைத் தடுத்துக் கொண்டிருந்தார் மேனேஜர்.
‘அட… என்ன நீங்க; நான் பார்க்க போகலை; மாட்னி ேஷா பார்க்க உள்ளே போன என் தம்பிங்க இரண்டு பேரும் இன்னும் வெளியே வரலை… அவங்களைத் தேடித்தான் நான் வந்தேன்’-னு சொன்னான் இவன். செய்யாதே என்றால் செய்யச் சொல்லும்.
ஈரப் பெயிண்ட்… தொடாதீர் என்று எழுதியிருந்தால், நிச்சயம் தொட்டுப் பார்ப்பார்கள்.
‘ஒட்டுதா ஒட்டலியான்னு’ பார்த்தேன்னு சொல்லித் தொட்டுப் பார்ப்பார்கள்.
‘புல் தரையில் நடக்காதீர்கள் என்று எழுதியிருந்தால் அதில் ஒரு தடவையாவது கால் வைத்துப் பார்க்கத் தோன்றும்.
TV பார்க்காதே என்று தடை போடுவதைவிட, ‘‘ஒலியும் ஒளியும் பார்த்துக் கொள் அல்லது சாப்பிடும் போது கொஞ்ச நேரம் TV பார்த்துக்க; மற்ற நேரம் படிக்கணும் என்ன…!’’ – அப்படின்னு சொன்னால், பிள்ளைகள், ஓரளவுக்கு நாம் சொல்வதைக் கேட்பார்கள்.
‘டேய், அதைத் தொடாதே‘-ன்னு தடை போடுவதை விட, ‘ராஜா… அதை எடுக்காதம்மா… அதத் தொட்டியன்னா கீழ விழுந்து உடைஞ்சிடும். நீதான் அத பத்திரமா பார்த்துக்கணும்… என்ன’ – அப்படின்னு சொன்னால், ‘OK மம்மி’-ன்னு பொறுப்பா பார்த்துக்கும்.
சிலருக்கு என்னதான் சொன்னாலும் எடுபடாது.
தன்னாலயுந் தெரியாது, சொன்னாலும் புரியாது-ங்கிற ஆசாமிகள் அநேகம் பேர் உண்டு.
ஆனால் சிலர் ஆர்வமாகச் செயல்பட துடிப்போடு இருப்பாங்க; அவருக்கு மேலே உள்ளவர்கள் தடைபோட்டு விடுவார்கள்.
‘ஐடியா நல்லா இருக்கு, இருந்தாலும் இதைச் செய்ய அனுமதிச்சா, இவன் பேரைத் தட்டிட்டுப் போயிடுவான்’னு நினைச்சு தடை போடுவாங்க.
சில கிராமப் பஞ்சாயத்துல, யாராவது மூணாவது மனுஷன் சின்னப் பையனாக்கூட இருக்கலாம், நியாயத்தை எடுத்துச் சொன்னால், நாட்டாமைக்கு கோபம் வந்துடும். ‘எங்களுக்குத் தெரியும்ல… முளைச்சு மூணு இலை விடல அதுக்குள்ள பஞ்சாயத்துப் பேச வந்துட்டான். போடா… போ போ…’-ன்னு அவனது பேச்சுரிமைக்கே தடை போடுவாரு. காரணம், ‘இவன் பேச்சைக் கேட்டுத் தீர்ப்புச் சொன்னா நம்ம மரியாதை என்னாவது’-ங்கிற மமதைதான்.
சிலர் சுயமாகச் சிந்திப்பதே மற்றவர்களுக்குப் பிடிக்காது. ‘நான் சொன்னதைச் செய், உன் இஷ்டத்துக்கெல்லாம் செய்யணும்னா வேற இடத்தப்பார்’ – அப்படின்னு சுயமாச் செயல்படுவதற்குக்கூட தடை விதிப்பார்கள்.
‘சார்… இது எப்படி சார்…?’-னு மாணவன் ஏதாவது விளக்கம் கேட்டால் ‘புஸ்தகத்துல இருக்கிறத அப்படியே மனப்பாடம் பண்ணி எழுது… சும்மா மூளையப் போட்டுக் குழப்பாத’-ன்னு சிந்தனைக்கே தடை போடும் சில சோம்பேறி ஆசிரியர்களும் உண்டு.
ஒரு ஸ்கூல்ல இரண்டாம் வகுப்பில் மாணவர்கள் படம் வரைந்து கொண்டு இருந்தனர். ஆசிரியை மிகவும் கடுகடுப்புடன், ‘இப்படித்தான் வரையணும், உங்க இஷ்டத்துக்கெல்லாம் படம் வரையக்கூடாது… ஆ… ஊ…’ன்னு அதட்டலும் உருட்டலுமாக இருந்தார்.
ஓவியத்தில் ஆர்வம் கொண்ட ஒரு மாணவனுக்கு அவன் இஷ்டத்திற்கு வரைய முடியாமல் எண்ணம் தடைபட்டது. மனம் சோர்வடைந்தது.