நம்பிக்கையே வாழ்க்கை – 22

‘அமுதா’ B. பாலகிருஷ்ணன்

டுக்கப்படுவது தடை.

அனுமதி மறுக்கப்படுவது, தடங்கல், தடுப்பு, அடைத்து வைப்பது, கட்டிப் போடுவது… எல்லாமே தடைகள்தான்.

உள்ளத்துக்கு, உணர்வுகளுக்கு,

உடலுக்கு, எண்ணத்திற்கு, சில செயல்பாடுகளுக்கு அப்பப்போ தடை வரும்.
‘‘அக்கடான்னு நாங்க உடை போட்டா
துக்கடான்னு நீங்க எடை போட்டா
தடா… உனக்குத் தடா’’

உடலை மறைக்க உடை போட வேண்டும்.
அங்கம் தெரிய ஆடை அணியக்கூடாது.

சினிமா, டிராமா, கதை, கவிதைகளில் காதலுக்குத் தடையில்லை.
நிஜ வாழ்க்கையில்… நிச்சயம் தடை உண்டு.
‘‘நாடகத்தில், காவியத்தில் காதலென்றால்
நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்
ஊடகத்தே வீட்டினுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்’’ – என்கிறார் மகாகவி பாரதி.
சிலர், கல்யாணத்திற்கே தடை போடுவர்.
பெற்ற பிள்ளை கை நிறையச் சம்பாதிக்கிறது.

கல்யாணம் பண்ணி வைத்தால் இந்தப் பணம் நம்ம கைக்கு வராதே என்று, ‘அது சரியில்ல, இது சரியில்ல’ என்று எதையாவது சொல்லி கல்யாணத்துக்கே தடைபோடும் பெற்றோரும் உண்டு.
‘கொஞ்சமா சம்பாதிச்சாலும், யய்யா எங்க கூடவே இரு, நிறைய காசு கிடைக்குதுன்னு வெளி தேசத்துக்கெல்லாம் போக வேண்டாம்’-னு தடை போடுற பெற்றோரும் உண்டு.

புதுசா கல்யாணமான மகன்கிட்ட, மருமகளை அதிகம் பேசவிடாம தடை போடுற மாமியாரும் உண்டு.

அதிகம் பேச விட்டால், தலையணை மந்திரம் போட்டு விடுவாளோன்னு பயத்துல தடை போடுவாங்க, இது மாமியார் மேல மருமகளுக்கு வெறுப்பு வர்றதுக்கு வழிவகுக்கும்.
காலப்போக்குல பையனுக்கே அம்மா மேல வெறுப்பு வரும்.