உயர்வுக்கு வழிகாட்டும் உயர்கல்விப் படிப்புகள் – 20

முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.
தனித்துவமான கல்வி நிறுவனங்கள்

ருத்துவத்துறையின்ஆராய்ச்சிப் பிரிவில் நுழைய மருத்துவக் கல்லூரியில் படித்தாக வேண்டும் என்பதில்லை. பயோமெடிக்கல், பயோடெக்னாலஜி போன்ற பொறியியல் படிப்புகள் படித்தாலும் பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி போன்ற அறிவியல் படிப்புகளைப் படித்தாலும் மருத்துவத்துறையில் சாதிக்கலாம். பொறியியல், மருத்துவம் இரண்டிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு வாய்ப்புள்ள பாடப்பிரிவு பயோமெடிக்கல் இன்ஜினியரிங்.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாமல் மருத்துவத்துறையில் கால் பதிக்க முடியாதவர்கள், பயோ மெடிக்கல் பிரிவைத் தேர்ந்தெடுத்து மருத்துவத்துறையில் உயர்ந்த பணி வாய்ப்பினைப் பெறலாம். சர்வதேசப் பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் கொரோனா வைரஸ் ஜிகா வைரஸ் மற்றும் நுண்ணுயிர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண உலகம் நம்புவது பயோ டெக்னாலஜி துறையை தான். உலக அளவில் மாறி வரும் வேளாண்மை, உணவு உற்பத்தி, மருத்துவம், பொது சுகாதாரம் என முதன்மையான பிரிவுகளில் ஆராய்ச்சியையும் மேம்படுத்துதலையும் முன்னெடுக்கும் மிக முக்கிய துறையாக உருவெடுத்து இருக்கிறது பயோ டெக்னாலஜி துறை.

பொறியியல் அறிவைக் கொண்டு ஹெல்த் கேர் பிரிவுக்கு தேவையான மாற்றங்களைக் கொண்டு வருவது,மருத்துவத் துறைக்குத் தேவையான கருவிகளை வடிவமைப்பது, அவற்றை மேம்படுத்துவது, புதிய கருவிகள் தயாரிப்பது, உடல் உறுப்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எனப் பலவகையான பணி வாய்ப்புகளை பயோ மெடிக்கல் படிப்பினை முடித்தவர்கள் பெறலாம்.