பிரபஞ்சம் காப்போம் – 09

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

‘‘உலகில் தேனீக்கள் அழிந்துவிட்டால், அடுத்த நான்கு ஆண்டுகளில் மனித இனம் அழிந்துவிடும்”, என்பது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியதாகச் சொல்லப்படும் ஒரு பிரபலமான கூற்று. இதற்கு ஆதாரம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. என்றாலும்கூட, தேனீக்கள் இல்லையென்றால் உலகின் உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதும் வறுமை தலைதூக்கும் என்பதும் நிஜம்.

இந்த உலகம் பூச்சிகளால் சூழப்பட்டது. பூச்சிகளின் பட்டியலில் தேனீ முக்கியமானது. தேனீ என்றவுடன் சுவையான தேன் மட்டும்தான் நினைவுக்கு வரும். ஆனால் தேனீ உலகின் மிக முக்கியமான மகரந்தச் சேர்க்கையாளர். மகரந்தத்தை ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவுக்குக் கொண்டு செல்வதன் மூலம் தாவர இனப்பெருக்கத்திற்கு உதவுகின்றன.

ஏன் தேனீ அவசியம்?

செடி, கொடி, மரம் எனத் தாவர இனங்கள் இந்தப் பூமிக்கு முக்கியமானவை. அவை மண் அரிப்பைத் தடுக்கின்றன. ஓசோன் படலத்தைப் பாதுகாக்கின்றன. வனவிலங்களுக்கு வாழ்விடமாகவும் உணவாகவும் அமைகின்றன. நமக்குக் காற்றையும் மழையையும் மரங்கள் நிறைந்த காடுகள் தருகின்றன. மருத்துவக் குணம் கொண்ட தாவரங்களும் உண்டு. இத்தனை நன்மைகளைத் தரும் பெரும்பாலான தாவர இனங்கள் இனப்பெருக்கம் செய்ய, மகரந்தச் சேர்க்கையை நம்பியுள்ளன. அதற்குத் தேனீக்கள் தேவை. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் அறிக்கையின்படி, மனிதர்களின் உணவுப்பொருள் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி தேனீக்கள் போன்ற பூச்சிகளை நம்பியே உள்ளது. மகரந்தச் சேர்க்கையை நேரடியாகச் சார்ந்து உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவின் மதிப்பு 577 – பில்லியன் டாலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மகரந்தச் சேர்க்கை மூலம் தாவரங்களையும், தாவரங்கள் மூலம் விதைகளையும் உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழல் அமைப்புக்குத் தேனீக்கள் இன்றியமையாதவை. உலகின் காட்டில் பூக்கும் தாவரங்களின் மகரந்த சேர்க்கையில் தேனீக்களின் பங்கு சுமார் 90 சதவிகிதம். நாம் உண்ணும் கடுகு உள்ளிட்ட எண்ணெய் வித்துக்கள் முதல் பல பருப்பு வகைகள் வரையிலான உற்பத்திக்கும், தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள் போன்ற பல பழ வகைகள், காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருப்பவை தேனீக்கள்தான்.

“தேனீக்கள் இல்லையென்றால் காய்கறிகள், எண்ணெய் உற்பத்திக்கான பயிர்கள் மட்டுமல்லாது பாதாம், வால்நட்டுகள், காபி, கோகோ பீன்கள், போன்ற பல பயிர்களின் மகரந்தச் சேர்க்கைகள் பாதிக்கப்படும். இது மனித உணவில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்,” என்கிறது ஐ.நா. அறிக்கை. “தேனீக்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் 700 – மில்லியன் டாலர் லாபத்தை ஈட்டுகின்றன” என்றும் அமெரிக்க வேளாண்மைத்துறை சொல்கிறது.

பெங்களூரில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வில், தேனீக்களின் எண்ணிக்கை 20 சதவிகிதம் வரை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. கல்கத்தா பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்மையியல் மகரந்தச் சேர்க்கை ஆய்வு மையத்தின் சில ஆய்வுகள் இதே நிலையினை உறுதி செய்கின்றன.

தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையை நாடு முழுவதும் 50 மில்லியன் ஹெக்டேர் பயிர்கள் சார்ந்திருப்பதால், தேனீக்களின் வீழ்ச்சி இந்தியாவிற்கு ஒரு விவசாயப் பேரழிவாக இருக்கும். தேனீக்களின் அழிவுக்குக் காரணம்?
அழிவுக்குக் காரணம் காலநிலை மாற்றம், காடுகளின் அழிப்பு, குறிப்பிட்ட இரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, காற்று மாசு போன்ற காரணங்களால் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும் தேனீக்கள், பட்டாம்பூச்சிகள், வௌவால்கள் மற்றும் ஓசனிச்சிட்டுகள் (Hummingbirds) போன்ற மகரந்தச் சேர்க்கையாளர்கள் மனித நடவடிக்கைகளால் அதிகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகவும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புக் கூறுகிறது.

இந்தியாவின் பல ஆய்வுகள் தேனீக்களின் வீழ்ச்சிக்கு வாழ்விட மாற்றம் முக்கியக் காரணி என்கின்றன. மேலும் விரைவான நகரமயமாக்கல், விவசாய விரிவாக்கம் ஆகியவையும் காரணிகளாகச் சொல்லப்படுகின்றன. சசெக்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் ரோதம்ஸ்டெட் ஆராய்ச்சி மையம் ஆகியன, இரண்டு ஆண்டுகாலம் நடத்திய ஆராய்ச்சி முடிவினை அண்மையில் (ஜனவரி 20ஆம் தேதி) பயோடைவர்சிட்டி ஜர்னலில் வெளியிட்டுள்ளது. அதில் அதிக இராசயன உரப் பயன்பாடு தேனீக்களின் வாழ்வினைக் கேள்விக்குறியாக்கி, மகரந்தச் சேர்க்கையை முடிவுக்குக் கொண்டு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘‘உலகின் 20,000 – க்கும் மேற்பட்ட தேனீ இனங்களில் பெரும்பாலானவை பாதிப்புக்குள்ளாகியுள்ளன’’ என்று ஆய்வின் முதன்மை ஆய்வாளர் சப்ரினா ரோண்டோ கூறுகிறார். விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள் 70 சதவிகித தேனீக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துபவை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பூச்சி கொல்லிகளின் செயல் பாட்டினால் உணவு தேடும் திறன் குறைதல், இனப்பெருக்க வெற்றி குறைதல் மற்றும் நோய்க்கிருமி தாக்குதல் ஆகியவற்றைத் தேனீக்கள் எதிர்கொள்கின்றன. பூச்சிக்கொல்லிப் பயன்பாடு, குறிப்பாக நியோனிகோடினாய்டுகள், தேனீக்களின் நோயெதிர்ப்புச் செயல்பாடு, வழிசெலுத்தல் மற்றும் தகவல்தொடர்பு ஆகியவற்றைப் பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றமானது பூக்கும் நேரத்தைப் பாதிக்கலாம், இது தேனீயின் உணவு கிடைத்தலைக் குறைக்கும் என்கிறது இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் என்விரோன்மென்ட் அன்ட் கிளைமேட் சேஞ்ச். “காலநிலை மாற்றத்தால் பூமியின் வெப்பம் அதிகரிப்பதால் தேனீக்களின் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கும். இதனால் உணவைச் சேகரிப்பதற்கு வழக்கத்தை விட அதிக ஆற்றலை தேனீக்கள் செலவழிக்க வேண்டியிருக்கும்’’ என்கிறார் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் பெங்களூரில் உள்ள அசோகா அறக்கட்டளையின் மூத்த நிபுணர் முனைவர் பிரியதர்ஷனன்.

சுற்றுச்சூழல்

தாவரங்களின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதன் மூலம், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளர்ச்சிக்குத் தேனீக்கள் பங்களிக்கின்றன. இவற்றின் மகரந்தச் சேர்க்கை தாவரங்களில் மரபணு வேறுபாட்டை ஊக்குவித்து, சுற்றுச்சூழலில் புதுவிதமான தாவரங்கள் உருவாக வழிவகுக்கிறது. வனங்களின் வளர்ச்சிக்கும், விலங்குகள் வாழ்விடத்துக்கும் காரணமாகிறது. நமது சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைத் தேனீக்களின் நடத்தைகளை வைத்து கண்காணிக்க முடியும். தேனீக்கள் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்ட பகுதி மற்றும் காலநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறியும் உணர்திறன் கொண்டவை. எனவே தேனீக்களைக் கண்காணிப்பது மூலம் விஞ்ஞானிகள் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஒட்டுமொத்த நலனைப் பாதுகாப்பதற்கான நுண்ணறிவுகளைப் பெற முடியும்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.