வெற்றியோடு விளையாடு! – 27
டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்
தமிழகத்தில் வேலை தேடும் இளைஞர்களின் சொர்க்க பூமியாக இருப்பது திருப்பூர்.
வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய இன்னபிற தொழில் திரள்கள் (Industrial Clusters) இருக்கும் போது, திருப்பூருக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?
பிற ஊர்களில் வேலைவாய்ப்புப் பெறுவதற்கு, கல்வியறிவு அல்லது தொழில் சார்ந்த முன் அனுபவம் தேவை!
ஆனால், போதிய கல்வியறிவு, முன் அனுபவம் எதுவும் இல்லாத, பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் யார் வந்தாலும், அனைவருக்கும் திருப்பூரில் உடனடியாக வேலை கிடைக்கிறது. பெரும்பாலான நிறுவனங்கள் இலவசத் தங்குமிடம் மற்றும் குறைந்த விலையில் உணவு போன்ற சலுகைகளை வழங்குகிறது. அதுமட்டுமல்ல, எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் உதவியாளாராகச் சேரும் ஒருவரால், ஐந்து முதல் ஏழு வருடங்களில் மேலாளர் போன்ற உயர்நிலைப் பதவிகளுக்கு உயரமுடியும்!
வாழ்க்கை உயர்வு தேடி இந்த நம்பிக்கை நகரத்திற்கு வரும் அனைவருக்கும் திசை காட்டியாக இருக்கிறார் பொதிகை வெ.சுந்தரேசன்.
யார் என்ன வேலையில் சேரலாம்? எந்த நிறுவனத்தில் வாழ்க்கை உயர்வுக்கான வாய்ப்பு இருக்கிறது? போன்ற வழிகாட்டுதல்களை. வழங்கி வருகிறார். இதற்காக ‘‘பொதிகை மனித வள மேம்பாட்டு மையத்தை’’ நிறுவி நடத்திக் கொண்டிருக்கிறார்.
‘இப்படி ஒரு சேவையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எவ்வாறு வந்தது?’ என்று அவரிடம் கேட்ட போது,
“ஒரு பக்கம் வேலையில்லாமல் இளைஞர்கள் தவிக்கிறார்கள். இன்னொரு பக்கம் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் நிறுவனங்கள் தவிக்கின்றன. இந்த இரண்டு துருவங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் இப்படி ஒரு சேவையைத் தொடங்கக் காரணம்” என்று தெளிவாகச் சொல்கிறார்.
இன்றைய சமூகச் சூழலில் பல்வேறு விதமான பிரச்சினைகளைச் சந்திக்கிறோம். இத்தகைய பிரச்சினைகள் நிலவுவதால் நமது முன்னேற்றம் பாதிக்கிறது. ‘சூழ்நிலை மட்டும் இப்படி இல்லாமல் வேறு மாதிரியாக இருந்திருந்தால் நான் எங்கேயோ போயிருப்பேன்’ என்று மக்கள் பரவலாக சொல்வதைக் கேட்கிறோம். உதாரணத்திற்கு பொருளாதார நெருக்கடி!
‘விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. வீட்டு வாடகை அதிகம். வரலாறு காணாத கல்விக் கட்டணங்கள். வாழ்க்கை நடத்துவதற்கான செலவு மிக அதிகமாகிவிட்டது. இப்படியே போனால் வாழ முடியாது!’ இத்தகைய கூக்குரல்கள் ஏழைகள் மட்டுமல்ல நடுத்தர வர்க்கத்து மக்களிடமும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இப்படிச் சொல்வது சரியா? என்றால் பாதி சரி. ஏனென்றால் நம்மிடத்திலும் ஒரு சில குறைபாடுகள் இருக்கின்றன. குறைபாடுகளை சரி செய்து கொண்டு திட்டமிட்டு உழைக்க நாம் தயாராக வேண்டும்.
வாழ்க்கை நடத்துவதற்கான செலவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். இது இயற்கை. எந்த நாடும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவை எடுத்துக் கொண்டால், ஒரு நடுத்தரக் குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மாதந்திர செலவு தொகை, 1940 – ல் பத்து ரூபாய், 1960 – ல் நூறு ரூபாய், 1980 – ல் ஆயிரம் ரூபாய், 2000 – ல் பத்தாயிரம் ரூபாய் என்பதாக இருந்தது.
இதன்மூலம், ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க்கைத் தேவைகளுக்கான செலவு, இருபது ஆண்டுகளில் பத்து பத்து மடங்காக அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இது தொடரும். ஏறிய விலைவாசி என்றைக்கும் குறையாது. அது சாத்தியமும் இல்லை.
இதற்கு என்ன தான் தீர்வு என்றால், அது மிக எளிமையானது என்கிறார் பொதிகை சுந்தரேசன்.
“இன்னும் சில ஆண்டுகளில், மாதம் ஒன்றிற்கு ரூபாய் ஒரு இலட்சம் இருந்தால் தான் உங்கள் குடும்பத்தின் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, நிம்மதியாக வாழ முடியும் என்கிற நிலை ஏற்படப்போவதைத் தவிர்க்க முடியாது! இன்னும் ஒருசில ஆண்டுகளில், ஒரு இலட்ச ரூபாய் மாத வருமானம் ஈட்டுவது சாத்தியமா? என்றால், சாத்தியம் என்றே சொல்வேன்.
இன்றைய நிலையில் அவரவருக்கு இருக்கிற அறிவு மற்றும் திறமையைப் பொறுத்துத் தான் அவரவரது வருமானம் இருக்கிறது. உங்கள் வருமானம் உயர வேண்டுமானால், அதற்கேற்ப அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொண்டு, சரியான வாய்ப்புகளைத் தேட வேண்டும்.
ஆண், பெண் யாராக இருந்தாலும், தங்களது அறிவையும், திறமையையும் வளர்த்துக் கொள்வதற்கான கட்டணம் இல்லாப் பயிற்சிகளும், திறமைக்கு ஏற்ற வேலையில் அமர்ந்து, நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளும் திருப்பூரில் ஏராளமாக உள்ளன.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.