மூளை என்னும் முதல்வன்

திரு. A.மோகனராஜூ, சேலம்
“என் மனதில் திடீர் என்று ஒரு எண்ணம்.மெல்லப் பனியில் மறைந்துபோனதுபோல மறைந்துபோனது, மறு எண்னம் என் உடலை உலுக்கியதுபோலத் திரும்பி வந்தது, மொழி ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பெயரைக் கொடுக்கிறது, அந்த ஒவ்வொரு பெயரும் ஒரு புதிய எண்ணம் பிறக்க வழி வகுக்கிறது” என்று கண்கள் தெரியாத, காதுகேளாத ஊமைப்பெண் “ஹெலன் ஹெல்லர்” கூறிச்சென்றார்.
எண்ணங்கள் என்றால் ஒன்று இரண்டு, ஒன்பது, பத்து என்று “எண்ணல்” அல்ல. சிந்தனை, யோசனை, கருத்து, நிகழ்வு, பொருள், பெயர், என்பதைப்பற்றிய நினைவு அது. கடந்த கால நிகழ்வை நினைப்பது. எதிர் கால நிகழ்வை கற்பனை செய்துபார்ப்பது. அல்லது நடந்துகொண்டிருக்கும் வேலையைக் கவனிப்பது. மூன்று காலங்களிலும் எண்ணம் வருகிறது, கடந்த கால, எதிர்கால நினைவுகள் 90%, நமக்கு எண்ணங்களாக வருகிறது. எண்ண ஓட்டம் என்பது நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்வதும் மீண்டும் நினைத்துப்பார்ப்பதும், அதையே சற்று ஆழமாக மாற்றியமைத்து கனவாக, கற்பனையாக மாற்றம் செய்து பார்ப்பதும்தான். இதை ஒரு வார்த்தையில் சிந்தனை செய்வது என்றும் கூறுகிறார்கள்.
ஒருவன் என்ன நினைக்கிறான் என்பது யாரும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் ஒருவன் என்ன எழுதுகிறான், என்ன சொல்கிறான், என்னச் செய்கிறான் என்பதைக் கவனித்தால் என்ன எண்ணினான், நினைத்தான் என்பது தெளிவாகும். ஒரு பிரச்சனைக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையில் அவன் மூளையில் ஆயிரம் ஆயிரம் எண்ணங்கள் முட்டி மோதுகின்றன, மூளை சூடேறி தலைவலியும் உடல் சோர்வும் ஏற்படுகிறது. வரும் எண்ணங்களைத்தடுக்க முடியாது உடனே ஒரு வேலையில் ஈடுபட்டால் எல்லாவற்றில் இருந்தும் தப்பிக்கலாம்.
விலங்குகள் பறவைகள் மனிதன் அளவிற்குச் சிந்திப்பதில்லை. காரணம் அவைகள் உயிர் வாழ உணவும் தண்ணீரும் தினமும் தேவைப்படுகிறது, அது உடனே அவைகளுக்கு கிடைப்பதில்லை. எங்கே எப்படி கிடைக்கும் என்று அவைகளுக்குத் தெரியாது. ஒரு விலங்கு அல்லது பறவை மற்றும் ஓர் உயிரியைக் கொன்று உணவாகத் தின்கிறது.
காலையில் தன் இருப்பிடத்தில் இருந்து உணவிற்காக வெளியே சென்று உணவையும் தண்ணீரையும் தேடிக் கண்டு உண்டு, நீரைக்குடித்து, பின் மாலையில் தன் இருப்பிடம் கண்டிப்பாக வந்து சேரும் என்று யாரும் உறுதியாகச்சொல்ல முடியாது. ஒவ்வொரு நொடியிலும் அதன் உயிருக்கு ஆபத்து காத்திருக்கிறது. அவ்வளவு பாதுகாப்பில்லாத சூழலில் தினமும் வாழ வேண்டியிருக்கிறது. இதில் சிந்திக்க எங்கே நேரம் இருக்கிறது. 100 சதம் விழிப்புணர்வுடன் நிகழ் காலத்தில் விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் இருக்கின்றன. இதிலும் ஆடு, மாடு, குதிரை யானை போன்ற தாவர உண்ணி விலங்குகள் 12 மணிமுதல் 16 மணி நேரம்வரை உணவையே உண்ண எடுத்துக்கொள்கின்றன.
ஆனால், மனிதன் அவன் உணவை அவனே உருவாக்கி வைத்திருக்கிறான். அவனுக்கு உணவும் தண்ணீரும் வருடக்கணக்கில் இருப்பு வைத்திருக்கிறான். இந்திய உணவுக் கழகம் சுமார் 145 கோடி மக்களுக்கும் 5 ஆண்டுகளுக்கான உணவைச் சேமிப்பில் வைத்திருக்கிறது. உணவை உண்ணவும் மனிதன் அதிக நேரம் எடுத்துக்கொள்வதும் இல்லை. ஆகவே மனிதனுக்கு ஓய்வாகச் சிந்திக்க அதிக நேரம் கிடைத்திருக்கிறது.
வண்டுகள் வாழும்காலம்வரை நறுமணம் கமழும், மென்மையான, வண்ண வண்ண மலர்களில் அமர்ந்து இனியத் தேனை உண்டு உயிர் வாழ்கின்றன. ஆனால் எந்த ஒரு வண்டும் மலரின் அழகைக்கண்டு ரசித்து மகிழ்வதில்லை. மனிதன் மலர்களை, அதன் மென்மையை, வண்ணத்தை, இனிய நறுமணத்தை அவ்வளவு ரசித்து, மகிழ்கிறான். சர்வதேச மலர்ச் சந்தையின் வியாபாரம் 2024-ல் ரூபாய் 4,48,000 கோடிக்கு நடந்திருக்கிறது. அதை அடுத்த 5 ஆண்டுகளில் ரூபாய் 8,40,000 கோடிகளுக்கு வியாபாரத்தை பெருக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்றால் மனிதர்கள் மலர்களை எவ்வளவு ரசிக்கிறார்கள், விரும்புகிறார்கள், மதிப்புக்கொடுக்கிறார்கள் என்று பாருங்கள்.
பறவைகள் வாழ்நாள் முழுவதும் வானத்தில் பறந்து வாழ்கின்றன, எந்த ஒரு பறவையும் வானத்தைப்பார்த்து ஒரு நாளும் ரசித்ததில்லை. விலங்குகள் வாழ்நாள் முழுவதும் வனத்தில் நிறைந்து வாழ்கின்றன, ஒரு நாளும் ஒரு விலங்கும் ஒரு மரத்தை, மலையைப் பார்த்து ரசித்ததில்லை, மீன்கள் வாழ்நாள் முழுவதும் கடலில் இருக்கின்றன. ஒரு மீனும் ஒரு நாளும் கடலின் அழகில் மூழ்கியதில்லை.
மனிதன் கடலை, மலையை, மரத்தை, மயிலை, மானை, புலியை, முயலை, குயிலின் ஓசையை, வனத்தை, வானத்தை, சூரியனை, நிலவை, பெண்ணை, ஆணை, நட்சத்திரங்களை, இயற்கையை தினம் தினம் கண்டு அவ்வளவு ரசித்து ரசித்து மகிழ்கிறான். இதனால்தான் மனிதனின் மூளையின் சிந்தனைப்பகுதி விலங்குகள் பறவைகள், மீன்களின் மூளையில் இல்லாத சிறப்புப்பகுதிகளாக மனித மூளையில், பிரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸ், ஹிப்போகேம்பஸ் போன்ற சிந்திக்கும் மூளைப்பகுதிகள் அளவிற்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது. அதில்தான் இந்த கனவுகள், கற்பனைகள், கதைகள், கவிதைகள், ஓவியங்கள், சிற்பங்கள், கணக்குகள், அறிவியல் தொடர்பான எண்ணங்கள் பிறக்கின்றன.
நம் உடலில், பார்த்தல், கேட்டல், தொடுதல், சுவைத்தல், முகர்தல் வழியாக வரும் உணர்வுகளை மூளை தொடர்ந்து பதிவு செய்கிறது, அதை எண்ணங்களாக நினைவில் வைத்திருக்கிறது, வேண்டியபோது ஒரு எண்ணத்தை அதில் இருந்து எடுத்துக்கொடுக்கிறது.
இந்த மூளையில்தான் கடலின் அலைகளைவிட அதிகமான எண்ண அலைகள் இரவும் பகலும் உருவாகின்றன, வானத்தின் நட்சத்திரங்களைவிட அதிகமான எண்ணங்கள் தினமும் மின்னி மறைகின்றன. வாழ்வின் அனுபவங்கள், அதன் பதிவுகள் நடக்கும் நிகழ்வுகள், புத்தகங்களில் இருந்து பெறும் அற்புதமான அனுபவங்கள் இவைகளில் இருந்து அறிதல், புரிதல், ஆய்வுசெய்தல், சிந்தித்தல், செயல்படுதல் என்று எண்ணங்களின் மறுபக்க நிகழ்வாக மூளையில் ஆயிரம் ஆயிரம் நிகழ்கின்றன.
எண்ணம் பற்றிய முழுச்செய்தி நமக்கு வேண்டுமானால் டாக்டர் எம்.எஸ் உதயமூர்த்தி எழுதிய “எண்ணங்கள்” என்ற புத்தகம்தான் ஆழமான கருத்துக்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறது. அவ்வளவு அற்புதனமான புத்தகம் அது. அவர் பேராசிரியராக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ஆறு ஆண்டுகளுக்குமேலான தன் உளவியல் ஆய்வுகளை ஆதாரமாககக் கொண்டு எண்ணங்களுக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக விளக்கிச்சொல்கிறார்.
ஒரு சில எண்ணங்கள் போகும் வழியில் எளிதாகக்கிடைத்துவிடுகின்றன. ஒரு சில எண்ணங்களுக்கு பல வருடங்கள் காத்திருந்து கிடைக்கப்பெறுகின்றன. விஞ்ஞானிகள் பல வருடங்கள் சிந்திக்கிறார்கள், புதுமையை வடிவமைக்கிறார்கள். இளமையில் தேடிய ஒரு எண்ணம் வாழ்நாள் முழுவதும் தேடி தன் 97-வது வயது முதுமையில் கிடைத்து, அது நோபல் பரிசை வங்கித்தந்தது என்று ஜான் பி. குடனோ (John B. Goodenough)சொல்கிறார்.