சாதனையாளர் பக்கம்

மதுரை.ஆர்.கணேசன்
மதுரை காந்தி மியூசியத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சி, ஆயிரக்கணக்காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரிசையில் காத்திருக்க வைத்து பரவசப்படுத்தியது என்றால் மிகையில்லை..!
ஓவியங்களில் எண்ணங்கள் அழகானால் வண்ணங்கள் பேசும், வண்ணங்கள் அர்த்தப்படுமானால் ஊரே பேசும்..! அப்படியொரு ஓவியக்கண்காட்சியைத் தனியாக நடத்தி ஒரு கல்லூரி மாணவி தன்னை யாரென்று நிரூபித்திருக்கிறார்..!
மதுரை யாதவா மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகின்ற க.அருந்தமிழ் இலக்கியா “..நிறங்களின் வழியே உலகம்..” என்ற தலைப்பில் முதல் முறையாக ஏற்பாடு செய்திருந்த ஓவியக் கண்காட்சிக்குத்தான் அத்தனை வரவேற்பு கிடைத்திருந்தது.
ஓவியக் கண்காட்சியை ஓவியரும், சிற்பக்கலைஞருமான வ.சரண் ராஜ் திறந்து வைத்தார். இங்கு பென்சில் ஓவியம் முதல் அப்ஸ்ட்ராக்ட், ஆயில் பேஸ்டல், ஸ்டிக்பென், மார்க்கர், மண்டேலா என விதவிதமான ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மதுரை மக்கள் தவிர உத்திரப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஓவியக் கண்காட்சியை கண்டு ரசித்ததுடன் இளம் ஓவியர் “..அருந்தமிழ் இலக்கியாவிற்கு..” பராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
மதுரை மண்ணிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ஓவியக் கண்காட்சியை நடத்திய க.அருந்தமிழ் இலக்கியாவிற்கு சமீபத்தில் “..தூரிகைத் தாரகை..” என்ற விருதை சிருஷ்டி ஓவியக் கலைக்கூடம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அருந்தமிழ் இலக்கியாவின் தந்தை ப.கவிதா குமார்..,
“..முதன் முதலாக பென்சிலில் வரைய ஆரம்பித்த அருந்தமிழ் இலக்கியா அதன் பின் அப்ஸ்ட்ராக்ட், ஆயில் பேஸ்டல், ஸ்டிக்பென், மார்க்கர், மண்டேலா என விதவிதமான ஓவியங்களை வரைய ஆரம்பித்தார்.
சிறுவயதிலிருந்து சிங்க்ஷேன், டோரிமான், நிஞ்சாகட்டோரி, சோட்டாபீம், போக்கிமான் என தொலைக் காட்சியில் ரசித்த கதாபாத்திரங்களை ஓவியங்களாக வரைந்திருக்கிறார்.
அவளுடைய ஓவிய ஆர்வம், எங்களையும் தொற்றிக் கொண்டது. எனவே, அவள் வரைந்த ஓவியங்களை தினசரி நாளிதழ்களுக்கு அனுப்பினோம், ஓவியங்கள் பிரசுரமாயின, இப்படித்தான் அவளது ஓவிய ஆர்வத்தை தொடர்ந்து ஊக்குவித்தோம்.
ஒரு காலத்தில் படங்களைப் பார்த்து வரைவது என்ற நிலையில் இருந்து கற்பனையில் ஓவியங்களை வரைய வேண்டும் என்ற அவளது அடுத்தக்கட்ட முயற்சியாக கொரோனா காலத்தில் “..பூமி உருண் டைக்கு மாஸ்க்..” அணிவித்து வரைந்த ஓவியம் பலராலும் பாராட்டைப் பெற்றது.
ஒவ்வொரு முறையும் ஒரு புது யுத்தியை ஓவியத்தில் கடைபிடிக்க முயற்சி செய்வாள், பள்ளியில் படிக்கும் போதே காபி தூளினால் ஒரே ஓவியத்தில் ராமர், கிருஷ்ணர், காமதேனு உள்ளடங்கியதாக வரைந்த ஓவியம் ஊடகங்களில் பாராட்டைப் பெற்றது.
அன்றைக்கு பென்சில் கொண்டு ஆரம்பித்த ஓவியங்கள் தற்போது “..நிறங்களின் வழியே உலகம்..” என்ற தலைப்பில் மிகப்பெரிய ஓவியக் கண்காட்சிக்கு வித்திட்டுள்ளது.
இந்த ஓவியக் கண்காட்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் என்.சங்கரய்யா, நகைச்சுவை நாயகன் நாகேஷ், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், புத்தர் போன்ற ஆளுமைகள் இடம் பெற்றிருந்தனர்.
குறிப்பாக மார்க்கர் கொண்டு வரையப்பட்ட பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஓவியம் பலரைக் கவர்ந்தது, அந்த ஓவியத்தைப் பலர் விலைக்கு கேட்டனர், அப்படிக் கேட்டவர்கள் தமிழ்நாட்டைத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முக்கியமானது.
சிவன், பார்வதி, ராமன், சீதை, விநாயகர், காளி என்று விதவிதமான வடிவங்களில் வரையப்பட்ட கடவுளின் ஓவியங்கள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
எனது மகள் அருந்தமிழ் இலக்கியாவின் ஓவியக் கண்காட்சியை வட மாநிலத்தவர்கள், சுற்றுலாப் பயணிகள் பலர் விரும்பி ரசித்ததுடன் அவற்றுடன் செல்பி, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டதைக் கண்டபோது, ஒரு அப்பாவாக மிகவும் சந்தோசப்படுகிறேன்.
இளம் ஓவியர் க.அருந்தமிழ் இலக்கியாவிடம் பேசினோம்..,
“..நான் படித்த போது முதலாம் வகுப்பில் டிராயிங் கிளாஸ் இருந்தது. அப்போது இருந்த என்னோட வகுப்பு ஆசிரியர் எனக்கு ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்தார்.
அடுத்த ஆண்டே போட்டிகளில் பங்கேற்கும் வகையில் என்னை மாற்றியது, அதற்கு அந்த சார் தான் காரணம்.
எங்கள் வீட்டிற்கு அன்றாடம் நாளிதழ்களை என் தந்தை வாங்குவாங்க, ஞாயிற்றுக் கிழமைகளில் அந்த நாளிதழ்களோடு வரும் வார இதழ்களில் இருந்த ஓவியம் என்னைக் கவர்ந்தன.
அவற்றைப் பார்த்து ஓவியங்களை வரைய ஆரம்பித்தேன், அடுத்து ஆறு வயதிலிருந்து சுயமாக ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன், அதற்கு பிறகு தொலைக் காட்சியில் பார்க்கும் போது எனக்குப் பிடித்த கேரக்டர்களை எனக்குப் பிடித்த நிறங்களில் வரைந்தேன்.
எனது ஓவியங்கள் சிறப்பாக இருப்பதை எனது பள்ளி ஆசிரியர்கள், தாய், தந்தையர் பாராட்டியதால் அப்போதே பள்ளியில் நடந்த ஓவியப்போட்டிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன்.
எந்தவொரு ஓவிய ஆசிரியரிடமும் கற்றுக் கொள்ளாமல் சுயமாகவே வரைய ஆரம்பித்தேன்.
அன்று பேப்பரில் பென்சிலில் வரைய ஆரம்பித்த போது எனது பெற்றோர் அளித்த ஊக்கமே கலர் பென்சில், கிரையான்ஸ் கொண்டும், அதன் பின்னர் சார்ட்டில் ஆயில் பேஸ்ட்டில் கொண்டு வரைய ஆரம்பித்தேன்.
அடுத்து கேஸ்வாஸில் ஓவியங்களை பெயிண்ட் கொண்டு வரைந்தேன், விதவிதமான வகைகளில் ஓவியங்களை வரைய ஆரம்பித்ததே ஓவியக் கண்காட்சி நடத்த தைரியத்தைக் கொடுத்தது.
நிறங்களின் வழியே உலகத்தை அனுபவித்தீர்களா? என்றால் நிறையவே..! முதன் முதலாக பென்சிலில் கருப்பு வெள்ளையில் வரைய ஆரம்பித்ததற்கும், தற்போது வண்ணங்களைக் கொண்டு ஓவியம் வரைவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
நிறங்கள் என்பது உணர்வு சம்பந்தப்பட்டது, நிறங்களின் வழியே காட்சிகளைப் பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வது சவாலான விஷயம், நான் வரையும் ஓவியக் காட்சி பார்ப்பவரின் கற்பனைக்கு வேறு விதமான உணர்வை ஏற்படுத்தலாம்.
ஒவ்வொருவரின் உணர்வுக்கும் நிறங்கள் நிறைய வித்தியாசத்தை தருகின்றன, அப்படி உணர்வு ததும்பிய காட்சியைத்தான், எனது “..நிறங்களின் வழியே உலகம்..” ஓவியக் கண்காட்சியில் என்னால் பார்க்க முடிந்ததைத்தான் பார்வையாளர்களும் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.
ஓவியங்கள் தவிர சோப், சாக்பீஸ், காய்கறி ஆகியவற்றில் சிற்பம் செய்யத் தெரியும், வேண்டாது தேவையில்லை என்று ஒதுக்கிய பேப்பர்களைக் கரைசலாக்கி அதன் மூலம் பொருட்களை உருவாக்கும் பேப்பர் கிராப்ட் செய்வேன், பாட்டிலிலும் ஓவியம் வரைவேன். இதை விட, இசை கேட்பதும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஒவ்வொருவருக்கும் படிப்பு என்பதைத் தவிர பிடித்தமான விஷயம் என்று ஒன்று இருக்கும், எனக்குப் பிடித்த விஷயம் ஓவியம் அதை கற்றுக் கொள்ளவும், காட்சிப் படுத்தவும் முடிந்துள்ளது.
அந்த வாய்ப்பு என்னைப் போன்ற மற்ற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும். அதற்கு ஒவ்வொரு பெற்றோர்களும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டும். அந்த வகையில் எனது பெற்றோர் எனக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருக்கிறார்கள்.
எனது லட்சியம் என்பது ஐ.டி,பேங்கிங் துறை பணிதான், ஆனாலும் ஓவியம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும்.
அதன் ஒரு பகுதியாக இன்றும் பழமை மாறாத இரண்டாயிரம் ஆண்டு தொன்மை வாய்ந்த பண்பாட்டு நகரமான மதுரை குறித்த பிரம்மாண்டமான ஓவியக் கண்காட்சியை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.
மதுரை மாநகர் வீதிகள் மட்டுமின்றி, மதுரையின் பழமை வாய்ந்த கிராமப்புறங்களையும் காட்சிப்படுத்தும் வகையில் அந்த ஓவியக்கண்காட்சியை நடத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது.
இதுவரை புகைப்படங்களில் இடம் பெறாத மதுரைக் கிராமங்களை ஓவியங்கள் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
அதற்காக பழமையான கிராமங்கள், அந்த கிராமங்களின் அடையாளங்கள், மக்கள் வாழ்க்கை முறை குறித்து பதிவு செய்து ஓவியத்திற்குள் கொண்டு வரவேண்டும்.
மதுரையில் ஓவியம் வரைய ஆர்வமுள்ளவர்களுக்கு ஓவியம் சார்ந்த அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மிகப்பெரிய ஓவியக் கூடம் அமைக்க வேண்டும் என்கிற எதிர்கால லட்சியமும், ஆசையும் உள்ளது..” என்றார்.
ஓவியங்கள் மூலம் சமூகத்தை உலகிற்குக் காட்டும் மிகச் சிறந்த பணியை ஆர்வமுடன் செய்து வரும் ஓவியத் தாரகைக்கு ‘ஆளுமைச் சிற்பி’யின் வாழ்த்துக்கள்… l