சிறப்புக் கட்டுரை


முனைவர். எஸ். அன்பரசு, முதுகலை இயற்பியல் ஆசிரியர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, தேசிய மேல் நிலைப்பள்ளி 125 – ஆண்டுகள் தனது அர்ப்பணிப்பான கல்விச் சேவையை நிறைவு செய்திருக்கிறது. இந்த அரசு உதவி பெறும் பள்ளியானது சுதந்திரம் பெறுவதற்கு 48 – ஆண்டுகள் முன்னரே, மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களின் கல்வித் தேவையைப் பூர்த்தி செய்ய 1899 – ஆம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் நாள் 15 – மாணவர்களுடன் தொடங்கப்பட்டது. வள்ளல் குணம் படைத்த மறைந்த திருமிகு. டி.எஸ். சிங்காரவேலுடையார், திருமிகு. வி.ராமதுரை அய்யர் ஆகியோரால் இந்த ஆலமரத்தின் விதை ஊன்றப்பட்டது.

அப்போது நாட்டில் பற்றி எரிந்த சுதந்திரத் தீயின் ஒரு துளியாய் உருவாக்கப்பட்ட இப்பள்ளி 125 – ஆண்டுகளை நிறைவு செய்து அதன் நோக்கத்தில் சிறிதும் வழுவாது, தனித்துவம், நாட்டுப்பற்று அதனையும் தாண்டி சாதிக்க கூடிய ஏதோ ஒன்றைத் தேடி நகர்ந்து கொண்டே இருக்கிறது.

பள்ளியின் நோக்கம்

இன்று உலகம் முழுவதும் பரவி இருக்கிற இந்தப் பள்ளியின் எண்ணற்ற பழைய மாணவர்கள் அனைவரும் அவர்களின் சிந்தனையால், மலரும் நினைவுகளால், பால்ய கால எண்ணங்களால் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பள்ளியின் நோக்கமான “அன்பே தெய்வம்” “வாய்மையே அழகு” “பணியே பூசனை ” என்ற வரிகளை “God is Love, Truth is beauty, Work is Worship” எனத் தினம் தினம் சொல்லி வளர்க்கப்பட்டார்கள்.

தலைவர்கள் வருகை

பள்ளியின் பார்வையாளர் புத்தகம் பல தலைவர்களின் வருகையையும் தேசிய நீரோட்டத்தில் பள்ளியின் ஈடுபாட்டையும் பிரதிபலிக்கிறது. தேசத்தந்தை மகாத்மா காந்தி 15 .9.27 இல் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளார். பார்வையாளர் புத்தகத்தில் “I hope this boys and girls will all soon learn Bhagavad Gita” என எழுதிக் கையெழுத்திட்டுள்ளார். காந்தியுடன் வந்திருந்த, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்கள் “நாங்கள் பள்ளிக்கு வருகை புரிந்ததால் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம். உண்மையில் இப்பள்ளி ஒவ்வொருவரின் பண்பிலும் தேசியத்தை வளர்க்கட்டும்’’ என எழுதிச் சென்றுள்ளார். மகாதேவ தேசாய், முன்னாள் முதல்வர்கள் சி.ராஜகோபாலாச்சாரி, சி.என். அண்ணாதுரை, மு.கருணாநிதி, முன்னாள் ஆளுநர்கள் கே.கே.ஷா, அலெக்ஸாண்டர் ஆகியோர் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்கள் ஆசிரியர்களுடன் உரை நிகழ்த்தியுள்ளனர்.

தேர்ச்சி விழுக்காடும் விளையாட்டும்

பல ஆண்டுகள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 100% தேர்ச்சி விழுக்காட்டைப் பெற்ற பள்ளியாக இப்பள்ளி திகழ்கிறது.

பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடம், வரலாறு, கணிப்பொறி அறிவியல், பொது இயந்திரவியல் பாடங்களில் மாநில அளவில் இரண்டாம் இடம், ஆறு முறை மின்னணுவியல் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் எனப் பள்ளியின் தேர்ச்சிச் சாதனைகள் தொடர்கிறது.

தேசியப் பள்ளியும் தன்னைவிட வயதில் மூத்த மன்னார்குடியின் மற்றொரு அடையாளமாகத் திகழும் பின்லே மேல்நிலைப் பள்ளியும் ஒருங்கிணைந்த தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் விளையாட்டுத் துறையில் பல ஆண்டுகளாக கோலோச்சி வருகின்றன. கடந்த ஆண்டில் நடந்து முடிந்த முதலமைச்சர் கோப்பைக்கான கூடைப்பந்தாட்டப் போட்டியில் தேசிய மேல்நிலைப்பள்ளி அணி மாநிலத்தில் முதலிடம் பெற்று ரூபாய் ஆறு லட்சம் பரிசுத் தொகை பெற்றது இதற்குச் சான்றாகும். இப்பள்ளி மாவட்ட விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 21 – ஆண்டுகள் முதலிடம் பெற்று பார்த்தசாரதி ராட்சத சுழல் கோப்பையை தக்க வைத்த பள்ளியாகும்.

ஆசிரியர் குழாம்

மிகவும் பிரபலமான பல ஆசிரியர்களும், தலைமை ஆசிரியர்களும் பள்ளியைத் திறம்பட வளர்த்தெடுத்தனர். தனது சிந்தனை எல்லாம் பள்ளிக்காக மட்டுமே என்று சிந்தித்த ஆசிரியப் பெருமக்களால் இப்பள்ளி வளர்ந்து நிற்கிறது. கல்வி மணம் பரப்பிய முன்னாள் தலைமை ஆசிரியர்கள், எஸ்.வைத்தியநாத ஐயர், ஏ.வி. தியாகராஜ சாஸ்திரிகள், தேசிய விருது பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் வி. சீனிவாசன், எஸ்.சம்பத் ஆகியோருடன் போட்டி போட்டுக் கொண்டு மாணவர்களைப் படிக்க வைப்பதிலும், புதுப்புது உத்திகளைக் கையாள்வதிலும் தேசியப் பள்ளி ஆசிரியர்கள் தமக்கென்று தனி மரபை உருவாக்கி வந்துள்ளனர்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.