பீனிக்ஸ் மனிதர்கள் -12

ஒரு சிறப்பு நேர்காணல்

நேர்காணல்: கவிஞர் திரு.ஏகலைவன்
நம்பிக்கை வாசல் டிரஸ்ட்,
கைபேசி & 98429 74697

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

ஒரு குளத்திலிருக்கும் நீரின் அளவைப் பொருத்தே, அதில் மலர்ந்துள்ள தாமரைத் தண்டின் நீளம் அமையுமாம். அதாவது நீர்மட்டம் குறைந்து காணப்படும்போது, சிறிதாக இருக்கக்கூடிய அந்தத் தண்டின் உயரமானது, நீர்மட்டம் உயரும்போது தானாகவே வளர்ந்துவிடுமாம். அதுபோலவே ஒரு மனிதனுடைய உள்ளத்தில் உயிர்த்திருக்கிற உந்துசக்தியைப் பொறுத்தே, அந்த மனிதனுடைய வாழ்வில் வளர்ச்சியும், உயர்வும் ஏற்படும் என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருப்பதை அறிகையில், உண்மைதானே என்று வியக்கத் தோன்றுகிறது.

ஏனென்று சொன்னால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக வாழ்ந்து மறைந்த அந்தப் பெருந்தகை அப்போதே மனித நல்வாழ்விற்கான அத்தனை விஷயங்களையும் சிந்தித்திருப்பது கண்டு மட்டற்ற வியப்பே ஏற்படுகிறது. இதை விடக் கூடுதலான வியப்பு என்னவென்று சொன்னால், அந்த வார்த்தைகளை நிகழ்காலத்தில் நிஜமாக்கிக் காண்பித்து, கண்முன்னே வாழ்கிற சாதனையாளர்கள் இன்னும் வியப்பை ஏற்படுத்துகிறார்கள்.

அத்தகு வியப்புக்குரிய பெண்மணியான செல்வி மு.பூரணசுந்தரி அவர்களின் வாழ்க்கையை இந்த மாத பீனிக்ஸ் மனிதர்கள் எனும் பகுதியில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

தமிழகத்திலுள்ள பல லட்சம் பார்வையற்றோரில் சமூகத்தின் உயர் நிலையான ஐஏஎஸ் தேர்ச்சி வரை தொட்டவர்கள் மிகக்குறைவு. அத்தகு விரல்விட்டு எண்ணத்தக்க சாதனையாளர்களில் ஒருவராக, கடந்த 2019-ஆம் ஆண்டில் நான்காவது முறையாகத் தேர்வெழுதி, இவ்வாண்டில் தன்னுடைய தமிழ் மாத பிறந்த நாளான ஆகஸ்ட் 4ல் முடிவு அறிவிக்கப்பட்ட 879 பேரில் 286 ஆம் இடத்தைப் பெற்று, மிக இளம் வயதில் உயரம் தொட்ட மகத்தான சாதனை புரிந்துள்ள இவர், மதுரை மணி நகரத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண்மணியான செல்வி பூரணசுந்தரி ஆவார்.

தனது ஆறாம் வயதில் பார்வையைத் தொலைத்தாலும், நம்பிக்கையைத் தொலைக்காமல் முயற்சிகளை மேற்கொண்டு, பிஏ படித்து, வங்கிப் பணியாளராக உயர்ந்து, தனது கனவினை எதிர்நோக்கித் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டதன் விளைவாக, இவ்வாண்டில் தேர்ச்சியடைந்த 2 மாற்றுத்திறனாளிகளில் ஒருவராக வெற்றியடைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முயற்சி செய்தால் ஐஏஎஸ் என்கிற மகத்தான இலக்கும் கூட, மாற்றுத்திறனாளிக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே சாத்தியம்தான் என்பதை தன்னுடைய வாழ்க்கையின் வாயிலாக உணர்த்த முன்வந்திருக்கும் இவரின் வாழ்க்கையை வாசிப்பதன் வாயிலாக, நீங்களும் கூட நம்பிக்கை மனிதர்களாக மாறுங்கள். இதோ செல்வி மு.பூரணசுந்தரி ஐஏஎஸ் அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் உங்கள் கரங்களில்…

  1. உங்கள் இளமை மற்றும் கல்விக்காலம் பற்றிச் சொல்லுங்கள்?

எனது இளமைக்காலம் எல்லோரையும் போலவே பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரியாக அமைந்திருந்தது. முதலில் நான் என் வீட்டிற்கு அருகிலிருந்த மங்கையர்க்கரசி பள்ளிக்கூடத்தில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளைப் படித்துக்கொண்டிருந்தேன். 6 வயதாகும்போது பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. அதற்குப் பிறகு சிறப்பாசிரியர்கள் துணைகொண்டு மதுரை சம்மட்டிபுரம் கே.என்.பி.எம் பிள்ளைமார் சங்க மேல்நிலைப் பள்ளியில் என்னுடைய படிப்பைத் தொடர்ந்தேன்.

இளமைக் காலத்தில் எனக்கு அதிகப்படியான உற்சாகத்தை ஊட்டியவர்கள் எனது தந்தை மற்றும் தாய்தான். அவர்கள்தான் எனது குறைபாட்டைக் கடந்து என்னை வளர்க்கப் பாடுபட்டனர். அவர்களைப் பின்தொடர்ந்து எனது முயற்சிகளையும் தொடர முடிந்தது.

  1. உங்கள் குடும்பத்தினர் பற்றி..?

அப்பா திரு. முருகேசன், அம்மா திருமதி. ஆவுடைதேவி இவர்களோடு நானும், என்னுடைய தம்பி திரு. சரவணகுமாருமாக நாங்கள் நான்கு பேர் கொண்ட அளவான, அழகான குடும்பம் எங்களுடையது. அப்பா சேல்ஸ் எக்சிகியூடிவ்வாக மார்க்கெட்டிங் லைனில் வேலை செய்கிறார். அம்மா ஹோம் மேக்கராகவும், தம்பி பி.காம் முடித்துவிட்டு, டிஎன்பிஎஸ்சி தேர்விற்காக தயார் செய்து கொண்டு இருக்கிறார்.

நான் பள்ளியில் படிக்கும்போது மற்ற மாணவிகளைப் போலவே டாக்டராகவோ அல்லது விஞ்ஞானியாகவோ ஆக வேண்டும் என்கிற பொதுவான கனவு இருந்தது. அதுபற்றிப் பின்னாட்களில் அப்பாவிடம் பேசும்போது ஐஏஎஸ் மாதிரியான உயர்பொறுப்புகளுக்கான தேர்வுகளை எழுதமுயலும்படிச் சொல்லவே, அதனை நல்வார்த்தையாக மனதில் எடுத்துக்கொண்டேன்.

அதனைத் தொடர்ந்து புத்தகங்களைப் படித்துக் காண்பிக்கச் சொல்லி அம்மாவிடம் கேட்டு, அதனை மனதில் பதித்துக் கொள்ளத் தொடங்கினேன். எனவே, எனக்குள் கனவு உருவாகக் காரணமான அம்மாவும், அப்பாவுமே என் இரு கண்கள் என்பேன்.

  1. உங்கள் பார்வையில் குறைபாடு ஏற்பட்ட காலகட்டம்.. அதனைச் சீர்செய்ய நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் ஆகியன பற்றிச் சொல்லுங்கள்?

எனக்கு 6 அல்லது 7 வயது இருக்கும்போது பார்வைக் குறைபாடு ஏற்பட்டது. அப்போது நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அச்சமயத்தில் எனக்கு போர்டில் எழுதிய எழுத்துக்கள் தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டது.

இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பார்வையின் தெளிவு குறைந்துகொண்டே வந்தது. மதுரையில் இருக்கக்கூடிய அரவிந்த் மருத்துவமனை மற்றும் சென்னையில் இருக்கக்கூடிய கண் சிகிச்சை சார்ந்த மருத்துவமனைகளான அகர்வால், சங்கர நேத்ராலயா போன்ற இடங்களுக்கெல்லாம் போனோம். அறுவை சிகிச்சையும் செய்தோம். ஆனாலும், பலனில்லை என்கிற நிலைதான் ஏற்பட்டது.

அப்போதுதான் சிறப்பாசிரியர்கள் துணையோடு, என்னால் எனது பாடங்களைப் படிக்க முடியும் என்றும், பள்ளிக்கூடத்துக்கு போக முடியும் என்றும் தெரிந்துகொண்டேன். அதைத் தொடர்ந்து என்னுடைய அடுத்தடுத்த வகுப்புகளை என்னால் தொடர முடிந்தது.

  1. படிப்பில் நிறைந்த ஆர்வத்தோடு செயலாற்றி, பத்தாம் வகுப்பில் பள்ளியினளவில் முதல் மாணவியாகவும், பனிரெண்டாம் வகுப்பில் பள்ளியில் இரண்டாம் மாணவியாகவும் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள். அச்சமயத்தில் ஏற்பட்ட உங்கள் சந்தோஷம் மற்றும் கனவுகளைப் பற்றி சொல்லுங்களேன்?

அந்தத் தருணம் மிக மகிழ்ச்சியாக இருந்தது. நாம் போட்ட உழைப்பிற்குப் பலன் கிடைத்திருக்கிறது என்கிற எண்ணம் ஒரு பக்கம் தோன்றியது.

அப்போது எனக்கேற்பட்ட கனவுகளெல்லாம் உயர்கல்வியை நல்ல முறையில் படிக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. நான் நினைத்த உயர்கல்விக்காகவும், சிறந்த கல்லூரிக்காகவும் என்னைப் பல விதங்களில் தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன். ஏனென்றால், ஒரு நல்ல உயர்நிலைக் கல்வியைப் பெறவேண்டும் என்பதில் நான் குறியாக இருந்தேன்.

JNU, டெல்லி யுனிவர்சிட்டி எல்லாம் போய் படிக்கவேண்டும் என்றும், சட்டம் படிக்கவேண்டும் என்றும் பல கனவுகள் இருந்த நாட்கள் அவை. அதன்பிறகுதான் முதலில் பட்டம் பெறுவோம் என்கிற எண்ணத்தோடு, மதுரையிலிருக்கிற பாத்திமா கல்லூரியில் இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிக்க ஆரம்பித்தேன்.

  1. ஐஏஎஸ் படிக்க ஆர்வம் தோன்றியற்கான காரணம் என்ன? அதற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றி?

ஐஏஎஸ் என்கிற விஷயம் முதல்முதலில் நான் பதினொன்றாவது, பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போதுதான் எனக்குத் தெரிய ஆரம்பித்தது. ஆரம்பகாலத்தில் டிஸ்ட்ரிக்ட் கலெக்டர் மட்டும்தான் ஐஏஎஸ் அப்படின்னு நினைச்சேன்.

ஆனால், கல்லூரிக்குப் போன பிறகுதான் எனக்கு நிறைய விபரங்கள் கிடைத்தது. குடிமைப் பணியாளர்கள் என்பவர்கள் பல துறைகளில் இருக்கின்றனர் என்றும், அரசின் திட்டங்களை உருவாக்குவதில் அவர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கிறது என்றும் தெரிந்துகொண்டேன்.

அதன்பிறகுதான் நிச்சயமாக நானும் அந்த இடத்துக்குப் போய், அதிகப்படியான மக்களுக்கு எனது சேவைகளைக் கொடுக்கிற இடத்தில் என்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதற்கு நான் இந்தத் தேர்வை எழுதித் தேர்ச்சி அடையவேண்டும் என்கிற தீர்க்கமான எண்ணத்தை எனது லட்சியமாக ஏற்படுத்திக் கொண்டேன்.

அதற்குப் பிறகு எடுத்த முயற்சிகள் என்று பார்த்தால், கல்லூரியில் இருக்கும்போதே நூலகத்தில் நிறையப் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்தேன். முந்தைய வருடங்களின் கேள்வித் தாள்களையும், தினசரி செய்தித்தாள்களையும் கொஞ்சம் கவனித்து மனதிற்குள் நிறுத்த ஆரம்பித்தேன்.

பல்வேறு ஐஏஎஸ் பயிற்சி மையங்களோடும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, என்னுடைய முழுத் திறமையையும் வெளிப்படுத்தி வெற்றியடைகிறவரைக்குமான இந்த நான்கு முறையும், பயிற்சி மேற்கொள்ளவும், அறிவு சார்ந்து என்னை மனதளவிலும் நிறையவே தயார்படுத்திக் கொள்ள ஆரம்பித்தேன்.

  1. மனிதநேயம் அகாடமி போன்ற பல்வேறு பயிற்சி மையங்கள் அளித்த பயிற்சிகளைப் பற்றி வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்?

நான் கல்லூரி முடித்த பிறகு 2015 ஆம் ஆண்டு மனிதநேயம் அகாடமியில் போய் சேர்ந்தேன். எனக்கு அங்கு பயிற்சி வகுப்புகளும், நல்ல விடுதி வசதியும் கிடைத்தன. தரமான உணவு, படிப்பதற்கான நல்ல சூழல் போன்றவையெல்லாம் இலவசமாக இந்த அறக்கட்டளையின் வழியாக எனக்கும், எனது மற்ற நண்பர்களுக்கும் கிடைத்தது. அங்கிருந்தபடியே நான் முதல் முறையாக ஐஏஎஸ் தேர்வில் முயற்சியெடுத்தேன். ஆனால், முதல் முறை வெற்றிபெற இயலவில்லை. ஆனால், எனது முயற்சிகள் முடிந்து போய்விடவில்லை.

அடுத்து, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது கட்டம் வரைக்கும் நான் தொடர்ந்து முயற்சி செய்தேன். அதற்குக் காரணமாக இருந்தது அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையமாகும். சென்னை அடையாறு, பசுமை வழிச் சாலையில் அமைந்திருக்கும் இந்த மையமானது, தமிழக அரசு நடத்தக்கூடிய இன்ஸ்டியூட் ஆகும்.

இந்த மையத்தில் படிப்பதற்கான நல்ல இட வசதியும், இரவும் பகலும் படிக்கக்கூடிய சூழலும் இருந்தது. அச்சமயத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் அங்கு கிடைத்தார்கள்.

அதற்கப்புறம் போக்கஸ் அகாடமியில் தமிழ் இலக்கியமும், சங்கர் அகாடமியிலே இண்டர்வியூக்கான வழிகாட்டுதலும் கற்றுக்கொண்டேன். ஆகவே, இந்த நான்கு அகாடமிகளும் நான் கடந்து வந்த பாதையில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பதைச் சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன்.

  1. தமிழ்நாடு கிராம வங்கிப் பணியாளராக இணைந்தது பற்றியும், பணியில் இணைந்த பிறகும் கூட ஐஏஎஸ் கனவை கைவிடாமல் பற்றி இருந்தது எப்படி என்பது குறித்தும் சொல்லுங்கள்?

2016-ஆம் ஆண்டு எனது முதல் அட்டெம்ட் கொடுத்தபோது, அந்த முறை என்னால் வெற்றியைப் பெற முடியவில்லை. என்னால் முதல்நிலைத் தேர்வோ அல்லது இண்டர்வியூவோ எழுத முடியாமல் போனது.

அதற்குப்பிறகு நான் மற்ற தேர்வுகளை எழுத ஆரம்பித்தேன். ஏனென்றால், ஏதாவது ஒரு பணியில் இருந்தபடியே எனது படிப்பையும், ஐஏஎஸ் முயற்சிகளையும் தொடர வேண்டும் என்று நினைத்தேன். அதன் விளைவாக நான் TNPSC, SSC, RRB, Bank Exams ஆகியவை எழுதினேன். அதில் எனக்கு ஊரக வளர்ச்சி வங்கியான அன்றைய பாண்டியன் கிராம வங்கியும்.. இன்றைய தமிழ்நாடு கிராம வங்கியிலே எனக்கு எழுத்தர் பணி கிடைத்தது.

இந்தப் பணியில் 2018-ஆம் ஆண்டு மூன்றாவது அட்டெம்ட் கொடுக்கறதுக்கு முன்னதாக இணைந்தேன். இருந்தபோதும் எனது கனவாகவும், இலக்காகவும் நான் வைத்திருந்தது சிவில் சர்வீஸ். அதை நோக்கிய எனது பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

இதனால் வேலை பார்த்துக்கொண்டே Loss Of Pay முறையில் விடுப்பு எடுத்துக்கொண்டுதான் நான் சென்னைக்குப் போய், எனக்கான தயாரிப்பினைத் தேர்வுக்கு முன்னதாக வைத்துக்கொள்வேன்.

வேலை நாட்களில் அதிகாலையிலும், இரவிலுமாக நான் எனது படிப்பை மேற்கொண்டேன். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நேரம் நிறையவே கிடைத்தது. அந்நாட்களில் நான் முழுமையாகப் படிக்க முடிந்தது. இப்படித்தான் எனது ஐஏஎஸ் பயணம் அமைந்திருந்தது.

  1. இந்தத் தேர்வில் வெற்றி பெறுவதற்காக கிட்டத்தட்ட நான்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறீர்கள் என்று அறிய முடிகிறது. அம்முயற்சிகளில் ஏற்பட்ட தோல்வியின்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

நீங்கள் சொல்வது சரிதான்.. நான் இதுவரை நான்கு முறை சிவில் சர்வீஸுக்காக முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறேன்.

முதல் முறை முதல்நிலைத் தேர்வு கிளியர் செய்ய முடியவில்லை. இரண்டாவது மற்றும் மூன்றாவது முறைகளில் முதல்நிலைத் தேர்வு, மெயின்ஸ், இண்டர்வியூ என்று அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொண்டபோது 10 / 15 மதிப்பெண்கள் வித்தியாசங்களில் என்னால் சர்வீஸ் பெற முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு நான்காவது முறையாக எடுத்த இம்முயற்சியில் 286 ஆம் இடம் கிடைத்து வெற்றி பெற்றிருக்கிறேன்.

ஒவ்வொரு முறை தோல்வி அடையும்போதும் ரொம்ப கஷ்டமாகவும், வலியாகவும்தான் இருந்தது. ஆனால், அந்தக் கஷ்டங்களை ரொம்ப நேரத்துக்கோ அல்லது மனதின் ஆழத்துக்கோ நான் எடுத்துட்டு போகலை. மீண்டும் நம்மால் முடியும் என்கிற அதீதமான நம்பிக்கையுடனும், எனது பெற்றோர் மற்றும் நண்பர்களுடைய வழிகாட்டுதல்களோடும் நான் மீண்டும் படிக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் ஒவ்வொரு முறையும் முயற்சிகளை எடுத்துட்டு போனேன். ஒருவேளை இந்த முறையும் கூட தேர்ச்சி வராமல் இருந்திருந்தால், மீண்டும் படிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருந்திருப்பேன். ஏனென்றால், ஐஏஎஸ் என்பது என் கனவு.

  1. 2019ல் நடந்த 879 பதவிகளுக்கான ஐஏஎஸ் தேர்வில், 5 இலட்சம் பேர் தேர்வெழுதி, 11,545 பேர் மெயின் தேர்வைச் சந்தித்து, 2,304 பேர் தேர்வான நிலையில், இவ்வாண்டின் தேர்வு முடிவுகளில், இரண்டு மாற்றுத்திறனாளிகளில் ஒருவராக 286 ஆம் இடத்தில் தேர்ச்சியடைந்து இருக்கிறீர்கள். உடற்தடை கடந்தும் லட்சக்கணக்கான மனிதர்களோடான போட்டியில் வெற்றியடைந்த இந்த மகத்தான வெற்றியையும், சந்தோஷத்தையும் எப்படி உணர்கிறீர்கள்?

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதற்கு மேலாக இன்னும் நிறைய மகத்தான மனிதர்கள் வாழ்த்தும்போதும், இளைஞர்கள் ஒவ்வொருவரும் வாழ்த்தும்போதும் அவர்களுக்கு உந்துதலாக இருக்கிறேனென்று சொல்வதைக் கேட்கும்பொழுதும் இன்னும் மகிழ்ச்சியாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது.

இதை எனது வெற்றியாக நான் பார்க்கவில்லை.. எனது வெற்றியின் தொடக்கமாகவே பார்க்கிறேன். அந்தத் தொடக்கமே மிக அருமையாக அமைந்திருக்கிறது என்கிற வகையில் மனம் நிறைந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இன்னும் எனது எதிர்காலப் பணிகளை முழு உழைப்பைத் தந்து, சிறப்பாகச் செயல்படவேண்டும் என்பதையே எனது குறிக்கோளாக இந்தத் தருணத்தில் எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

  1. 25 வயதில் மகத்தான வெற்றியெனும் மகுடத்தை அணிந்து இருக்கிறீர்கள். ஒரு வெற்றியாளராக இளைய தலைமுறையினருக்கு உங்கள் ஆலோசனைகள் என்ன?

நிச்சயமாக.. இளைய தலைமுறைதான் பல மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான உத்வேகத்தோடும், நம்பிக்கையோடும் செயல்படக்கூடிய பெரிய சக்தி என்று சொல்லலாம்.

நமது இந்திய சமூகத்தின் இணையற்ற வைரங்களான அப்துல் கலாம் ஐயா அவர்களும், சுவாமி விவேகானந்தாஜி அவர்களும் இளைஞர்களை நோக்கித்தான் அவர்களது கனவுகளையும், அவர்களது பணிகளையும் சேவைகளையும் முன்வைக்கின்றனர்.

அந்த வகையில் ஒவ்வொரு இளைஞனும் முதலில் தன்னைத்தானே நம்பக்கூடிய நபராக உருவாகிக் கொள்ள வேண்டும். ஒவ்வொருவரிடமும் நிறைய நிறைய திறமைகள் இருக்கின்றன. அதனால் அந்தத் திறமைகளையும், கிடைக்கக்கூடிய வாய்ப்புகளையும் முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதுபோக சில வாய்ப்புகளை நாமே உருவாக்கிக்கொள்ளவும் வேண்டும். மேலும், எவ்வளவு தடைகள் வந்தாலும், நம்பிக்கையோடும், உழைப்போடும் நாம் இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும். நிச்சயமாக ஒருநாள் அதற்கான பலன்கள் கிடைக்கும்.

  1. கற்றல் குறித்துச் சொல்கையில், பரிட்சைக்கு மட்டும் படிப்பது அல்லது வேலைக்குப் படிப்பது என்பதாகப் பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். கற்றல், கற்றதை மனதில் நிறுத்திக் கொள்ளுதல் ஆகியன பற்றிய உங்கள் ஆலோசனைகள் என்ன?

நிச்சயமாக தேர்வுக்காகவோ அல்லது வேலைக்காகவோ படிப்பது என்பது இன்றைய தேவையாகவே இருந்தாலும்கூட, அப்படிப் படிக்கும்போது நாம் விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு, அதற்கு ஏற்றபடி நம்மை தகவமைத்துக் கொண்டு நம்முடைய செய்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும்.

அதனால் நாம் கற்கக்கூடிய விஷயங்களை முழுவதுமாகப் புரிந்துகொண்டு, அப்படிப் புரிந்தவற்றை நாம் தொடர்ந்து உள்வாங்கிக் கொண்டே இருக்கவேண்டும்.

பொதுவாக, ஒவ்வொரு தேர்வுக்கும் ஒவ்வொரு அணுகுமுறைகள் இருக்கின்றன என்பதை நாம் நன்குணர்ந்து அதற்குத்தக்கபடி படிப்பது நலம். சிவில் சர்வீஸைப் பொறுத்தவரைக்கும் நிறைய அனாலிஸிஸ் பாயிண்ட் ஆப் வியூவிலேயும், குரூப் 4 தேர்வுகளில் நிறைய பேக்சூவல் பாயிண்ட் ஆப் வியூலேயும் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

எனவே, அந்தத் தேர்வுகளுக்கேற்றபடி நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அதனால், படிக்கும் பொழுது முழுவதும் உள்வாங்கிக் கொள்வதோடு, அதை திரும்பவும் ரீகலெக்ட் செய்து பார்க்க வேண்டும். அதாவது, நினைவில் கொண்டுவந்து நிறுத்தி, படித்ததை திரும்ப நம் மனதளவில் அசைபோடுவது ரொம்பவே அவசியம். பரிட்சை நேரத்தில் இந்தச் செயல்பாட்டுமுறை நிறையவே கைகொடுக்கும் என்பது உறுதி.

  1. சக மாற்றுத்திறனாளிகளுக்கு உங்கள் தன்னம்பிக்கை வார்த்தைகள்?

மாற்றுத்திறனாளிகள் என்பவர்கள் உலகையே மாற்றும் திறனாளிகள் என்றுதான் சொல்லணும். ஏனென்றால், நிச்சயமாக ஒவ்வொரு மாற்றுத்திறனாளியிடமும் தனித்தன்மைகள் இருக்கும். எனவே, ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் தங்களிடம் இருக்கக்கூடிய தனக்கான தனித்தன்மைகளைப் பற்றியும், திறமைகளைப் பற்றியும் சிந்திக்கவேண்டும். அதனால், முதலில் தனக்குத்தானே அங்கீகரித்து அந்தத் திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும்.

மற்றவர்களைக் காட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய சவால்களும், தடைகளும் ஏற்படும்போது, அதிலிருந்து எப்படி வெளிவருவது? அதைத் தாண்டி சாதிப்பது எப்படி? இன்னும் என்னென்ன வாய்ப்புகளை உருவாக்கலாம்? என்பதைப் பற்றியெல்லாம் நிறையவே சிந்திக்கவேண்டும். அப்படிச் சிந்திக்கும்போதுதான், அதை செயலாக்கமும் செய்யமுடியும் என்பது உறுதி.

  1. உங்கள் நட்பு வட்டம் மற்றும் வழிகாட்டி மனிதர்கள் குறித்து?

நண்பர்களே எனக்கு எல்லாமாகவும் இருந்து வழிகாட்டி உள்ளார்கள்.. இன்றளவும் வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல நட்புகள் எனக்கு அமைந்ததில் நான் ரொம்பவும் மகிழ்ச்சியடைகிறேன்.

என் கல்லூரிக் காலத்தில் ஹேமா என்கிற எனது நெருங்கிய தோழிதான் எனக்கு நூலகத்தில் முந்தைய வருடங்களின் கேள்வித் தாள்களை எடுத்துவந்து படித்துக் காட்ட ஆரம்பித்தாள்.

அதேபோல சென்னை அடையாறில் இருக்கக்கூடிய அகில இந்திய குடிமைப்பணி தேர்வுக்கான பயிற்சி மையத்திலும் நல்ல நட்பு வட்டாரம் கிடைத்தது. அங்கே பெரும்பாலும் குழுவாக அமர்ந்து, குரூப் டிஸ்கஷன் செய்வோம். அப்படிச் செய்கிறபோது ஒவ்வொருவருடைய பாய்ண்ட் ஆப் வியூவையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

இதுபோக அவ்வப்போது பல சிரமங்கள் ஏற்பட்டபோதும் சரி.. நட்புகளின் பலம் எனக்கு பெரிய அளவில் துணைபுரிந்திருக்கிறது. குறிப்பாக, ஆடியோ புக் என்கிற என் அடிப்படைத் தேவையைப் பொருத்தளவில், எனக்கு நிறையப் புத்தகங்களை எனது நண்பர்கள் குரல் பதிவாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள். இதெல்லாம் எனக்கு நண்பர்கள் வழியாகக் கிடைத்த பெரிய சப்போர்ட்கள் என்றுதான் சொல்வேன்.

எனக்கு வழிகாட்டி மனிதர்களாகவும், முன்மாதிரிகளாகவும் எப்பொழுதும் மூன்று பேரை நினைப்பதுண்டு. ஐயா காமராஜர், ஐயா அப்துல் கலாம், சுவாமி விவேகானந்தர் மூவரையும் எனக்கு மிகப்பிடிக்கும். அவர்களின் ஆழமான கருத்துக்கள் பல நேரங்களில் என்னை வழிநடத்தியிருக்கின்றன.

இதற்கு மேலாக எனக்கு ஐஏஎஸ் ஆசை வருவதற்குக் காரணமாக இருந்த நிறைய ஐஏஎஸ் ஆபீஸர்களில், மதுரை கலெக்டராக இருந்த சகாயம் சார், உதயச்சந்திரன் சார், இன்றைக்கு திருநெல்வேலியில் கலெக்டராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஷில்பா மேம் போன்றோரும், அதற்கெல்லாம் மேலாக 9 முறை தனது முயற்சிகளை மேற்கொண்டு, கடைசி அட்டெம்ட்டான 9வது முயற்சியில் வெற்றியடைந்த இளம்பகவத் ஐஏஎஸ் அவர்களும் எனக்கான பெரிய முன்னோடிகளாகத்
திகழ்கிறார்கள்.

  1. பார்வையற்றவர்கள் வாசிக்கக்கூடிய குரல் ஒலி புத்தகங்கள் அதிகமாக இல்லையென்று ஒரு கருத்து நிலவுகிறது. அதுபற்றி உங்கள் வார்த்தைகள்?

நிச்சயமாக குரல் புத்தகங்கள் எனப்படுகிற ஆடியோ புக்ஸ் குறைவாகத்தான் இருக்கின்றன. அதாவது, 2015 மாதிரியான ஆண்டுகளில் நிறையப் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. ஆனாலும், இன்னும் தேவைப்படக்கூடிய சூழலில், இன்னும் அதிகளவில் நாம் இதை எடுத்துக் கொண்டு போகவேண்டும். அனைத்துத் துறைசார்ந்த புத்தகங்களையும் ஆடியோ பார்மில் நாம் உருவாக்கவேண்டும்.

ஸ்பீக்கிங் சாப்ட்வேர்ஸ் எனப்படுகிற ஜாஸ், என்விடிஏ போன்ற பேசும் மென்பொருள்கள் வழியாகவும், நமது புத்தகங்களை வாசிக்க முடிகிறது என்பதால், தனிப்பட்ட அளவிலும், நூலகங்கள் அளவிலும் நிறையப் புத்தகங்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. இது இன்னும் அதிகப்படியாக வரவேண்டும் என்பதையும் நான் இங்கே சொல்ல
நினைக்கிறேன்.

  1. உங்கள் எதிர்காலக் கனவுகள் பற்றி?

எனது எதிர்கால கனவு என்பது இப்போது கிடைக்கக்கூடிய உத்தரகாண்ட் மாநிலத்தில் முசௌரி என்ற இடத்தில் அமைந்திருக்கும் பயிற்சிக் கூடத்தில் நல்ல முறையில் பயிற்சி எடுத்துக் கொள்வது, என்னை ஒரு நல்ல குடிமைப் பணியாளராக உருவாக்கிக் கொள்வது, தேர்வுக்காகப் படித்தபோது எடுத்துக்கொண்ட முயற்சிகளைவிட, அதிகமான அளவில் மக்களுக்காக உழைக்கக்கூடிய ஒரு சிறந்த மக்கள் பணியாளராக என்னை உருவாக்கி கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

குறிப்பாக, ஒவ்வொரு சமூகத்திற்கான
தேவைகளும் வேறுபடுகிறது. அதற்கான தேவைகளையும், அந்தச் சமூகத்தில் ஏற்படக்கூடிய அடிப்படைத் தேவைகளையும் உணர்ந்துகொண்டு, அதற்கேற்ப எனது பணியைச் செய்ய ஆசைப்படுகிறேன்.

கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் இந்த மூன்று துறைகளிலும் எனது பங்களிப்பை நான் ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கனவாகவும், குறிக்கோளாகவும்
அமைந்திருக்கிறது.

கேள்விகள் கேட்ட ஐயா ஏகலைவன் அவர்களுக்கும், ஆளுமைச் சிற்பி ஆசிரியர் அவர்களுக்கும், இந்த நேர்காணலை வாசிக்கக்கூடிய அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

தடை பல கடந்து சாதனை படைத்திருக்கும் செல்வி.மு.பூரணசுந்தரி ஐ.ஏ.எஸ் அவர்கள் நமது இளைஞர்களுக்குச் சிறந்த, முன்மாதிரி. இவரது கனவுகள் நனவாகி வெற்றிச் சிகரங்கள் பல படைத்திட ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழ் சார்பாக வாழ்த்துகின்றோம். =