பண்படுத்தும் நல்மொழிகள்! – 26
டாக்டர் மெ.ஞானசேகர்
ஒரு குடும்பத்தில் தந்தை, மகன் மற்றும் அவர்களது அடிமை மூவரும் வசித்து வந்தார்கள். அந்தத் தந்தைக்கு வசதியான நிலங்களும், சொத்துக்களும் நிறையவே இருந்ததால் ஏழைக் குடியானவன் ஒருவன் மகனை அடிமையாக அதிகப் பணம் கொடுத்து சிறு வயதிலேயே அழைத்து வந்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அவரது மனைவி இவ்வுலகைப் பிரிந்திருந்தார்.
ஒரே தன் மகனை அன்போடு வளர்த்து வந்தார். ஆனால், ஒரு நாள் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட ஒரு சண்டையில் மகன் வீட்டைவிட்டுச் சென்றுவிட்டான். தந்தையும் மகன் வருவான் என்று காத்திருந்தார். அவன் எங்கு சென்றான் என்றே தெரியாமல் போனது. அவன் இறந்திருப்பானோ என்று கூட எண்ணினார். ஆனாலும் அவர் உள் மனது அவன் எப்படியும் திரும்பி வருவான் என்று சொல்லியது.
இதற்கிடையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஒரு வேளை இறந்துவிட்டால் என்ன செய்வது? என்று யோசித்த அவர் தன் சொத்துக்களை எல்லாம் தன்னிடம் அப்போது வீட்டில் இருந்த அடிமையின் பேருக்கு உயில் எழுதிவைத்துவிட்டார். ஆனால் அதில் ஒரு கட்டுப்பாடும் விதித்திருந்தார். இந்தச் சொத்துக்களில் ஒன்றே ஒன்றை மட்டும் தன் மகன் எடுத்துக் கொண்ட பின்பு சொத்துக்கள் அடிமைக்குச் சேரும் என்று எழுதியிருந்தது.
அடிமை இதைக் கண்டு மகிழ்ந்தான். எப்படியும் எல்லாச் சொத்துக்களும் தன் பெயரில் கிடைத்ததில் அவனுக்கு மகிழ்ச்சி. மகன் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டாலும் மீதி தனக்குத் தானே என்று மகிழ்ந்து இருந்தான்.
அக்குடும்பத்தின் தந்தையை நோய் வாய்ப்பட்ட நேரம் நன்கு பார்த்துக் கொண்டான். சில நாட்களில் அவர் இறந்து விட அவரை நல்லடக்கம் செய்தான். ஊர் மக்கள் அடிமையிடம் வந்து சொத்துப் பற்றிக் கேட்டபோது விஷயத்தை சொல்லியதோடு உயிலையும் காட்டினான். ஆயினும் அடிமைக்கு ஒரு சிக்கல் இருந்தது. மகனைக் கண்டுபிடித்து அவன் விரும்பியதைக் கொடுத்துவிட்டால் மட்டுமே தனக்கான சொத்தைக் கொண்டு நிம்மதியாக இருக்கலாம் என்பதே அந்தச் சிக்கல்.
எனவே, தீவிரமாக மகனைத் தேடினான் அடிமை. ஒரு வழியாக தன் முதலாளியின் மகனைக் கண்டுபிடித்துவிட்டான். தனது தந்தை இறந்த செய்தி கேட்டு மகன் அழுது புலம்பினான். உடனே, தன் வீட்டிற்கு வந்தான்.
வீட்டிற்கு வந்து சேர்ந்த சில நாட்களில் அடிமையின் நடவடிக்கைகளில் பெருத்த மாற்றம் இருப்பதைக் கண்டான். அடிமையாக இருந்தவன் எஜமான் போல நடந்து கொண்டான். மகன் அந்த அடிமையை அழைத்து “உன் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் தெரிகிறதே, நீ வேலை செய்வதேயில்லையே” என்று கேட்டான். அப்போது அடிமை “நான் ஏன் வேலை செய்யவேண்டும். உன் தந்தை சொத்துக்களை எல்லாம் என் பெயரில் எழுதியுள்ளார், அதில் ஒன்றை மட்டும் நீ எடுத்துக் கொண்டு மீதம் உள்ளதை என்னிடம் கொடுத்து விடு” என்றான்.
மகனுக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. தன் தந்தை எழுதியிருந்த உயிலைப் பார்த்தான். அவனுக்கு அப்போது எந்தச் சொத்தை தான் எடுத்துக்கொள்வது? மேலும் இப்படி ஒரு சிக்கலைத் தன் தந்தை கொடுத்திருப்பதை எப்படிச் சமாளிப்பது? என்பது குழப்பமாக இருந்தது. எனவே முடிவெடுக்கும் முன்பு தன் தந்தையின் நண்பரும் பக்கத்து ஊரின் பெரிய மனிதருமான ஒருவரைச் சந்திக்கச்
சென்றான்.
பெரியவர் அவனை அன்போடு வரவேற்றார். மகன் நடந்துள்ள செய்தியைச் சொல்லிவிட்டுத் தன் தந்தை இப்படிச் செய்துவிட்டாரே! என்று புலம்பினான். “உன் தந்தை மிகவும் நல்லவர். நீ திரும்பி வருவாய் என்று காத்திருந்தார். நீயோ வரவில்லை. அந்த சோகத்தில் அவர் உடல் நலம் குன்றிப் போனார். ஆனாலும் அவர் உன் குடும்பச் சொத்தை நீ வரும் வரை சிறப்பாக நிர்வகிக்கவும், அதே சமயம் உனக்கே தருவதற்கும் ஒரு சாதுர்யமான வழியைத் தான் செய்திருக்கிறார்” என்றார்.
“என்ன சாதுர்யமான வழி?” என்று மகன் கேட்டான். “இந்தச் சொத்துக்களை எல்லாம் எழுதி வைத்திருக்கும் அந்த அடிமை யாருக்குச் சொந்தம்?” என்று கேட்டார். “அவன் என் தந்தைக்குச் சொந்தம்” என்று பதில் சொன்னான் மகன். பெரியவர் “அப்படியானால் நீ அந்த அடிமையை நீ உனக்குச் சொந்தமாக்கினால், அவன் பெயரில் உள்ள சொத்துக்கள் எல்லாம் உன் பெயருக்கு வந்து விடுமல்லவா, இது தானே சட்டம்” என்று எடுத்துச் சொன்னார்.
மகன் வீடு திரும்பினான், அடிமையை அழைத்துக் கொண்டு சொத்துக்களைப் பதியும் இடத்துக்குச் சென்று, மீண்டும் அந்த அடிமையைத் தனக்குச் சொந்தமாக்கியதோடு அந்தச் சொத்துக்களை எல்லாம் தன் வசமாக்கிக் கொண்டான். அடிமையின் சிறிது கால மகிழ்ச்சி மாறிப்போனது. வழக்கம் போலத் தன் வேலைகளைச் செய்ய ஆரம்பித்தான் அந்த அடிமை.
இங்கு அடிமையின் மனப்போக்குதான் கவனிக்க வேண்டியது. உயில் கிடைத்தவுடன் சொத்துக்கள் எல்லாம் தனக்குக் கிடைத்ததாக அவன் எண்ணிக் கொண்டு தன்னை ஒரு எஜமானனாகக் காட்டிக் கொண்டான். இந்த மனநிலை தான் சிலவற்றைக் காணும் போது மனிதர்களுக்கு உருவாகின்றது.
நாம் பார்க்கின்ற ஒன்று நம்மை மயக்கிவிடும் போது அதுவே உண்மை அல்லது நிரந்தரம் என்று எண்ணுவது தான் அடிமை மன நிலை. ‘மின்னுவதெல்லாம் பொன்னல்ல’ என்பது போலத் தனக்குக் கிடைத்த உயில்படி சொத்தெல்லாம் தனதல்ல என்று இந்த அடிமை உணரச் சில காலம் எடுத்தது. இந்தக் கதை மூலம் நாம் உணர வேண்டியது சில ேநரங்களில் நமக்குக் கிடைக்கின்ற அற்ப சந்தோசமான சூழல்களை வைத்து, வாழ்க்கை முழுவதும் இப்படியே இருக்கும் என்று ஏமாறாக் கூடாது என்பது தான்.
மின்னுவது எல்லாம்
‘மின்னுவது எல்லாம் பொன்னல்ல’ என்ற பழமொழியின் நேரடி அர்த்தம் சில பொருட்கள் பொன்னைப் போல மின்னினாலும் அவை பொன்னாகிவிடுவதில்லை. பொன் என்பது நெருப்பில் இட்டு, உருக்கிச் சோதிக்கப்பட்டு அறியப்படும் ஒரு பொருள். அப்போது தான் அதன் உறுதித் தன்மையும், உண்மைத் தன்மையும் நமக்குத் தெரியும். அப்படிக் காண்கின்ற போது அதுபொன்னாக இருந்தால் நமக்கு மகிழ்ச்சி. இல்லை என்றால் பொன்னைப் போல இருக்கக் கூடிய ஒன்று அதாவது கவரிங் அது உண்மையான பொன் அல்ல என்பது தெளிவாகும்.
சில நேரங்களில் தெருவில் கிடைத்த கவரிங் வளையல் அல்லது அது போன்ற சில பாகங்களைப் பார்த்துவிட்டால் அது தங்கமாக இருக்கலாம் என்று அதை ஆய்வு செய்யாமல் மக்கள் தூங்கமாட்டார்கள். ஏதோ ஒன்று இலவசமாகக் கிடைத்தது, கடவுள் ஒரு வேளை இப்படி நமக்கு உதவி செய்யலாம் என்ற ஆதங்கத்தில் அல்லது ஆசையில் அது பொன்னா? என்று சோதிக்க விளைவார்கள். சில சமயம் அப்படியே கிடைப்பதும் உண்டு. ஆனால் பெரும்பாலும் தங்கம் தெருவில் சும்மா கிடைப்பதில்லை என்பதை அனைவரும் அறிவார்கள்.
இந்தப் பழமொழி தங்கத்தை காண்பதற்காக மட்டும் சொல்லப்படவில்லை. கண்ட உடன் காதல் கொள்ளும் நமது மைனர்களுக்காகவும் சொல்லப்பட்டுள்ளது. பார்த்ததும் முடிவுக்கு வரும் அல்லது அதைப் பற்றிக் கொள்ளும் பழக்கம் நமது தமிழ்த் திரைப்படங்களிலிருந்து கற்றுக்கொண்ட ஒன்றாக இருக்கும்.
பல படங்களில் கதாநாயகன் தன் காதலியைக் கண்ட ஒரு நொடியிலேயே அவரைப் பற்றிக் கொள்கிறார். சில படங்களில் கதா நாயகிகள் கூட ஒரே பார்வையில் தங்கள் கதாநாயகர்களைத் தேர்ந்து கொண்டு விடுகிறார்கள். எப்படியோ, திரைப்படம் ரசனையாகச் செல்வதற்கு இது நன்றாகவே இருக்கிறது. ஆனால், எதார்த்த வாழ்வில் இது நிலைப்பதில்லை. இந்தக் கதைகளைப் போல வாழ்க்கை உண்மையில்லை என்பதைக் காதல் தோல்வி கண்ட பலரிடம் நாம் கேட்டு உணரலாம்.
“கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்று கூறியுள்ள கூற்றையும் இங்கு இணைத்துப் பார்க்கலாம். ஆம், கண்ணால் கண்ட உடன் தீர்ப்புக்கு வரக்கூடாது, பிறர் சொல்லிவிட்டார்கள் என்று கேட்டதும் முடிவு எடுக்கக் கூடாது. உண்மையில் யார் அந்த இடத்தில் இருந்தார்களோ, அல்லது பங்குபெற்றார்களோ அவர்கள் இருவரிடமும் தீர விசாரித்தால் மட்டும் தான் உண்மை வரும்.
இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான். மேம்போக்காக எதையும் காண்பது, செயல்படுவது என்பது பெரும்பாலும் சரியான முடிவுகளைத்தராது. எதையும் ஆழமாகக் கூர்ந்து நோக்கி அறிய வேண்டும். அதிலுள்ள உண்மைத் தன்மையைக் கண்டறிய வேண்டும். எனவே உண்மையான பொருளுக்கு, அதை அறிவதற்குக் காலம் எடுத்துக் கொள்வதோடு, அதைத் தீவிரமாகக் கண்டறிந்த பின்பே நம்ப வேண்டும் என்பதே இங்கு உணர்த்தப்படுகின்றது.
அன்றாட வாழ்வில்…
இந்தப் பழமொழியின் தாக்கம் நமது அன்றாட வாழ்விலும் அதிகம் பிரதிபலிக்கின்றது. பல நேரங்களில் மனிதர்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையாவதும் இந்த நிலையில் தான் நடைபெறுகிறது.
குடிப்பழக்கம் என்றால் என்ன? என்றே தெரியாத மனிதர் தன் வீட்டுப் பிரச்சனை பற்றி ஒருவரிடம் மனம் விட்டுப் பேசினார். அவரிடம் அன்பாகப் பேசிக் கொண்டே வந்தார் அதைக் கேட்டவர். சில நாட்கள் இப்படியே சென்ற போது முதலாமவர் தன் பிரச்சனைகளை எல்லாம் சொல்லி அழுதுவிட்டார். உடனே, அடுத்தவர் அவருக்கு ஆறுதல் தருவதற்காகவும், பிரச்சனைகளை மறக்கச் செய்வதற்காகவும் அவருக்குக் குடிக்கும் பழக்கத்தை மெதுவாகக் கற்றுக் கொடுத்தார்.
முதலில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாம் என்று பழக்கம் ஆரம்பித்தது. அதன் பிறகு அவரது அலுவலக நண்பர்கள் பலரும் இச்செய்தி தெரிந்து இவரோடு நட்பாகினார்கள். எனவே இவர் மேலும் தன் பிரச்சனைகளைப் பகிர ஆட்கள் கிடைத்தனர். ஆஹா, குடிப்பதில் ஒரு சுகம் உண்டு, பலன் உண்டு என்று தப்புக் கணக்குப் போட்டார், குடிகாராக மாறினார். முதலில் குடிக்கக் கற்றுக் கொடுத்தவரே தடுத்தும் கேட்காமல் குடித்துக் குடும்பத்தை தெருவிற்குக் கொண்டு வந்தார். ஒரு பழக்கம் ஓயாத பிரச்சனைகளைக் கொண்டு வந்துவிட்டது தான் கடைசியில் நடந்தது. இன்றும் பல குடும்பங்கள் அழிவதும், அழிந்ததும் இப்படி ‘மின்னியதைப் பொன்னாக’ நினைத்ததால் தானே!
படிப்பில் ஆர்வமோடும், ஒழுக்கத்தோடும் இருந்த மாணவனை மகிழ்விப்பதாகக் கூறி போதைப் பழக்கத்துக்கு ஆளாக்கி அழித்துள்ளார்கள் பலர். நல்ல நண்பன் என்று நம்பி வாழ்க்கையை நாசமாக்கியவர்கள் பலர் இன்றும் நம்மிடையே புலம்பியபடி இருக்கின்றார்கள்.
நண்பர்கள் போலப் பழகிப்பேசி ஆரம்பத்தில் சில நன்மைகள் செய்வது போல நடித்துப் பலரிடம் கடன்களை வாங்கி அவர்களை ஏமாற்றிவிட்டுச் சென்றவர்கள் பலர். அவர்களிடம் ஏமாந்தவர்கள் எல்லாம் மின்னுவதெல்லாம் பொன்னாக எண்ணி வாழ்க்கையில் சூடு வாங்கிக் கொண்டவர்கள்.
நாம் ஒருவரிடம் பழகும் போதும், ஒன்றைப் பகிரும் போதும் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத் தான் நம் முன்னோர்கள் இப்பழமொழியைச் சொன்னார்கள். நாம் விழிப்போடு இருக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், ஏதாவது ஒரு தீய பழக்கத்துக்கு நம்மையறியாமலேயே, அதன் பின் விளைவுகளை ேயாசிக்காமலேயே நாம் அடிமையாகிவிடக் கூடாது என்று எச்சரிக்கவுமே இந்த நல்மொழி சொல்லப்பட்டுள்ளது.
சமீபத்தில் பத்திரிகையில் வந்த செய்தி. அறுபது வயதுக்காரர் ஒருவரின் மனைவி சில மாதங்கள் முன்பு இறந்துவிட்டார். அவருக்குப் பிள்ளைகள் இல்லை. தனது ஓய்வூதியத்தைக் கொண்டு தனிமையில் வசித்து வந்தார். இவரது பின்னணி பற்றித் தெரிந்த ஒரு இருபத்தியைந்து வயதுப் பெண் இவர் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளார்.
கதவைத் திறந்து “யார்? என்ன வேண்டும்?” என்று கேட்டிருக்கிறார். அந்தப் பெண் ஐயா நான் ஒரு அனாதை என்று கூறித் தன் சோகக் கதைகளைச் சொல்லி அழுதிருக்கிறார். அழகாகத் தோற்றமளித்த அந்தப் பெண்ணைக் கண்ட ஐயா “நீ அனாதை அல்ல, நானே உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று சொல்லி அவளை அன்று மாலையே கடைக்கு அழைத்துச் சென்று தங்க நகைகள், தாலி, மோதிரம், வளையல், பட்டுப் புடவை, பட்டுவேட்டி என்று வாங்கியிருக்கிறார். இருவரும் வீடு திரும்ப ஒரு ஆட்டோவில் அமர்ந்தனர்.
அப்போது அந்தப் பெண் தனக்குத் தலைவலிப்பதாகச் சொல்லி ஒரு குறிப்பிட்ட மாத்திரையைக் கேட்க, ஐயா வாங்கப் போன நேரம் அப்பெண்மணி நகைகளோடும், துணிகளோடும் ஓடிப்போய்விட்டார். இதைத்தான் நம்மவர்கள் “கண்டதும் காதல், கொண்டதும் கோலம்” என்று எச்சரித்தார்கள்.
இதைப் போலவே பல்வேறு சம்பவங்களை நாம் காணலாம். அன்றாடச் செய்திகளிலும், தொலைக்காட்சிகளிலும் இவைகள் நமக்குப் பாடமாகச் சொல்லப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
இந்த வகையில் சேர்க்க வேண்டிய மற்றொரு சிந்தனையும் உண்டு. அதாவது இன்று இணைய தள அடிமைத்தனமும் கூட இவ்வகையில் தான் அடங்குகிறது.
முதலில் எனக்கு ஒரு போன் வாங்கித் தாருங்கள. நான் நன்றாகப் படிப்பேன் என்று பெற்றோரை ஏமாற்றிவிட்டு நம் இளையோர் பலர் படிப்பையே மறந்துவிட்டு செல்போனில் மூழ்கிக்கிடக்கின்றார்கள். வண்டி வாங்கித் தாருங்கள் என்று கேட்டு வாங்கி விட்டு வீட்டில் அடங்காமல் ஊர்சுற்றிக் கொண்டு அலைகின்றார்கள். இவன் என் நண்பன் என்று ஒருவனைக் காட்டிவிட்டு பல நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு குடி, கும்மாளம் என்று கொஞ்சம் கொஞ்சமாகச் சிலர் தங்களை இழந்து விடுகிறார்கள். இவையெல்லாமே ‘ஆரம்பம்’ நன்றாக இருந்தது என்ற மாயையில் சிக்கித் தங்களுக்கே சிரமத்தை வரவழைத்துக் கொண்டவர்களின் கதைகள் தானே!
உண்மையை உணர்தல்
தர்ம சிந்தனையுள்ளவராகவும், பிறருக்குத் தன்னாலான உதவிகளைச் செய்பவராகவும் விளங்கினார் அப்துல் மாலிக் என்பவர். அரேபிய நாட்டில் வாழ்ந்த இவரது வீட்டிற்கு ஒரு நாள் ஒரு பக்கிரி வந்தார்.
‘நீங்கள் யார்?’ என்று கேட்டபோது, “நான் உங்கள் தர்மகாரியங்களுக்குப் பரிசாக அல்லாவால் அனுப்பப்பட்டவன்” என்று கூறினார். “அப்படியா, நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? என்று கேட்டார் மாலிக்.
“எனக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டாம். உங்களுக்கு நான் உதவி செய்கிறேன். நீங்கள் என்னை ஓங்கி அடித்தால் நான் தங்கமாக மாறிவிடுவேன். அதன் பிறகு அத்தங்கத்தை நீங்கள் ஏழைகளுக்குத் தர்மம் செய்யுங்கள். உங்களுக்குத் தேவையானதையும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் பக்கிரி.
“ஆஹா அது என்ன கடவுளின் கருணை” என்று கூறிய மாலிக் “எனக்கு என்று எந்தத் தேவையும் இல்லை. ஆனால், ஏழைகளுக்குக் கொடுக்க என்னிடம் இப்போது பற்றாக்குறை நிலவுகிறது. அதே சமயம் உம்மை அடித்து தங்கமாக்க என் மனம் விரும்பவில்லை” என்றார்.
பக்கிரி அவரிடம் “கவலைப்படாதீர்கள், நான் உயிரோடு தினமும் வருவேன். தினமும் என்னை அடித்துத் தங்கமாக்கி உதவுங்கள்” என்றார்.
இப்படி அவர் வற்புறுத்தியதால் மாலிக் அவரை ஒரு கட்டையால் அடித்தார். பக்கிரி ஓங்கி அடிக்கச் சொன்னார். பக்கிரி தங்கமாகி விழுந்துவிட்டார். மாலிக் முதல்நாள் ஒன்றும் செய்யாமல் இருந்தார். காரணம் அந்தப் பக்கிரி உயிரோடு அடுத்த நாள் வரவேண்டும் என்று வேதனையோடு காத்திருந்தார்.
பக்கிரி சொன்னது போல அடுத்த நாளும் வந்தார். அப்போது உண்மையைப் புரிந்து கொண்ட மாலிக் அவரை அடிப்பதும், தங்கமாக்குவதும் அதை ஏழைகளுக்கு வழங்குவதுமாக இருந்தார்.
மாலிக்கின் பக்கத்து வீட்டுக்காரரான ஹாஜிம் இதைக் கவனித்தார், தானும் இப்படிப் பக்கிரிகளைக் கவனித்துத் தங்கம் பெறலாமே என்று ஆசைப்பட்டார். எனவே மறுநாள் ஊரிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட பக்கிரிகளை அழைத்து நன்கு உண்டு மயக்கம் அடையும் வரைக் கவனித்தார். அதன் பிறகு அவர்களை இரும்புத் தடிகளால் அடித்தார். பாவம் சிலர் இறந்து போனார்கள். மற்றவர்கள் படுகாயம் அடைந்தார்கள். யாரும் தங்கமாக மாறவில்லை. ஆயுள் தண்டனை பெற்று ஹாஜிம் சிறைக்குச் சென்றார்.
இந்தச் சம்பவம் மூலம் ‘பேராசை பெருநஷ்டம்’ என்பது தெளிவாகிறது. அதே சமயம் ஒன்றை ஆசைப்படுவதற்கான தகுதி நமக்கு இருக்க வேண்டும் என்ற உண்மையையும்
உணர்த்துகின்றது.
சமூகத்தில் பல மனிதர்கள் தங்களது அயராத உழைப்பால், நற்காரியங்களால், தான தர்மங்களால் நல்ல பெயரையும், கௌரவத்தையும் பெற்றிருப்பார்கள். அவருக்குக் கிடைக்கின்ற மரியாதையும், மதிப்பும் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று சிலர் அதைப் பணம் கொடுத்து வாங்கிட முயற்சி செய்தால் அவர்கள் அவமானம் தான் அடைவார்கள். அடுத்தவருக்கு கிடைக்கும் மதிப்பு, மரியாதைகளுக்கான உழைப்பு மற்றும் தகுதியை நாமும் பெற வேண்டும் என்பதை இப்படிப்பட்டவர்கள் உணர
வேண்டும்.
இவ்வுலகில் நாம் மதிப்புமிக்கது என்று கருதும் பதவி, பொருள், நிறுவனம், செல்வம் இப்படி எதுவானாலும் அது எளிதாக ஒருவருக்கு வாய்ப்பதில்லை. கடுமையான உழைப்பு, நேர்மையான வாழ்க்கை, திறமைகளை வெளிக்காட்டிய சூழல்கள், உண்மையான முயற்சி, இடைவிடாத ஆர்வம், நேரத்தை மதிப்பாக்குதல் போன்ற ஏதோ ஒன்று அல்லது பல்வேறு பண்புகள் அல்லது செயல்களின் கூடுதலால் அல்லது பெருக்கத்தால் தான் சிலர் இதைப் பெறுகிறார்கள்.
நமது ஆசையும் இப்படிப்பட்ட ஒன்றையோ அல்லது பலவற்றைேயா பெறுவதாக இருந்தால் முதலில் குறுக்கு வழிகளில் அதைப் பெறமுடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் நம் கண்களில் காணும் நல்லவைகளும், தீயவைகளும் அதற்குரிய செயல்களால் தான் வருகின்றன. எனவே, நல்லதைப் பற்றிக் கொள்ளவும், அல்லாததைப் புறந்தள்ளவும், காண்பதைக் கண்டறிந்து தெளியும் அறிவோடு அணுகிட வேண்டும். நாம் காணும் ஒவ்வொன்றுக்கும் பின்னால் உள்ள அறிவைப் பெற்றுக் கொண்டால் விழிப்போடு வாழ்வோம். மின்னுவதை ஆராய்ந்து, தெளிந்து அதைப் பொன்னாக்கிட உண்மையான முயற்சிகளை மேற்கொள்வோம்.