வாழ்த்துக் கட்டுரை
மதுரை.ஆர்.கணேசன்
அறிவூட்டும் ஆசிரியர்களின்றி மாணவர்கள் கற்றறிதலில் கரையேற முடி யாது. அப்பேர்ப்பட்ட “..ஆசிரியர் திருநாள்..” செப்டம்பர் 5 ஆம் நாளை கொண்டாடுகிறோம்.
“..அர்ப்பணிப்பு துறை ஆசான்களில்..” எந்நாளும் கற்றலின் நாளாக மாற்றும் பேராசிரியர் முனைவர் ஜெ.கார்த்திகேயன் 43, தனது தந்தை ஜெயராமன் மின்சார வாரியத்தில் பணிபுரிந்த ஈர்ப்பினால் மின்சாரவியல் படிப்பை கற்று அத்துறையிலேயே முனைவர் பட்டம் பெற்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சமிடும் வழிகாட்டியாகத் திகழ்கிறார்.
ஒரு விரிவுரையாளராக பணியைத் தொடங்கி உதவிப் பேராசிரியர், பேராசிரியர், துறைத் தலைவராக சில கல்லூரிகளில் நயத்தகு பணியாற்றி அதில் கிடைத்த இருபது வருட கல்வியனுபவத்தின் மூலமாக மதுரை மங்கையற்கரசி பொறியியல் கல்லூரியில் 2018 ல் முதல்வராகப் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறார்.
கற்றதையும், கற்பிப்பதையும் தலையாய கடமையாக கொண்டிருக்கும் பேராசிரியர் கார்த்திகேயன் தனது ஆராய்ச்சியின் பலனை மத்திய பாதுகாப்பு துறைக்கு மின்சாரவியல் துறை சம்பந்தமான BLDC MOTOR என்னும் முன்னேற் றமான தொழில் நுட்பத்தை அந்தத் துறைக்கே சமர்பித்துள்ளார். இதற்காக மத்திய பாதுகாப்பு துறையில் 2009 ஆண்டில் மினிஸ்டரி ஆப் டிபன்ஸ் DRDO மூலம் 15 லட்சம் பணப்பரிசு பெற்றிருக்கிறார்.
கொல் கத்தாவில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் என்கிற கல்வி அமைப்பு இந்தியாவின் சிறந்த பொறியாளர் விருதுடன் 20,000 பணப்பரிசு பெற்றிருக்கும் பேராசிரியர் கார்த்திகேயன் மின்சாரவியல் துறை சம்பந்த மாக ஆங்கிலத்தில் 6 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.
தமிழகத்தில் தமிழ், மற்றும் ஆங்கில பிரபல நாளிதழ்களில் மின்சாரவியல் துறை சம்பந்தமான மின்விளக்கம், மின்சார சிக்கனம், சோலார்லைட், ரோபோட்டிக்ஸ் பற்றிய இவரது கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன.
மேலும் தனது விரிவான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியதன் பலனாக “..இண்டலிஜெண்ட் பார்க்கிங் வெயிக்கிள் மிஷின்..” உள்ளிட்ட 6 காப்புரிமை ஆய்விதழ்கள் மற்றும் 20 சர்வதேச ஆய்விதழ்களும் வந்துள்ளன.
2014 – ஆண்டில் ஹேப்ஸ் (HAPS) மக்கள் சேவை உதவி மய்யம் எனும் அமைப்பைத் தொடங்கி கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்கள் மற்றும் மாணவர்களுக்காக கேஸ் அடுப்பை கையாளும் முறை, மின்னல் தடுப்பு செயல் முறைகள், விஷக்கடி ஏற்பட்டால் அதற்கான முதலுதவி எப்படி செய்யவேண்டும்? என்பதைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
கல்வியறிவு இல்லாத மக்களுக்கும், கல்வி வாய்ப்பில்லாத மாணவர்களுக்கும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது, 6-வருடத்தில் மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல்,விருதுநகர், குற்றாலம், செங்கோட்டை, போன்ற ஊர்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்குச் சென்று 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தன்னம்பிக்கைப் பேச்சு மூலமாகவும் மற்றும் வெற்றி பெறக்கூடிய குறிக்கோளை எப்படி அடைவது பற்றியும் விளக்கமளித்திருக்கிறார்.
மின்சிக்கனம் மற்றும் வேலை வாய்ப்புக் குறித்த தகவல்கள் எடுத்துரைத்து பேசுவது, உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான ஆலோசனைகள் வழங்குவது, பொறியியல் மற்றும் என்னென்ன படிப்புகள், அதற்கான வேலை வாய்ப்புகள் என்ன என்பதை மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் அவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்து வருகிறார்.
மதுரை, திண்டுக்கல் பள்ளிக் கல்வி துறை சார்பாக தொழில் வழிகாட்டுதல் ஆலோசகராகவும், கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்.
அரியலூரில் ராம்கோ நிறுவனம்
தத்தெடுத்துள்ள 3 கிராமப்புறப் பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார். மேலும் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்களுக்கு பலவகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தேவையான அனைத்து உதவிகளையும் இவர் பணியாற்றும் மங்கையற்கரசி பொறியியல் கல்லூரி நிர்வாகம்
செய்திருக்கிறது.
சர்வதேச ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும் என்பதற்காக பேராசிரியர் கார்த்திகேயன் நேரடியாக மலேசியா மற்றும் பினாங்கு சென்று அங்குள்ள பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிப் பணிகளில் எவ்வாறு செயல்படுகிறார்கள்? என்பதை அறிந்து கொண்டு இங்குள்ள மாணவர்களுக்கு எடுத்துரைத்திருக்கிறார்.
இவரது வீட்டுப் பகுதியில் வசிக்கும்
120-க்கும் மேலான குடும்பத்தினருக்கு கொரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட உதவிகள் செய்து வருகிறார்.
கல்வியால் மாணவர்களைச் சீராக்கும் பேராசிரியர் கார்த்திகேயனுக்கு சமூக பணிகளுக்காக அமெரிக்காவின் இன்டர்நேஷனல் பீஸ் சொசைட்டி “..குளோபல் ஐகான் எஜுகேஷன்..” விருது உள்பட 2 சர்வதேச விருதுகள் வழங்கி கௌரவப்படுத்திருக்கின்றன.
தேசிய அளவில் “..சிறந்த இளம் பொறியாளர்..” விருதுடன் 5 விருதுகள் மற்றும் “..சிறந்த பொறியாளர்..” விருதுடன் 8 மாநில விருதுகள் பெற்றுள்ளது மேலும் ஊக்க ப்படுத்தியிருக்கிறது..!
கனவு காணும் மாணவர்களின் சிந்தனையை கூர் தீட்டும் பேராசிரியர் முனைவர் ஜெ.கார்த்திகேயன்….,
“…ஒருவரது எதிர்காலத்தைக் கல்வி மட்டுமே தீர்மானித்து விடாது. போதிய படிப்பறிவு இல்லா விட்டாலும் தங்களது அனுபவங்கள், தனித்திறமைகளாலும் பலர் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அப்படிப்பட்ட சாதனை படைத்தவர்கள் பற்றி மாணவர்களிடம் பேசித் தன்னம்பிக்கை ஊட்டி வருகிறேன்.
இந்தக் காலத்தில் கிராமப்புற மாணவர்கள் தங்களது பன்முகத் திறமைகளால் சாதிக்கின்றனர். அவர்களை மேலும் அடுத்த நிலைக்கு நகர்த்திட, ஊக்கப்படுத்துதலும் மற்றும் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. அதற்காகவும் மாணவர்களைத் தயார்படுத்தி வருகிறேன்.
பொறியியல் துறையில் சுமாராகப் படிக்கும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கேற்ற திறமைகளுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்து பரிசுகள் பெறத் துணைபுரிந்துள்ளேன்.
மின்சாராவியல் துறை ஆய்வு மாணவர்களுக்கு வேஸ்ட் பிளாஸ்டிக்ஸ் மூலமாக சூரிய ஒளியைக் கொண்டு வருதல் மற்றும் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலமாக மின்சாரம் தயாரிப்பது குறித்து தகவல்கள் வழங்கியிருக்கிறேன்.
2015 மற்றும் 2016-ஆம் ஆண்டில் அமெரிக்கா பர்து பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ராஜுவுடன் சேர்ந்து கிராமப்புறப் பெண்களுக்கு “..எலெக்ட்ரோ ஹீமோ தெரபி மூலம்..” குறைந்த செலவில் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்திருக்கிறோம்.
பொறியியல் துறை மற்றும் வேளாண்மைத் துறை, ஸ்மார்ட்சிட்டி, ரோபோட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங், பிக்டேட்டா, புதுப்பிக்கதக்க ஆற்றல், டேட் டா அனாலடிக்ஸ், டிஜிட்டல் தொழில் நுட்பம், போன்ற துறைகளில் வரக் கூடிய காலங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவாகும்.
உலகில் வளர்ந்த நாடுகளான சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெளிநாட்டினர் பணிபுரியவும், படிக்கவும் அவர்களின் வட்டார மொழி அவசியம் ஆனால் அதற்காக ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என வெட்கப்பட வேண்டாம்.
தமிழ் மொழிக் கல்வியில் பயின்று வெளிநாட்டில் ஏராளமானோர் பணிபுரிந்து சாதித்து வருகின்றனர் ஆகையால் மொழி பற்றி மாணவர்கள் யாரும் பயப்படத் தேவையில்லை.
கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதாது கூடவே மாற்றுச் சிந்தனையை வளர்த்து கொள்ள வேண்டும். எந்தச் செயலையும் மற்றவர்களைப் பார்த்துச் செய்யக்கூடாது. தனக்கென்று தனித்துவமுடன், தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டினால் சாதனை புரியலாம்..!
தோல்விகளைக் கடந்து வெற்றி இலக்கைத் தொடுவதற்கான தன்னம்பிக்கையை மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சொல்லித் தருகிறேன். எனது வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் நான் நடத்தியிருக்கும் கருத்தரங்கங்கள் மூலமாக மாணவர்களைச் சென்று சேர்த்திருக்கிறது.
நமக்குத் தேவையானதை அறிந்து
கொண்டு தேவையில்லாததை ஒதுக்கி விடலாம் அதேபோல சமூக வலைத்தளங்களில்
நேரத்தை செலவழிக்காமல் சமூகத்தில் பேர் சொல்லும் சாதனையாளராக மாறுவதற்கு நேரத்தைச் செலவிடுங்கள், திறமைகளைச் செயலில் காட்டுங்கள். அந்த செயல்பாடுகளே முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும்….” என்று கூறுகின்றார் டாக்டர்.ஜெ.கார்த்திகேயன்.
பொறியியல் கல்லூரி முதல்வராக, விருதுகளின் நாயகனாக, ஆராய்ச்சித் துறையில் சாதனையாளராக, சமூகச் சேவையில் சரித்திரம் படைப்பவராகத் திகழும் டாக்டர்.ெஜ.கார்த்திகேயன் அவர்களது பணிகள் சிறந்து மென்மேலும் சாதனைகள் பல படைக்க ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழ் வாழ்த்துகின்றது.