கல்வி-அறிவு-ஞானம்
டாக்டர். ஜாண் பி.நாயகம்
நமது மூளையின் அமைப்பு, செயல்பாடுகள் குறித்த சில அடிப்படை உண்மைகளைக் கடந்த நான்கு இதழ்களில் கண்டோம். அடுத்து, கல்விக்குத் தடையாக உள்ள சில பிரச்சனைகள் குறித்தும் அவற்றை சரிசெய்யும் வழிமுறைகள் குறித்தும் காணலாம்.
1980 முதல் 1987 வரை உலகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஒரு ஆய்வு நடத்தப் பட்டது. கற்கும் போது மாணவர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகள் என்ன என்பது குறித்து இந்த ஆய்வில் விரிவாக அலசி ஆராயப்பட்டது.
முதலில் மாணவர்களிடம் சில கேள்விகள் கேட்கப் பட்டன. அவர்கள் கூறிய பதில்கள் குறித்து அவர்களின் ஆசிரியர்கள், பெற்றோர்களிடமும் விவாதிக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் பல ஆச்சரியமான உண்மைகள் வெளிவந்தன. அதில் மிக முக்கியமான ஒன்று – உலகம் முழுவதும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றாகவே உள்ளன!
இந்த ஆய்வின் முடிவில் கல்வியில் சிறந்து விளங்கத் தடையாக உள்ள பிரச்சினைகள் பட்டியலிடப்பட்டன –
மறதி (Forgetfulness)
அதிக தூக்கம், அசதி (Sleepiness)
சோர்வு (Exhaustion)
மன அழுத்தம் (Stress)
படிப்பில் நாட்டமின்மை (Disinterest)
இவை ஒவ்வொன்றையும் குறித்து முதலில் சுருக்கமாகவும் பின்னர் அவற்றை சரிசெய்யும் தந்திர யோக வழிமுறைகளை விரிவாகவும் இந்தத் தொடரில் காணலாம்.
மறதி (Forgetfulness)
உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினை மறதிதான். பெரும்பான்மையான மாணவர்களும் பாடங்களை விழுந்து விழுந்து படிக்கிறார்கள். ஆனால் தேர்வு அறையில் பதில் எழுதும் போது படித்தது அனைத்தும் மறந்து போகிறது!
இது நிகழக் காரணம் என்ன என்பதை அறிவியலின் அடிப்படையில் புரிந்து கொண்டால் அதைச் சரி செய்யும் வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம்.
மூளையில் எப்படி நினைவுப் பதிவுகள் (Memory) உருவாகுகின்றன என்பதை முதலில் காணலாம்.
மெமரி சர்கியூட்
மனித மூளையில் சுமார் 1, 000, 000, 000, 000 (மில்லியன் மில்லியன்) நியூரான்கள் உள்ளன. இவை தகவல்களை மின்காந்த அலைகள் மூலம் பரிமாறிக் கொள்கின்றன.
நமது புலன்களிலிருந்து வரும் தகவல்கள் இந்த நியூரான்களில் பதிவு செய்யப் படுகின்றன. உதாரணமாக, நாம் ஒரு பொருளைப் பார்க்கும் போது கண் நரம்புகள் வழியாக அந்தத் தகவல் மூளையைச் சென்றடைகிறது. மூளையின் பின் பகுதியில் உள்ள பார்வைப் பகுதியிலுள்ள (Vision area in the
occipital region) நியூரான்களில் மின்தூண்டல் ஏற்பட்டு, ஒரு மின்சார சர்கியூட் அந்த நியூரான்களுக்கிடையே உருவாகிறது. இதுவே ஒரு “மெமரி சர்கியூட்.” (மேலே உள்ள படம் காண்க)
மீண்டும் அந்தப் பொருளைப் பார்க்கும் போது மற்றொரு புதிய மெமரி சர்கியூட் உருவாகும். இப்படி ஒரு பொருளுக்குப் பல மெமரி சர்கியூட்கள் உருவானால் அந்தப் பொருள் குறித்த நினைவு மிக ஆழமாக மூளையில் பதிவாகிவிடும்.
இது போன்றே நாம் ஒரு செய்தியைக் கேட்கும் போது காது நரம்புகள் வழியாக அந்தத் தகவல் மூளையைச் சென்றடைகிறது. மூளையில் ஓசை உணரும் பகுதியிலுள்ள (Auditory area) நியூரான்களில் மின்தூண்டல் ஏற்பட்டு, ஒரு மின்சார சர்கியூட் அந்த நியூரான்களுக்கிடையே உருவாகிறது.
மீண்டும் அதே செய்தியைக் கேட்கும் போது மற்றொரு புதிய மெமரி சர்கியூட் உருவாகும். இப்படி ஒரு செய்திக்கு பல மெமரி சர்கியூட்கள் உருவானால் அந்தச் செய்தி குறித்த நினைவு மிக ஆழமாக மூளையில் பதிவாகிவிடும்.
இது போன்றே பிற புலன்களான தொடுஉணர்ச்சி, சுவை, வாசனை ஆகியவற்றிற்கும் மெமரி சர்கியூட்கள் உருவாகும்.
இது போன்று பல கோடி மெமரி சர்கியூட்கள் நமது மூளையில் பதிவாகி உள்ளன. இதுவரையில் மனிதனால் உருவாக்கப்பட்டுள்ள மிகத்திறனுள்ள சூப்பர் கம்ப்யூட்டர்களை விடவும் ஒரு மனித மூளையின் மெமரி அதிகம்!
இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான செய்தி – எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் அது நிகழும் போது, அது குறித்த மெமரி பதிவுகள் மிக ஆழமாக மூளையில் பதிவாகி விடுகிறது.
A for “Apple”, B for “Ball”, அ – அம்மா, ஆ – ஆடு என மீண்டும் மீண்டும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது அவை மிக ஆழமாக மனதில் பதிவாகி விடுகிறது. ஒரு மொழியின் எழுத்துக்களை வாழ்நாள் முழுவதும் மறக்காமல் இருக்க இதுவே ஒரே வழி!
கணித வாய்ப்பாடுகளும் (Tables) இந்த மனப்பாட வழியிலேதான் முன்பு கற்பிக்கப் பட்டது. ஓரோன் ஒன்று, ஈரோன் இரண்டு என்று பதினாறாம் வாய்ப்பாடு வரையில் முன்பு துவக்கப் பள்ளிப் பருவத்திலேயே கற்பிக்கப் பட்டது. அப்படி கற்றுக்கொண்டவர்களுக்கு மனக் கணக்குகள் மிக எளிதாக இருந்தது.
தற்போது இந்த முறை படிப் படியாகக் குறைந்து வருகிறது. தற்போதுள்ள மாணவர்களுக்கு மனக் கணக்குகள் சிரமமாக இருப்பதற்கு இதுவே காரணம்.
கேட்டலும் பார்த்தலும்
ஐம்புலன்களும் செய்திகளை மூளைக்கு அனுப்புகின்றன – நினைவுப் பதிவுகள் மூளையில் உருவாகுகின்றன. ஆனால் கல்வியைப் பொறுத்த வரையில் கேட்டல், பார்த்தல் ஆகிய இரு புலன்களே மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆசிரியர் கூற, மாணவர்கள் கேட்டு மனதில் பதிய வைத்துக் கொள்வதே பல நூற்றாண்டுகளாக இருந்துவந்த கல்வி முறை. ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது.
1970-களில் நடைபெற்ற மூளை குறித்த ஆய்வுகளில் ஒரு புதிய உண்மை கண்டுபிடிக்கப் பட்டது –
எழுபது சதவிகித மக்கள் கேட்பதின் மூலம் எளிதாகக் கற்றுக் கொள்கிறார்கள். கேட்பதின் மூலமே அவர்கள் மூளையில் நினைவுப் பதிவுகள் உருவாகி விடுகின்றன.
மீதமுள்ள முப்பது சதவிகித மக்களுக்கு கேட்பதின் மூலம் மூளையில் ஆழமான நினைவுப் பதிவுகள் உருவாவதில்லை. பார்ப்பதின் மூலமே இவர்களுக்கு நினைவுப் பதிவுகள்
உருவாகும்.
முதல் வகை மனிதர்களை – “Auditory learners” எனவும், இரண்டாவது வகை மனிதர்களை “Visual learners” எனவும் வகைப் படுத்துகிறார்கள்.
இந்தக் கண்டுபிடிப்பின் அடிப்படையில் மேலை நாடுகளில் கற்பிக்கும் முறைகளில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப் பட்டன. நம் நாட்டில் மிகத் தாமதமாகவே இந்த மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.
கேட்டல், பார்த்தல் ஆகிய இரண்டையும் இணைத்து நமது கற்கும் திறனை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதை அடுத்த இதழில் காணலாம். =
(தொடரும்)