கல்வி-அறிவு-ஞானம் – 9

டாக்டர்.ஜாண் பி.நாயகம்

கல்வியில் சிறந்து விளங்க உதவிசெய்யும் ஒரு அருமையான தந்திர யோக முத்திரை குறித்து தற்போது விரிவாகக் காணலாம்.

ஹாக்கினி முத்திரை

ஹாக்கினி என்பது ஒரு அதிதேவதையின் பெயர். நமது இரு புருவங்களுக்கு நடுவில் உள்ள ஆறாவது சக்கரமான ஆக்ஞை சக்கரத்தை ஆளும் அதிதேவதையே ஹாக்கினி தேவி.

இந்த முத்திரையைச் செய்யும்போது நமது ஆக்ஞை சக்கரம் தூண்டப்படுவதால் இது ஹாக்கினி முத்திரை என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆக்ஞை சக்கரமே நமது நினைவாற்றலுக்கு ஆதாரமான சக்கரமாகும். ஆக்ஞை சக்கரம் வலுவாக இருந்தால், நினைவாற்றலும் வலுவாக இருக்கும். இந்த சக்கரம் வலுவின்றி இருந்தால் கல்வி கற்பதில் பல சிரமங்கள் தோன்றும்.

நமது மூளையும், அதனுள்ளே இருக்கும் பினியல் என்ற நாளமில்லா சுரப்பியும் இந்த ஆக்ஞை சக்கரத்தினால்தான் ஆளப் படுகின்றன. ஹாக்கினி முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் உங்களது நினைவாற்றல் பல மடங்கு அதிகரிக்கும். கற்பவை அனைத்தும் நீண்டகால நினைவுப் பதிவுகளாக மூளையில் பதிவாகும்.

மாணவர்களுக்கு மட்டுமின்றி, நினைவுக் குறைபாடு நோய்களால் அவதிப்படும் முதியவர்களுக்கும் இந்த முத்திரை ஒரு அருமருந்து. அல்சைமர் நோய் உள்ளவர்கள் ஹாக்கினி முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கிறது.

ஆறு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முத்திரையைச் செய்யலாம். மூளை வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மட்டும் மூன்று வயதிலேயே ஆரம்பித்து விடலாம்.

அமரும் முறை

இந்த முத்திரையை நின்றபடி, தரையில் அல்லது நாற்காலியில் அமர்ந்தபடி, படுத்தபடி என எந்த நிலையிலும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நாற்காலியில் அமர்ந்து செய்வதாக இருந்தால் கால் பாதங்கள் இரண்டும் தரையில் படும்படி வைத்துக் கொள்ளவும். கால்கள் இரண்டும் நேராக இருக்க வேண்டும், முதுகுத்தண்டு, கழுத்து ஆகியவையும் வளைவின்றி நேராக இருப்பது அவசியம்.

சுவாசம்

சுவாசம் சீராக, இயல்பான நடையில் இருக்க வேண்டும். முத்திரையைச் செய்யும் போது கவனம் முழுவதும் அந்த முத்திரையின் மேல் இருக்கட்டும். மனம் அமைதியான நிலையில் இருக்கும் பொது முழு கவனத்துடன் முத்திரையைச் செய்தால் பலன் அதிகம்.

செய்முறை

  • இது செய்வதற்கு மிக மிக எளியமுத்திரை.
  • இரு கைகளின் விரல்களையும் அகல விரித்துக் கொள்ளுங்கள்.
  • ஒரு விரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடைவெளி இருக்கட்டும்.
  • வலது கைவிரல் நுனிகளை இடதுகை விரல் நுனிகளுடன் இணையுங்கள்.
  • அதிக அழுத்தம் தரவேண்டாம். விரல் நுனிகள் தொட்டுக் கொண்டிருந்தால் போதும்.
  • கைகளை மார்புக்கு அருகில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • தலையும் கழுத்தும் நேராக இருக்க வேண்டும்.
  • இதுவே ஹாக்கினி முத்திரை.
  • காலையிலும், மாலையிலும் படிக்க அமரும் முன் பத்து நிமிடங்கள் இந்த முத்திரையைச் செய்யுங்கள்.

பலன்கள்

  • ஒரு வேலையில் ஈடுபடும்போது அதில் முழுகவனத்தையும் செலுத்த முடியாமல் இருந்தால் உடனே இந்த முத்திரையைச் சில நிமிடங்கள் செய்தால் போதும். மனம் ஒருமுகப்படும்.
  • மாணவர்களுக்குப்படிப்பில் முழு கவனம் செலுத்த முடியாமல் இருப்பது, மனம் அலைபாய்வது ஆகிய குறைகளை இந்த முத்திரை போக்கிவிடும்.
  • மறந்துபோனவற்றை நினைவுபடுத்திக் கொள்ளவும் இந்த முத்திரை பயன்படும். பல வேளைகளில் ஆழ்ந்த சிந்தனை இருக்கும்போது நம்மையறியாமலேயே நாம் இந்த முத்திரைரையைச் செய்கிறோம் அல்லவா?
  • ஏதாவது ஒன்றை நினைவுபடுத்தத் திணறும்போது உடனே இந்த முத்திரையைச் செய்யுங்கள்.தேர்வு நேரத்தில் வரும் பதட்டத்தில் படித்தவை கூட மறந்து போகும். உடனே இந்த முத்திரையைச் செய்தால் சில வினாடிகளில் சட்டென்று நினைவிற்கு வரும்.
  • தேர்வு நேரத்தில் மறந்து போனவற்றை நினைவுபடுத்திக் கொள்ள மாணவர்களுக்கு இந்த முத்திரை கைகொடுக்கும்.

எவ்வாறு வேலை செய்கிறது?

இந்த முத்திரையைப் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் ஐரோப்பிய நாடுகளில் செய்யப்பட்டுள்ளன.

நமது மூளை இரு பிரிவுகளால் ஆனது. வலது மூளை, இடது மூளை. இரண்டிற்கும் தனித்தனியான செயல்பாடுகள் உள்ளன. பெரும்பான்மையான மனிதர்களுக்கு இடது மூளையின் ஆதிக்கமே அதிகம் இருக்கும். வலது மூளையின் செயல்பாடுகள் குறைவாகவே இருக்கும்.

இரண்டு பக்க மூளைகளும் இணைந்து செயல்படும்போது மனிதனின் படைப்பாற்றல், கற்பனைத்திறன், உடலின் செயல்திறன் ஆகியவை பல மடங்கு அதிகரிக்கும்.

இந்த ஹாக்கினி முத்திரையைச் செய்யும்போது ஒருசில நிமிடங்களிலேயே இரண்டு பக்க மூளைகளும் இணைந்து செயல்படத் துவங்கி விடுவதாக ஆராய்ச்சிகளில் அறியப்பட்டுள்ளது.

மேலும் ஆக்ஞை சக்கரம், பிணியல் சுரப்பி போன்றவையும் இந்த முத்திரையால் தூண்டப்படுவதால் மூளையின் செயல்திறனும் அதிகரிக்கிறது.

மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவும் அதிகரிக்கிறது. மூளை திறம்பட இயங்க ஆதாரமான பிராண வாயுவும் அதிக அளவில் மூளைக்குச் செல்கிறது. இதனால் நினைவுப் பதிவுகள் மூளையில் வேகமாகவும் உறுதியாகவும் உருவாகுகின்றன.

இந்த முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் கல்வியினால் பெறும் அறிவு படிப்படியாக ஞானமாக மாறுகிறது!

கல்வியில் உங்கள் குழந்தைகள் சிறந்து விளங்க, ஆறு வயதிலிருந்தே ஹாக்கினி முத்திரையை அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள்.

தினமும் காலையில் பத்து நிமிடங்களும், மாலையில் பத்து நிமிடங்களும் இந்த முத்திரையைச் செய்து வந்தால் வெகு விரைவில் அந்தக் குழந்தைகளின் நினைவாற்றலும் கற்கும் திறனும் பல மடங்கு அதிகரிப்பதை கண்கூடாகக் காண முடியும். =

(தொடரும்)