வெளிச்ச மனிதர்கள்! – 18

முகில்

உலகில் இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் மட்டுமே சிங்கங்கள் உண்டு. அதிலும் ஆப்பிரிக்கக் கண்டம் சிங்கங்களின் சொர்க்கம். சிங்கங்களை நிஜ சொர்க்கத்துக்கே அனுப்பி வைக்கிறோம் என உலகமெங்குமிருந்து கிளம்பி வரும் வேட்டைக்காரர்களால், கடந்த நூற்றாண்டிலிருந்து ஆப்பிரிக்கக் கண்டம் சிங்கங்களின் நரகமாக மாறிவிட்டது. 1950-ம் ஆண்டில் உலகத்தில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சம். 1990-ம் ஆண்டில் உலகத்தில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். இன்று உலகத்தில் மீதமிருக்கும் சிங்கங்களின் எண்ணிக்கை வெறும் இருபதாயிரத்துக்கும் கீழ். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா போன்ற தேசங்களில் சிங்க வேட்டை அதிக அளவில் நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்கா எங்கும் சிங்கப் பண்ணைகள் இருக்கின்றன. அதாவது உலகில் வளர்ப்புச் சிங்கப் பண்ணைகள் கொண்ட ஒரே நாடு அதுவே. எதற்காக? அதைக் கொண்டுதான் அந்த நாட்டின் சுற்றுலாத்துறை தங்கள் தேசத்தை நோக்கி சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது. அங்கே சிங்க வேட்டை என்பது அரசால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. சிங்கங்களை மூலதனமாகக் கொண்டு அங்கே மில்லியன்கணக்கான டாலர்களில் வியாபாரம் நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்காவில் காட்டு ராஜாவைக் காப்பாற்றுவதற்கென்றே களமிறங்கியிருக்கும் ஒரு சூப்பர் ஹீரோ கெவின் ரிச்சர்ட்ஸன். சிங்கங்களுக்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்து, வேட்டையைத் தடுத்து நிறுத்தி, அவற்றின் எண்ணிக்கையைப் பெருகச் செய்வதற்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எப்படி கெவினோ, அதேபோல கென்யா, தான்சானியாவில் சிங்கங்களை வேட்டையிலிருந்து பாதுகாப்பதற்கென ஒரு பெண் தீவிரமாகப் போராடி வருகிறார். அந்த சிங்க மனுஷியின் பெயர் லீலா ஹஸ்ஸா!

எகிப்தில் பிறந்தவர் லீலா. அவருக்கு ஏழெட்டு வயது இருக்கும்போது அவரது பெற்றோர் சில கதைகள் சொன்னார்கள். எல்லாம் ஊருக்குள் சிங்கங்கள் வந்து சென்ற கதைகள். ‘நீ சிறுபிள்ளையாக இருக்கும்போது இரவில் நம் வீட்டுக்கூரை மீது தடதடவெனச் சத்தம் கேட்கும். அவை சிங்கங்கள். ஊருக்குள் வந்து தமக்கான இரையைப் பிடித்துச் செல்லும்.’

‘இப்போது வருவதில்லையா?’ – லீலா கேட்டார். ‘இல்லை. இப்போது எகிப்தில் சிங்கங்களே இல்லை’ என்ற பதில் லீலாவை என்னமோ செய்தது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதும் கம்பீரமாக வலம் வந்த சிங்கங்கள், அப்போது, எகிப்து உள்ளிட்ட சுமார் 26 ஆப்பிரிக்க நாடுகளில் முற்றிலுமாக அழிந்து போயிருந்தன.

இயல்பாகவே லீலாவுக்கு ‘உயிரியல்’ பாடத்தில் ஆர்வம் இருந்தது. அமெரிக்காவின் டெனிஸன் பல்கலைக்கழகத்தில் உயிரியலில் பட்டப்படிப்பு முடித்தார் (2002). அடுத்து அதே துறையில் மேல்படிப்பையும் முடித்துவிட்டு, ஆராய்ச்சிப் படிப்புக்காக கென்யாவுக்குச் சென்றார். அப்போதுதான் சிங்கங்களின் வேட்டை குறித்தும், அவற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் லீலா அனுபவபூர்வமாக உணர்ந்து கொண்டார்.

மசாய் பழங்குடியினர், கென்யாவின் தெற்குப் பகுதியிலும், தான்சானியாவின் வடக்குப் பகுதியிலும் பரவி வாழ்ந்துவரும் பூர்வகுடிமக்கள். சிங்கங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக மசாய் மக்களுடன் சென்று தங்கினார் லீலா. அப்போது மசாய் மக்களுக்கும் சிங்கங்களுக்குமான விநோத உறவு குறித்து லீலா தெளிவாகப் புரிந்துகொண்டார்.

மசாய் சிறுவன் ஒருவன், தான் இளைஞனாகிவிட்டதை நிரூபிக்கும் வகையில் தனியாகச் சென்று சிங்க வேட்டை ஆடி வர வேண்டும் என்பது அவர்கள் காலம் காலமாகக் கடைபிடித்துவரும் கலாசாரம். நல்ல வலிமையான ஆண் சிங்கத்தைக் கொன்று இழுத்து வருபவன், அசல் வீரனாகப் போற்றப்பட்டான். இது கட்டாயச் சடங்கும்கூட. காலப்போக்கில் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்த காரணத்தினால், மசாய் இளைஞர் ஐந்து பேர் அல்லது பத்து பேர் குழுவாகச் சென்று ஓர் ஆண் சிங்கத்தைக் கொன்று எடுத்து வந்து சடங்கை நிறைவேற்றினார்கள். சுமார் ஒரு வருட காலம் மசாய் மக்களுடனேயே வாழ்ந்த லீலா, அவர்களது இந்த வேட்டையாடும் சடங்கிலிருந்து சிங்கங்களைக் காப்பாற்றத் திட்டமிட்டார்.

அதற்காகவே லீலா, உயிரியல் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் சிலருடன் சேர்ந்து 2007-ம் ஆண்டில் Lion Guardians என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார். சிங்கத்தின் பாதுகாவலர்கள் யார்? அதற்கு லீலா சொன்ன பதில், ‘சிங்கத்தை வேட்டையாடும் மசாய் மக்களே அதன் பாதுகாவலர்கள்’ என்றார். காரணம், லீலா மசாய் மக்களின் இயல்புகளை நன்றாகப் புரிந்து வைத்திருந்தார். சடங்குக்காக வேட்டையாடினாலும் மசாய் மக்கள் சிங்கங்கள் மீது வைத்திருந்த அளவற்ற அன்பை லீலா உணர்ந்திருந்தார்.

அந்த மக்களிடம் உட்கார்ந்து பேசினார். ஒரு காட்டுக்கு சிங்கம் என்பது எவ்வளவு தேவை, உலகில் சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அபாயம், அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் என்று பேசிப்பேசி எடுத்துரைத்து மசாய் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினார். மாற்றம் ஒரே இரவில் வந்துவிடாதல்லவா. லீலாவின் தொடர் முயற்சியால் மசாய் மக்கள் மனத்தில் மாற்றம் படிப்படியாக உண்டானது. சிங்கத்தை வேட்டையாடிக் கொண்டிருந்தவர்கள், குழுக்களாக இணைந்து சிங்க வேட்டையைத் தடுக்கும் பாதுகாவலர்களாகப் பணியாற்றத் தொடங்கினார்கள். வெளியிலிருந்து யாராவது அந்நியர்கள் வேட்டையாட வந்தால்கூட தங்கள் உயிரைப் பணயம் வைத்து சிங்கங்களைக் காப்பாற்றும் அளவுக்குக் களம் இறங்கிப் பணியாற்றத் தொடங்கினார்கள்.

இந்த மாபெரும் மாற்றத்தினால் கடந்த பத்து ஆண்டுகளில் கென்யாவிலும் தான்சானியாவிலும் சிங்க வேட்டை என்பது 90% குறைந்துவிட்டது. மசாய் மக்களால் 1.3 மில்லியன் ஏக்கர் பரப்பளவிலிருக்கும் சிங்கங்கள் வேட்டையிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. லீலாவின் Lion Guardians அமைப்பு, மசாய் மக்களுக்கு எழுதப் படிக்கவும் சொல்லிக் கொடுக்கிறது. அவர்களுக்குத் தொழில் பயிற்சியும் அளிக்கிறது. லீலா தனது இந்த சேவைகளுக்காகப் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.

‘வேட்டையாடுபவர்களே, சிங்கங்களின் காவலர்களாக மாறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. சிங்கங்களைக் கொல்வது என்ற தங்கள் சடங்கை, சிங்கங்களைப் பாதுகாப்பது என்று மாற்றிக்கொண்ட மசாய் மக்கள் மிகவும் சிறந்தவர்கள்!’ என்று பெருமையுடன் புன்னகை செய்கிறார் லீலா. =