வெள்ளோட்டம் வெல்லட்டும்-17
இராணுவ விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு
ஒரு ஏவுகணையை வடிவமைத்து உருவாக்கும் போது பல சோதனைகள் செய்யப்படும். சில சோதனைகள் தரையிலும், சில சோதனைகள் ஏவுகணையை வானில் ஏவப்படும் போதும் செய்யப்படும்.
இலக்கைத் துல்லியமாக தாக்குகிறதா? என்பதைச் சோதிக்க, கடலில் ஒரு மிதக்கும் இலக்கு உருவாக்கப்பட்டு, அந்த இலக்கை நோக்கி ஏவுகணை ஏவப்பட்டு சோதிக்கப்படும். அப்படி ஏவுகணையை வானில் ஏவி சோதிக்கும் போது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏவுகணை திசைமாறிச் செல்லும் வாய்ப்புகளும் உண்டு.
அப்படித் திசைமாறும் பட்சத்தில் தவறுதலாக பொதுசொத்துகளும், பொதுமக்களும் தாக்குதலுக்கு உள்ளாவது அல்லது அண்டை நாட்டை தாக்கும் ஆபத்துகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இதற்காக ஏவுகணையில் அதனை உடனடியாக அழிக்கும் வசதி உண்டு. இதற்கு அழிப்பு கட்டளை தொகுதி (Command Destruction System-CDS) என்று பெயர். போர்க்காலத்தில் ஏவுகணையை ஏவிய பின்பு சில காரணங்களால் இலக்கைத் தாக்காமல் ஏவுகணையைத் தடுக்கவும் இந்த ஏவுகணை அழிப்பு வசதி பயன்படுத்தப்படும். இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்காக செலுத்தப்பட்ட ஏவுகணைகளை, பாதி வழியில் அழித்து இலக்குகளை காப்பாற்றவும் முடியும்!
ஏவுகணை அழிப்பு
ஏவுகணைகள் எப்படி பாதியில் அழிக்கப்படுகின்றன? ஒலியின் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்கும் ஏவுகணையைத் தடுக்க, அதன் எரிபொருளைத் தடுக்க வேண்டும். ராக்கெட் மோட்டார் திட எரிபொருளினால் இயக்கப்படுகிறது, இது தான் ஏவுகணையை முன்னோக்கி செலுத்துகிறது. எரிபொருள் எரிவதால் உருவாகும் உயரழுத்த வாயுக்கள் கூம்புக்குழாயின் (Nozzle) மூலமாக வெளியேறுவதால் தோன்றும் எதிர்விசையினால் ஏவுகணை முன்னோக்கி (நியூட்டனின் மூன்றாம் விதி) பறக்கிறது.
ஏவுகணையை பாதியில் அழிக்க ஏதுவாக, ராக்கெட் மோட்டார் உருளையின் (Casing) மீது, வெடிமருந்து கயிறு வடிவத்தில் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த வெடிமருந்துக் கயிற்றை வெடிக்க வைத்தால், ராக்கெட் மோட்டார் உடைக்கப்படும். இதனால் உள்ளிருக்கும் அதிக அழுத்த வாயுக்கள் உடனடியாக வெளியேற்றப்படும். ஏவுகணை தொடர்ந்து முன்னோக்கிப் பறக்க முடியாது. மேலும், வெடிமருந்தினால் ஏற்படும் தீயில் சிக்கி, வெடிபொருட்களையும் எரிபொருளையும் சுமந்து செல்லும் ஏவுகணை நடுவானில் வெடித்துச் சிதறும். இதனால் இலக்குகள் தப்பும்.
தொலைதூரக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணித்து, ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் ஏவுகணையை நடுவானில் அழிக்கலாம். இது மட்டுமின்றி, தானியங்கி முறையில் தானே தன்னை அழித்துக் கொள்ளவும் (தற்கொலை!) சில ஏவுகணைகளில் வசதிகள் உண்டு. அவசரக் காலங்களில் மனிதத்தவறுகளை தவிர்க்க, பாதை மாறிச் செல்வதை தானே உணர்ந்து தன்னை அழித்துக்கொள்ளும் வகையில் ஏவுகணைகள் வடிவமைக்கப்படுகின்றன.
அவசரக்காலங்களில் வெடிமருந்து கயிறு செயலிழந்தால், ஏவுகணையைப் பாதி வழியில் அழிக்க முடியாது. எனவே, சோதனையின் மூலம் இதை உறுதி செய்யவெண்டும், இதற்காக, எரிபொருள் நிரப்பப்படாத ராக்கெட் மோட்டாரின் உருளையை சுற்றி வெடிமருந்து கயிறு அமைத்து வெடிக்கப்பட்டு சோதனைகள் செய்யப்படும். அது மட்டுமன்றி பொத்தானை அழுத்துவதிலிருந்து எரிபொருள் கயிறு உசுப்பப்பட்டு வெடிக்கும் வரையிலான, கட்டுப்பாட்டுத் தகவல் தொடர்பும் (Command & Communication) சோதிக்கப்படும்.
திரவ எரிபொருளினால் இயங்கும் ஏவுகணையில் வெடிபொருள் கயிறு திரவ எரிபொருள் தொட்டியைச் சுற்றிச் பொருத்தப்பட்டிருக்கும். இங்கும் பல கட்டச் சோதனைகள் உண்டு.
இப்படி பல வகையான சோதனைகளைக் கடந்த பிறகே பாதுகாப்புப்படையினரின் பயன்பாட்டுக்கு ஏவுகணைகள் வழங்கப்பட்டு தேசப் பாதுகாப்பில் பெரும்பங்காற்றுகின்றன.