வெள்ளோட்டம் வெல்லட்டும்-18
இராணுவ விஞ்ஞானி டாக்டர்வி.டில்லிபாபு
புதிதாக கான்கிரீட் வீடு கட்டப்படும் போது, கான்கிரீட் தளத்திலிருந்து வீட்டுக்குள் நீர் கசிகிறதா என்பதை சோதிப்பார்கள். கான்கிரீட் தளத்தின் மேல் நீரை தேக்கி வைத்து இந்த நீர்க்கசிவு சோதனை செய்யப்படும். இதனால் மழைக்காலத்தில் வீட்டில் நீர்க்கசிவு ஏற்படாமல் காக்கலாம். ஹெலிகாப்டர் ( தமிழில் ‘திருகூர்தி’ அல்லது ‘உலங்கு ஊர்தி’) பறந்து கொண்டிருக்கும் போது மழை வந்தால், மழையினூடே பயணப்பட வேண்டும். நீர்க்கசிவினால் ஹெலிகாப்டர் பாதிக்கப்படாதா?
மழை சோதனை:
ஹெலிகாப்டர் மழையினால் பாதிக்கப்படுகிறதா என்பதை அறிய ‘மழை சோதனை’ (Rain Test) செய்யப்படும். இதற்காக மழைக்காலம் வரை காத்திருக்க வேண்டுமா? இல்லை. பிறகு வானத்தில் ஹெலிகாப்டர் பறக்கும் போது எப்படி மழை சோதனை செய்ய முடியும்? தரையில் ஹெலிகாப்டரை நிற்க வைத்து நீர் தெளிப்பான்கள் மூலம் நீரை ஹெலிகாப்டரின் மீது வீசி ‘மழை சோதனை’ செய்யப்படும். இதற்கான மழை சோதனைக்கூடம் அமைக்கப்படும். இப்படி ஒரு சோதனைக்கூடம் பெங்களூருவில், ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்தில் உள்ளது,
மழைச்சோதனையில் விமானப்பொறியாளர் ஒருவர் ஹெலிகாப்டருக்குள் இருந்தபடி நீர்க்கசிவுகள் ஏற்படுகிறதா என்பதை சோதிப்பார். ஹெலிகாப்டரின் வெளிப்புற பாகங்கள், மேற்பூச்சுகள் நீரினால் பாதிக்கப்படுகிறதா, மின்-மின்னணு சாதனங்களை மூடியிருக்கும் சிறிய கதவுகளில் நீர் புகுகிறதா? ஹெலிகாப்டரின் கதவுகளில் பொருத்தப்பட்டிருக்கும் நீர் தடுப்பு ரப்பர் அமைப்பில் குறைபாடு உள்ளதா, எனப் பல நிலைகளில் ஹெலிகாப்டர் சோதிக்கப்படும். இந்த சோதனை ஹெலிகாப்டரை போல, போர் விமானத்திலும் செய்யப்படும். தெளிப்பான்களால் விமானத்தின் மீது நீர் பீய்ச்சியடுக்கப்பட்டு ‘மழை சோதனை’ செய்யப்படும். எஞ்சின் இயக்கப்படாத போர் விமானத்தின் மிகக்குறுகலான விமானி இருக்கையில், காற்றோட்ட வசதியில்லாமல் ‘மழை நீர்’ சோதனை முடியும் வரை எப்படி விமான பொறியாளர் அமர்ந்திருப்பார் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! இப்படி பலரின் உழைப்பில் தான் போர்விமானங்கள் பாதுகாப்பாக உருவாக்கப்படுகின்றன. நாட்டின் பாதுகாப்பில் பங்காற்றுகின்றன.
சுற்றுச்சூழல் சோதனைகள்
ஹெலிகாப்டர், போர் விமானம் ஆகியவை மழையில் மட்டுமின்றி அதிக வெப்பத்திலும் கடும் குளிரிலும் பயணப்படும். இதற்காக பிரத்யேக சோதனைகள் உண்டு. அதிக வெப்பத்தினால் அல்லது கடுங்குளிரினால் ஹெலிகாப்டரில் ஏற்படும் பாதிப்புகள் என்ன? மின்சார – மின்னணு கருவிகள் பாதிக்கப்படுகிறதா? என்பதை அறிய சுற்றுச்சூழல் சோதனைகள் (Environmental Tests) உண்டு. கருவிகள் தனித்தனியாக சுற்றுச்சூழல் அறையில் (Environmental / Climatic Chamber) அதிக வெப்பத்தில் அல்லது கடுங்குளிரில் சோதனை செய்யப்படும். தனியாக சோதித்து சரிபார்க்கப்பட்ட கருவி, ஹெலிகாப்டரில் பொருத்தப்பட்ட பிறகு சரிவர செயல்படாமல் போனால் என்ன செய்வது?
முழு ஹெலிகாப்டரையும் சோதிக்க ‘ராட்சச சுற்றுச்சூழல் அரங்கு’ உண்டு. இந்த அரங்கில் ஹெலிகாப்டர் நிறுத்தப்பட்டு அரங்கின் வெப்பம் உறைநிலைக்கும் கீழாக குறைக்கப்பட்டு சோதனை நடைபெறும். மைனஸ் 60 டிகிரி செல்சியல் வெப்பநிலையில் அமெரிக்காவின் சிக்கார்ஸ்கி ஹெலிகாப்டர் சோதிக்கப்படுவதை படத்தில் காணலாம்.
இதே போல அதிக வெப்பநிலையிலும் சோதிக்கப்படும். மேலும், பலத்த காற்றுடன் மழை பெய்யும் போது ஏற்படும் பாதிப்புகளை அறியவும் சோதனை உண்டு. மழை சோதனையில், காற்றாடி உதவியுடன் காற்றை வேகமாக ஹெலிகாப்டரின் மீது வீசச்செய்து ‘காற்று-மழை சோதனை’ செய்யப்படும். மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்றை செலுத்தும் ஹெலிகாப்டர் சோதனைகள் உண்டு.
ஹெலிகாப்டர் தரையிறக்கம்:
ஹெலிகாப்டரின் எஞ்சின் தொடர்ந்து இயங்குவதால் அதன் இறக்கை சுழல்கிறது. அப்படி சுற்றும் இறக்கையை கட்டுப்படுத்துவதன் மூலம் ஹெலிகாப்டர் மேலெழும்பிப் பறக்கிறது. இட-வலம் திரும்புவதும் இறக்கையின் கட்டுப்பாட்டில் தான். தரையிறங்கவும் இறக்கையைத் தான் பயன்படுத்த வேண்டும். (ஹெலிகாப்டர் இயக்கம் மற்றும் அதன் பிற சுவாரசிய தொழில்நுட்பங்களை எனது ‘எந்திரத்தும்பிகள்’ நூலில் விரிவாக பேசியிருக்கிறேன்). இறக்கையின் இயக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் ஹெலிகாப்டர் மிருதுவாக தரையிறங்கும். சில தொழில்நுட்பக் காரணங்களால் எஞ்சின் அல்லது இறக்கை இயங்காமல் போனால், மிருதுவாக தரையிறங்குவது சாத்தியப்படாது. அந்த சமயங்களில் ஹெலிகாப்டர் அதன் எடையின் காரணமாக மிக வேகமாக தரையில் மோதி விபத்துக்குள்ளாகும். அப்படி மோதினாலும் பாதிப்படையாத உறுதியான உடலைப்போடு ஹெலிகாப்டரை வடிவமைக்க சில சோதனைகள் உண்டு. அவை என்னென்ன?