ஐந்து ஆறைவிடப் பெரியது 21


திரு.முகில்

ருவர் அடக்கத்துடன் அமைதியாக இருக்கிறார் என்றால் அவர் திறமையற்றவர், வலிமையற்றவர் என்று நினைப்பது மனித இயல்பு. அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கான சமயம் வரும்போது வலிமையை / திறமையைச் சரியாக வெளிப்படுத்துவார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே மூதுரையில் இந்த லைஃப் மேனேஜ்மெண்ட் பொன்விதி ஔவையாரால் செதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் உவமையாகத் துணைக்கழைத்துக் கொண்டது கொக்கு.

‘‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு’’. ஓடையில் சிறிய மீன்கள் கடந்து போகும்போது கொக்கானது வாட்டத்துடன் அமைதியாக இருக்கும். அதனால் அதற்கு மீன் பிடிக்கத் தெரியவில்லை என்று நினைக்கக்கூடாது. பொறுமையாகக் காத்திருக்கும் கொக்கானது, நல்ல பெரிய மீன் வரும்போது அதைக் கச்சிதமாகப் பிடித்து உண்ணும். முப்பது, நாற்பது சிறிய மீன்களைப் பிடிக்க உழைப்பது Hard Work. ஒரே ஒரு பெரிய மீனுக்காகக் காத்திருந்து, அதைச் சரியாகப் பிடித்து உண்பதே கொக்கின் Smart Work.

ஆழமில்லாத நீர்நிலைகளில் பொதுவாக கொக்குகள் வேகமாக நகர்ந்து இரை தேடும். ஆனால், சாம்பல் கொக்குகளின் குணாதிசயமே தனி. அவை மிக மெதுவாக, பதுங்கிப் பதுங்கி நகரக்கூடியவை. அவை நீரிலிருந்து காலினை வெளியே எடுக்கும்போதும் சத்தம் கேட்காது. மீண்டும் நீருக்குள் காலினை உள்ளே நுழைக்கும்போது வெண்ணைய்க்குள் குண்டூசி நுழைவதுபோலத்தால் இருக்கும். இப்படி நுட்பமாக இரை தேடும் பண்பை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே சங்க இலக்கியப் பாடலில் பரணர் பதிவு செய்திருக்கிறார். அகநானூற்றின் 276 – வது பாடல்.

நீளிரும் பொய்கை இரை வேட்டெழுந்த வாளை வெண்போத்து அனய… அதாவது சாம்பல் கொக்கானது பதுங்கிப் பதுங்கி இரை தேடுவதுபோல, தலைவனாகப்பட்டவன், இரவில் திருடன் வீட்டுக்குள் பதுங்கி நுழைவதுபோல தலைவியைச் சந்திக்க வருகிறான் என்கிறார். நீர்ப்பறவைகள் வலசை போவது குறித்து பல்வேறு சங்க இலக்கியப் பாடல்கள் பதிவு செய்திருக்கின்றன. ஆம், நம் புலவர்களுக்கு புள்ளினங்களின் இயல்புகள் குறித்துத் தெளிவான புரிதல் இருந்திருக்கிறது. அவர்கள் ஆகச்சிறந்த Bird Watchers ஆகவும், பறவையியலாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

பொதுவாகப் பறவைகள் வயலுக்கு வருவதை விவசாயிகள் விரும்ப மாட்டார்கள். ஏனெனில் அவை தானியங்களையும் பயிர்களையும் பழங்களையும் தின்று சேதம் விளைவிக்கும் என்பதால். ஆனால், கொக்குகள் வயல்களில் நின்றால் விவசாயிகளின் முகத்தில் புன்னகை சம்மணமிட்டு அமர்ந்திருக்கும். ஏனெனில் பயிருக்குச் சேதம் விளைவிக்கும் எலிகளை வேட்டையாடுவதில் கொக்குகள் சிறப்பு ராணுவப்படை போலச் செயலாற்றுகின்றன. இங்கே உழவு மற்றும் அறுவடை சமயங்களில், வயல்வெளிகளில் உண்ணிக் கொக்குகளை அதிகமாகப் பார்க்க முடியும். பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் உண்ணிக் கொக்குகளின் பங்கு அளப்பரியது. எருமைகளும் தம் மேனியிலிருக்கும் உண்ணிகளை கொத்தித் தின்பதால் கொக்குகளுடன் நட்பு பாராட்டுகின்றன. பல்கிப் பெருகும் உயிரினங்களை வேட்டையாடி சூழல் சமநிலையைப் பேணுவதில் கொக்குகள் மனிதனுக்கு உதவுகின்றன. சூழல் சமநிலையைச் சிதைப்பதில் நம்பர் 1 உயிரினமாக இருக்கும் மனிதனுக்கு, கொக்குக்கறியும் விருப்ப உணவு என்பது தகவலுக்காக.

வெண் கொக்கு

வெண் கொக்கு இதனை வீரமும் மதியும் நிறைந்த கொக்கு என்று சொல்லலாம். மனிதன் தூண்டிலில் புழுவை வைத்து மீன் பிடிக்கும் வித்தையையே இந்தக் கொக்கிடம் இருந்துதான் கற்றிருக்க வேண்டும். கோரைப் புற்களில் உள்ள சிறிய புழுக்களைக் கொத்தும் இந்தக் கொக்குகள், அவற்றை நீரில் போட்டுவிட்டு, ஆடாமல் அசையாமல் மீனின் வருகைக்காகப் பொறுமையாகக் காத்திருக்கின்றன. புழுவைத் தேடி வரும் மீன்கள், கொக்குகளுக்கு ஃபுல்மீல்ஸ் ஆகின்றன. இந்த வெண் கொக்குகளின் முட்டைகள், குஞ்சுகளை இரையாக உட்கொள்வதற்கு கீரிகள், நரிகள், பாம்புகள் போன்ற எதிரிகள் எச்சில் ஊற வருவதுண்டு. அப்போது இந்த வெண் கொக்குகள் தமது இரு இறக்கைகளையும் கேடயம் போல விரித்து, அசைத்து, சிலிர்த்து, எதிரிகளைப் பயமுறுத்தி அங்கிருந்து விரட்டுகின்றன. துணிவே துணை. வல்லவனுக்கு இறக்கையும் ஆயுதம்!

ஆழமற்ற நீர் நிலைகளில் வசிக்கும் கொக்குகள், தம் இனப்பெருக்கத்திற்காக உயரமான இடங்களில் கூடு கட்டும். ஆழமான, கிண்ணம் போன்ற மேல்பக்கம் திறந்த வகைக் கூடுகள். அதனுள் முட்டை பாதுகாப்பாக இருக்க மெத் மெத்தென்று நாரும் இறகுகளும் சிறு குச்சிகளும் வைத்து கூட்டை அமைத்திருக்கும். கொக்கின் கூட்டை மேடை என்கிறார்கள். கொக்கு மேடை ஏறினால் மழை பெய்யும் என்றொரு பழமொழி உண்டு. அதாவது கொக்கு கூடு அமைக்கத் தொடங்கிவிட்டால், நல்ல மழைக்காலம் சீக்கிரமே ஆரம்பித்துவிடும் என்று ‘வெதர்மேன் / வெதர்வுமன்’ ஆக அதனை நம் முன்னோர்கள் நோக்கியிருக்கிறார்கள்.

கடல் வத்தினா கருவாடு கிடைக்கும்னு காத்திருந்த கொக்கு, குடல் வத்தி செத்துப் போச்சாம்! இது கொக்கு குறித்துப் புழக்கத்திலிருக்கும் நெகட்டிவான பழமொழி. பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் கொக்குகள் தம் வெள்ளை நிறத்தால் ‘வில்லன்’ ஆகவே நோக்கப்பட்டன. பேச்சு வழக்கில் ‘கொக்கு’ என்பது வெள்ளையர்களைக் குறிக்கும் Code Word ஆகவும் புழக்கத்தில் இருந்தது. இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாற்றில் தனித்துவம் பெற்ற கொக்குப் பாடலின் கதையையும் பார்த்து விடுவோம்.

1886-ம் ஆண்டில் சிவகாசியில் பிறந்தவர் விஸ்வநாத தாஸ். நாடகக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர். இவரது வள்ளி திருமணம் நாடகம் மிகவும் பிரபலம். புராண நாடகம் என்றாலும் தேசபக்தியைத் தூண்டும் வசனங்களாலும் பாடல்களாலும் அரங்கை அதிரச் செய்தார் விஸ்வநாத தாஸ். அதில் முக்கியமானது கொக்குப் பாட்டு.

கொக்கு பறக்குதடி பாப்பா – நீயும் கோபமின்றிக் கூப்பிடடி பாப்பா! கொக்கென்றால் கொக்கு கொக்கு, அது நம்மைக் கொள்ளையிட வந்த கொக்கு. வர்த்தகம் செய்ய வந்த கொக்கு – நமது வாழ்க்கையைக் கெடுக்க வந்த கொக்கு! அக்கரைச் சீமைவிட்டு வந்து – இங்கே கொள்ளை அடிக்குதடி பாப்பா! தேம்ஸ் நதிக்கரையின் கொக்கு – அங்க தின்ன வழியில்லாத கொக்கு! மது மாமிச வெறிபிடித்த கொக்கு – அதன் மமதை அழிய வேண்டும் பாப்பா!

அவர் மேடையேறி முருகராகத் தோன்றி, முதல் காட்சியில் நடிக்க ஆரம்பித்த உடனேயே மக்கள், ‘கொக்குப் பாடலைப் பாடுங்கள்’ என்று ஆரவாரமாகக் கூச்சலிட ஆரம்பித்து விடுவார்கள். அவரும் உற்சாகமாக, தேசிய உணர்வுடன், ஆங்கிலேயரை எதிர்த்து அந்தப் பாடலைப் பாடுவார். மேடையிலேயே கைதும் செய்யப்படுவார். ‘கொக்கு பாடலையோ, வேறு தேசபக்திப் பாடல்களையோ பாடுவது ராஜ துரோகம்’ என்று விஸ்வநாத தாஸ் பாடுவதற்கு தடையாணையை ஆங்கிலேய அரசு பிறப்பித்தது. இருந்தாலும், அவர் பாடுவதை நிறுத்தவில்லை. கொக்குப் பாடலைப் பாடியதற்காகவே சுமார் 30 முறை வரை சிறைக்குச் சென்று, ஒவ்வொரு முறையும் மாதக்கணக்கில் தண்டனையை அனுபவித்திருக்கிறார் விஸ்வநாத நாஸ்.

தனது 54 – வது வயதில் முருகராக நாடகத்தில் மயில் வாகனமேறி நடித்துக் கொண்டிருந்தார். அசுரர்களை ஆங்கிலேயராகச் சித்தரித்து வீர வசனம் பேசினார். கொக்குப் பாடலையும் கோபம் பொங்கப் பாடினார். தலை தொங்கியது. அவரது ஆசைப்படியே நாடக மேடையிலேயே விஸ்வநாத தாஸின் உயிர் பிரிந்தது.
வெறி கொண்டு வெள்ளையனைச் சுட இயலாதவர்கள், துப்பாக்கி எடுத்து வெள்ளைக் கொக்குகளைச் சுட்டு ஆத்திரத்தைத் தணித்துக் கொண்டதாகவும் கதைகள் உண்டு. ஆக, தமிழர்களின் வாழ்வில் காலந்தோறும் கொக்கானது உவமையாகவும், உண்மையாகவும் நெருங்கியே இருக்கிறது.

பொதுவாக கொக்கு இனங்கள், குளிர்காலத்தில் தட்பவெட்ப நிலையைச் சமாளிக்க வலசை போகின்றன. உணவுக்காகவும் இனப்பெருக்கத்துக்காகவும் ஆண்டுதோறும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்லும் கொக்கு இனங்கள் இருக்கின்றன. சைபீரியக் கொக்குகளும் நெட்டைக் கொக்குகளும் நீண்ட தூரத்துக்கு வலசை போகும் வழக்கம் கொண்டிருக்கின்றன. ஓர் ஆண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தைத் தேர்வு செய்துவிட்டால், தொடர்ந்து ஒவ்வோர் இனப்பெருக்கப் பருவத்திலும் கொக்குகள் அதே இடத்துக்கே திரும்பி வருகின்றன. அந்தக் குறிப்பிட்ட இடத்தில் ஏதாவது ஓர் ஆபத்தை எதிர்கொண்டால் மீண்டும் அவை அந்த இடத்துக்கு வருவதில்லை. ஆகவேதான், பறவைகள் சரணாலயங்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் அதிகம் சத்தம் எழுப்பவோ, வெடி வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

கொக்குக் குஞ்சுகள் பிறந்து சுமார் 45 – நாள்களில் பறக்கும் திறனைப் பெற்று விடுகின்றன. கொக்கின் எடை குறைந்த மெல்லிய தேகமும் பெரிய இறக்கைகளும் எளிதாகப் பறப்பதற்கு உதவுகின்றன. கால்களைப் பின்னோக்கி நீட்டியபடி கூரிய அலகால் காற்றைக் கிழித்து, நேர்த்தியுடனும் ஒழுக்கத்துடனும் உயரமாக வெகுதூரத்துக்குப் பறந்து செல்கின்றன. அப்படி ஆண்டுக்கு இருமுறை சுமார் 5000 முதல் 6000 மைல்கள் வரை பயணம் செய்பவையே சைபீரியக் கொக்குகள்.

அதிகபட்சம் ஆறரைக் கிலோ எடையும், நாலரை அடி உயரமும் கொண்டவை ஆஜானுபாகுவான கொக்குகள். இறக்கைகளை விரித்தால் மொத்த நீளம் மட்டும் ஒன்பதடி வரை இருக்கும். உடலெங்கும் வெள்ளை. இறக்கைகளின் முனைகளில் இருக்கும் இறகுகள் கருப்பு. முகத்தில் கொஞ்சம் சிவப்பு. நீண்ட அலகுகள். வேர், விதை, தண்டுகள், எலிகள், மண்புழுக்கள், மீன்கள், தவளைகள் என்று உண்டு வாழ்பவை.

இந்த சைபீரியக் கொக்குகள், ஆர்டிக் பகுதியில் கோடைக்காலமான ஜூனில் இனப்பெருக்கம் செய்கின்றன. அக்டோபருக்கு மேல், அங்கே கடும் பனிக்காலம் ஆரம்பிக்கும். அப்போது உணவு கிடைக்காது என்பதாலும் கொடும் பனியில் பிழைத்திருக்க முடியாது என்பதாலும் இவை தெற்கு நோக்கி வலசை கிளம்புகின்றன. சைபீரியாவின் கிழக்குப் பகுதியில் வாழும் கொக்குகள், சீனாவின் Yangtze ஆற்றுக்குப் பகுதிக்கும், Poyang ஏரிப்பகுதிக்கும் செல்கின்றன. சைபீரியாவின் மேற்குப் பகுதி வாழ் கொக்குகள், இரானுக்குச் சென்றன. மத்திய சைபீரியாவின் வாழும் சைபீரியக் கொக்குகள், மத்திய ஆசியா வழியாகப் பறந்து, இமயமலையைக் கடந்து ராஜஸ்தானுக்கு வந்து கொண்டிருந்தன. ஆம், இறந்த காலம்தான்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.