சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 17

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

வாழ்க்கை என்பது நேரத்தால் ஆனது. ஆம், சில நாட்களுக்கு முன்பு ஒரு கடிகாரக் கடைக்குச் சென்று ஒரு கடிகாரத்துக்கு பழுதுபார்ப்பு மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்தக் கடையில் நின்றுகொண்டிருந்த அரைமணி நேரத்துக்குள் இருபதுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை அந்தக் கடையின் உரிமையாளர் சமாளிக்க வேண்டியிருந்தது. சிறிய கடை தான், நல்ல வியாபாரம் நடந்தது. ஒரு மேலான உண்மை புரிந்தது. மக்கள் கடிகாரம் என்ற ஒன்று இல்லாமல் வாழமுடியாது என்பதுதான் அந்த உண்மை. மனித வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் நேரத்தின் மதிப்பை உணர்த்தும் கடிகாரங்களுக்கு மதிப்பு அதிகம்.

கடிகாரத்தின் பயன்பாட்டை எளிமையாக்கி, மனிதகுலம் பொறுப்போடு வாழப் பாதை அமைத்திட்ட மனிதர்கள் பலர். இவர்களில் ஒருவர்தான் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் என்பவர். விலையுயர்ந்த கடிகாரங்களை உருவாக்கி நேரத்தின் மதிப்பு விலையுயர்ந்தது என்று இன்று வரை நிரூபிக்க வைத்துள்ள சாதனையாளர்.

ஒரு காலத்தில் கடிகாரங்கள் என்பது சட்டைக் கோட்டுகளின் பாக்கெட்டில் வைக்கும் பெரிய வட்டமுள்ள கடிகாரங்கள் தான். இதனை மாற்றி நேரத்தை அறிவதை எளிதாக்கியவர் இந்த வில்ஸ்டோர்ஃப் என்பவர்.

சவாலான இளமைக்காலம்

ஜெர்மனி நாட்டில், பவேரியாவின் குல்ம்பாக்கில் அன்னா மற்றும் ஜோஹன் டேனியலுக்கு இரண்டாவது குழந்தையாகப் பிறந்தவர் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப். பரம்பரையாக இரும்பு வியாபாரம் செய்து வந்த பணக்காரக் குடும்பம். தாத்தாவின் செல்வமிக்க இரும்பு வியாபாரத்தை தந்தை ஜோஹன் செய்து வந்தார்.

ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப்புக்கு பத்து வயது நடந்த போது, என்ன நோய் என்று கண்டறியும் முன்பே அம்மா அன்னா இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளும் தாயை இழந்த சோகம் தீர்வதற்கு முன்பே அடுத்த இரண்டு ஆண்டுகளில் தந்தை ஜோஹனும் இறந்துவிட்டார். பெற்றோர்களை இழந்த அனாதைக் குழந்தைகளாகினர் இந்தக் குழந்தைகள்.
ஹான்ஸின் மாமாமார்கள் அவரது தந்தையின் இரும்புத் தொழிலின் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு, மேட்டுக்குடிப் பிள்ளைகள் படிக்கும் தரமான உண்டு, உறைவிடப் பள்ளிகளில் மூன்று குழந்தைகளையும் சேர்த்துவிட்டார்கள். சிறந்த கல்வி மட்டுமே இந்தக் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் துணையாக இருக்கும் என்பதால் அத்தகைய முடிவை அவர்கள் எடுத்தார்கள்.

உண்டு, உறைவிடப் பள்ளியில் தாய், தந்தையையும், உறவுகளையும் இழந்த வேதனையை ஹான்ஸ் மற்றும் உடன் பிறந்தவர்கள் அனுபவித்தார்கள். தாய், தந்தை இல்லாதவன் என்பதால் பள்ளியில் பிற மாணவர்களின் துன்புறுத்தலுக்கும் உள்ளாக வேண்டிய நிலையில் ஹான்ஸ் இருந்தார். அதே சமயம் கணிதம் மற்றும் மொழிப் பாடங்களைத் தேர்வு செய்து சிறப்பாகப் படித்தார். கணிதத்தை சிறப்பாகப் படித்ததன் மூலம் தன் அறிவுத் திறனை மற்றவர்களுக்கு நிரூபித்தார். தான் அதிகமாகப் பயணம் செய்ய விரும்புவதாகவும் அதற்கு மொழிப்பாடங்கள் தேவை என்றும் ஆங்கிலம் மற்றும் ஜெர்மன் மொழியை நன்கு கற்றுக்கொண்டார்.

விடுதிப்பள்ளியில் அதிக நண்பர்கள் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப்புக்குக் கிடைக்கவில்லை. ஒரு மாணவர் சுவிட்சர்லாந்திலிருந்து வந்து அங்கு படித்தார். அவரோடு ஹான்ஸ் நெருங்கிப் பழகினார். அந்த மாணவர் அடிக்கடி உலகப் புகழ்பெற்ற கடிகாரங்கள் சுவிட்சர்லாந்து நாட்டில் உருவாகும் கதைகளைக் கூறினார். அதிலும் குறிப்பாக சுவிட்சர்லாந்தில் லா செளக்ஸ்-டி-ஃபாண்ட்ஸ் என்னும் ஊர் கடிகார உற்பத்தியில் மிகவும் புகழ்பெற்றது என்பதையும், தான் அந்த ஊரிலிருந்து வருவதாகவும் கூறிய போது வில்ஸ்டோர்ஃப்புக்கு அந்த ஊர் செல்ல வேண்டும், அந்தக் கடிகாரத் தொழில் பற்றி அறிய வேண்டும் என்ற ஆவல் உதித்தது.

ஆர்வமும் வேலையும்

பள்ளிப் படிப்பு முடிந்ததும் ஒரு வேலையில் சேர விரும்பிய வில்ஸ்டோர்ஃப்புக்கு சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஒரு முத்து வியாபாரியின் கடையில் வேலை கிடைத்தது. அந்த முத்து வியாபாரி, உலகின் பல இடங்களிலிருந்தும் விலையுயர்ந்த முத்துக்களை வாங்கி அவற்றைக் கொண்டு காதணிகள், வளையல்கள், கழுத்தில் அணியும் பல்வேறு மாலைகள் மற்றும் ஆபரணங்களைச் செய்து விற்பதைக் கூர்ந்து கவனித்தார். இந்த நிறுவனத்திலிருந்த போது ஒரு பெரிய உண்மையை வில்ஸ்டோர்ஃப் கற்றுக்கொண்டார். அதாவது முத்துக்களை வெளியிலிருந்து வாங்கி, அவற்றை அணிகலனாக மாற்றி விற்பதில் பல மடங்கு இலாபம் கிடைப்பதைத் தெரிந்து கொண்டார். இந்த அனுபவம், உற்பத்தி செய்யாவிட்டாலும், பொருைள வாங்கி விற்பதன் மூலமும் பெரும் இலாபம் அடையலாம் என்ற நுணுக்கத்தை அவருக்கு இளம் வயதிலேயே உணர்த்தியது. அங்கே சிறப்பாக முத்துக்களைக் கோர்ப்பது, விற்பனைக்கு அனுப்புவது போன்ற வியாபார உத்திகளைத் தெரிந்து கொண்டார். அந்தச் சூழலில் லா-செளக்ஸ்-டி-பாண்ட்ஸ் என்ற இடத்திலிருந்த ‘குனோ கோர்டன்’ என்ற ஒரு கடிகார நிறுவனத்தில் வேலையுள்ளதாகவும், விரும்பினால் அங்கு வரலாம் என்று ஹான்ஸின் பள்ளி மாணவ நண்பன் அழைப்பு விடுத்தார்.

ஏற்கெனவே கடிகாரத் தொழில் பற்றி அரிய ஆர்வம் கொண்டிருந்த ஹான்ஸ், முத்து நிறுவனத்தின் வேலையை விட்டுவிட்டு ‘குனோகோர்டன்’ நிறுவனம் சென்று வேலையில் சேர்ந்தார். ஏற்கெனவே வேலை செய்த நிறுவனத்தின் ஊதியத்தைவிட இங்கு ஊதியம் சற்றுக் குறைவாகத் தான் கிடைத்தது. ஆனால் கடிகாரத் தொழில் மீது கொண்ட ஆர்வம் அவரை இங்கே வரத் தூண்டியது.

‘குனோ கோர்டன்’ கடிகார நிறுவனத்தில், வியாபாரத்துக்கு வரும் பல்வேறு கடிதங்களுக்குப் பதில் அளிக்கவும், கோப்புகளைக் கண்காணிக்கவும் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப்புக்குப் பணி தரப்பட்டது. அங்கே பணி செய்தவர்களுக்கு ஆங்கில மொழியறிவு இல்லை என்பதால், அனைத்துக் கடிதங்களையும் வாசிப்பது, சந்தைப்படுத்தலில் உள்ள ஆவணங்களைப் பாதுகாப்பது என்று வியாபாரம் சார்ந்த அனைத்துச் செய்திகளையும் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் அறிந்துகொள்ள முடிந்தது.

வழக்கமாக ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப்பின் வேலை சில மணிகளில் முடிந்துவிடுவதால், தனக்கு வேறு வேலையும் தருமாறு வேண்டினார். எனவே, கடிகாரங்களைச் சரிபார்க்கும் பணியும் அவருக்குத் தரப்பட்டது. அக்காலத்தில் பாக்கெட் கடிகாரங்கள் தான் புழக்கத்தில் இருந்தது. எனவே ஒவ்வொரு நாளும் பல கடிகாரங்களை எடுத்து அவற்றின் செயல்திறனைக் கண்காணித்து, அவற்றைத் தக்க முறையில் உறையிட்டு அனுப்பும் பணியைச் செய்தார்.

தொடர்ந்து கடிகாரத்தின் ஒவ்வொரு பாகமும் எவ்வாறு சேர்க்கப்படுகிறது, அதன் வேலை செய்யும் விதம், ஏற்படக் கூடிய தவறுகள், சரிசெய்யும் விதங்கள் என்று கடிகாரம் தொடர்பான அனைத்து நுணுக்கங்களையும் ஹான்ஸ் கற்றுக்கொண்டார். மகிழ்ச்சியான வாழ்க்கை சென்று கொண்டு இருந்தது. அப்போது அவருக்கு வயது 20 மட்டுமே.
இச்சூழலில் முதல் உலகப்போர் ஆரம்பமானதால் ஜெர்மனி நாட்டைச் சார்ந்த எல்லோரும் போருக்குச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டனர். ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப்பும் போருக்குச் சென்றார். சில மாதங்களில் போர் முடிந்ததால், மீண்டும் இலண்டன் சென்றார்.

ரோலக்ஸ் கடிகாரம்

இலண்டன் சென்று வேலை தேடிய போது ஒரு கடையில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற பெயர்ப் பலகையைக் கண்டார் ஹான்ஸ். அக்கடையும் கடிகாரக் கடைதான். மிக்க மகிழ்ச்சியோடு அங்கு சென்று தன் ‘குனோ கோர்டன்’ கடிகார நிறுவன அனுபவங்களைச் சொன்னார். அவர்கள் உடனே சிறந்த ஒரு பொறுப்பை ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப்புக்கு வழங்கினார்கள்.

மிகத் திறமையாக வியாபார நுணுக்கங்களைக் கையாண்டதால் அந்த நிறுவனத்தின் கடிகார விற்பனையை முன்னூறு மடங்கு உயர்த்திக் காட்டினார். இந்தச் சூழலில் டேவிஸ் என்பவரைச் சந்தித்தார் ஹான்ஸ். டேவிஸ் ஹான்ஸின் சகோதரியின் கணவர்.

ஆல்பிரட் டேவிஸ், ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப்புடன் பேசிய போது அவரது கடிகாரத் தொழில் திறமையைத் தெரிந்துகொண்டார். எனவே தான் முதலீடு செய்வதாகவும், இருவரும் இணைந்து கடிகாரத் தொழிலில் ஈடுபடலாம் என்றும் தன் எண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார். இது நல்ல வாய்ப்பாக ஹான்ஸ்க்கு அமைந்தது. எனவே 1905 – ஆம்
ஆண்டு இருவரும் சேர்ந்து ‘வில்ஸ்டோர்ஃப் – டேவிஸ்’ என்ற பெயரில் ஒரு கடிகார விற்பனை நிலையத்தை ஆரம்பித்தார்கள்.

‘வில்ஸ்டோர்ஃப் – டேவிஸ்’ கடிகார நிறுவனத்தின் பெயரை எல்லோரும் விரும்பும் ஒரு பெயராக மாற்ற வேண்டும் என்று ஹான்ஸ் விரும்பினார். A முதல் Z வரையுள்ள அனைத்து எழுத்துகளையும் பலவாறு ஒருங்கிணைத்துப் பல பெயர்களை உருவாக்கினார். ஆனால், அந்தப் பெயர்களில் திருப்தி ஏற்படவில்லை. லூசிடானியா, மெளரிடானியா, தி ஈஸ்டர்ன் வாட்ச், ரோகோ, எல்விரா, ரோல் வாட்ச்கோ, ஃபால்கன், ெஜன்எக்ஸ், லோனெக்ஸ், லோரெக்ஸ், ஹால்ஃபாக்ஸ், வின்டெக்ஸ் இப்படிப் பல பெயர்கள்.

ஆனால், ஒரு நாள் குதிரை இழுத்துச் சென்ற சொகுசுப் பேருந்தில் பயணம் சென்ற போது அவரது காதில் ஒரு ஜீனி ‘ரோலக்ஸ்’ (ROLEX) என்ற பெயரைச் சொன்னதாகவும், அது தனக்குப் பிடித்துப் போனதாகவும் அந்தப் பெயரை எல்லோரும் விரும்பியதாகவும் தன் சுயசரிதையில் எழுதுகின்றார் ஹான்ஸ். இப்படி 1908 – ஆம் ஆண்டு தனது கடிகார நிறுவனத்துக்கு ‘ரோலக்ஸ்’ என்ற பெயரை இட்டுப் பதிவும் செய்துவிட்டார் ஹான்ஸ்.

அப்போது பாக்கெட் கடிகாரங்களைத் தனக்கு நன்கு தெரிந்த சுவிட்சர்லாந்து கடிகார நிறுவனத்திலிருந்து வாங்கி விற்பனையைத் தொடங்கினர் ஹான்ஸ் மற்றும் டேவிஸ். ஹான்ஸ்க்கு கடிகாரத் தொழிலில் மாற்றுச் சிந்தனை உதித்தது. பாக்கெட் கடிகாரம் ஒவ்வொரு நேரமும் வெளியே எடுத்து மணியைப் பார்க்க வேண்டியதாக இருந்தது. எனவே, மணிக்கட்டில் கட்டிக்கொள்ளுமாறு கடிகாரத்தை உருவாக்கலாம் என்று சிந்தித்தார் ஹான்ஸ்.

அக்காலத்தில் மணிக்கட்டில் கட்டும் கடிகாரங்கள் நகைக் கடைகளில் பெண்களுக்காக விற்கப்பட்டது. அதைப் பெண்கள் ஒரு வளையல் போல எண்ணி அணிந்து கொண்டார்கள். அந்தக் கடிகாரத்தின் நேரம் துல்லியமாக இருக்காது. அது ஒரு அலங்காரப் பொருள், அவ்வளவுதான்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.