ஊடகம் பழகு 14


திரு.மனோஜ் சித்தார்த்தன்

காலையில் எழுந்த நிமிடம் முதல் காலை வணக்கத்தில் ஆரம்பித்து காலைச் செய்திகள் முதல் இன்று என்ன சமைக்கலாம் என்பது வரை அனைத்துத் தகவல்களையும் படங்களாக, தகவல்களாக, வீடியோ காட்சிகளாக பல்சுவைத் தகவல்களை நமக்கு வாரி வழங்குவதில் டிஜிட்டல் ஊடகங்கள் என்றும் முன்னிலையில் இருக்கின்றன. அது மக்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்டது என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. நம் கற்கும் பாடத்தில் ஏதாவது சந்தேகமா, நமக்கு ஏதேனும் தகவல் தேவைப்படுகின்றதா, எங்கேயும் ஏதாவது ஒரு பிரச்சனையா உடனே நமக்கு சட்டென்று ஞாபகம் வருவது நாம் கையில் உள்ள மொபைல் போன் தான்.

அதில் உள்ள சமூக வலைத்தளப் பக்கங்களை பார்த்தாலே அன்று காலையிலிருந்து மாலை வரை நம்மைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைத் தெளிவாகவும் விரிவாகவும் அதில் பதிவிட்டு இருப்பார்கள். நாம் பயணம் செய்து கொண்டிருந்தாலும் சரி அல்லது வேறு ஏதும் முக்கியமான வேலைகள் செய்து கொண்டிருந்தாலும் சரி, நொடிப் பொழுதினில் தகவல்கள் நமக்கு வந்து சேரும், அந்தளவுக்கு மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக மாறிக் கொண்டு வருகின்றது. வயது வித்தியாசம் இன்றி, ஆண் பெண் பேதமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை இது பிடித்துள்ளது. இதுதான் டிஜிட்டல் ஊடகங்களின் வெற்றி.

உண்மையில் மக்களை ஸ்தம்பிக்க வைக்கின்றது. இதுதான் டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சி. இதற்கு வித்திட்டவர்கள் டிஜிட்டல் படைப்பாளர்களே (Content Creator). இவர்களின் பணி மிக இன்றியமையாதது. ஒரு தகவலை எவ்வாறு சொன்னால் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்பதையும் மக்களுக்கு எது போன்ற தகவல்களைக் கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதனையும் அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுபவர்கள் இவர்கள். எனவே இவர்களைப் போன்ற படைப்பாளர்களால் பொருளாதார வளர்ச்சி (Creative Economy) என்பது அதிகரித்துள்ளது. ஆம், உண்மைதான், இந்தியாவில் மட்டும் படைப்பாற்றல் பொருளாதாரம் 30 பில்லியன் டாலர் தொழிலாக உருவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மென்மேலும் நமது இந்தியாவில் இதுபோன்ற படைப்பாளர்களுக்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

படைப்பாற்றல் பொருளாதாரம்

ஒரு காலத்தில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் கட்டுரையாளர்கள் போன்றவர்கள் தங்கள் படைப்புகளை மற்றவர்களுக்குக் கொடுத்து அதன் மூலம் வருவாய் ஈட்டி வந்தார்கள். அது ஒரு காலம்.ஆனால் இன்றைய காலகட்டத்தில் படைப்பாளர்கள் பல்வேறு விதமான டிஜிட்டல் தளங்களில் (Digital Platform)தங்களின் படைப்புகளை வெளியிடுகின்றனர். இதனால் முன்பைக் காட்டிலும் தற்போது குறிப்பிட்ட நேரத்தில் அதிக மக்களிடத்தில் தங்களின் படைப்புகள் மிக விரைவாகச் சென்று சேருகின்றது. இதனால் வருவாயும் அதிகரித்துள்ளது.

பெரும்பாலும் தங்களின் படைப்புகளை வீடியோ காட்சிகளாக உருவாக்கி அதனை இந்தத் தளங்களில் வெளியிடுகின்றனர். இதனால், பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது பார்வையாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் பெரும் நிறுவனங்கள் இந்தத் தளங்களில் விளம்பரங்கள் செய்கின்றனர். அவற்றிலிருந்து வரும் வருவாயின் ஒரு குறிப்பிட்ட பகுதியினை இந்த படைப்பாளர்களுக்கு வழங்குவதால் மிகப்பெரிய அளவில் வருவாய் ஈட்டி வருகின்றனர். எந்த அளவுக்கு வருவாய் ஈட்டுகிறார்கள் என்றால் வருமான வரித்துறை சோதனை செய்யும் அளவில் மற்ற துறைகளைக் காட்டிலும் வருவாய் மற்றும் லாபம் அதிகரித்துள்ளது.

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவின் படைப்பாற்றல் பொருளாதாரம் ஆண்டு ஒன்றுக்கு 33.7 சதவீதம் அளவிற்கு உயர்வதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வீடியோக்களை வெளியிடுவர்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு குறைந்தது 50 ஆயிரம் முதல் பல கோடிகள் வரை சம்பாதிக்கின்றார்கள். இது பணரீதியாகப் பலன் தருவது மட்டுமல்லாமல், கற்பனை வளத்தையும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியையும் அதிகரிக்க செய்கின்றது.

டிஜிட்டல் தளங்கள்

இன்றைய டிஜிட்டல் உலகில் நமது படைப்புகளை வெளியிடுவதற்கு பல்வேறு விதமான டிஜிட்டல் தளங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கட்டணங்களை படைப்பாளர்களுக்கு செலுத்துகின்றன. கூகுள் (Google) நிறுவனத்தின் யூடியூப்(Youtube), மெட்டா(Meta) நிறுவனத்தின் ஃபேஸ்புக் (Facebook) மற்றும் இன்ஸ்டாகிராம்(Instagram)மற்றும் இதேபோன்று இயங்கும் OTT(over-the-top) தளங்கள் போன்றவை படைப்பாளர்களுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை மற்றும் அந்த வீடியோக்களின் வகைகள் போன்றவை அடிப்படையில் வருவாயினை படைப்பாளர்களுக்கு அளிக்கின்றன. மேலும் இந்த டிஜிட்டல் தலங்களில் வெளியிடும் வீடியோக்கள் சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை சென்றடைவதும் நேற்று வரை சாதாரண ஆளாக இருந்த ஒரு நபரை இந்த டிஜிட்டல் தளங்கள் மிகப்பெரிய செல்வாக்குடைய நபராக காட்டுவதும் இதன் தனித்தன்மைகள் ஆகும்.

மேலும் நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிக் காட்டவும், யாருடைய தயவும் இல்லாமல் நமது திறமைகளை உலகத்திற்கு அறியச் செய்யவும் இத்தகைய தளங்கள் நமக்கு உதவுகின்றன. நமது வீடியோக்களில் உள்ள குறை நிறைகளை நாம் உடனடியாகத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நமது குறைகளை சரி செய்து கொள்ள முடியும். அதேபோல ஒரு வீடியோவில் எத்தனை பேர் பார்க்கின்றார்கள் எத்தனை பேர் நம்மைப் பின் தொடர்கின்றார்கள் என்பது போன்ற தகவல்கள் எந்த ஒளிவு மறைவு இன்றி அனைவரும் பார்த்துக் கொள்ளும்படி உள்ளது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

மக்களுக்கு எது போன்ற தகவல்கள் தேவைப்படுகின்றது, அதனை எவ்வாறு சொல்ல வேண்டும், நகைச்சுவையாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நகைச்சுவையாகவும், சாதாரணமாகச் சொல்ல வேண்டிய தகவலை சாதாரணமாகவும் என மக்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றால் போல வீடியோக்கள் பதிவிட வேண்டும். எனவே இதனால் தனிமனித வருமானமும் அதிகரிக்கிறது. அதனால் வரும் வரி வருவாயால் பொருளாதாரமும் உயர்கின்றது.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.