கற்றல் எளிது -13
திரு.நன்மாறன் திருநாவுக்கரசு
2021 –ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை பார்த்தவர்களுக்கு நம் நாட்டு வீரர் நீரஜ் சோப்ராவை நினைவில் இருக்கும். ஈட்டி எறிதலில் 87.58 மீட்டர் தூரம் வீசி தங்கம் வென்றவர். நம் நாட்டிற்கு பெருமை சேர்த்த தங்க மகன். ஆனால் இப்போது நாம் அவரைப் பற்றி பார்க்கப்போவதில்லை. அவரைப் போன்று ஈட்டி எறிதலில் சாம்பியனாக விளங்கிய மற்றொருவரைதான் பார்க்கப்போகிறோம். அது 2015-ஆம் வருடம். கென்ய நாட்டை சேர்ந்த ஜூலியஸ் யேகோ (Julius Yego) என்ற வீரர் உலக ஈட்டியெறிதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். அவர் எறிந்த தூரம் 92.72 மீட்டர்கள். யேகோ ஈட்டியை எறிந்த வேகத்தில் கீழே விழுந்துவிட்டார். பின்னர் எழுந்து நின்று தன் சாதனையை கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்துக் கொண்டாடினார். நாம் நீரஜ் சோப்ராவை தங்க மகன் என்று அழைத்தது போல யேகோவை உலகம் முழுவதும் ‘மிஸ்டர் யூடியூப்’ என்று அழைக்கின்றனர். அது ஏன்?
ஜூலியஸின் கதை நம்பிக்கையூட்டக்கூடியது. ஜூலியஸ் கென்யாவில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தினசரி மூன்று வேளை உணவுகூட அவரைப் பொறுத்தவரை ஆடம்பரம். சிறுவயதில் ஜூலியஸ் எதேச்சையாக டிவியில் ஈட்டியெறிதல் போட்டியை காண நேர்ந்தது. அப்போதிலிருந்து அந்த விளையாட்டின் மீது ஆர்வம் பற்றிக்கொண்டது.
தானும் ஒரு ஈட்டி எறிதல் வீரர் ஆக வேண்டும் என விரும்பினார். ஆனால் அவரது ஊரில் ஈட்டியெறிதல் பற்றி யாருக்கும் தெரியாது. அவரது நாட்டில் ஈட்டி எறிதலுக்கு முறையான பயிற்சி இடங்கள்கூட இல்லை. இதையெல்லாம் தாண்டி எறிந்து விளையாடுவதற்கு ஒரு ஈட்டிகூட கிடையாது.
ஆனால் இந்த தடைகளால் எல்லாம் ஜூலியஸை தடுக்க முடியவில்லை.
ஜூலியஸ் வீட்டின் அருகே இருந்த ஒரு மரத்தில் இருந்து கிளைகளை உடைத்து தனக்கான ஈட்டியை செய்துகொண்டார். பயிற்சி செய்வதற்கு அணிந்துகொள்ள நல்ல ஷூ இல்லை. ஒரு பழைய ஷூவை எடுத்து ஒட்டுப்போட்டு பயன்படுத்தினார். அவருக்கு மனதில் இருந்ததெல்லாம் ஒரே விஷயம்தான். எப்படியாவது விளையாட வேண்டும். எதைச் செய்தாவது சாதிக்க வேண்டும்.
ஜூலியஸ் தானாகவே பயிற்சியைத் தொடங்கினார். அவரது நாட்டின் வறண்ட நிலங்களில் தான் செய்த மர ஈட்டியை எறிந்து பயிற்சியை செய்தார். நாட்கள் சென்றன. கொஞ்சம் கொஞ்சமாக அந்த விளையாட்டு அவருக்குப் பிடிப்பட தொடங்கியது. பின் அவரது அடுத்தடுத்த முயற்சிகள் அவரை உலக சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு அழைத்து சென்றன. இறுதியாக அந்தப் போட்டியில் கலந்துகொண்டு தன்னை நிரூபித்து சாம்பியன் பட்டத்தை வென்று ஜூலியஸ் சாதித்துக் காட்டினார். அந்தப் போட்டியில் கலந்துகொள்ள உலகில் பல்வெறு மூலையில் இருந்து திறமையான வீரர்கள் வந்திருந்தனர். அவர்களை அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து தயார் படுத்தி அழைத்து வந்திருந்தது. இருப்பினும் அவர்களை ஜூலியஸால் எப்படி அடித்து வீழ்த்த முடிந்தது? அதை தான் இந்த பகுதியில் நாம் பார்க்கபோகிறோம்.
நினைவாற்றலுக்கு கடல் குதிரை
நினைவாற்றலுக்குக் கடல்குதிரை என்றவுடன் ஏதும் லேகியம் என்று நினைத்துவிட வெண்டாம். நாம் கற்கும் தகவல்களையும், நாம் அன்றாடம் சந்திக்கும் நிகழ்வுகளையும் நினைவில் வைத்துக்கொள்ள நம் மூளையின் முக்கியமான ஒரு பகுதி பங்காற்றுகிறது. அதன் பெயர் தான் ஹிப்போகேம்பஸ் (Hippocampus).
ஹிப்போகேம்பஸ் பார்ப்பதற்கு கடற்குதிரை போன்ற தோற்றத்தில் இருக்கும் என்பதால் அதற்கு அந்தப் பெயரையே வைத்துவிட்டனர். கிரேக்க மொழியில் ஹிப்போகேம்பஸ் என்றால் கடற்குதிரை என்று அர்த்தம்.
ஹிப்போகேம்பஸ், நம் மூளையில் அருகில் படத்தில் காட்டியிருப்பதை போல தான் அமைந்திருக்கும். நம் மூளையில் இரண்டு ஹிப்போகேம்பஸ்கள் உண்டு. ஒன்று இடது பக்கம். மற்றொன்று வலது பக்கம் இருக்கும்.
ஹிப்போகேம்பஸ் எவ்வாறு வேலை செய்கிறது?
பொதுவாக நாம் புதிதாக ஒரு விஷயத்தைக் கற்கும்போது ஹிப்போகேமஸ்ஸில் உள்ள நரம்பணுக்களில் தான் அந்தத் தகவல்கள் சேகரிக்கப்படும். பின் நாம் உறங்கும்போது, அந்தத் தகவல்கள் அனைத்தும் நமது மூளையில் வெளிப்புற அமைப்பில் இருக்கும் செரிபரல் கார்டெக்ஸ் (Cerebral Cortex) என்ற பகுதியில் இருக்கும் நரம்பணுக்களுக்கு இடமாற்றம் செய்யப்படும். இந்த செரிபரல் கார்டெக்ஸ் என்ற பகுதிதான் நமது நீண்ட கால நினைவாற்றல் அமைந்திருக்கும் இடம்.
ஒவ்வொரு இரவிலும் நாம் தூங்கும்போது இந்த ஹிப்போகேமஸில் அமைந்துள்ள நரம்பணுக்களில் சேகரிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் செரிபரல் கார்டெக்ஸுக்கு மாற்றப்பட்டவுடன் மீண்டும் ஹிப்போகேமஸில் உள்ள இடம் காலியாகிவிடும். அடுத்தநாள் நாம் கற்கும் புதிய தகவல்கள் மீண்டும் அங்கு சேகரிக்கப்படும். இங்கே தான் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். ஆழ்ந்த தூக்கம் நம்முடைய டெண்ட்றிக் ஸ்பைன்களை வளரச் செய்து புதிய சினாப்டிக் இணைப்புகளை உருவாக்குவதில் மட்டும் பங்காற்றவில்லை. நமது ஹிப்போமேம்பஸில் இருக்கும் தகவல்களைச் வேறு இடத்திற்கு மாற்றி புதிய தகவல்களைச் சேகரிப்பதற்கான இடத்தை உண்டாக்கும் வேலையையும் செய்கிறது.
ஞாபக மறதி எப்படி வருகிறது?
சிலருக்கு விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டுவிட்டால் ஞாபக மறதி நோய் வந்துவிடும். அவர்களால் ஒரு விஷயத்தை சில நிமிடங்களுக்கு மேல் நினைவு வைத்துக்கொள்ள முடியாது. இதற்குக் காரணம் அவர்களுடைய ஹிப்போகேம்பஸ் சேதம் அடைவதுதான். இதனால் நினைவுகள் அவர்களது மூளையில் தங்காது. ஆனால் அவர்களுக்கு ஹிப்போகேம்பஸ் சேதம் அடைவதற்கு முன்னால் நடைபெற்ற பழைய விஷயங்கள் எல்லாம் அப்படியே நினைவில் இருக்கும். ஏனென்றால் நாம் பார்த்தது போல ஹிப்போகேம்பஸில் இருக்கும் தகவல்கள் தூக்கத்தின்போது செரிபரல் கார்டெக்ஸ் என்ற பகுதிக்கு மாற்றப்பட்டுவிடுகிறது இல்லையா? அதனால் அவர்களுக்கு பழைய நினைவுகள் மட்டும் நீண்ட கால நினைவாற்றலில் இருக்கும். புதிய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள முடியாது.
நீண்ட கால நியாபக சக்திக்கு உதவும் ஹிப்போகேமஸ்
ஹிப்போகேம்பஸ் நமது நினைவாற்றலுக்கு மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. ஏனென்றால் நமது மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸில் தினம் தினம் புதிய நரம்பணுக்கள் பிறந்தபடியே இருக்கின்றன. நாம் புதியதாக எதையும் கற்கவில்லை என்றால் ஹிப்போகேம்பஸில் உருவாகியிருக்கும் இந்தப் புதிய நரம்பணுக்கள் தானாகவே மறைந்துவிடும். நாம் தினமும் புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருந்தோம் என்றால் அந்த நரம்பணுக்கள் நீடித்து வளர்ந்து நாம் கற்கும் விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள உதவும். அதுமட்டும் இல்லாமல் நமது ஹிப்போகேம்பஸில் ஏற்கனவே இருக்கும் பழைய நரம்பணுக்களும், தினம் தினம் உருவாகும் புதிய நரம்பணுக்களும் சைனாப்ஸ் மூலம் இணைந்து புதிய, வலுவான மூளை இணைப்புகளாக உருவாக தொடங்கும்.
நாம் தூங்கும்போது ஹிப்போகேம்பஸில் உருவாகும் புதிய மூளை இணைப்புகள் ஏற்கனவே செரிபரல் கார்டெக்ஸில் அமைந்திருக்கும் நீண்ட கால நினைவாற்றில் உள்ள மூளை இணைப்புகளையும் வலுவானதாக்க உதவும். இதனால் நாம் கற்கும் தகவல்களை நீண்ட காலம் நம்மால் நினைவில் வைத்திருக்க முடியும்.
சரி, இந்த ஹிப்போகேம்பஸில் வளரும் புதிய நரம்பணுக்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? சிம்பிள். உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
மூளைக்கு உணவு தரும் உடற்பயிற்சி
நாம் உடற்பயிற்சி செய்யும்போது நமது மூளை BDNF (Brain-derived Neurotropic factor) என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த BDNF என்ற வேதிப்பொருள் நமது மூளையில் உருவாகும் புதிய நரம்பணுக்களை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. மேலும் இந்த வேதிப்பொருள் நம் மூளையில் உள்ள நரம்பணுக்கள் காயமடையாமல் பாதுகாக்கிறது. ஒவ்வொரு நரம்பணுக்களும் இணையும் போது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் முறையாகவும், வலுவாகவும் இணைய உதவுகிறது.
இந்த BDNF என்ற வேதிப்பொருள் நமது மூளையில் உருவாகும் நரம்பணுக்களுக்கு உணவு போன்றது. இதனால் நரம்பணுக்களில் வலுவான டெண்ட்றிக் ஸ்பைன்களும், சினாப்ஸ்களும் உருவாகும். மேலும் அவை பெரிதாக வளர்ச்சி அடையவும் இந்த வேதிப்பொருள் உதவுகிறது.
நாம் மண்ணில் போடும் உரங்கள் செடிகள் வளர்வதற்கு எவ்வாறு உதவுகின்றதோ, அதேபோல தான் BDNF என்ற வேதிப்பொருள் நரம்பணுக்கள் ஆரோக்கியமாக வளருவதற்கு உதவுகிறது. நாம் ஏற்கனவே பார்த்தது போல உடற்பயிற்சி மூலம் தான் இந்த BDNF-ஐ உருவாக்க முடியும். இதனால் உடற்பயிற்சி, நம் உடலை மட்டும் ஆரோக்கியமாக்குவதில்லை, மனதையும், மூளையையும் ஆரோக்கியமாக்குகிறது.
மூளைக்கு மருந்தாகும் உணவு
நாம் உட்கொள்ளும் உணவும் நம் சிந்தனைத் திறனை வளர்க்க உதவுமா? உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள். நாம் சரியான உணவை உட்கொள்ளும்போது நமது சிந்தனை, கற்றல், நினைவாற்றல் ஆகியவை வலுவாகும் என அறிவியல் கூறுகிறது. நாம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்துகொண்டு, ஆரோக்கியமான உணவையும் உட்கொண்டு வந்தோம் என்றால் நமது உடல், குறிப்பாக நமது மூளை மிக ஆரோக்கியமாக இருக்கும். நம் உணவும், உடற்பயிற்சியும் நமது மூளை செயல்பட்டையே சக்திவாய்ந்ததாக மாற்றும்.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.