ஐந்து ஆறைவிடப் பெரியது 20


திரு.முகில்

‘Katsaridaphobia’ என்ற கடினமான வார்த்தைக்குப் பொருள் தெரிந்து கொள்வதுகூட சிலருக்குப் பயமாகவோ, அருவருப்பாகவோ இருக்கலாம். ‘‘கரப்பான் பூச்சி மீதான அதீத பயம்’’ என்பதே அதற்கான அர்த்தம். அந்த போபியா உள்ளோர் தயவுசெய்து இந்தக் கட்டுரையை வாசிப்பதைத் தவிர்க்கவும். நன்றி.

இந்த உலகமே எங்களை எதிர்த்தாலும், எங்களைக் கொல்றதுக்கும் ஒழிக்கிறதுக்கும் என்னென்னமோ வழிமுறைகளைக் கண்டுபிடிச்சு சண்டை செஞ்சாலும், நாங்களா எங்களை அழிச்சுக்குற வரை எவனாலும் எங்கேயும் எப்பவும் எங்க இனத்தை ஜெயிக்கவே முடியாது – நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு மாஸ் பன்ச் டயலாக் பேசத் தகுதி கொண்ட உலகின் ஒரே உயிரினம் கரப்பான் பூச்சி மட்டுமே. டைனோசருக்கும் மூத்தக்குடி. இந்த பூமியை ஆதிக்கம் செய்த எத்தனையோ உயிரினங்கள், ஒட்டுமொத்தமாகக் காணாமல் போயிருக்கின்றன. பூமியில் எந்த மாதிரியான பேரழிவு நேர்ந்தாலும் அழியவே அழியாதது, ஒன் அன்ட் ஒன்லி கரப்பான்பூச்சி வகையறாதான்!

ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இந்தப் பூவுலகில் வாழ்வதாகக் கணக்கிட்டிருக்கிறார்கள். இன்னும் கண்டறியப்படாத கரப்பான்பூச்சிகளும் உலகில் நிச்சயம் இருக்கும். இவை எந்தவிதமான தட்பவெப்பச் சூழ்நிலைகளிலும் வாழக்கூடியவை. பகல் நேரங்களில் மறைவாக இருக்கும். இரவில் வெளிவந்து இரை தேடும். எப்போதும் நைட் ட்யூட்டிதான். ஒரு நாளைக்கு சுமார் 18 மணி நேர உறக்கம். சுகவாசி!

காட்டில் வாழும் கரப்பான் பூச்சிகள், பழைய இலைக் குவியல்களிலும், மரத்தின் தண்டுகளிலும், உயரமான மரக்கிளைகளிலும் வாழ்கின்றன. மனிதனோடு சேர்ந்து வாழும் கரப்பான் பூச்சிகள், சுத்தம் செய்யப்படாத சமையலறை, குளியலறை, கழிவறை, அழுக்குகள் நிறைந்த இடங்களில் குடித்தனம் நடத்துகின்றன. அது இது எது கிடைத்தாலும் உண்ணும். அனைத்துண்ணி. ஆங்கிலத்தில் குறிப்பிடுவதென்றால் Omnivores. இவை தம் உடல் வெப்பநிலைக்கேற்ப உணவுகளைச் சாப்பிடுகின்றன. அப்படிச் சாப்பிடும் முன்பாக உணவைச் சிறு சிறு துண்டுகளாக்கிய பின்னரே சாப்பிட ஆரம்பிக்கின்றன. நொறுங்கத் தின்றால் நூறு வயது. அது மனிதனுக்கு. அமெரிக்க இன ஆண் கரப்பான் பூச்சியின் ஆயுட்காலம் சுமார் ஓர் ஆண்டு மட்டுமே. ஜெர்மன் இன ஆண் கரப்பான் பூச்சி சுமார் 100 நாள்கள் வாழும். ஓரியண்டல் இன ஆண் கரப்பானின் வாழ்நாள்கள் சுமார் 160. இந்த எல்லா இனங்களிலுமே பெண் கரப்பான் பூச்சிகள் ஆண்களைவிடக் கூடுதல் காலம் வாழ்கின்றன. பெருமைமிகு பெண்ணாதிக்கம்!

சரி, குறைந்த காலமே வாழும் கரப்பான் பூச்சி, மில்லியன் கணக்கான ஆண்டுகளாக, தொடர்ந்து உலகில் நிலைத்திருக்கக் காரணம் என்ன? பிறந்த சில வாரங்களிலேயே கரப்பான் பூச்சிகள் இனப்பெருக்கத்துக்குத் தயாராகி விடுகின்றன. உதாரணத்துக்கு ஓர் இந்தியன் இன பெண் கரப்பான் பூச்சியானது, தன் வாழ்நாளில் 13 முறை முட்டைகள் நிரம்பிய ஓடுகளை (Oothecae) இடுகின்றன. ஒவ்வொர் ஓட்டிலும் 16 முட்டைகள் வரை இருக்கும். அவற்றில் தக்கன பிழைத்து அடுத்த தலைமுறை கரப்பான் பூச்சிகளாக வெளிவருகின்றன. இந்த விதத்தில் பார்த்தால் ஓர் இந்திய இன பெண் கரப்பான் பூச்சி தன் வாழ்நாளில் சுமார் 200 வாரிசுகளை உருவாக்குகிறது. ஓர் அமெரிக்க இன பெண் கரப்பான் பூச்சி தன் வாழ்நாளில் அதிகபட்சம் 300 வாரிசுகள் வரை உருவாக்குகிறது.

ஆக, வருடந்தோறும் அடுத்தடுத்தடுத்தடுத்தடுத்தத் தலைமுறைகளை கரப்பான் பூச்சிகள் உருவாக்கி, பெருக்கிக் கொண்டே செல்கின்றன. அதுமட்டுமின்றி, நோய் எதிர்ப்புச் சக்தியையும் அபரிமிதமாகப் பெருக்கிக் கொள்கின்றன. அந்தச் சக்தியானது மரபணுக்கள் வழியே அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகின்றன. ஆக, ‘எங்க இனத்துக்கு அழிவே இல்லடா!’ என்ற ஆணவத்துடன் கரப்பான் பூச்சிகள் இப்புவியில் பெருகிக் கொண்டே செல்கின்றன. இப்படியே சென்றால், ஒரு கட்டத்தில் உலகமே கரப்பான் பூச்சிகளால் நிரம்பியிருக்கும் என்றொரு தியரியும் கற்பனை செய்யப்படுவதுண்டு. அது நிஜமாவதற்கும் வாய்ப்பு உண்டு.

உலகில் ‘பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்’ எல்லாம் கரப்பான் பூச்சியையே பெரிதும் நம்பிப் பிழைத்திருக்கின்றன. எவ்வளவு வீரியமான வேதி மருந்தைப் பிரயோகித்தாலும் ‘Better Luck Next Time’ என்று கரப்பான் பூச்சிகள், மனிதனை பாவமாகப் பார்த்துவிட்டு, உடலை சிலுப்பிக் கொண்டு நகர்கின்றன. அமெரிக்காவின் பர்டூ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் ஜெர்மன் கரப்பான் பூச்சிகள், பல்வேறு தலைமுறைகளாகப் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான, கடுமையான எதிர்ப்பு சக்தியைப் பெற்றிருப்பதையும், அடுத்தடுத்த தலைமுறை கரப்பான் பூச்சிகளுக்கு இந்த எதிர்ப்பு சக்தியானது பல மடங்கு பெருகி வருவதையும் கண்டறிந்திருக்கிறார்கள். ஆக, புராதன பூச்சிக்கொல்லிகளும், வீரியமிக்க வேதிப்பொருள்களையும் தெளித்தால், ‘பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்’ என்று சாரலில் நனைவதுபோல அசால்ட்டாகக் கடந்துவிடுகின்றன கரப்பான் பூச்சிகள்.

‘வருங்காலத்தில் வேதிப்பொருள்களைக் கொண்டு கரப்பான் பூச்சிகளைக் கொல்வது இயலாத காரியமாகிவிடும். அதைவிட பயங்கரமான ஒன்று தேவைப்படும்’ என்று ஆய்வாளர் மைக்கேல் ஸ்கார்ஃப் தெரிவித்திருக்கிறார். பயந்து கிடக்கிறது மனித குலம். காரணம், மனிதர்களுக்கு நோய் பரப்பும் சேவையைச் செய்வதிலும் கரப்பான் பூச்சி பிரதான இடம் வகிக்கிறது. ஆனால், எவ்வளவு அசுத்தமான இடத்தில் வாழ்ந்தாலும் கரப்பான்களுக்கு மட்டும் நோய்த்தொற்று ஏற்படுவதில்லை. இந்த இடத்தில் சூப்பர் ஸ்டார் கரப்பான் சொல்லும் பன்ச் : கிருமியெல்லாம் என்னை எதுவும் பண்ண முடியாது. ஏன்னா, நானே நடமாடும் கிருமிடா! (அவசியக் குறிப்பு : கரப்பான் பூச்சிகளில் சில இனங்கள் மட்டுமே நோய் பரப்பும் தன்மை கொண்டவை.)

பாத்ரூமுக்குள் நுழையும்போதெல்லாம் கரப்பான் பூச்சி இருக்கிறதா, இல்லையா என்று பார்த்துப் பார்த்துப் பயந்தபடியே நுழைபவர்கள் இருக்கிறார்கள். கரப்பான் பூச்சியைக் கண்டால் ஹைடெசிபலில் கத்திக் கூச்சலிடுபவர்கள் இருக்கிறார்கள். கரப்பான் பூச்சி குறித்த பாடம் எடுக்க வேண்டியது இருந்ததால், தன் ஆசிரியர் பணியையே ஒருவர் விட்டிருக்கிறார். கரப்பான் பூச்சியைப் பார்க்கும்போதெல்லாம் ரத்த அழுத்தம் அதிகமாவது, கை, கால்கள் நடுங்குவது, பலத்த மூச்சு வாங்குவது, அதிகம் வியர்ப்பது, உறைந்து, செயலிழந்து நிற்பது, அதிகபட்சமாக நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுவது வரை பாதிக்கப்படுபவர்களும் இருக்கிறார். சிறு வயதிலேயே கரப்பான் பூச்சி மீதான ஆழமான பயம் மனத்தில் பதிந்துவிட்டால், அந்த மனிதர்களின் வாழ்க்கை முழுக்க இந்தச் சங்கடங்களை அனுபவிக்க நேரிடும். அதே மனிதர்கள் வாழும் உலகில்தான் ‘காக்ரோச் அறுபத்தைந்து’ கொறிப்பவர்களும் வாழ்கிறார்கள். எனில், அவர்களுக்கு கிருமி பயம் இல்லையா?

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.