வெற்றியோடு விளையாடு! – 25
டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்
குழந்தைகளின் அறிவைத் தூண்டும்போது அகமும் புறமும் சேர்ந்தே வளர வேண்டும், அப்படி அகமும் புறமும் சேர்ந்து வளர்ச்சி அடைய வேண்டுமென்றால் கல்வித் தூண்டல் மகிழ்ச்சி மிக்கதாக இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியைக் கொடுப்பது இசை மட்டுமே, அதனால்தான் பாடங்களைக் கற்பிக்க நான் தேர்ந்தெடுத்த மொழி இசை’ என்று ராகத்தோடு பேசுகிறார் ஆசிரியர் குருங்குளம் முத்துராஜா.
மாலத்தீவு பள்ளிக் கல்வித்துறையில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த பெரிய அனுபவத்தோடு தமிழகக் பள்ளிக்கல்வித் துறையில் 8 ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார். தொடர்ந்து தற்போது திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வராக இருக்கிறார் குருங்குளம் முத்துராஜா.
‘பள்ளிக் கல்வித் துறையில் என்னுடைய பணி என்பது என்னுடைய மாணவர்களுக்கு மட்டுமல்ல. தமிழக எல்லையைத் தாண்டி, இந்திய எல்லையை தாண்டி சர்வதேச அளவிலான மாணவர்களுக்கு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம், அதற்காகத்தான் உழைத்து வருகிறேன்’ என்கிறார்.
எவ்வளவு பெரிய பாடத்தையும் இசை வழியாகச் சொல்லிவிடுவதுதான் இவரது பெரிய பலம். ஒரு பாடத்தைப் பாடலாக எழுதி இனிய இசையாக மாற்றி அதனை ஆல்பமாக வெளியிட்டு விடுவார்.
தமிழகத்தின் மாவட்டங்களைக் கூறும் ‘வங்கக்கடலில் முகம் பார்த்து சிங்காரிக்கும் தமிழ் பெண்ணே’ என்ற பாடல் யூடிபில் பயங்கர ஹிட் அடித்தது. தமிழகத்தின் இரண்டாவது தமிழ்த்தாய் வாழ்த்து என்றே அந்தப் பாடலைச் சொல்லலாம். அந்த அளவுக்கு தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர்களுக்கான அனைத்துப் பயிற்சியிலும் இந்தப் பாடல் இப்போதும் ஒலிக்கிறது.
குழந்தைகளுக்கு பாடல் மூலம் பாடங்கள் சொல்லிக் கொடுப்பதற்காக பல்வேறு புத்தகங்களையும் இவர் எழுதி இருக்கிறார். அதில் ‘பாட்டும் பாடமும்’ என்ற புத்தகம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மண்டல அளவில் நடைபெற்ற திருச்சி மாநாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகள் திரு. இளம் பகவத், மற்றும் திரு. சுதன் ஆகியோரால் இந்தப் புத்தகம் வெளியிடப்பட்டு கல்வியாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை வாசிப்பு இயக்கத்திற்காக வெளியிட்டு இருக்கக்கூடிய ‘மழைப்பாட்டு’ ‘பம்பரம்’ ஆகிய புத்தகங்களிலும் இவரது பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 2024 – ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இவர் எழுதி வெளியிட்ட ‘காட்டுக்குள்ளே ஒரு புத்தகம்’ என்ற நூல் மாணவர்களின் கோடை வாசிப்பிற்காக இந்து தமிழ் திசை நாளிதழால் பரிந்துரை செய்யப்பட்டது.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.