ஆளப் பிறந்தோம் – 23


திரு.இள.தினேஷ் பகத்

ன் இனிய சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம்.

போட்டித் தேர்வு வகுப்பறைகளில் நான் சந்திக்கும் பல மாணவர்கள் சொல்வது “எனக்குப் பல பிரச்சினைகள், அதனால் தான் என்னால் தேர்ச்சி பெறமுடியவில்ல’’ என்பதாகும். ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள். பிரச்சினைகள் அதிகம் இருப்பவர்களால்தான் அதிகம் சாதிக்க முடியும்.

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு கடின உழைப்பு என்ற நேர்ப்பாதையைத் தவிர வேறு எந்த குறுக்கு வழியும் கிடையாது. எனவே, எதிர்வரும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப் பணிகளில் அமர வாழ்த்துகிறேன்.

இந்த தொடரில் கடலோரக் காவல்படை அதிகாரி (Assistant Commendent) பணிக்கான தேர்வுப் பற்றிப் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன்னர் பழங்குடியினர் பிரிவில் நீதிபதியாக நியமனம் பெற்றிருக்கும் மதி அவர்களின் கதையைப் பார்க்கலாம்.

திருவண்ணாமலையில் உள்ள காப்புக்காடு எல்லையில் உள்ள துவிஞ்சிக்குப்பம் என்ற ஊரில் காளியப்பன் (ம) மல்லிகா தம்பதியரின் மூத்த மகளாகப் பிறந்தார்.

மதி தந்தைக்கு ஜவ்வாது மலை அடிவாரத்தில் விவசாய நிலம் இருந்திருக்கிறது. குப்பம் நத்தம் அணை கட்டுவதற்காக அவரின் நிலம் கையகப்படுத்தப்பட்டதால் மதி குழந்தையாக இருக்கும் போதே அவரது தாயார் மல்லிகாவின் சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார்கள். அவரது பெற்றோர் பிழைப்பிற்காக ஓட்டலில் வேலைப் பார்த்துக் கொண்டே தங்களது குழந்தைகளைப் படிக்க வைத்துள்ளனர்.

மதி ஏலகிரி மலையில் உள்ள ஒரு பள்ளியில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடித்துள்ளார். சட்டம் படிக்க விரும்பிய அவர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சேர்ந்து 5 வருடம் தமிழ்வழிக் கல்வியில் சட்டம் பயின்று வழக்கறிஞர் பட்டம் பெற்றார்.

கல்லூரியில் படிக்கும் போதே மதிக்கு வெங்கட்ராமன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2023 – ஆம் ஆண்டுக்கான TNPSC நடத்திய நீதித் துறையியல் குடியியல் நடுவர் (Civil Judge) தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார், அந்தச் சமயத்தில் மதி கருவுற்றிருந்தார்.

போட்டித் தேர்வு நடக்கும் நாளும், பிரசவம் நடக்கும் என்று மருத்துவர் முன்கூட்டியே கணித்த நாளும் ஒரே தேதியாக இருந்தது. இந்தப் பதற்றம் காரணமாக மதி கவலையில் இருக்க அதிர்ஷ்டவசமாக போட்டித் தேர்வு நாளுக்கு இரண்டு நாள் முன்னரே பிரசவமும் நடைபெற்றது.

பிரசவத்துக்குப் பிறகான இரத்தப்போக்கு கூட மதிக்கு நிற்கவில்லை. ஆனாலும் மதி TNPSC தேர்வு எழுதப் போக வேண்டும் என மருத்துவர்களிடம் கூற மருத்துவர்கள் அலுங்காமல், குலுங்காமல் காரில் பயணிக்குமாறு தெரிவித்தனர். தன்னுடைய அத்தனை கஷ்டங்களையும் பொருத்துக் கொண்டு தேர்வு எழுதிய மதி 23 – வயதிலேயே தொடக்க நிலை நீதிபதியாகப் பணியில் சேர்ந்துள்ளார்.

மிகவும் கடுமையான பிரசவ வலி தரும் வேதனையையும் தாண்டி சிவில் நீதிபதியான மதியின் மன உறுதியினை நமது ‘ஆளுமைச்சிற்பி’ இதழ் பாராட்டி மகிழ்கிறது.

இந்தியக் கடலோரக் காவல் படையில் அதிகாரியாக (Assistant Commendent) ஆக 4 விதமான பிரிவுகள் உள்ளது. பொதுப்பணி (General Duty), பைலட், சட்டப்பணி, தொழில்நுட்ப பணி இந்த 4 பிரிவுகளிலும் தேர்வு அறிவிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள (www.joinindiancoastguard.gov.in) என்ற இணைய தளத்தைத் தொடர்பு கொள்ளவும்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.