ஐந்து ஆறைவிடப் பெரியது 18
திரு.முகில்
ரோமானிய வரலாற்றாளர் பிளினிக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு இந்தக் கட்டுரையை ஆரம்பிப்பதுதான் நெருப்புக்கோழியாருக்கு நாம் செய்யும் உரிய பிராயச்சித்தமாக இருக்க முடியும்.
‘நெருப்புக்கோழியானது ஏதாவது பிரச்சினை என்றால் பயந்து, தன் தலையை மட்டும் மணலுக்குள் புதைத்துக் கொள்ளும். ஆனால், அதன் உடல் அப்பட்டமாக வெளியே தெரியும்’ என்று கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த பிளினி (Pliny the elder) என்ற ரோமானிய வரலாற்றாளர் தனது The Natural History நூலில் சொல்லியிருக்கிறார்.
அந்தப் புத்தகம் பொக்கிஷம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. எகிப்தில் உலவியபோது அவர் நிச்சயம் நெருப்புக்கோழியைக் கண்டு ரசித்திருக்கலாம். அதன் செய்கைகளை, இயல்புகளைக் கண்டு இதை எழுதியிருக்கலாம். துளி அரசியல் கலந்துவிட்டார். அதாவது அவர் காலத்தில் வாழ்ந்த யாரோ சிலர், பிரச்சினையை எதிர்கொள்ளத் திராணி இன்றி மறைந்து கொண்டதை, நெருப்புக்கோழி தன் தலையை மணலுக்குள் புதைப்பதுபோல ஒளிந்து கொள்கிறார்கள் என்று அர்த்தம் திரிந்துவருவதுபோலச் சித்தரித்துவிட்டார். அந்தப்பழி அப்பாவி நெருப்புக்கோழி மீது இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்கிறது.
நெருப்புக்கோழி அவ்வப்போது தலையைத் தரைக்குள் புதைப்பது உண்மைதானே. அப்புறம் என்ன?
இனப்பெருக்கக் காலத்தில் ஆண் நெருப்புக் கோழி குழிகளைத் தோண்டுகிறது. அந்தக் குழியில்தான் பெண் நெருப்புக்கோழி முட்டைகள் இடுகிறது. தாக்க வரும் எதிரிகளின் கண்களுக்கு முட்டைகள் தெரியாமல் இருக்கத்தான் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு. பகல் முழுக்க பெண் நெருப்புக்கோழி அடைகாக்கும். இரவு நேரப் பணி ஆண் நெருப்புக்கோழிக்கானது. அடைகாக்கும் நெருப்புக் கோழியானது அவ்வப்போது தலையால் முட்டைகளைத் திருப்பி வைக்கும். அதைத் தூரத்திலிருந்து பார்த்தால், அவை தலையை மண்ணுக்குள் விட்டிருப்பது போலத் தோன்றும்.
மனிதனின் காட்சிப்பிழை. அதைத்தான் நெருப்புக்கோழி பிரச்சினைக்குப் பயந்து மண்ணுள் தலையைப் புதைத்துக் கொள்கிறது என்று காலம் காலமாகப் பரப்பிக் கொண்டிருக்கிறோம். பிளினி தி எல்டருக்கு நெருப்புக்கோழி நலவாழ்வுச் சங்கம் சார்பாகக் கடும் கண்டனங்கள்.
தீக்கோழி அல்லது நெருப்புக்கோழி. இதற்கு ஏன் இப்படி ஒரு பெயர் வந்தது? இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கக் கண்டம். பூமத்திய ரேகையை ஒட்டிய, அரைப் பாலைவனப் பிரதேசங்களில் இவை அதிக அளவில் காணப்படுகின்றன.
ஒட்டகத்தைப் போல் அதிக வெப்பத்தைச் சமாளிக்கக் கூடியவையாகவும், தண்ணீர் இல்லா சூழலை தாக்குப்பிடிக்கக் கூடியவையாகவும் இருக்கின்றன. நெருப்புபோல வெயில் தகிக்கும் பிரதேசங்களிலும் நிலைத்து வாழும் உயிரினம் என்ற பொருளில் ‘நெருப்புக்கோழி’ என்ற பெயர் தமிழில் நிலைத்துவிட்டது. மற்றபடி, இந்த அப்பாவி ஜீவனானது ஒருபோதும் வாயிலிருந்து டிராகன்போல நெருப்பைக் கக்கியதில்லை.
Strouthion என்பது நெருப்புக்கோழிக்கான பழைய கிரேக்கப் பெயர். அதன் பொருள், மிகப்பெரிய குருவி. அந்த வார்த்தை பின்பு Struthio என்று லத்தீனில் மருவி, Ostrich என்று ஆங்கிலத்தில் நிலைபெற்றது. ஒட்டகத்தைப் போன்ற தோற்றமுடைய என்னும் பொருள் வரும்படியே, இவற்றின் விலங்கியல் பெயரை ஸ்ரூதியோ கேமெலஸ் (Sruthio Camelus) என்று வைத்துள்ளனர்.
நெருப்புக்கோழிகளின் மெனு என்ன? இலைகள், விதைகள், தானியங்கள், மொட்டுக்கள், பூக்கள் போன்றவற்றை விரும்பி தினமும் உண்கின்றன. சில நேரங்களில் பல்லிகள், வெட்டுக்கிளிகள், சிறிய பூச்சிகளைச் சுவை பார்க்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் பிற விலங்குகள் வேட்டையாடி விட்டுச் சென்ற மாமிசத்தையும் உண்கின்றன. அவற்றுக்குப் பற்கள் கிடையாது என்பதால் சிறு கற்களையும் உணவோடு விழுங்குகின்றன. உணவு அரைபடுவதற்காக.
பூமியில் தற்போது வாழும் மிகப்பெரிய பறவை நெருப்புக்கோழிதான். சுமார் இரண்டரை மீட்டர் உயரம். நீண்ட வலிமையான கால்கள். வளைந்த நீளமான கழுத்து. பெரிய கண்கள். ஆனால், அவ்வளவு அகலமான இறக்கைகள் இருந்தும் பறக்க முடியாது. விநோதமான உயிரினமாகத் தோன்றுகிறதல்லவா. என் விநோதங்களே எனது பலம். அவையே எனது தனித்தன்மை என்று சொல்லாமல் சொல்கிறது நெருப்புக்கோழி. பசுமையான நிலத்திலிருந்து கடும் வறட்சியான பாலைவனத்தில் கொண்டு போய் போட்டாலும் சரி. அது அந்தச் சூழலுக்கேற்ப தன்னை உடனே மாற்றிக் கொள்ளும். அங்கே நிலைத்து வாழ என்ன கிடைக்கிறது என்று தேடலை ஆரம்பிக்கும். எல்லோரும் தெரிந்துகொள்ள வேண்டிய Survival Theory.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதற்கான ஸ்பெல்லிங்கூட நெருப்புக்கோழிக்குத் தெரியாது. ஆனால், அதன் பலன் தெளிவாகத் தெரியும். நெருப்புக்கோழிகள் கூட்டமாக வாழ்வதையே விரும்புகின்றன. அதுவே தங்களுக்குப் பாதுகாப்பு என்பதை உணர்ந்திருக்கின்றன. ஓர் ஆண் நெருப்புக்கோழி உண்டாக்கிய குழியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண் நெருப்புக்கோழிகள்கூட முட்டைகள் இடுகின்றன. எல்லாம் சேர்ந்து முட்டைகளை ஷிஃப்ட் போட்டுப் பாதுகாக்கின்றன. எதிரிகள் வந்தால்… நெருப்புடா நெருங்குடா பார்ப்போம்.
நெருப்புக்கோழி முட்டைகளைப் பாதுகாக்க ஏன் இவ்வளவு மெனக்கிடுகிறது? தற்போதைய உலகத்தில் வாழும் ஜீவராசிகளிலேயே மிகப்பெரிய முட்டையிடுவது நெருப்புக்கோழிதான். அவ்வளவு பெரிய முட்டைகள் மீது மனிதனுக்கு அல்ப ஆர்வம். நெருப்புக்கோழி முட்டையிடும் இடத்தைக் கண்டுபிடிப்பது, அதன் பாதுகாப்பு வளையத்தை மீறி அந்த முட்டைகளைத் திருடுவது என்று சில்லறைத்தனமான விஷயங்களைப் பல நூற்றாண்டுகளாகவே செய்து வந்திருக்கிறான். தவிர, அந்த முட்டைகள் அதிகம் சத்துக்கள் கொண்டவை.
ஒரு வரலாற்றுச் சம்பவத்தைப் பார்த்துவிடுவோம். லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பழைமையான சில நெருப்புக்கோழி முட்டைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. அவை இத்தாலியிருந்து கொண்டு வரப்பட்டவை. ஐரோப்பியக் கண்டத்துக்கும் நெருப்புக்கோழிக்கும் எந்தவிதத் தொடர்பும் கிடையாதே. எனில், அந்த முட்டைகள் எப்படி அங்கே வந்திருக்கும் என்று ஆய்வாளர்கள் யோசித்தனர். பின்பு ஆராய்ந்து அதற்கான விடையைக் கண்டறிந்தனர்.
5000 – ஆண்டுகளுக்கு முன்பே, வெண்கல மற்றும் இரும்பு யுகங்களில் ஐரோப்பா, மத்தியத் தரைக்கடல் மற்றும் வட ஆப்பிரிக்கா முழுவதும் மக்கள் நெருப்புக்கோழி முட்டைகளை வர்த்தகம் செய்திருக்கிறார்கள். அதாவது பறவையினங்களிலேயே பெரிய கண்களை உடையது நெருப்புக்கோழி. அம்புட்டுப் பெரிய கண்களில் மண்ணைத் தூவி அதன் முட்டைகளைத் திருடி எடுத்து வந்து சாப்பிட்டிருக்கிறார்கள்.
அல்லது அதில் ஓவியம் வரைந்தோ, அதை உடையாமல் நுட்பமாகச் செதுக்கி அலங்காரப் பொருளாக மாற்றியோ விற்றிருக்கிறார்கள். செல்வந்தர்கள் இறந்து போனால், அவர்களது உடலோடு அலங்கரிக்கப்பட்ட நெருப்புக்கோழி முட்டைகளையும் சேர்த்துப் புதைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது என்கிறார் இங்கிலாந்து பிரிஸ்டோல் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த ஆய்வாளர் டாமர் ஹோடொஸ். லண்டன் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டிருப்பவை, இத்தாலியில் ஒரு கல்லறையில் கண்டெடுக்கப்பட்டவையே. மத்தியத் தரைக்கடல் வணிக வழியிலேயே அந்த முட்டைகள் வந்திருக்கக் கூடுமென்று கருதப்படுகிறது.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.