சிந்தித்தார்கள்! வென்றார்கள்! – 10

‘ஆளுமைச் சிற்பி’ ஆசிரியர் டாக்டர் மெ.ஞானசேகர்

ந்த முதியவர் அசாதாரணமான ஒன்றை முன்வைத்து வழக்குத் தொடர்ந்திருக்கிறார். பல கோடி ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்பட்ட இறால் பண்ணைகளை ஒரேயடியாக மூடச்சொல்லி பத்து ரூபாய் ஸ்டாம்பு பேப்பரில் வழக்குத் தொடுத்துள்ளார். புவி முழுவதும் தன் கரங்களைப் பரப்பியுள்ள உலக வங்கியையும், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயத் துறையையும் தனி ஒரு நபராக, எண்பத்து ஐந்து வயது இளைஞராக எதிர்த்து நிற்கிறார். அவர் யாருக்காகப் போராடுகின்றாரோ, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய அரசாங்கம் கூட அவருக்கு எதிராகவே களத்தில் நின்று ெகாண்டிருக்கிறது. கோவர்த்தனகிரியைக் கண்ணன் தன் பிஞ்சுக் கரங்களால் தூக்கி நிறுத்தியது போல் இந்த வயதானவர் மலை முன்னால் நின்று கொண்டிருக்கிறார். கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு கையில் ஒற்றைச் சிலம்புடன் நீதிகேட்டுப் போராடிய கண்ணகி போல் இவர் தனி ஒருவராக நின்று கொண்டிருக்கிறார்.

ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்குக் கட்டப்படும் சமாதி என்பதை உலகிற்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ‘ஏன் இந்தப் பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்…?’ என்று ‘சுதந்திரத்தின் நிறம்’ என்ற நூலை ஆங்கிலத்தில் பதிப்பித்த டேவிட் ஹெச். ஆல்பர்ட் என்பவர் முன்னுரை தருகிறார்.

இப்படி வாழ்க்கை முழுவதும் கடும் போராட்டங்களையும், அதன் மூலம் வெற்றிகளையும் பெற்று ஒடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றிய தீபச் சுடர்கள்தான் ஜெகந்நாதன் – கிருஷ்ணம்மாள் தம்பதியர்.

ஜெகந்நாதன் என்பவர், அமெரிக்கன் கல்லூரியில் படிக்கின்ற போது தொடங்கிய அந்நியருக்கு எதிரான விடுதலை வேட்கை, சுதந்திரம் பெற்ற பின்பும் நம்மவர்களின் ஆளும் அதிகார அடக்குமுறைகளின் துன்புறுத்தல்களுக்கு எதிராகத் தொடர்ந்தது. அவரைக் கரம் பிடித்த சமூக மாற்றத்தின் தேவதையாக, புரட்சிப் பெண்ணாகத் திகழ்ந்தவர் தான் கிருஷ்ணம்மாள். இவர்களது வாழ்க்கை வரலாறு பள்ளி, கல்லூரிகளின் பாடப் புத்தகங்களில் வைக்கப்பட வேண்டும். இன்றைய தமிழ்நாட்டின், வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றிய இந்த மாமனிதர்கள் நினைவுகூரப்பட வேண்டும்.

ஜெகந்நாதன் – கிருஷ்ணம்மாள்

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து, முதுகுளத்தூர் செல்லும் வழியில் செங்கற்படை என்னும் ஊரில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் சங்கரலிங்கம் ஜெகந்நாதன். இராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சென்னை அமெரிக்கன் கல்லூரியில் படித்த போது, கதராடை அணிந்து வந்து எளிமைக் கோலத்தில் பேசிய பாஸ்டர் என்ற ஸ்காட்லாந்து நாட்ைடச் சேர்ந்தவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு காந்தியக் கொள்கைகளுக்குத் தன்னை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதுவரை கோட், சூட் என்று அணிந்தவர், தலையை மழித்துவிட்டு, கதராடை அணிந்து காந்தியவாதியாக மாறினார்.

1914 – ஆம் ஆண்டு பிறந்த இவர் 2013 – ஆம் ஆண்டு வரை 99 ஆண்டுகள் வாழ்ந்த மாபெரும் சமூகச் சேவையாளர்.
ஏழை மக்களுக்கு மருத்துவம் மற்றும் கல்விச் சேவை செய்வதற்காக அமெரிக்காவிலிருந்து ராலே கெய்தான் என்பவரும் மருத்துவரான அவரது மனைவியும் வந்திருந்தார்கள். இவர்கள் பெங்களூருவில் இருந்த ‘தீன சர்வ சேவா சங்கம்’ என்ற ஆசிரமத்தில் தங்கிச் சேவை செய்தார்கள். காந்திய வழியில் பணிசெய்ய விரும்பிய ஜெகந்நாதன் அந்த ஆசிரமம் சென்றடைந்தார்.

1936-ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் மிகப்பெரிய மது ஒழிப்பு மாநாடு நடந்தது. அதில் கலந்துகொள்ள ஒரு இளைஞரோடு அனுப்பப்பட்ட ஜெகந்நாதன் இந்தியா முழுவதும் சுற்றி வருமாறு ஆசிரமத்தாரால் கேட்டுக் கொள்ளப்பட்டார். அப்போது ஒவ்வொரு ஊருக்கும் நடந்துதான் செல்ல வேண்டும். அங்குள்ள கிராமத்துக் கோவில்களில் படுத்துக்கொள்ள வேண்டும். கிராம மக்கள் தரும் உணவை உண்ண வேண்டும். அப்படி குஜராத்தில் அகமதாபாத் வார்தா ஆசிரமம் சென்றார்கள். பின்பு ஹரித்துவார் சென்றார். இந்தியும் கற்றுக்கொண்டார். பின்பு மீண்டும் பெங்களூரு ஆசிரமம் வந்து சேர்ந்தார்.

அங்கே ‘ஜப்பானின் காந்தி’ என்று அழைக்கப்பட்ட திரு. காட்வா என்பவர் வந்திருந்தார். சேரிக் குழந்தைகளுக்கான ஒரு பள்ளி ஆரம்பித்தார். அந்தப் பள்ளி மற்றும் விடுதியில் 120 – மாணவர்கள் இருந்தார்கள். அங்கு இரண்டு ஆண்டுகள் இருந்த போது இதுபோன்ற ஒரு ஆசிரமத்தை மதுரையில் தொடங்கி ஏழை மாணவர்களுக்குச் சேவை செய்ய முடிவு செய்தார் ஜெகந்நாதன்.

அதன்படி மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர்களில் 25 பேர் காந்தியச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டிருந்தார்கள். அவர்களுடன் முதன்முதலில் சேரி மக்களுக்குப் பணி செய்ய ஒரு ஆசிரமத்தைத் தொடங்கினார் ஜெகந்நாதன்.
தீண்டாமைக்கு எதிராக மக்களிடம் விழிப்பு ஏற்படுத்த காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்த போது தமிழ்நாட்டுக்கும் வந்தார். அப்போது ஒரு துண்டுச் சீட்டில் கேள்வி கேட்டு காந்தியடிகளுக்கு அனுப்பினார். அதற்குப் பதில் சொல்ல காந்தி அழைத்த போது முதன்முதலில் அவரைச் சந்தித்தார். அதன் பிறகு மீண்டும் காந்தியடிகள் மதுரைக்கு வந்த போது நண்பர்களோடு நிதி திரட்டிக் கொண்டு அவரைச் சந்தித்தார். அப்போது கையில் தங்க வாட்ச் கட்டியிருந்தார் ஜெகந்நாதன். அதையும் காந்தியிடம் கொடுத்தார். அப்போது அருகிலிருந்த ஜெகந்நாதனின் தந்தையும் அதைப் பாராட்டினார்.

மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.