பிரபஞ்சம்காப்போம் – 08
திரு. ப.திருமலைமூத்தபத்திரிகையாளர்
ஒலி என்பது ஆற்றலின் ஒரு வடிவம். சில சமயங்களில் ஒலி கேட்பதற்கு இதமாகவும், சில சமயங்களில் எரிச்சலாகவும் இருக்கும். சத்தம் என்பது விரும்பத்தகாத ஒலி. கேட்பதற்கு அசௌகரியமான உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய எதுவும் சத்தம். மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களைப் பாதிக்கும் சத்தம் ஒலி மாசுபாடு என்று அழைக்கப்படுகிறது.
அதிகரித்த தொழில்மயமாக்கல், காடழிப்பு, பெருமளவில் நடைபெறும் கட்டுமான நடவடிக்கைகள், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றின் காரணமாக ஒலிமாசு ஏற்படுகிறது. இதில், போக்குவரத்து வாகனங்கள், கட்டுமானங்கள், பட்டாசு வெடித்தல், சண்டைகள், உரத்த இசை போன்றவை மனிதனால் உருவாக்கப்படும் ஒலி மாசுகள். பூகம்பங்கள், இடியுடன் கூடிய மழை, எரிமலை வெடிப்புகள், விலங்குகளின் அலறல் போன்றவை இயற்கையாக உருவாகும் ஒலி மாசு.
ஒலி அளவு
ஒலியின் அளவீட்டு அலகினை டெசிபல்ஸ் (dB) என்பார்கள். அலெக்சாண்டர் கிரஹாம்பெல் இந்தச் சொல்லை உருவாக்கினார். மனிதக் காது உணரக்கூடிய சாதாரண ஒலி பொதுவாக 1 –
டெசிபல் ஆகும். உலகசுகாதார நிறுவனம் 55 – டெசிபலுக்கு மேல் சென்றால் அது ஒலி மாசுபாடு என்று வகைப்படுத்துகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 55 – டெசிபல் அளவைப் பகலிலும்,
45 – டெசிபல் அளவை இரவிலும் அனுமதித்துள்ளது.
அதிகமாய் ஒலியை எழுப்பும் ராக் இசையின் அதிகபட்ச அளவு 150 – டெசிபல், அவசர மருத்துவ ஊர்தி, விமானங்களின் இரைச்சல் 140 – டெசிபல், ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதால் ஏற்படும் சத்தம் 130 – டெசிபல், தீபாவளி நேரத்தில் ரங்கநாதன் தெருவில் ஏற்படும் இரைச்சல் 85 – டெசிபல், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் எழும் இரைச்சல் 70 – டெசிபல், காரின் ஹார்ன் 90 – டெசிபலும், பஸ் ஹார்ன்கள் 100 – டெசிபலும் ஒலி எழுப்புகின்றன.
சத்தத்துடன் பொழியும் மழையின் அளவு 50 – டெசிபல், அமைதியாகக் காணப்படும் நூலகங்களில் ஒலி அளவு 30 – டெசிபல். பொதுவாக 50 – லிருந்து 75 – டெசிபல் வரை நம் காதுகள் கேட்கும் சராசரி அளவாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த அளவைக் காட்டிலும் அதிகமாகவே ஒலியினை நாம் எதிர்கொள்கிறோம். வாகனப் போக்குவரத்து நடைபெறும் இடங்களைக் காட்டிலும் கடைத்தெருக்களில் இரைச்சலின் அளவு அதிகமாம். ஒலி அளவு 130 – டெசிபலைத் தாண்டினால், அது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது மற்றும் சரி செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தும்.
மருத்துவமனை, கல்விக்கூடம் ஆகியவற்றின் அருகில் அதிக ஒலி எழுப்பக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. அறிவிப்புப் பலகையும் வைத்திருப்பார்கள். ஆனால் அவற்றைக் கடந்து செல்லும் வாகனங்கள் ஒலி எழுப்பத் தவறுவதில்லை.
எப்படி ஒலி மாசுபடுகிறது?
மற்ற மாசுகளைப் போலில்லாமல் ஒலி மாசு வீட்டிலிருந்தே தொடங்கிவிடுகிறது. என் பக்கத்து வீட்டுக்காரர் காலையில் அவர் வீட்டுத் தொலைக்காட்சியில் வைக்கும் பக்திப்பாடல்களும், தெருக்குழாயில் தண்ணீருக்காக நடக்கும் போட்டி மோதல்களின் சத்தமுமே என்னை எழுப்புகின்றன. காலை நான்கரை மணிக்கு, சட்னி அரைக்கிறேன் என்று என் மனைவி காலையில் சுழலவிடும் மிக்சி, தூக்கத்தைத் துரத்தும்.
“எங்க பாட்டி பயன்படுத்தியது” என மனைவி பெருமைப்பட்டுக் கொள்ளும் 1990 – களின் மாடல் கிரைண்டர் வீட்டில் ஒலிமாசுவை ஏற்படுத்த தவறுவதில்லை. தொலைக்காட்சி பார்ப்பதானாலும் சரி, மொபைலில் பேசுவது என்றாலும் சரி எல்லாவற்றையும் உரக்கவே செய்கிறோம். வேண்டுமானால் காதலின் தொடக்கத்திலிருப்பவர்கள் மொபைலில் கிசுசுக்கலாம்.
ஜப்பானிய கலாச்சாரத்தின்படி அங்கு ஒருவர் அமைதியாக இருக்கும்போது அவரிடம் வலியச் சென்று நாம் ஏதாவது பேசினால் அதனை மிகப்பெரும் அவமதிப்பாக எடுத்துக்கொள்வாராம். ஆனால் நாம்தான் ஐந்தடி தூரத்தில் இருக்கும் ராமசாமியைக் கூட, “எ..ன்..ன.. ரா..ம..சா..மி.. சௌக்கியமா..” என 60 – டெசிபலில் கேட்கிறோம்.
மேலும் வாசிக்க…ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.