சாதனையாளர் பக்கம்
மதுரை ஆர். கணேசன்
ஓரு கையில் பாட புத்தகப் பையுடன் பள்ளிக்கு செல்லும் மாணவன் வைபவ் மகேஷ் இன்னொரு கையில் (விடுமுறை நாட்களில்) ஆன்மிக குறிப்புகள் எடுத்துக் கொண்டு மேடைக்குச் செல்கிறான். இரண்டையும் சாமர்த்தியமாகக் கையாண்டு அந்தச் சிறுவன் “..பிஸியாக..” வலம் வருகிறான்.
ஒரு நிகழ்ச்சியில் “…எத்தனையோ சுவாமி பற்றி கதை கேட்டிருந்தாலும், யாமிருக்க பயமேன் அப்படின்னு சொல்லற ஒரே சாமி நம்ம சின்ன முருகா மட்டும் தான்..” என்று வைபவ் மகேஷ் கதை சொல்லிவிட்டு, கையில் இருக்கும் சப்ளா கட்டையை அடித்துக் கொண்டு பாடுகிறான். அந்த முகபாவனையும், மழலைக் குரலும் கேட்கும் போது இன்னும் ஆன்மிக சொற்பொழிவு காண மேடைகள் நிறையக் காத்திருக்கின்றன என்பது தெரிகிறது..!
சென்னை THE P.S.B.B MILLENNIUM பள்ளியில் மூன்றாம் வகுப்புப் படித்து வருகிற “..வைபவ் மகேஷ் தனது முகபாவனையுடன் ஆன்மிக சொற்பொழிவுகளால்..” எல்லோரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்து ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறான்..!
“..விளையும் பயிர் முளையிலே தெரியும்..” என்பார்கள். குழந்தைப் பருவமோ அல்லது வளர் இளம் சிறார் பருவமோ ஒன்றைப் பிடித்துக் கொண்டால் விடமாட்டார்கள் என்பதுக்கேற்ப வைபவ் மகேஷ்சும் ஆன்மிகப் பேச்சை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வளர்கிறான் என்பது கண்கூடாகப் பார்க்க முடிகிறது..!
அதன் வழியாக ஞானப்பழம், சர்வம் சக்தி மயம், மாயக்கண்ணன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், கருணையின் வடிவம் கந்தன், ராமருக்கு உதவிய அணில் கதை, பிரேம ஸ்வரூபன் பாண்டு ரங்கன், போன்ற பல கதைகளைக் கற்றுக் கொண்டு மேடைகளில் அரங்கேற்றியிருக்கிறான் என்பது கவனிக்கத்தக்கது..!
சென்னையில் உள்ள திருநீர்மலை, அனந்த பத்மநாப சுவாமி கோவில், கபாலீஸ்வரர் கோவில், தஞ்சைப் பெரிய கோவில் போன்ற திருக்கோயில்கள் மற்றும் சபாக்கள், அத்துடன் பொதுமேடை நிகழ்ச்சிகளிலும் வைபவ் மகேஷின் சொற்பொழிவுகள் இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளாகத் தொடர்கிறது..!
அதேபோல சென்னை மியூசிக் அகாடமியில் நடந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர்கள் மத்தியில் “..கோதை ஆண்டாள் ஆன கதை..” கதாகாலட்சேபம் பண்ணத் தொடங்கிய தருணம் வாழ்க்கையில் மறக்க முடியாதது என்று (அம்மா சொல்லிக் கொடுத்தது போல) சிரித்துக் கொண்டே சொல்கிறான்.
இதில் கோவிந்தபுரம், கும்பகோணம், சந்திர மௌலீஸ்வர ஸ்வாமி பூஜா மண்டபம், ஓரிக்கை மற்றும் காஞ்சி காமகோடி பீடம் சங்கர மடம், விளக்கு கடை ஆகிய இடங்களில் நிகழ்ந்த வைபவ் மகேஷ் சொற்பொழிவுகள் நேரடி ஒளிபரப்புகளும் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.!
தமிழகத்தின் பேச்சுப் பிரபலங்கள் கோவிந்தாபுரம் விட்டால் தாஸ் மகாராஜ், ஓ.எஸ்.அருண், சிக்கல் குருசரண், விசாகாஹரி, துஷ்யந்த் தர், வீர மணிராஜூ, மற்றும் பல பிரபலக் கலைஞர்கள் வைபவ் மகேஷைப் பாராட்டி வாழ்த்தியிருக்கிறார்கள்.
காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவா மணிமண்டபத்தில் கடந்த மாதம் ஆன்மிக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல பெரியவர்களுடன் வைபவ் மகேஷ்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.