பிரபஞ்சம் காப்போம் – 07

திரு. ப.திருமலைமூத்த பத்திரிகையாளர்

பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் இயற்கையாக வளர்ந்தவைகளின் தொகுப்பினைக் காடு என்பார்கள். இதில் பிரதானமாகக் காணப்படுவது மரங்கள். மேலும், நீர், உறைவிடம், செழிப்பு, உணவு என்று உயிரினங்கள் வாழ அனைத்தையும் வழங்கும் ஓர் அற்புத இயற்கைப் படைப்பு காடு. தமிழில் காட்டுக்கு கா, கால், கான், கானகம், அடவி, அரண், அரணி, புறவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், ஆரணியம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம் எனப் பல பெயர்கள் உண்டு. இவற்றுள் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு பொருளில் காட்டைக் குறிக்கும். வியல் என்பது விரிந்து பரந்த பெருங்காட்டைக் குறிக்கும். வல்லை என்பது அடர்ந்த காடு. முளரி என்பது இடர் மிகுந்த காடு. பழவம் என்பது முதிர்ந்த மரங்கள் நிறைந்த காடு. இதில் பல வார்த்தைகள் காணாமல் போனதுபோல காடுகளும் காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

பயன்

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் காடுகளில் அல்லது அதன் உடனடி சுற்றுப்புறங்களில் வாழ்கின்றனர். உலகில் உள்ள 80 – சதவிகித விலங்கு இனங்கள், காடுகளையே தங்கள் வாழ்விடமாகக் கொண்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் நம் வாழ்வுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் காடுகள் வழங்குகின்றன. நான் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர் கூட வனத்தின் கொடைதான். காடானது மழையை ஊக்குவிக்கிறது. காடுகள் நீரின் தரம் குறைவதைக் கட்டுப்படுத்துகிறது. மண் அரிப்பைத் தடுப்பதன் மூலம், மண்ணின் வளத்தைப் பாதுகாக்கிறது. மண்ணில் ஊட்டச்சத்து சுழற்சியைப் பராமரிக்க உதவுகின்றது. ஈரப்பதத்தை வழங்கி வெப்பநிலையைக் குறைக்கிறது. சுற்றுச்சூழலில் சமநிலையைப் பராமரிக்கிறது. காடுகள் வளிமண்டல கிரீன்ஹவுஸ் விளைவை எதிர்த்துப் போராடுகின்றன. பொருளாதார ஸ்திரத்தன்மையை அதிகரிக்கின்றன. மரங்கள் ஒலி மாசுபாட்டைக் குறைக்கின்றன. காடுகள் மருந்துகளின் பொக்கிஷம். 60 – சதவிகித மருந்து தாவரங்கள் மழைக்காடுகளிலிருந்து பெறப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாகக் காடு ரசிப்பிற்குரியது. மனதுக்கு இதமளிப்பது மற்றும் தனிப்பட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இந்தியாவில்

இந்தியாவிலுள்ள காடுகளின் நிலைகுறித்து மத்திய அரசின் வனத்துறை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது. 2022 – ஆம் ஆண்டு வெளியான அறிக்கையானது, அதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் காடுகளின் பரப்பு 1,540 சதுர கிலோமீட்டர் மற்றும் மரங்களின் பரப்பு 721 – சதுர கிலோமீட்டர் அதிகரித்ததாகக் கூறுகிறது. இந்தியாவின் தற்போதைய காடு மற்றும் மரங்களின் பரப்பு 8,09,537 சதுர கிலோமீட்டராகும். இது நாட்டின் நிலப்பரப்பில் 24.62 – சதவிகிதம் ஆகும். “17 – மாநிலங்களில் 33 – சதவிகிதம் மற்றும் அதைவிட அதிகமான கானகப் பரப்பு இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” எனச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அண்மை அறிக்கையொன்றில் கூறியுள்ளார்.

இந்தியாவில் அதிகக் காடுகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மத்திய பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அருணாச்சல பிரதேசம் இரண்டாவது இடத்திலும் ஒடிசா, சத்தீஸ்கர் கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. இதற்கு அடுத்த இடத்திலுள்ளது ஜார்கண்ட். ஜார்கண்ட் என்பதற்கு, “காடுகளால் சூழப்பட்ட நிலம்” என்று அர்த்தம் கொள்ளப்படுகிறது. அடுத்த இடம் தமிழ்நாட்டுக்கு.

தமிழ்நாட்டின் நிலை

தமிழ்நாட்டின் மொத்த வனப்பரப்பு 26,419.23 சதுர கிலோமீட்டராகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் மொத்த பரப்பில் 20.31 சதவிகிதம் ஆகும். கடந்த 2019 – ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பைவிட 55.21 சதுர கிலோமீட்டர் மட்டுமே தமிழ்நாட்டில் வனப்பரப்பு அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சென்னை, கடலூர், மதுரை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், விழுப்புரம், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் வனப்பரப்பு குறைந்துள்ளது.

காடுகள் அழிவு

ஒவ்வொரு நொடியும் ஒரு கால்பந்து மைதானத்தின் அளவுள்ள ஒரு வனப்பகுதியை இழக்கிறோம். அழிக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. அமேசான் காடுகளில் 17 – சதவிகிதத்தைக் கடந்த 50 – ஆண்டுகளில் இழந்துள்ளோம். காடுகள் அழிவால் காணாமல் போவது மரங்கள் மட்டுமல்ல, தாவரங்கள், விலங்குகள், பூச்சி இனங்கள், நீரோடைகள் போன்றவையும் ஆகும்.

இந்தியா, ஆண்டுக்கு 1.3 – மில்லியன் ஹெக்டேர் காடுகளை இழந்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அருணாச்சல பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், மேகாலயா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் மொத்தமாக 1,020  – சதுர கிலோமீட்டர் அளவிற்குக் காடுகளை இழந்துள்ளன. இந்த எட்டு மாநிலங்களும் இந்தியாவின் ஒட்டுமொத்த வனப்பரப்பில் 23.75 சதவிகிதப் பரப்பைக் கொண்டுள்ளன.

அதிகப்படியான மேய்ச்சல், எரிபொருள் சேகரித்தல், காட்டுத் தீ, மரங்களை வெட்டுதல் போன்றவை இந்தியாவில் காடழிப்புக்கான முக்கியக் காரணங்களாகும். அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்தால், விவசாய நிலங்களுக்கான தேவை அதிகரித்து வருவதாலும், வீட்டுவசதிக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் காடுகள் காவு வாங்கப்படுகின்றன.

காடுகளானது சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக இயக்கவியலை ஒருங்கிணைக்கிறது. போதிய மரங்களை வளர்க்காமல் பெரிய அளவில் மரங்களை அகற்றுவது இயற்கை வாழ்விடம், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும். காடு அழிந்தால் என்னவாகும்? 

மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.