சிறுகதை இலக்கியத்தில் சிகரம் நோக்கி
சரவணன் ராமன்
சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பார்கள். நீண்ட அனுபவத்தின் அடிப்படையில் பணி ஓய்வு பெற்ற பிறகு சாதித்துக் காட்டியவர்கள் பலர். அதே சமயம் தற்போதெல்லாம் சிறுவயதிலேயே இந்த இளைய சமுதாயம் சாதனை புரியத் தொடங்கி விடுகிறது. ஐந்து வயதிலேயே 1330 – திருக்குறள்களையும் கூறும் மாணவர்கள், பத்து வயதிலேயே கணிப்பொறியில் சிறந்து விளங்கும் மாணவர்கள், இரண்டு வயதில் இருநூறு நாடுகளின் பெயர்களையும் கூறும் மாணவர்கள் என்று அறிவால் சாதிக்கும் மாணவர் சமுதாயத்தை நாம் பார்த்து வருகிறோம்.
இது ஒரு புறம் என்றால் கற்பனை ஆற்றலை வளர்த்துக் கொண்டு கதை எழுதுவது, கவிதை எழுதுவது என்று சாதனை படைப்பது புதுவகை.
அப்படி ஒரு சாதனை நிகழ்த்திக் காட்டி இருக்கிறார் சரவணன் ராமன். அப்படி என்ன சாதனை? 25 – சிறுகதைகள் அடங்கிய ‘‘சரவணன் மந்திரச்சொல்’’ என்ற சிறுகதைத் தொகுப்பை சாஞ்சி பதிப்பகம் மூலமாக வெளியிட்டு இருக்கிறார். தொலைக்காட்சி சீரியல்கள் பெருகி, சிறுகதை இலக்கியம் பெரிய சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது இவரது இந்த முயற்சி எழுத்தாளர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறது.
சென்னை ஆல்வின் மெமோரியல் பப்ளிக் பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கிறார் சரவணன் ராமன்.
சிறுகதை எழுதவும், கவிதை எழுதவும் நல்ல கற்பனை வளம் அவசியம். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். அவற்றை கலைக் கண்களோடு நோக்குவது அவசியம்.
இதெல்லாம் உங்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று என்று கேட்டோம்!
‘சிங்கப்பூரில் சில ஆண்டுகள் படித்தேன், தொடக்க நிலை வகுப்புகளில் படிக்கும்போதே பள்ளிகளில் நடக்கும் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, சிறுகதைப்போட்டி, ஓவியப்போட்டி, மாறுவேடப் போட்டிகளில் கலந்து கொள்வேன். பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டதால் என்னுடைய தமிழ் ஆர்வம் வளர்ந்தது. தமிழ் ஆர்வத்திற்கு தீனி போடுவதற்காக பெற்றோர்கள் பல நூல்களை வாங்கி கொடுத்தார்கள். அதனால் அதிகமாக நூல்களைப் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு தலைப்புகளில் பல்வேறு வகையான நூல்களை படித்தாலும் தமிழ்ச் சிறுகதைகளைப் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்கிறார் சரவணன் ராமன்.
டாக்டர் பூவண்ணன் அவர்கள் எழுதிய ‘ஆலம் விழுது’ என்ற சிறுகதை என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது, என்று சொல்லும் சரவணன் ராமன், சுஜாதா எழுதிய புத்தகங்களையும் படித்திருக்கிறார்.
தன்னுடைய இந்தச் சாதனைகளுக்கு குடும்பம் தான் வேர், அப்பா ராமன் நாராயணன், அம்மா தேன்மொழி பாலு, ஆகியோர் என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் தன்னம்பிக்கை கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள், அவர்களால் தான் இந்தச் சிறுகதைச் சாதனை சாத்தியமாயிற்று என்கிறார்.
மேலும் வாசிக்க…. ஆளுமைச் சிற்பி மாத இதழைப் படியுங்கள்.