ன் இனிய வாசக நல் இதயங்களே, வணக்கம்.

“கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு”

நான் கற்றது கடுகளவு கூட இல்லை, கடுகின் உமியளவு, உமியின் துகள் அளவு கூட இருக்காது.

இருந்தாலும் என் மனதில் பட்டதை உங்க:ளுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றேன்.

நான் கண்டதும், கேட்டதும், படித்ததும், பார்த்ததும், உணர்ந்ததுமான சில கருத்துக்களைத் தான் உங்கள் முன் படைக்கிறேன்.

வாழ்க்கை என்றால் என்ன…..?

அது, உரித்த வாழைப்பழமா……?

உரிக்காத பலாப்பழமா…?

தெளிந்த நீரோடையா…..?

தேங்கிய குட்டையா…..?

அலைபுரளும் கடலா…..?

அடித்து வரும் ஆற்று வெள்ளமா…..? –

– இவற்றுள் எது?

-எல்லாமே தான்!

-இவை எல்லாமே உள்ளதுதான் வாழ்க்கை!

இதில் நம் பங்கு என்ன…?

நாம் செய்ய வேண்டியது என்ன…?

நாமும் வாழ வேண்டும்,

நம்மைச் சார்ந்தவர்களையும் வாழ்விக்க வேண்டும்..

வெறுமனே வாழ்ந்தால் போதுமா…?

உயரவேண்டாமா…? வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டாமா…?

வேண்டும்!

என்ன செய்ய வேண்டும்……?

உழைக்க வேண்டும், பொருள் ஈட்ட வேண்டும்!!

“பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை”  – என்கிறார் திருவள்ளுவர்.

“செய்க பொருளை” – என்று ஆணையிடவும் ‘ செய்கிறார்.

பொருளை (பணத்தை ) எப்படிச் செய்வது…?

பல வழிகள் உள்ளன!

எல்லோருக்கும் எல்லாம் வருமா…?

வராது!

ஆனால், படித்தவன் முதல், படிக்காதவன் வரை.. ஏழை முதல் பணக்காரன் வரை…..  எல்லோர்க்கும் ஏற்றதொரு தொழில் இவ்வுலகில் உண்டு,

அதுதான் வியாபாரம்!

இந்த வியாபாரத்தை எப்படிச் செய்வது…?

எடுத்த எடுப்பிலேயே முதல் போட்டு ஆரம்பித்து விடலாமா…?

கூடாது!

என்ன செய்ய வேண்டும்…?

அனுபவப்பட வேண்டும்!

எப்படி….?

அடிமட்டத்திலிருந்து உயர்மட்டம் வரை!

நெளிவு சுளிவு தெரிய வேண்டும்;

மேடு பள்ளம் என்றால் என்ன?

ஏற்ற இறக்கம் என்றால் என்ன?

நல்லது கெட்டது என்ன….?

என்றெல்லாம் எப்படித் தெரியும் …?

வியாபாரம் என்றாலே எங்கும், வியாபித்திருக்கும் ஒரு பாரம்.

பாரம் இல்லாத வியாபாரம் இல்லை.

பாரம் இல்லாமல் வியாபாரமே இல்லை!

இத்தகைய (வியா) பாரத்தைச் சுமப்பதற்குப் படிப்பறிவு போதுமா….?

போதாது!

பட்டறிவு வேண்டும்!

பட்டறிவு என்பது என்ன…….?

அதுதான் அனுபவம்!

அனுபவத்தை அடைவது எப்படி…?

“குரு இல்லா வித்தை பாழ்”

நாம் விரும்பும் துறையில் (கடையில்) சேர – வேண்டும்.

கடையில் சேர்த்து விட்டாலோ, அல்லது சேர்ந்து கொண்டாலோ, ஒருவன் வியாபாரியாக உருவாகிவிட முடியுமா…?

முடியாது….!

ஏன்…?

“ஒரு மனிதன் நூறு குதிரைகளை ஆற்றுக்கு அழைத்துச் செல்ல முடியும்; ஆனால் நூறு மனிதர்கள் – சேர்ந்தாலும் ஒரு குதிரையைத் தண்ணீர் குடிக்க வைக்க முடியாது” – என்பது பழமொழி.

வியாபாரியாக உருவாக்குவதா….?

வியாபாரியாக உருவாகுவதா….?

எது சிறந்தது….?

வியாபாரியாக (தானே) உருவாகுவதுதான் சிறந்தது.

காரணம்…..

தூக்கி நிறுத்திய பூனை எலியைப் பிடிக்குமா…..? தானே முன்வந்து, தேடி அலைந்து, தனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து, அதில் நுழைந்து.! உழைத்து, அனுபவப்பட்டு, தன்னைத்தானே உருவாக்கிக் கொள்பவன்தான் வெற்றிபெற முடியும் புகழ்பெற முடியும், மற்றவர்களுக்கு வழிகாட்டியாக வாழமுடியும்.

நாம் உருவாக வேண்டும்,

மற்றவர்கள் உருவாவதற்கு ஓர் உதாரணமாக  அமைய வேண்டும்.

என் வாசக நல் இதயங்களே,

வருங்கால வியாபாரத் திலகங்களே,

நீங்கள் ஒரு சிறந்த வியாபாரியாக

உருவாக வேண்டுமென்பதுதான் எனது ஆசை!

இதனைப் படிக்கும் அத்தனை பேர்களும் உருவாவார்களா…….?

தெரியாது.

ஆனால்…

ஒரு சிலராவது உருவாகமாட்டார்களா….?

உருவானால் தான்,

இந்தப் பேனாவுக்குப் பெருமை!

எல்லாப் பெருமையும், ஈன்றவர்க்கும்,
இறைவனுக்குமே!

(தொடரும்)