புதிய தொடர்-1
பேராசிரியை திருமதி. வெ. இன்சுவை
பேராசிரியை திருமதி.வெ.இன்சுவை அவர்கள் நமது ‘ஆளுமைச் சிற்பி’ மாத இதழில் ‘சிந்தனைக் களஞ்சியம்’, ‘என் கண்ணோட்டம்’ மற்றும் ‘மாணவர் நலம்’ ஆகிய மூன்று நீண்ட தொடர்களைப் பல ஆண்டுகளாக வழங்கியவர்கள். ‘தினமணி’ நாளிதழில் அடிக்கடி வெளிவரும் இவர்களது நடுப்பக்கக் கட்டுரைகள் மிகவும் புகழ் பெற்றவை. அன்றாட வாழ்க்கைச் சூழலில் நிகழும் எதார்த்தமான பிரச்சனைகளை, சவால்களை தனது அற்புதமான எழுத்தில் வழங்கி எல்லோரையும் சிந்திக்கச் செய்பவர். பல நூல்களையும், கட்டுரைகளையும் பல ஆண்டுகளாக எழுதி வரும் மூத்த எழுத்தாளரான பேராசிரியை. திருமதி. வெ.இன்சுவை அவர்களின் கட்டுரைத் தொடரைப் பெற்று, வாசகர்களுக்கு வழங்குவதற்கு வாய்ப்பளித்த பேராசிரியை அவர்களுக்கு நன்றி கூறி வணங்கி மகிழ்கின்றோம்.
– ஆசிரியர்
என் வீட்டிற்குப் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் இருந்து சின்னக் குழந்தையின் அழுகுரலும், தொடர்ந்தது அதன் அம்மா அடிக்கும் சப்தமும் தெளிவாகக் கேட்டது. அங்கே யார் குடி இருக்கிறார்கள் என்ற விபரம் எதுவும் எனக்குத் தெரியாது. குழந்தையின் அழுகையை மீறி அப்பெண்ணின் வசவுகள். சரியாக அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியவில்லை என்றாலும் என்னால் யூகிக்க முடிந்தது. அது ஆன்லைன் வகுப்பின் சோகம் என்பது விளங்கியது. தற்போது எல்லா வீடுகளிலும் நடக்கும் கூத்து இது. இளம் தாய்மார்கள் அனைவருக்குமே இரத்தக் கொதிப்பு வந்திருக்கும். ஆசிரியை கேட்கும் கேள்விக்குக் குழந்தை பதில் சொல்லாவிட்டால் இவர்கள் அடி சாத்துகிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் தவித்துப் போகிறார்கள். அது குழந்தை என்பதை பெற்றவள் மறந்து போகிறாள் சொன்னதைச் சொல்லும் கிளிப் பிள்ளையா குழந்தைகள்? ஆசிரியர் இரு முறை சொன்னது, உடனே பிள்ளைகளின் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொள்ளுமா?
ஒரு தீநுண் கிருமியால் உலகமே செயலிழந்து போய்விடும் என்று நாம் நினைத்திருப்போமா? தொற்றின் காரணமாக எல்லாத் துறைகளுமே பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தாலும், பிள்ளைகளின் கல்வி இப்படி ஆகிவிட்டதே என்பது தான் நமக்குப் பெருத்த கவலை அளிக்கிறது. முடங்கிப் போன தொழில்களை மீண்டும் துவக்க முடியும், நிலைமை சீரானதும் நம் மனங்களில் நம்பிக்கை துளிர்க்கும். ஆனால் பிள்ளைகளின் படிப்பு என்னாகுமோ? நாள்தோறும் பள்ளிக்குச் சென்று, ஆசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனித்து, கற்று, வகுப்புத் தேர்வுகள் எழுதி, வீட்டுப்பாடம் செய்து, திருப்புத் தேர்வுகள் எழுதி… இத்தனையும் செய்தே பல மாணவர்கள் படிப்பில் பின் தங்கி விடுகிறார்கள். ஆசிரியர் மற்றும் பள்ளியின் கண்டிப்பு அதிகமானால் பள்ளியை விட்டு நின்று விடுகிறார்கள். ஒரு வகுப்பில் மிக நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்கள், சராசரி மாணவர்கள், கற்றலில் சிறிதும் ஆர்வம் இல்லாத மாணவர்கள் என எல்லோரும் கலந்து இருப்பார்கள். ஆசிரியர் நடத்தும் போதே சில மாணவர்கள் சட்டென புரிந்து கொள்வார்கள்-அது கற்பூர புத்தி. இன்னும் சிலருக்கு மீண்டும் மீண்டும் சொல்லித் தர வேண்டும். பாடம் நடத்துபவருக்குத் தன் மாணவனின் அறிவுத் திறன் பற்றி நன்கு தெரியும். எனவே சில மாணவர்களின் பக்கத்தில் போய் நின்று கொண்டு அவனுக்குத் தனியாகக் கற்றுக் கொடுப்பார்.
சில மாணவர்களை அழைத்து கரும்பலகையில் எழுதச் சொல்லுவார், கணக்கைப் போடச் சொல்லுவார். அதன் காரணமாக அவர்கள் விழிப்புடன் இருப்பார்கள் எத்தனை தான் தொழில்நுட்பம் மாறினாலும், வளர்ச்சி அடைந்தாலும், கற்பித்தலில் புதுப் புது முறைகள் வந்தாலும் கரும்பலகையில் எழுதி சொல்லிக் கொடுப்பதில் மட்டுமே ஜீவன் உள்ளது. ஓர் உயிர்த்துடிப்பு இருக்கும், கற்போருக்கும், கற்பிப்பவர்களுக்கும் ஓர் ஆத்ம திருப்தி இருக்கும். கரும்பலகையில் சாக்பீஸில் எழுதி, எழுதி, அழித்து, அழித்து எழுதி வகுப்பு முடிந்து வெளிவரும்போது அந்த ஆசிரியரின் தலை பூராவும் வெண்மையாக சாக்பீஸ் துகள்கள் அப்பியிருக்கும். அப்படியே கைகளிலும் ஏதோ பஞ்சு சாலையில் இருந்து வருபவர்களை போல இருக்கும்.
தற்போது வேறு வழி இன்மையில் இணைய வழிக் கல்வி தொடர்கிறது. இது வகுப்பறைக் கல்விக்கு நிகராகுமா என்றால் கிடையாது. ஏதோ பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூ வைப்பது போல பிள்ளைகள் பாடங்களை அறவே மறந்து போய் விடக் கூடாது என்பதற்காக கொஞ்சம் தொட்டுச் செல்லுகிறார்கள். ஆசிரியர்களுக்கும் இந்த முறையில் பாடம் நடத்துவது புதிது. பழக்கப்படாத ஒன்று. ஆரம்பத்தில் நிறையவே சிரமப்பட்டார்கள். இப்போது ஓரளவுக்குப் பழகிக் கொண்டு விட்டார்கள். ஆனாலும் அவர்களால் இயல்பாக நடத்த முடியவில்லை. பெற்றோர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எச்சரிக்கை உணர்வு இருந்து கொண்டே இருக்கிறது.
2019ஆம் ஆண்டு விஜயதசமி அன்று Pre.K.G. சேர்ந்த பிஞ்சுகள் 4 மாதங்கள் மட்டுமே பள்ளிக்குச் சென்றார்கள். மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டன. இன்னமும் திறந்த பாடில்லை. அந்த 4 மாதங்களும் பல குழந்தைகள் வகுப்பறை சூழலுக்குப் பழகவே இல்லை. அழுகை சிந்த அடங்கி, ஆசிரியர்கள் பிடித்துப் போக ஆரம்பித்த உடனேயே பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் இல்லை. L.K.G. போகாமலேயே இப்போது U.K.G.
L.K.G. படித்துக் கொண்டிருந்த குழந்தைகள் தற்போது முதலாம் வகுப்பு. அரிச்சுவடியே தெரியாத குழந்தை விழித்துக் கொண்டுதான் ஆன்லைன் வகுப்பில் உட்கார்ந்திருக்கிறது. ஆசிரியை எழுதுவதைப் பார்த்து உடனேயே எழுத முடியுமா? ஆங்கிலப் பள்ளி என்பதால் அந்த ஆசிரியர்கள் தமிழில் பேசுவதே இல்லை. உலக உருண்டையைக் காட்டி. ஆங்கிலத்தில் ஏழு கண்டங்கள் என்று சொல்லித் தருகிறார்கள். என்ன புரியும் குழந்தைகளுக்கு? இரண்டு, மூன்று முறை சொல்லிவிட்டு ஒவ்வொரு குழந்தையிடம் சொல்லச் சொல்லுகிறார்கள். உடன் அமர்ந்திருக்கும் பெரியவர்கள் சொல்லித் தருவதை தப்பும் தவறுமாக குழந்தைகள் சொல்லுகின்றன. சூரியனைப் பற்றி பத்து வரிகள் ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். ஒன்றுமே புரியாமல் இது என்ன மெனக்கெடல்? ஒரு நாளைக்கு 2 வகுப்புகள் மட்டுமே, ஒரு வகுப்பு 30 நிமிடம் வரை. அவ்வளவே. உட்கார்ந்தவுடனேயே குழந்தைகள் நம்மிடம் ‘‘கிளாஸ் எப்போ முடியும்?” என்று தான் கேட்கிறார்கள். திரையைப் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வயதா இது? நாம் கொஞ்சம் அசந்தால் மடிக்கணினியில் எதையாவது அழுத்தி விட்டுவிடுகிறார்கள். வேடிக்கை பார்க்கிறார்களேயொழிய பாடத்தில் கவனம் இல்லை.
வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது நொடிக்கு ஒரு முறை ‘கவனி’ ‘கவனி’ என்று சொல்ல வேண்டும். கவனம் இல்லாத பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்ட வேண்டும். இந்த ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர்கள் படாத பாடு படுகின்றார்கள். நடுவில் மின்சாரம் தடைபட்டு விட்டால் பெற்றோர்கள் எரிச்சல் அடைகிறார்கள் வீட்டுப் பாடத்தை எழுதி upload செய்ய வேண்டும். PDF Form போன்ற விபரங்கள் தெரியாதவர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள். ஆன்லைன் வகுப்பு மூலம் பையன்கள் அடிப்படை மொழி அறிவையும், அடிப்படை கணித அறிவையும் கற்றுக் கொள்ள முடியாது. அதற்கான சாத்தியமே இல்லை. விபரம் தெரிந்த பெற்றோர் தாங்களே சொல்லிக் கொடுக்கிறார்கள், அல்லது வெளியே தனிப் பயிற்சி வகுப்பிற்கு அனுப்புகிறார்கள். அது ஒரு கூடுதல் செலவு. இப்போது ஆன்லைனில் பல்வேறு வகுப்புகள் நடைபெறுகின்றன. இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என பலரும் ஆங்கில உச்சரிப்பு வகுப்பு, அடிப்படை ஆங்கில வகுப்பு, கணித வகுப்பு, ஆங்கில இலக்கண வகுப்பு என ஆரம்பித்து விட்டனர். பலரும் குழந்தைகளை இதுபோன்ற வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். பணத்தைப் பொருட்படுத்துவது இல்லை. இவ்வாறு செய்யாமல் பள்ளியின் இணையவழி வகுப்பை மட்டுமே நம்பி இருக்கும் பெற்றோர்கள், தங்கள் குழந்தை மிகவும் பின் தங்கியுள்ளதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறார்கள்.
பள்ளிகளில் ஒரு நாளைக்கு 7 பாடப் பிரிவுகள் இருக்கும் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, பூகோளம், விளையாட்டு என்று மாறி மாறி வகுப்புகள் நடைபெறும். எல்லாப் பாடங்களையும் விரிவாக, குழந்தைகள் புரிந்து கொள்ளும் வரை திரும்பத் திரும்ப நடத்துவார்கள். உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் செய்முறைப் பயிற்சியில் ஆர்வமுடன் கற்றுக் கொள்வார்கள். ஆனால் இப்போது எதையுமே புரிந்து கொள்ளாமல், புரிந்து கொள்ள முயற்சிக்காமல் ஏனோ தானோ வென்று திரையைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு குழந்தைகளுடன் பெரியவர்கள் உடன் இருக்க வேண்டியது அவசியம். வயதான காலத்தில் அவர்கள் தான் அரிச்சுவடி கற்றுக் கொள்ளுகிறார்கள். குழந்தைகளில் பலர் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டும், கையில் எதையாவது வைத்து விளையாடிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். விடை தெரிந்த குழந்தைகள் ஆசிரியர் பாடம் நடத்தும் போதே கத்துகின்றன. மற்றவை வாயே திறப்பதில்லை. அவர்கள் திரையில் எழுதி காண்பிப்பதைப் பார்த்து குழந்தைகளால் எப்படி எழுத முடியும்?
ஒன்றுமே அறியாத ஒரு குழந்தைக்கு எழுத்துகளையும், எண்களையும் கற்றுக் கொடுப்பது எளிதானதன்று. எப்படித்தான் நாம் அந்தக் காலத்தில் கற்றுக் கொண்டோம் என்று எண்ணிப் பார்த்தால் நினைவுக்கு வரவில்லை. மனம் இப்போது பெயரக் குழந்தைக்கு சொல்லித் தரத் தெரியவில்லை. அதுவும் இந்த அம்மாக்களுக்கு அதற்கான பொறுமை துளியும் கிடையாது. நிரம்ப கோபப்படுகிறார்கள், குழந்தைகளை அடித்துவிடுகிறார்கள். பள்ளிச் சூழல் என்பதே வேறு. இனிமையானது கற்றல் அங்கே இயல்பாக நிகழும்: ஆனால் இப்போதோ பிள்ளைகளுக்கு பாடம் வேம்பாய் கசக்கிறது. காரணம் உடன் படிக்க நண்பர்கள் இல்லை இரண்டு வருடங்களாக வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார்கள். ஒரு குழந்தை மட்டும் இருந்தால், கூட விளையாட ஒருவரும் இல்லாமையால் அவை மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகிறது.
பள்ளிகள் இருந்த போது எல்லாம் ஒரு சீரான தாள கதியில் போய்க் கொண்டிருந்தது. ஆனால் தற்போது பெரும் கற்றல் இடைவெளி ஏற்பட்டு வருகிறது ஆன்-லைன் வகுப்புகள் பெரும்பாலான குழந்தைகளுக்குக் கிடைக்காத இந்தக் கற்றல் இடைவெளியைச் சமன் செய்வது வெகு சிரமமான காரியம். ஒரு வகுப்பில் பாதி மாணவர்கள் பின் தங்கியவர்களாக இருப்பார்கள். இந்த ஆன்-லைன் வகுப்பில் முழு பாடத்திட்டத்தையும் நடத்த முடிவது இல்லை. திங்கட்கிழமையன்று வகுப்பு எடுக்கும் போது வெள்ளிக் கிழமை நடத்திய பாடத்தை மீண்டும் நினைவு கூறி அதன் பின்னரே அந்த தொடர்ச்சியை நடத்த வேண்டும். இரண்டு நாளில் அத்தனையும் அவர்களுக்கு மறந்து போயிருக்கும். இத்தனைமுறையில் பெரும்பாலானோர் படிப்பின் மீது நாட்டம் இன்றியே இருக்கின்றனர். கவனக்குவிப்பு என்பது அறவே இல்லை. காரணம் அவர்களை திசைதிருப்ப பல்வேறு சமூகக்காரணிகள் உள்ளன. குதிரைக்குத் தண்ணிரைக் காட்டத்தான் முடியுமேயொழிய அதைக் குடிக்க வைக்க முடியாது என்பார்கள். படிப்புக்கும் இது பொருந்தும். நாம் குதிரையின் வாயைப் பிளந்து தண்ணிரைக் குடிக்க வைக்கிறோம். கற்றல் என்பது சுவையாக இல்லை, சுமையாக மாறி விட்டது. ஒப்புக்கு ஒரு மணி நேரம் ஆன்-லைன் பாடத்தை கவனிக்கிறேன் என்று கவனித்து விட்டு மீதி பொழுதையும் கைபேசியில் கண்டதையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நிலைமை மாற வேண்டும். கொடிய இத்தொற்று முற்றிலும் ஒழிந்து போய் பிள்ளைகளின் கல்வி பள்ளிக்கூடத்தில் தொடரவேண்டும். ஆசிரியர் – மாணவர் உறவு, பாசம், மரியாதை, நேசம், அனைத்தும் மீண்டும் மலர வேண்டும். பெற்றோருக்கு விடுதலை வேண்டும்.