ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு,
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பெங்களூரு
துளிர்த்த தொழில்நுட்பங்கள்
1988ல் பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, வளர்ந்த நாடுகள் இந்தியாவின் மீது தொழில்நுட்பத் தடையைக் கொண்டு வந்தன. பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்பங்களையும் கருவிகளையும் இந்தியா இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட தொழில்நுட்பத் தடை பிற நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக ஒரு நேர்மறையான பின்விளைவை இந்தியாவில் ஏற்படுத்தியது. எப்படி?
தடைகளைத் தகர்த்த தொழில்நுட்பங்கள்
தொழில்நுட்பத் தடைக்கு முன்பே, எம் டி சி ஆர் (MTCR-Missile Technology Vontrol Regime) என்று அழைக்கப்படுகிற ‘ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆளுகை’ என்கிற அமைப்பைச் சேர்ந்த ஏவுகணை தொழில்நுட்பத்தில் சிறந்த நாடுகள், ஏவுகணை தொடர்பான தொழில் நுட்பங்களையும் கருவிகளையும் இந்தியா இறக்குமதி செய்வதற்கு தடை விதித்திருந்தன. இதனால் ஏவுகணை தொடர்பான கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட வேண்டிய நெருக்கடி விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டது. இதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்ட ராணுவ விஞ்ஞானிகள் இந்தியாவிலிருந்த கல்வி நிலையங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் ஆய்வுக் கூடங்களை ஒருங்கிணைத்து உள்நாட்டிலேயே ஏவுகணை தொடர்பான தொழில்நுட்பங்களை உருவாக்கி கருவிகளையும் உபகரணங்களையும் தயாரித்தனர்.
சவாலான சிக்கலான உயர் தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே உருவாக்கிப் பழகியிருந்த ராணுவ விஞ்ஞானிகளுக்கு தொழில்நுட்ப இறக்குமதி தடை மிகப்பெரும் சவாலாக இருக்கவில்லை. ஆனால் இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட இந்த தொழில்நுட்பத் தடை ஏவுகணைத் திட்டங்களைத் தாண்டி, அப்போது உருவாகிக் கொண்டிருந்த இலகுரக போர் விமான திட்டத்தையும் பிற இந்தியாவின் தொழில்நுட்ப திட்டங்களையும் பாதித்தது. இலகு ரக போர் விமானம் உள்ளிட்ட பிற திட்டங்களிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை உருவாக்க இது வழிவகை செய்தது என்பதை மறுப்பதற்கில்லை.
மறுக்கப்பட்ட சூப்பர் கம்யூட்டர்
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி ஏவுகணை, எதிரி ரேடார்களின் பார்வையில் இருந்து தப்புவதற்கு வளிமண்டலத்தைத் தாண்டி மேலே பறந்து, வளிமண்டலத்திற்கு உள்ளாக வந்து இலக்கை தாக்கும். அப்படி ஏவுகணை வளி மண்டலத்திற்குள் நுழையும் பொழுது அதிக வெப்பத்தை சந்திக்க நேரிடும். ஏறக்குறைய 3000 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை இருக்கும். எனவே ஏவுகணையின் மூக்கு பகுதியை ஏற்ற விதத்தில் வடிவமைப்பதன் மூலமாக உராய்வு விசையை குறைத்து அதன் மூலம் வெப்ப அளவை குறைக்க முடியும். மூக்கு பகுதியை வடிவமைக்கப் பல சோதனைகளைச் செய்ய வேண்டும். விமானங்களையும் ஏவுகணைகளையும் காற்று இயக்க சோதனைகளைச் செய்ய காற்றுச் சுரங்க சோதனைக்கூடம் (Wind Tunnel Test Facility) தேவை. ஏவுகணை அதிவேகத்தில் வளிமண்டலத்தில் நுழையும் என்பதால் மீமிகை வேக (Hypersonics) காற்று சுரங்க சோதனைக்கூடம் தேவை. இந்தியாவில் அவ்வகை சோதனைக்கூடம் அப்போது இல்லை. இவ்வகை வசதி கொண்ட வெளிநாடுகள் நமது நாட்டு ஏவுகணை பாகங்களை சோதனை செய்ய ஒப்புக்கொள்ளாது. பிறகு எப்படி சோதிப்பது? ஒரு வழி உண்டு.
கணிப்பொறியில் ஒப்புருவாக்க ( Simulation) சோதனைகளின் மூலம் ஏவுகணையின் மூக்கு பகுதியை வடிவமைக்கலாம். இதற்கு அதிக ஆற்றல் கொண்ட கணிப்பொறி (Super computer) தேவை. அமெரிக்க தயாரிப்பான அப்படிப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் CRAYX-MP புதுதில்லியில் வானிலை ஆராய்ச்சி நிலையத்தில் இருந்தது. ஆனால் வானிலை ஆராய்ச்சியை தவிர பிற பயன்பாட்டுக்கு அதை பயன்படுத்த அமெரிக்க ராணுவத் துறையின் அனுமதி தேவை. இந்த அனுமதிக்காக டிஆர்டிஓ நிறுவனத்தின் தலைவர் வி.எஸ்.அருணாசலமும், அப்துல்கலாமும் அமெரிக்காவுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை.
நடந்தது என்ன தெரியுமா? அடுத்த இருபத்தி நான்கு மாதங்களில் இந்தியா சொந்தமாக ஒரு சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது. ஆம், டிஆர்டிஓ இதற்காக அனுராக் (Advanced Numerical Research and Analysis Group-ANURAG) என்கிற ஒரு ஆய்வுக் கூடத்தை ஹைதராபாதில் ஏற்படுத்தியது. அணு விஞ்ஞானி பேராசிரியர் ஜி.வெங்கட்ராமன் தலைமையில் இளம் ராணுவ விஞ்ஞானிகள் குழு, பேஸ் பிளஸ் (PACE+) என்ற சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது. இந்த கணிப்பொறியைக் கொண்டு வடிவமைக்கப்பட்டது தான் அக்னி ஏவுகணையின் மூக்குப் பகுதி. அனுமதி மறுக்கப்பட்ட அமெரிக்க சூப்பர் கம்ப்யூட்டரை விட 20 மடங்கு வேகமாக செயலாற்றும் திறன் கொண்டது இந்திய சூப்பர் கம்ப்யூட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏவுகணை சாதனைகள்
மறுக்கப்பட்ட தொழில் நுட்பங்களை எல்லாம் உள்நாட்டிலேயே மேம்பட்ட தொழில்நுட்பங்களாக உருவாக்கி ஏவுகணைத் திட்டங்களை முன்னெடுத்தனர் இந்திய ராணுவ விஞ்ஞானிகள். இப்படி உருவாக்கப்பட்டவையே அக்னி, ப்ரித்வி, நாக், ஆகாஷ், திரிசூல் ஏவுகணைகள். கப்பல், கட்டிடம், விமானம், ராணுவ டாங்க் உள்ளிட்ட இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் ஒருவகை எனில், நம் நாட்டை நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் இன்னொரு வகை. இப்படிப்பட்ட வான் பாதுகாப்பு (Air Defence) ஏவுகணைகளையும் உருவாக்கி உள்ள தேசம் இந்தியா. ரஷ்யாவுடன் கூட்டுமுயற்சியில் இந்தியா உருவாக்கியுள்ள பிரமோஸ் ஏவுகணை இன்றைய தேதியில் உலகின் மிக வேகமாகப் பறக்கக்கூடிய ஏவுகணை. முத்தாய்ப்பாக, இந்தியா உருவாக்கிய ‘மிஷன் சக்தி’ ஏவுகணை விண்வெளியில் பறந்து கொண்டிருக்கும் செயற்கைக் கோள்களையும் தாக்கும் வலிமை கொண்டது என்பது நாம் எல்லோரும் பெருமைப்பட வேண்டிய தொழில்நுட்பச் செய்தி.
இந்தியாவின் இந்த ஏவுகணைப் புரட்சியில் வி. எஸ். அருணாச்சலம், அப்துல்கலாம் ஆகியோரின் தலைமையில் பல விஞ்ஞானிகள் பங்காற்றியுள்ளனர். ப்ரித்வி திட்ட இயக்குனர் கர்னல் வி.ஜே.சுந்தரம், திரிசூல் திட்ட இயக்குனர் கமோடர் எஸ்.ஆர். மோகன், அக்னி திட்ட இயக்குனர் ஆர்.என்.அகர்வால், ஆகாஷ் திட்ட இயக்குனர் பிரகலாதா, நாக் திட்ட இயக்குனர் என்.ஆர். ஐயர், பிரம்மோஸ் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை, வான் பாதுகாப்பு ஏவுகணை திட்டத்தின்
வி.கே.சரஸ்வத் என பலப்பல ராணுவ விஞ்ஞானிகளின் முன்னோடி முயற்சிகள் இந்திய ஏவுகணை வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை.
ஏவுகணைத் துறையின் வெற்றிக்கு ஒருவகையில் அடித்தளமாக இருந்தது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி. விண்வெளித்துறையில் நிகழ்ந்த புரட்சியையும் அதற்கு பங்களித்த விஞ்ஞானிகளையும் பேசுவோம்.