சமூகப் பார்வை – 11

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

ஆசையின் மொத்த உருவமான நாம், “போதும்” என்று சொல்வது உணவு விஷயத்தில் மட்டும்தான். அதாவது சாப்பிடும் போது வயிறு நிறைந்தவுடன் “போதும்” என்ற வார்த்தை நம்மை அறியாமலேயே வந்து விடுகிறது. உயிர்வாழ உணவு அதி முக்கியம் என்று உணர்ந்திருந்தாலும்கூட, வீடுகளிலும் விருந்துகளிலும் நாம் வீணாக்கும் உணவின் அளவு அபரிமிதமானது. உணவை வீணாக்குதல் என்பது மிகப்பெரிய சமூகக் குற்றம் என்பதை நாம் உணராமலேயே செய்து கொண்டிருக்கிறோம்.

உலக அளவில் உணவு உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. என்றாலும் உணவு வீணடிப்பின் காரணமாக நம்நாட்டில், சுமார் 19.4 கோடி பேர் அன்றாடம் பட்டினியில் வாடுகிறார்கள். உலகப் பசிப் புள்ளிவிவர நாடுகளின் பட்டியலில் (Global Hunger Index)இடம்பெற்றுள்ள 107 நாடுகளில் நாம் 94ஆவது இடத்தில் இருக்கிறோம். (அக்டோபர் 2020இல் வெளியான அறிக்கை)

விவசாயிகளின் கடும் உழைப்பால் உற்பத்தி செய்யும் உணவு தானியங்களும் டன் கணக்கில் வீணாகின்றன. உற்பத்திப் பொருளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான கிட்டங்கி வசதிகள் பெரும்பாலான விவசாயிகளிடம் இல்லை. அதேபோல இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்கில் சேமிக்கப்படும் உணவுப் பொருள்களில் ஆயிரக்கணக்கான டன்கள் மழை, வெயில் மற்றும் வெள்ளத்தால் அழுகியோ அல்லது பூச்சிகளாலும், எலிகளாலும் உட்கொள்ளப்பட்டோ வீணாவது தொடர்கதையாக உள்ளது. இதனைத் தடுப்பதற்கான தீவிர வழிமுறைகள் நம்மிடம் இல்லை. மக்களின் பட்டினி தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை மத்திய அமைச்சர் சி.ஆர்.சவுத்தரி 2019 பிப்ரவரி 5ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பேசுகையில், “ வழங்கவியலாத / நாசமடைந்த நிலையில் 4,135 டன் தானியங்கள்’’ இந்திய உணவுக் கழகத்தின் தானியக் கிடங்கில் இருப்பதாகத் தெரிவித்தார். பின்னர் அவை கால்நடைகளுக்குத் தீவனம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஏலம் விடப்பட்டது.

வீணாகும் உணவு

சுமார் 700 கோடி மக்கள் வாழும் இந்தப் பூமியில் 82 கோடி மக்களுக்கும் அதிகமானோர் போதிய உணவில்லாமல் வாழ்ந்து வருகின்றனர். 2019 ஆம் ஆண்டில் 69 கோடி மக்கள் பசியுடன் போராடியதாக ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புத் தெரிவிக்கிறது. உலகளாவிய அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் 900 மில்லியன் டன்களுக்கும் அதிகமான உணவு வீணாக்கப்படுகிறது. கடைகள், வீடுகள் மற்றும் உணவகங்களில் நுகர்வோர் பெறும் உணவுகளில் 17% குப்பைக்குச் செல்கிறது. இதில் அதிகபட்சமாக வீட்டில் தான் வீணாகிறது என்று ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் வீணாகும் உணவுகள் பற்றிய குறியீடு தெரிவிக்கிறது. உலகம் முழுவதும் வீணாக்கப்படும் உணவின் எடையானது, 2019-20 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உணவு தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், கரும்பு மற்றும் தோட்டக்கலை பொருட்களின் உற்பத்திக்குச் சமம் ஆகும்.

தொண்டு அமைப்பான ‘ராப்’(wrap) அமைப்பு ஐநாவுடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஒவ்வொரு ஆண்டும் வீணாகும் 923 மில்லியன் டன் உணவை, 40 டன் சரக்கை ஏற்றக்கூடிய டிரக்குகளில் நிரப்பினால் 23 மில்லியன் ட்ரக்குகளில் நிரப்பமுடியும். இந்த ட்ரக்குகளை ஒன்றுக்கொன்று தொடும்படி நிறுத்தினால், அதனால் பூமியை ஏழு முறை வட்டமிட முடியும்” என்கிறது. “தாங்களால் சாப்பிட முடிவதைவிட அதிகமாக வாங்கும் வழக்கம் பணக்கார நாடுகளில் மட்டுமே நிலவிய பிரச்சனையாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது கணிசமான அளவு உணவு, “எங்குப் பார்த்தாலும் வீணாகிறது” என்றும் இந்த ஆய்வு கூறுகிறது.

2020 பொது முடக்கக் காலத்தை 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மக்கள் உணவை வீணாக்குவது (2020இல்) 22 % குறைந்தது. ஆனால் பொது முடக்கத்திலிருந்து சற்று வெளியே வந்த நிலையில் வீணாகும் உணவின் அளவு மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. உணவு வீணாவதைத் தடுப்பது குறித்தான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று ஐநா.சபையின் உணவுப் பாதுகாப்பு திட்ட அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில்

உலகளாவிய தனிநபர் மட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் 121 கிலோ உணவு வீணடிக்கப்படுகிறது, ஆப்கானிஸ்தானில் 82 கிலோ, நேபாளத்தில் 79 கிலோ, இலங்கையில் 76 கிலோ, பாகிஸ்தானில் 74 கிலோ மற்றும் வங்கதேசத்தில் 65 கிலோ. இந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு நபருக்கு 50 கிலோ உணவு வீணாகிறது

மேலும், ஐ.நா., அறிக்கையின் படி, இந்திய வீடுகளில் வீணாகும் உணவின் அளவு ஆண்டுக்கு 6.8 கோடி டன்கள் ஆகும். இது அமெரிக்காவில் ஆண்டுக்கு 1.9 கோடி டன்கள், சீனாவில் 9.1 கோடி டன்களாக உள்ளது. ஓட்டல்கள் போன்ற உணவு சேவை நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிலையங்களில் முறையே 5% மற்றும் 2% உணவு வீணாகிறது.

பயன்

உணவு வீணாக்கலை எதிர்த்துப் போராடுமாறும், 2030க்குள் அதைப் பாதியாகக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளுமாறும், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுனெப்) நிர்வாக இயக்குநர் இங்கர் ஆண்டர்சன் உலக நாடுகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். “காலநிலை மாற்றம், இயற்கை மற்றும் பல்லுயிர் இழப்பு, மாசு மற்றும் கழிவுகளைக் கையாள்வது குறித்து நாம் உண்மையில் தீர்வுகாண விரும்பினால், உலகெங்கிலும் உள்ள தொழில் நிறுவனங்கள், அரசுகள் மற்றும் குடிமக்கள், உணவு வீணாவதைக்குறைக்கத் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்,” என்றும் அவர் கூறியுள்ளார். உணவு வீணாவதைத் தடுத்தால் பசுமைக் குடில் வாயு வெளியேற்றம் குறையும், நில மாற்றம் மற்றும் மாசுபாட்டின் காரணமாக நிகழும் இயற்கையின் அழிவு மெதுவாகும், உணவு கிடைப்பதை மேம்படுத்திப் பசியைக் குறைக்கும். கூடவே உலகளாவிய மந்தநிலையின் போது பணத்தை மிச்சப்படுத்தும்” என்றும் தெரிவித்துள்ளார்.

உணவு வீணாதல் என்பது, உணவுப் பொருட்கள் வீணாவதை மட்டுமே குறிப்பதில்லை. அந்த உணவை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட பணம், நீர், உழைப்பு, நிலம் மற்றும் போக்குவரத்து அனைத்தும் வீணாவதை இது குறிக்கிறது. “உணவு வீணாதல் மனிதக்குலம் எதிர்கொள்ளும் மிகப் பெரியதொரு பிரச்சனை,” என்கிறார் நியூயார்க் நகரைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் மேக்ஸ் லா மன்னா.

என்ன செய்யலாம்?

உலகம் முழுவதும் 300 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். எனவே வீடுகளில் உணவு வீணாவதைக் குறைக்க உதவி தேவை என்று ஐ.நா., கூறுகிறது.

உங்களுக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு உணவை மட்டும் வாங்கி வீணாக்காமல் சாப்பிடுங்கள். தேவையான அளவிலான உணவை மட்டுமே வாங்குவதன் மூலம் பிரிட்டனில் சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு 700 டாலர் சேமிக்க முடியும் என்று ராப் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது.

கடைக்கு மளிகைப் பொருட்களை வாங்கச் செல்கிறீர்கள் என்றால் கடந்த முறை வாங்கியுள்ள அனைத்து பொருட்களையும் சமையலுக்குப் பயன்படுத்தி விட்டோமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதன் பின்னர் பொருட்கள் வாங்குங்கள்.

உணவுப் பொருட்களைச் சரியாகச் சேமிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு குளிர்சாதனப் பெட்டியை நன்றாகப் பயன்படுத்தலாம். அதுவும் எந்தப் பொருட்களை அதில் வைக்கவேண்டும் என அறிந்திருத்தல் அவசியம். உருளைக்கிழங்கு, தக்காளி, வெள்ளைப்பூண்டு மற்றும் வெங்காயத்தைக் குளிர்பதன பெட்டியில் வைக்கக்கூடாது. அறையில் நிலவும் தட்பவெப்பத்தில்தான் அவை வைக்கப்பட வேண்டும். கீரை வகைகளைத் தண்ணீரில் வைத்துக் கொள்ளலாம்.

நீங்கள் அதிகமாகச் சமைப்பதால், உணவுகள் மீதமாகுமேயானால், குளிர்பதன பெட்டியில் வைத்திருக்கும் அந்த உணவை உண்டு முடித்த பின்னர் அடுத்த உணவைத் தயாரியுங்கள். வீட்டில் இருக்கும் காய்கறிகளைக் கொண்டு உணவைத் தயார் செய்வது உணவு வீணாவதைத் தடுக்கும்.

மதியவேளைகளில் உங்களோடு வேலை செய்பவரோடு வெளியே ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுவது மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இதற்கு அதிகம் செலவாகும். உணவை வீணாக்குவதற்கும் வழிவகுக்கும். உங்களுக்கான மதிய உணவை நீங்களே எடுத்துச் செல்லலாம்.

விசேஷ நிகழ்ச்சிகளில் நாம் குழந்தைகளுடன் சாப்பிடும்போது குழந்தைக்கென்று தனி இலை ஒதுக்கி உணவை வீணாக்காமல், நமக்கான இலையில் நமக்கும் குழந்தைகளுக்கும் வேண்டிய அளவை மட்டுமே கேட்டு வாங்கிச் சாப்பிடுவதும். வீடுகளில் தேவையான அளவு மட்டும் உணவைச் சமைத்து வீணடிக்காமல் சாப்பிட்டு முடிப்பதும் நமது கடமையாகும். சிறு வயதிலிருந்தே தட்டில் மிச்சம் வைக்காமல் சாப்பிடக் குழந்தைகளைப் பழக்க வேண்டும். சாப்பிடவே முடியாத நிலையில் மீதமாகும் உணவுப் பொருட்களை உரமாக உருவாக்குவதும் நல்லதுதான்.

உணவை வீணாக்காமல் பாதுகாப்பதில் அரசின் கடமை எனப் பார்த்தால், அரசுக் கிடங்குகளில் தானியங்கள் வீணாகும் முன்னரே, அதனை மக்களிடம் கொண்டு சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். தானியங்களைப் பாதுகாக்க விவசாயிகளுக்குப் போதுமான கிட்டங்கி வசதிகள் செய்து தரவேண்டும்.

பொருட்கள் வாங்குவதில், சமைப்பதில், உணவு உட்கொள்வதில் நாம் செய்யக்கூடிய சிறிய மாற்றங்கள் கூடச் சுற்றுச்சூழலில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க உதவும். பல கோடி ஏழை எளியோர்கள் உணவு இல்லாமல் வாடிக் கொண்டிருக்கிற நிலையில் உணவு வீணாவதற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும். நாம் வீணடிக்கும் உணவு அடுத்தவருக்கானது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். வல்லரசு கனவை ஒதுக்கிவைத்துவிட்டுப் பசியில்லாதவர்களைக் கொண்ட தேசமாக உருவாகவேண்டும். அதுதான் தேசத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.  =

(செப். 29 – உணவு வீணாவதைத் தடுப்பதற்கான சர்வதேச விழிப்புணர்வு தினம்)