சமூகப் பார்வை – 39

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

ன்றைக்குப் பெண்கள் அனைத்துத் துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறார்கள். ஆனால் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் அவர்கள் பங்கேற்பின் வேகம் குறைவாகவே உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கு, பெண்களையும், சிறுமிகளையும் அறிவியலில் முழுமையாகப் பங்கேற்க வைக்கவேண்டும் என்பதே உலகளாவிய அறிஞர்களின் கருத்தாக உள்ளது.

பெண்களின் பங்கு

உலகளவில், ஆராய்ச்சியாளர்களில் 33.3 சதவிகிதம் பேர் பெண்கள். செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீனத் துறைகளில் ஐந்தில் ஒருவர் மட்டுமே பெண். யுனெஸ்கோ அறிக்கைப்படி பொறியியல் பட்டதாரிகளில் 28 சதவிகிதமும், கணினி அறிவியல் மற்றும் தகவலியல் துறையில் 40 சதவிகிதமும் பெண் பட்டதாரிகள் உள்ளனர். அறிவியல் ஆராய்ச்சிக்கான நோபல் பரிசு பெற்றவர்களில் மூன்று சதவிகிதம் பேர் மட்டுமே பெண்கள்.

விளைவு

ஆராய்ச்சித் துறையில் பெண்கள் பங்கேற்பு குறைவாக இருப்பதால் எதிர்காலத்தில் புதிய பசுமைப் பொருளாதாரத் துறைகளில் உருவாக்கப்படும், அதிக ஊதியம் பெறும் வேலைகளில் ஆண்கள்தான் ஆதிக்கம் செலுத்துவார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது, உலகம் முழுவதும் STEM துறைகளில் (STEM என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளை ஒருங்கிணைக்கும் கற்றல் மற்றும் மேம்பாட்டிற்கான அணுகுமுறையாகும்.) நிபுணத்துவம் மற்றும் திறமை பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.

பெண் புறக்கணிப்பின் காரணம்

நம் சமூகத்தில் பெண்களுக்கானப் பணி என்பது ஆசிரியர் மற்றும் செவிலியர் பணிகள்தான் என்ற எண்ணம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் என்பது ஆண்களுக்கானது, என்ற ஆண்மனச் சிந்தனை இன்னும் தொடர்கிறது, ‘பெண்கள் அறிவியலில் ஆர்வம் காட்டவில்லை’ என்பது பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படுகிறது. “அறிவியலில் பெண்களின் மீதான இந்த விமர்சனம் ஏன்?” எனக் கேள்வி எழுப்புகிறார் இந்திய வானிலை ஆராய்ச்சியில் பெரும் பங்கு வகித்த பிரபல பெண் விஞ்ஞானி அன்னா மணி. பெண்கள் மீண்டும் மீண்டும் போராடி தங்களை நிரூபித்தவாறு இருந்தாலும் இந்த விமர்சனநிலை மாறவில்லை. அறிவியலில் தங்கள் சாதனைகளை வெளிக்கொணரப் போராடிய பெண்கள் வெளியே தெரிவதில்லை.

இந்தியாவில்

இன்றைக்குப் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடாக இந்தியா உள்ளது. ஆனால், நம் தேசம், பெண் ஆராய்ச்சியாளர்கள் நிறைந்த தேசமாகத்தான் இருந்தது. 1897இல் பிறந்த ஏ.கே. ஜானகி அம்மாள், உலகின் குறிப்பிடத்தக்க இந்திய தாவரவியலாளர். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அந்தக் காலத்திலேயே தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்ணும் இவர்தான். கரும்புகளின் சைட்டோஜெனிடிக்ஸ் மற்றும் புதிய வகைக் கரும்புகளின் இனப்பெருக்கம் பற்றிய ஒரு முன்னோடி ஆராய்ச்சியாளர் இவர். கல்கத்தாவில் 1917இல் பிறந்த அசிமா சாட்டர்ஜி, இந்தியாவில் அறிவியல் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். கரிம வேதியியல் துறையில் சீரிய பணியாற்றியவர்.

1922இல் பிறந்த ராஜேஷ்வரி சாட்டர்ஜி கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த முதல் பெண் பொறியாளர். இந்தியாவில் நுண்ணலைகள் (microwave engineering), உணர் பொறியியலில் (antennae engineering)) முன்னோடியான ஆராய்ச்சிகளை அவர் நிகழ்த்தி இருக்கிறார். பிபா சௌதுரி இந்தியாவின் முதல் பெண் உயர் ஆற்றல் இயற்பியலாளர் மற்றும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச்சின் முதல் பெண் விஞ்ஞானி. மேலும் சி.வி. ராமனுடன் வளிமண்டல இயற்பியல் துறைகளில் பணிபுரிந்த இந்தியாவின் ‘வானிலைப் பெண்’ என்று அழைக்கப்படும் அன்னா மணி மற்றும் ஆனந்திபாய் கோபால்ராவ் ஜோஷி, காதம்பினி கங்குலி, மேரி பூனன், கமலா சோஹோனி, கமல் ரணதிவே போன்ற இந்தியப் பெண்கள் சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் தங்களின் முன்மாதிரியான பங்களிப்புகளை அளித்தவர்கள். ஆனால் இன்று..?

இன்று இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் மொத்த விஞ்ஞானிகளின் எண்ணிக்கையில் 16.6 சதவிகிதம் பேர் பெண்கள் என்று மக்களவையில் அமைச்சர் தெரிவித்தார். “பயாஸ்வாட்ச்” ஆய்வானது 98 பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள ஸ்டெம் துறைகளில் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கையானது இந்தச் சதவிகிதத்தை உறுதிப்படுத்தியது. ஐஐடியில் சேரும் மாணவர்களில் 10 சதவிகிதத்தினரே பெண்கள். இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களில் 6 சதவிகிதம் பேர் மட்டுமே பெண்கள் என்று இந்தியப் பல்கலைக்கழகங்களின் சங்கத்தின் பொதுச் செயலாளர் பங்கஜ் மிட்டல் கூறுகிறார். சுதந்திரத்திற்குப் பிந்தைய பெண் விஞ்ஞானிகளின் பங்களிப்புகள் பெரும்பாலும் கண்டுகொள்ளப்படவில்லை. சமீபகாலமாகத்தான் அறிவியல் சார்ந்த துறைகளில் முன்னோடியாக இருக்கும் பெண்கள் அங்கீகாரம் பெறத் தொடங்கியுள்ளனர்.

என்ன செய்யலாம்

எதிர்காலத்தில் இந்தத் தேசம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய, பெண்களையும் பெண் குழந்தைகளையும் முழுமையாக அறிவியல்ரீதியான ஆய்வில் உட்படுத்துவது மிகவும் அவசியமானது. அடுத்தத் தலைமுறை பெண் விஞ்ஞானிகளைத் தயார்படுத்தும் சவால் நிறைந்த பணியை நாம் கையிலெடுக்கவேண்டும். அதற்குச் செய்யவேண்டியது என்ன?

பாலின சமத்துவமே யுனெஸ்கோவின் உலகளாவிய முன்னுரிமையாகும். STEM  துறைகள் தேசியப் பொருளாதாரங்களுக்கு முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், இதுவரை பெரும்பாலான நாடுகள், இதில் பாலின சமத்துவத்தை அடையவில்லை. பெண்கள் தகுதி பெற்றிருந்தாலும் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. சீனப் பெண் விஞ்ஞானிகளில் முப்பத்தி இரண்டு சதவிகிதம் பேர், “நாங்கள் வேலை தேடும்போது ஆண்களை மட்டுமே நிர்வாகத்தினர் தேர்ந்தெடுத்தார்கள்” என்றனர். வளரும் நாடுகள் பலவற்றில் இதே நிலைதான். எனவே பாரபட்சமான பணியமர்த்தல் நடைமுறைகள் கைவிடப்படவேண்டும். இயற்கையைப் பெண்மையோடும், அறிவியலை ஆண்மையோடும் தொடர்புபடுத்தும் மறைமுகமான சார்புகளை விட்டு நாம் விலகவேண்டும்

PISA (சர்வதேச மாணவர் மதிப்பீட்டிற்கான திட்டம்) மற்றும் TIMSS (சர்வதேச கணிதம் மற்றும் அறிவியல் ஆய்வுகளின் போக்குகள்) போன்ற தரப்படுத்தப்பட்ட ஆய்வுகள் அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் சிறந்து விளங்குவதாகச் சொல்கின்றன. ஆனால் ஆராய்ச்சியில் பங்கேற்பு குறைவாக உள்ளது. பாலினத்தைக் கருத்தில் கொண்டு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நீக்கப்படவேண்டும். அதற்கு, பாலின சமத்துவக் கல்வியானது பள்ளி வகுப்பறைகள் முதல் பெருநிறுவனங்கள் வரை பலப்படுத்தப்பட வேண்டும்.

இரண்டாவதாக, அறிவியல் துறைகளில் நெகிழும் அணுகுமுறை அவசியம். உலகளவிலான பெண் ஆராய்ச்சியாளர்களில், 33 சதவிகிதம் பேர், தங்கள் முதல் குழந்தைக்குப் பிறகு முழுநேர ஆராய்ச்சி வாழ்க்கையை விட்டு வெளியேறுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆனால் “குழந்தைப் பராமரிப்புக்கு போதிய வாய்ப்பு இருந்தால், நாங்கள் வேலைக்குத் திரும்பி வருவோம்” என்று வெளியேறியவர்களில் முக்கால்வாசி பேர் கூறினர். எனவே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள பெண்களைத் தக்கவைத்துக்கொள்ள ஆராய்ச்சி நிறுவனங்கள் குழந்தைப் பராமரிப்பு வசதிகள் மற்றும் நெகிழ்வான பணி ஏற்பாடுகளை மேம்படுத்தவேண்டும்.

மூன்றாவதாக, வீட்டு வேலைகள் பெண் ஆராய்சியாளர்களை, தொழிலை விட்டு வெளியேறும் நிலைக்கு நிர்பந்திக்கிறது. நேச்சர் இதழின் ஆய்வுப்படி திருமணமான பெண் விஞ்ஞானிகளில், 30 சதவிகிதம் பேர் பெரும்பாலான வீட்டு வேலைகளைச் செய்வதாகக் கூறினர். ஆனால் ஆண்களில் இது ஆறு சதவிகிதம் மட்டுமே. பெண்கள் தங்கள் குடும்பத்தின் பொறுப்புகளை உள்ளடக்கியிருப்பதால், தொடர்ந்து சிந்திக்கும் ஆராய்ச்சி வாழ்க்கையிலிருந்து விலகுகிறார்கள். பெண்களுக்குத் தேவைப்படும் கூடுதல் தொழில்முறை உதவிகள் மற்றும் ஆதரவான உள்கட்டமைப்பு ஆகிய இரண்டும் வலுப்படவேண்டும்.

நான்காவதாக, சிறந்த பெண் விஞ்ஞானிகளை முன்மாதிரிகளாக நாம் வெளியுலகிற்குக் காண்பிக்கத் தவறிவிட்டோம். இதனால் இளம் பெண்கள் ஆர்வத்துடன் ஆராய்ச்சித்துறைக்குள் வருவதில் தேக்கம் ஏற்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும். சாதனைப் பெண்கள் மீது ஊடக வெளிச்சம் படவேண்டும்.

ஐந்தாவது, ஆராய்ச்சித் துறைகளில் பெண்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்ற குமுறல் உள்ளது. இந்த நிலை மாறவேண்டும். பெண்கள் உற்சாகத்துடன் ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கவேண்டும்.

ஆறாவதாக, அறிவியலில் ஒரு பெண்ணின் ஆர்வத்திற்குச் சிறுவயதில் வழங்கப்படும் ஆதரவும் ஒத்துழைப்பும் மிக அவசியம். வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆகியோரால் மட்டுமே வழங்க இயலும். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான ஆதரவான சூழலை குடும்பங்களில் உருவாக்கி, அதிக அதிகாரமளிக்கும் நெறிமுறைகளை ஊக்குவிக்க வேண்டும். “பெண்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இருந்தால் அவர்கள் நம்பமுடியாத சாதனைகளை நிகழ்த்துவார்கள்” என்கிறார் வானியலாளர் லிசா ஹார்வி ஸ்மித், இவர் ஆஸ்திரேலிய அரசின் அறிவியல் தொடர்பு பயிற்சி பேராசிரியர்.

மாணவிகளே தயாராகுங்கள்..

“ஆராய்ச்சி செய்யும் பெண்களுக்கு, இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட இடத்தை விட, சிறந்த இடம் வேறெது இருக்கமுடியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார் அறிவியல் தொடர்பாளர் ஆஷிமா டோக்ரா. உண்மைதான். இன்றைக்கு இந்த தேசத்தில் எந்த ஒரு துறையாக இருந்தாலும் ஆண்களுக்கு நிகராகப் போட்டியிடமுடியும்; தலைமைப் பொறுப்பு வகிக்கமுடியும்; “மாணவிகளே உங்களிடம் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்கவேண்டும். ஏதோ ஒன்றை சாதிக்கும் திறன் நம்மிடம் இருக்கும் என்கிற நம்பிக்கையுடன் அதைச் சாதித்துக்காட்டவேண்டும்,” என்கிறார் நோபல் பரிசு வென்ற மேரி கியூரி. எனவே. மாணவிகளே அறிவியல் மீது பிடித்தம் கொள்ளுங்கள்.

பரிவு, உணர்திறன், ஒரே நேரத்தில் பலதரப்பட்ட பணிகளைச் செய்யும் திறன், சிறப்பிக்கவேண்டும் என்கிற மன உறுதி ஆகியன உங்களிடம் (பெண் / மாணவியரிடம்) இயற்கையாகவே இருக்கும் பண்புகள். எனவே, மாணவிகளே! இந்தியாவுக்குள் நீங்கள் செய்ய வேண்டிய கடமை நிறையவே உள்ளது. உதாரணமாக, பல இந்திய நகரங்களின் சுற்றுச்சூழல் சீர்குலைவில் சிக்கித் தவிக்கிறது. பெண்கள் இரத்தசோகையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் இருக்கிறார்கள், இதையெல்லாம் கரிசனையோடு சரி செய்ய அதிக எண்ணிக்கையிலான பெண் ஆராய்ச்சியாளர்கள் தேவை. எனவே அறிவியல் ஆராய்ச்சிக் கனவோடு உங்கள் கல்வியைத் தொடருங்கள். அனைத்தையும் விடப் பெண்களுக்கு அறிவியல் தேவை, அறிவியலுக்குப் பெண்கள் தேவை என்பதனை அனவைரும் முழுமையாக உணர்தல் அவசியம்.

(பிப். 11, அறிவியலில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச தினம்)