வெற்றியோடு விளையாடு! – 15
டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்
முத்து சரவணவேல் திருப்பூரில் கார்மெண்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். முதுகலை மாஸ் கம்யூனிகேஷன் முடித்தவர். பத்திரிக்கைத் துறையில் அதிகமான ஆர்வம் கொண்டவர். பத்திரிகைகள் தொலைக்காட்சிகளிலும் சிறிது காலம் பணிபுரிந்து இருக்கிறார். ஆனாலும் அப்பாவுடைய பிஸினஸை பார்க்க வேண்டும் என்ற காரணத்திற்காக கார்மெண்ட்ஸ் நிறுவனத்தை கவனித்து வருகிறார்.
தன்னுடைய நிறுவனத்தை பல நிறுவனங்களுக்கு முன்மாதிரி நிறுவனமாக மாற்றிக் காட்டியவர். பல புதுமைகளை கடைப்பிடித்து வியாபாரத்தை விஸ்தரித்திருக்கிறார்.
மாஸ் கம்யூனிகேஷன் படித்துவிட்டு சினிமாவில் களம் இறங்க நினைத்தபோது, பத்திரிக்கை துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதில் அவருக்குள் உருவானது தான்
பொதுமக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு. அவர்களது எண்ண ஓட்டத்தை படம் பிடிக்கும் நுட்பம் ஓரளவு புரிந்தது. அவர்களது மனதை படிக்கும் லாவகம் வசப்பட்டது. அதை வெளி உலகிற்கு, சமூகத்திற்கு, கொண்டு சென்று மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதே தன் குறிக்கோளாக அமைத்துக் கொண்டார்.
மக்களின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் தேர்தல் முடிவுகளை கணிப்பதில் ஆர்வம்.
அரசியல் என்பது நம்முடன் பயணிக்கும் மிக முக்கியமான கருவி. ஏழை நடுத்தரமக்களின் வாழ்வு வளர்ச்சி பெற ஏன் இத்தனை யுகம் என்ற கேள்விகள் என்னுள்?
அரசியல் தேர்தல் நேரத்தில் இவரது கணிப்பு மிகச் சரியாக இருந்திருக்கிறது. கடந்த முறை தமிழக தேர்தல் தற்போது நடந்த போதும், ஐந்து மாநில தேர்தல்களிலும் கூட இவரது கணிப்புகள் மிகச் சரியாக இருந்தன.
இது எப்படி உங்களுக்கு சாத்தியமாகிறது? என்று கேட்டால் மறுபடியும் தான் படித்த மாஸ் கம்யூனிகேஷன் படிப்பையே சொல்கிறார். மேலும் மக்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ‘மக்கள் எந்த அலைவரிசையில் சிந்திக்கிறார்கள்?’ என்பதை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக சிலரிடம் பேசி தெரிந்து கொள்ள முடியும்.
அந்த வகையில் இன்று மக்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்? என்பதை பத்திரிக்கைத் தகவல்கள், தொலைக்காட்சி சேனல்களில் வரும் செய்திகள், என்று பலவாறு அலசி ஆராய்ந்து இந்த முடிவுகளை என்னால் எடுக்க முடிகிறது என்கிறார்.
அதிலும் ஏதோ ஒரு மாநிலத்தில் நடக்கும் தேர்தல் முடிவுகளை இங்கே தமிழ்நாட்டில் அமர்ந்து கொண்டு சொல்லும் அளவிற்கு நுட்பமாக செயல்படுகிறார். இன்று இளைஞர்கள் எது மாதிரியான அரசாங்கத்தை விரும்புகிறார்கள்? இளைஞர்களின் மனம் எந்த நிலையில் இருக்கிறது? கிராமப்புற மக்களின் நிலை என்ன? எந்த மாதிரியான தலைவர்களை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகளை முன்னிறுத்தியே எனது தேர்தல் கணிப்புகள் அமைகின்றன. அந்த அடிப்படையிலேயே தேர்தல் முடிவுகளை என்னால் கணிக்க முடிகிறது என்கிறார் முத்து சரவணவேல்.
‘‘அது சரி வருகின்ற தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்?’’ என்ற கேள்விக்கு மக்களின் நாடி பிடித்து பார்க்க இன்னும் சில நாட்கள் வேண்டும்.
தேர்தல் நெருங்க நெருங்க மக்களின் மனநிலையில் மேலும் சில மாற்றங்கள் நிகழலாம்.
தமிழகத்தில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படக்கூடும், அதில் ஐயமில்லை.
அது பெரிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பதால் இப்போதைக்கு பாராளுமன்ற தேர்தல் முடிவுகளை கணிக்க முடியாது.
(மார்ச் முதல் வாரம் ஓரளவு கணிக்க முடியும். மார்ச் இறுதி வாரத்தில் முழுமையாக கணித்து விடலாம்’ என்கிறார்)
இதற்கு மேல் இதில் ஒரு கேள்வி கேட்டால் அது அரசியல் கட்டுரையாகிவிடும்
என்பதால் ஆளுமைச் சிற்பி இத்துடன் நிறுத்திக் கொள்கிறது.
எந்த துறையில் வேண்டுமானாலும் இளைஞர்கள் ஜெயிக்கலாம் என்பதற்கு இரண்டு துறைகளிலும் ஜெயித்திருக்கக்கூடிய முத்து சரவணவேல் முன்னுதாரணமாக இருக்கிறார்.
இரண்டு துறை களிலும் இன்னும் வெற்றி பெற ஆளுமைச் சிற்பி வாழ்த்துகிறது.