சமூகப் பார்வை – 36

திரு. ப.திருமலை மூத்த பத்திரிகையாளர்

ஷ்டப்பட்டுப் படித்தால்தான் வருங்காலத்தில் நீ பெரிய ஆளாகமுடியும். இல்லேன்னா மாடு மேய்க்கத்தான் போகணும்” என்ற மறைமுக அச்சுறுத்தலையும், “உன்னைச் சுற்றி நடக்கிறதை எதுவும் கண்டுக்காதே..நமக்கு எதுக்குடா அந்த வம்பெல்லாம்…” எனச் சமூக அக்கறையின்மையையும் தான் குழந்தைகளுக்கு இன்றைக்கு நாம் சொல்லிக்கொடுக்கும் பால பாடமாக இருக்கிறது. இதற்கு மத்தியில் குழந்தைகள் மீதான வன்முறைகளும், பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டே போவது வாழ்வின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறது. எதிர்காலம் குறித்த அச்சத்தை அதிகரிக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன? யோசித்துப்பாருங்கள். நாம் குழந்தைகளை “உருவாக்க” முயல்கிறோமே தவிரக் கொண்டாடத் தயாராக இல்லை என்பதுதான்.

குழந்தைகள் தினத்தை (நவ.14) ஒரு நாள் கொண்டாட்டத்தோடு முடித்துக் கொள்கிறோம். குழந்தையின் பிறந்தநாளை கேக் வெட்டி, கேக் ஊட்டி, பரிசு கொடுத்து அன்றைய தினம் மட்டும் அனுசரிக்கும் நாளாக்கிவிட்டோம். ஆனால் குழந்தைகள் நாள்தோறும் கொண்டாடப்பட வேண்டியவர்கள். சிறப்பிக்கப்படவேண்டியவர்கள். ஆனால் நாம் அவர்களிடமிருந்து விலகிப் போய்க் கொண்டிருக்கிறோம். உடனே, “இதற்குக் குழந்தைகள்தான் காரணம்” என அவர்கள் மீது பழியைத் தூக்கிப் போடாதீர்கள். அதற்குப் பதிலாக நாம், நம்மை மாற்றிக்கொள்வது எப்படி என யோசிப்போம். நம் குழந்தைகள்தான் நம் எதிர்கால வளம்.

குழந்தை – பெற்றோர் நெருக்கம் குறைவதற்கான காரணங்கள்

  1. தொலைந்து போன கூட்டுக்குடும்ப முறை: கூட்டு குடும்ப முறையானது அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வினைத் தந்தது. ஆனால் இன்று கணவன், மனைவி, குழந்தைகள் எனக் குடும்பம் சுருங்கிவிட்டது. இது, முந்தைய தலைமுறைகளின் அனுபவங்களை, பாரம்பரியங்களைக் குழந்தைகள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பில்லாத சூழலை உருவாக்கிவிட்டது. இது பல உறவுகளை அறியவிடாமல் செய்ததோடு, தாத்தா, பாட்டியின் வாஞ்சையுடன் கூடிய அரவணைப்புக்கும், அனுபவங்களை அறிதலுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
  2. பெற்றோருடனான இடைவெளி: தற்போது கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். அதனால், குழந்தைகள் பெற்றோரிடமிருந்து விலகியே இருப்பதைக் காணமுடிகிறது. இது பல வழிகளில் குழந்தைகளின் மனதை, சூழலைப் பாதிக்கிறது. பள்ளிவிட்டு வரும் குழந்தை, “அம்மா நான் பர்ஸ்ட் மார்க் வாங்கிவிட்டேன்” என உற்சாகமாகச் சொல்லும் சூழல், இன்றைக்குக் குழந்தைக்கு இல்லை.
  3. தொழில்நுட்ப வேகம்: இன்றைக்கு மொபைல், டேப் எனக் குழந்தைகளுக்கு அணுக்கமான தொழில்நுட்ப சாதனங்கள் ஏராளம். சமூக ஊடகங்கள் குழந்தைகளுக்கு வெவ்வேறு கலாச்சாரங்கள் மற்றும் கருத்துக்களைச் சொல்லிச் செல்கிறது. இதுவே வாழ்க்கை எனக் குழந்தைக்கு ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சக நண்பர்களுடனான நெருக்கம் குழந்தைக்குத் தேவைப்படவில்லை.

பெற்றோர் – குழந்தை உறவு வலுப்பட

பெற்றோர் – குழந்தை உறவு என்பது இருவழிப் பாதை என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இரு தரப்பினருக்கும் பரஸ்பர அன்பும், புரிதலும் இருக்கவேண்டும். இதைத்தான் “பாசிட்டிவ் பேரன்டிங்” என்கிறார்கள். அதற்குப் பெற்றோர் என்ன செய்யவேண்டும்?

  1. நீங்களே மதிப்பிடாதீர்கள்: “நம்ம குழந்தையால் இதுதான் முடியும்” என நீங்களே மதிப்பிடாதீர்கள். ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்திறமை இருக்கும். உங்கள் குழந்தையின் திறமையை அடையாளம் காணுங்கள். உங்கள் குழந்தையை நீங்கள் புரிந்துகொண்டு, குழந்தை விரும்புவதைக் கொடுங்கள், உதாரணமாக, உங்கள் குழந்தை டாக்டர் ஆக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், ஆனால் அவன்/அவள் நீச்சலில் ஆர்வமாக இருக்கிறார் என்றால், குழந்தையைச் சிறந்த நீச்சல்வீரராக உருவாக ஊக்கமளியுங்கள்.
  2. ஒப்பீடு செய்யாதீர்கள்: உங்கள் குழந்தையை யாருடனும் ஒப்பிட்டுச் சொல்லாதீர்கள், ” உன் கூடப் படிக்கிற ரமேஷ் என்னமா படிக்கிறான்” என்றோ “நீ அக்காவை மாதிரி மார்க் எடுக்கல்லைன்னா சாதாரணப் பள்ளியில் தான் சேர்ப்போம்” என்பது போன்று ஒப்பிட்டுப் பேசி, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தாதீர்கள். இந்த உலகில் எந்த ஒரு தனிமனிதனும் ஒரே கருத்து, ஒரே ரசனையுடன் இருப்பதில்லை. ஒரு பெற்றோரின் இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும் ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது.
  3. 3 குழந்தையை அறிந்து கொள்ளுங்கள்: படி,படி.. எனக் குழந்தையை இம்சிக்காதீர்கள். கல்வி முக்கியம். கல்வியானது வாழ்க்கையின் முக்கியமான ஒரு பகுதி என்று சொல்லிக்கொடுங்கள். உங்கள் குழந்தைக்கு என்ன பிடிக்கும்? உங்கள் குழந்தையால் என்ன செய்யமுடியும்? உங்கள் குழந்தையின் பலம் என்ன? உங்கள் குழந்தையின் பலவீனம் என்ன? உங்கள் குழந்தையின் கனவு என்ன? முதலில் உங்கள் குழந்தையைப் புரிந்து கொள்ளுங்கள், அவர்கள் தவறாக இருந்தால், அவர்களைத் திருத்த முயற்சி செய்யுங்கள். நீங்கள் அவர்களை நேசிக்கவில்லை என்றால் அவர்களிடமிருந்து நீங்கள் அன்பை எதிர்பார்க்கமுடியாது. உங்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடம் எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் உங்களிடமிருந்து வருகிறார்கள், உங்களுடைய அனைத்தையும் திரும்பச் சொல்கிறார்கள்.. செய்கிறார்கள்.
  4. முயற்சிகளுக்கு ஊக்கம் கொடுங்கள்: குழந்தை ஒரு படம் வரைகிறாள் என்றால், திருத்தங்கள் சொல்லுங்கள். அதைவிடுத்து “படிக்கிறதை விட்டுட்டு இதெல்லாம் தேவையா” என விமர்சிக்காதீர்கள். அவர்களுடைய முயற்சிகளுக்கு ஒருபோதும் முட்டுக்கட்டைப் போடாதீர்கள். தேவையில்லாத குத்தல் பேச்சுக்கள், கேலி, விமர்சனம் இவை எல்லாம் குழந்தைகளுடைய சிந்தனையை மழுங்கடிக்கும்.
  5. நீங்களும் ஈடுபடுங்கள்: பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு விருப்பமான கதை புத்தகம், காமிக்ஸ் புத்தகம் போன்றவற்றைக் குழந்தையுடன் உட்கார்ந்து நீங்கள் வாசியுங்கள். இதன் தொடர்ச்சி, குழந்தையைப் பாடபுத்தகத்தில் கவனம் செலுத்த வைக்கும். அதுபோல “நீ ஹோம்ஒர்க் செய். நான் பக்கத்தில் இருக்கிறேன்” எனச் சொல்லிவிட்டு நீங்கள் மொபைலை பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. நீங்களும் ஏதாவது வாசித்துக் கொண்டிருக்கலாம்.
  6. கேள்வி கேட்க அனுமதியுங்கள் : குழந்தைகள் கேள்வி கேட்டால், “அது அப்படித்தான்” என முற்றுப்புள்ளி வைக்காதீர்கள். கேள்வி கேட்கும் திறனை வளர்த்துக் கொள்ளும் குழந்தைக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்கின்றன ஆய்வுகள்.
  7. வழிநடத்துங்கள்: குழந்தைகளை அடித்துத் திருத்தலாம் என நினைக்காதீர்கள். பெற்றோரால் ஆக்ரோஷமாக நடத்தப்படும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்ரோஷமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, புரிய வையுங்கள். அது கதை மூலமாகக்கூட இருக்கலாம். “அடுத்தத் தெருவில சுரேஷ் என்கிற பையன் இருந்தான். அவன் அம்மா அப்பா பேச்சைக் கேட்காமல் நிறையச் சாக்லெட் சாப்பிட்டான். பல் எல்லாம் சொத்தையா போச்சு” என்று சொல்லும் கதைகள், அடித்துத் திருத்துவதைவிடப் பல மடங்கு படிப்பினையை ஏற்படுத்தும். இது குழந்தையின் அறிவையும் பெருக்கும். அதுபோலக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான வழிகளைச் சொல்லிக்கொடுங்கள். உன்னை யாரையும் தொட அனுமதிக்காதே என்று கூறுங்கள். “குட் டச்”, “பேட் டச்” என்றில்லாமல் “நோ டச்” என்று சொல்லிக்கொடுங்கள்.

மாற்றம் வேண்டாம்: குழந்தையிடம் ஒரு நாள் ஒருவிதமாகவும், அடுத்த நாள் வேறு விதமாகவும் நீங்கள் எதிர்வினையாற்றினால், அது அவர்களுக்குக் குழப்பமாக இருக்கும். குழந்தைகளை ஒரே மாதிரியாகக் கையாள்வதும் முக்கியம். ஒரு நாள் “அந்நியனா”கவும் மறுநாள் “அம்பி”யாகவும் மாறாதீர்கள்.

  1. எரிச்சலடையாதீர்கள்: அவ்வப்போது எரிச்சலூட்டும் ஒன்றை குழந்தை செய்யும்போது, உங்கள் கோபமும் விரக்தியும் கூடும். எரிச்சல் எட்டிப்பார்க்கும். அப்போது அமைதியாகச் சொல்லித் திருத்த முயற்சி செய்யுங்கள். “வா.. கேரம் விளையாடலாம்” என உங்களுக்கும் குழந்தைக்கும் பிடித்த பொதுவான விஷயங்களில் கவனத்தைத் திருப்புங்கள்.
  2. சலிப்படையாதீர்கள்: குழந்தைகள் நீங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளவில்லையேன்றால். சலிப்படைந்து “எனக்கு டயர்டாக இருக்கு நாளைக்குப் படிக்கலாம்” என்று ஒத்திப்போடக் கூடாது. “அம்மாவுக்கே தெரியல்ல. பாடம் ரொம்பக் கஷ்டமோ” எனக் குழந்தைகளும் மலைத்து விடுவார்கள். இது ஒருவிதமான பாதுகாப்பில்லாத மனநிலையை அவர்களுக்குத் தந்துவிடலாம்.
  3. குழந்தையுடன் பேசுங்கள்: எப்போதும் குழந்தையுடனான உரையாடலைத் தொடருங்கள். அதற்காகப் பெரியபெரிய விஷயங்களைப் பேசவேண்டும் என்றில்லை. உதாரணமாக, கையை ஏன் சோப்பு போட்டுக் கழுவவேண்டும் எனக் கூறுங்கள். தனக்கு அறிமுகமில்லாதவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் எனச் சொல்லுங்கள். வீட்டுக்கு வந்த விருந்தினர்களை எப்படி வணக்கம் சொல்லி வரவேற்கவேண்டும் எனக் கற்றுக் கொடுங்கள்.

12 நேர்மறையாக இருங்கள்: குழந்தையின் நடத்தையில் எப்போதும் குறைகளையே தேடாதீர்கள். விளையாட்டில் பரிசு வாங்கிவந்தால் படிப்பில் வாங்கவில்லையே எனக் குறைகூறாதீர்கள். இந்த விளையாட்டில் இவர்களெல்லாம் சாதித்திருக்கிறார்கள்.. நீயும் அதுபோலச் சாதிக்கவேண்டும் என நேர்மறையாகப் பேசுங்கள். இதுபோன்ற தருணங்களில் ஏதாவது பரிசு கொடுங்கள். பிடித்த உணவைச் செய்து கொடுங்கள்.

13 தொடர்ந்து கண்காணியுங்கள்: நல்ல பள்ளியில் சேர்த்துவிட்டோம் என்பதோடு திருப்தி பட்டுக்கொள்ளாதீர்கள். அந்தச் சூழல் குழந்தைக்கு எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முயற்சியுங்கள்.

14 குழந்தை முன் கவனம்: “குழந்தையின் முதல் பள்ளி, பெற்றோரின் மடி” என்பதை மறந்து விடாதீர்கள். உதாரணமாக, நீங்கள் சீரியலிலேயே மூழ்கியிருந்தால் குழந்தையும் அதையே பின்பற்றும். குழந்தை உங்களிடமிருந்துதான் கற்றுக் கொள்கிறது. எனவே, குழந்தைகள் முன் கவனமாக இருங்கள், நீங்கள் நடந்து கொள்ளும் விதம், உங்கள் தேர்வுகள், உங்கள் ரசனைகள் போன்ற அனைத்தையும் உங்கள் குழந்தை கவனித்துக் கொண்டு இருக்கும். நீங்கள் பேசுவதும், செய்வதும் குடும்பத்துக்கும் உங்களுக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். அதைப்பார்க்கும் குழந்தைகள் “இப்படிதான் இருக்கவேண்டும்” என்பதை உணர்வார்கள்.

15 வாசிக்க வையுங்கள்: வாசிப்பது சிறந்த பழக்கம். வாசிப்பு மட்டுமே தன்னம்பிக்கையைத் தரும்; ஆளுமைகளாக உருவாக்கும். இதனை ஒரு கடமையாகச் செய்யுங்கள். நல்ல புத்தகங்கள், இதழ்கள் வாங்கிக் குழந்தைகளுக்குப் பரிசளியுங்கள். ஆரம்பத்தில் வாசிக்க வைக்க சிரமமாக இருந்தாலும், வளர்ந்தபின்னர் உங்கள் குழந்தைகள் இதை உணர்வார்கள். காலம் முழுக்க உங்களுக்கு நன்றி கூறுவார்கள்.

குழந்தைகளை தெய்வமாகவும், தேவதைகளாகவும் கொண்டாடவேண்டியதில்லை. அவர்களை நம்பிக்கைமிக்க மனிதர்களாக வளர்த்தெடுப்பதே அவசியம். குழந்தைகளுக்கான சுய சிந்தனையும் பாதுகாப்பும் மிக மிக முக்கியம். அதுபறிபோனால் எதிர்காலம் இருண்டகாலமாகிவிடும்! வாங்க.. குழந்தைகளைக் கொண்டாடுவோம்.. =