வெற்றியோடு விளையாடு!  – 12

டாக்டர். ஆதலையூர் சூரியகுமார்

ரு நாள் நமது வாழ்க்கை நமக்குப் பிடித்த மாதிரி மாறும் அது நாளையாகக் கூட இருக்கலாம்’ என்று நம்பிக்கையோடு பேசத் தொடங்குகிறார் குரு பிரசாத். பிறந்து வளர்ந்தது பின்னலாடை நகரமான திருப்பூரில்.  தற்போது கோயம்புத்தூரில் பணிபுரிகிறார்.

படித்தது என்ஜினியரிங். ஆனால்,  சாதித்திருப்பது நிதித் துறையில். ‘‘பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவுடன்  மேற்கொண்டு என்ன படிப்பது?  என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். அப்போது எல்லோரும் என்ஜினியரிங் நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள்.  என்ஜினியரிங்
படித்தால்தான் வேலை கிடைக்கும். அதுதான் கௌரவம் என்று போய்க் கொண்டிருந்த சீஸன் அது. நானும் அப்படியே என்ஜினியரிங் சேர்ந்தேன். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றேன்.‌ உடனடியாக  கேம்பஸ் இண்டர்வியூவில் வெற்றி பெற்றேன்.

அந்த வகையில் படித்து முடித்த கையோடு வேலையும் கிடைத்தது.  டிவிஎஸ் சர்வதேச நிறுவனம்.  சர்வதேச நிறுவனத்தில் வேலை செய்வது என்பதே பெருமையாக இருந்தது.  ஆனாலும் உள்ளுக்குள் எனது மனம் வேறு ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டிருந்தது.  ‘நீ சாதிக்க வேண்டிய துறை வேறு’ என்று என் மனம் என்னிடம் பேசியது.  நிதி சம்பந்தமான கட்டுரைகள் படிப்பதும், நிதி சம்பந்தமாக பேசுவதும் எனக்கு பிடித்தமானதாக இருந்தது. எனவேதான் டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து விலகி மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தேன்’’.

முதலில் சாதாரண  நிலையிலான அலுவல்கள்தான் இவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனால்,
இவருடைய நிதி சம்பந்தமான ஆர்வமும் தன்னூக்கமும்   அவர் பணிபுரியும் நிறுவனத்தின் மேல் அதிகாரிகளை வெகுவாகக் கவர்ந்தது.  அவர்கள் அடுத்தடுத்து கொடுத்த டார்கெட்டுகளை எல்லாம் கொடுத்த தேதிக்கு முன்பாகவே முடித்துக் கொடுத்தது அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எனவே அவருக்கு அடுத்தடுத்து புரமோஷன்கள்.  சேர்ந்த ஒன்றரை ஆண்டுகளில்  ‘வளர்ச்சி மேலாளர்’ அளவுக்கு உயர்ந்திருக்கிறார்.

தன்னுடைய இலக்குகளைக் கவனமாக தேர்ந்தெடுத்து  செயல்படுவதால் அவருடைய உழைப்புக்கு  நிறுவனம் பலமுறை விருதுகள் கொடுத்துப் பாராட்டி இருக்கிறது.

நீங்கள் மிகவும் ரிசர்வ் டைப் என்று சொல்கிறார்களே!  நிதித் துறையில் சாதிக்க வேண்டும் என்றால் நல்ல பேச்சுத் திறமை அவசியம்.  எப்படி உங்களால் இதை சாதிக்க முடிந்தது?

உண்மைதான். ஆனால் எப்போது பேச வேண்டுமோ அப்போது பேசி விடுவேன்.  எங்கே பேச வேண்டுமோ அங்கே மௌனம் சாதிக்க மாட்டேன்.  நண்பர்கள், உறவினர்கள், புதியவர்கள் என்று ஒவ்வொருவரை அணுகும்போதும் ஒவ்வொரு விதமாகப் பேச வேண்டும்.

யாரிடம் என்ன பேச வேண்டும் என்று முன் தயாரிப்புடன் செல்வதால் தேவையற்ற பேச்சுக்கள் பேசாமல் இருப்பது உங்களுக்கு மௌனம் போலத் தெரியலாம்.  மௌனத்தால் நிறையப் பேச முடியும். ஆனால்,  நிறையப் பேசுவதால் ஒரு மௌனத்தை சமப்படுத்தி விட முடியாது.  மக்களைத் தொடர்பு கொள்வது என்பது ஒரு கலை என்பதை நான் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் கற்றுக் கொண்டேன். வாயால் பேசுவது மட்டுமே பேச்சு அல்ல. கண்களால், காதுகளால், ஐம்புலன்களால் பேச முடியும். அது உடல் மொழி. உடல் மொழியால் சாதித்தவர்கள் ஏராளம்.

எப்படி, குறித்த காலத்தில் இலக்குகளை முடிக்கிறீர்கள்?

‘ஒருவன் அசாதாரணமான செயலுக்குத் தயாராக இல்லை என்றால் அவன் காலம் முழுவதும் சாதாரணமாகவே இருந்து விட வேண்டியது தான்’ என்று எங்கள்  கல்லூரிப் பேராசிரியர் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். இன்னொன்றும் சொல்வார். ‘இலக்குகள் தெளிவாக இல்லை என்றால் எத்தனை விளக்குகள் இருந்தாலும் நமக்கான பாதை இருட்டாகத்தான் தெரியும்’ என்பார்.

நான் அசாதாரணமான பாதையில் செல்கிறேன். இந்தப் பயணத்தின் போது வலியை பொறுத்துக் கொள்வதில் கூட எனக்கு சிரமம் இருப்பதில்லை.  ஆனால் வலிக்காமல் காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்  சிரமப்படுகிறேன்.  வலிகளை பொறுத்துக் கொண்டால்தான் வலிமையாக முடியும்.  எத்தனை சிறப்பாக குதிரை வண்டி இழுத்தாலும் அதற்கு சாட்டையடி உண்டு.  எத்தனை சிறப்பான மனிதனாக இருந்தாலும் விமர்சனங்கள் உண்டு. விமர்சனங்களின் உள்ளொளியைப் புரிந்து கொண்டு என்னுடைய பயணத்தை தொடர்கிறேன்.  இது என்னை வெற்றியாளன் போல் உங்களுக்கு காட்டுகிறது.

நான் சாதனையாளன் இல்லை.  ஆனால்,  சாதனையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பவன் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

‘என் போன்ற இளைய நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்.  உடன் இருப்பவர்களுக்கு  ஓடமாக இருங்கள் உதறிப் போனவர்களுக்கு பாடமாக இருங்கள்’ நாம் முன்னேறலாம் சாதிக்கலாம்.

குருபிரசாத் ஒரு குரு போல இருந்து அறிவுரை கூறுகிறார். சீடர்கள் போல கேட்டுக் கொள்பவர்கள் சிகரம் தொடலாம். =