வெற்றி நமதே – 10
திரு.M.G.இராஜமாணிக்கம் IAS
கேரள மாநில அரசின் முதன்மை இயக்குநா் – உள்ளாட்சித் துறை, ஆணையர் – ஊரக வளர்ச்சித்துறை
கற்கை நன்றே! கற்கை நன்றே!
பிச்சை புகினும் கற்கை நன்றே!!
கொன்றை வேந்தன்ல வர்ற Super வரிகள் இது. நான் சின்னப்பிள்ளையா இருக்கும் போது எங்க School Prayerல ஒவ்வொரு நாளும் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன்னு ஏதாவது ஒரு நீதி நூல் சொல்லணும். எங்க தமிழ் teacher என்னத்தான் அடிக்கடி சொல்லச் சொல்லுவாங்க. அதுல என் மனசுல பதிஞ்சு போன வரி தான் இது. அதுக்கு ஒரு explanation-ம் கொடுப்பாங்க. ‘‘டேய் பிச்சை எடுக்குற நிலைமை வந்தாலும் படிப்ப விட்றக்கூடாதுடா,
இல்லேன்னா, பிச்சை எடுத்தாவது படிச்சிடணும்டா’’. எவ்வளவு நிதர்சனமான உண்மைனு இன்னைக்கு உக்காந்து யோசிக்கும் போது புரியுது.
சின்ன வயசுல வீட்டுக்கு சொந்தக்காரங்க, விருந்தாளிங்கன்னு யாரு வந்தாலும் சரி, இல்ல நம்ம யாரு வீட்டுக்குப் போனாலும் சரி, நம்மளப் பாத்து கேக்குற முதல் கேள்வி ‘என்ன படிக்கிற?’ இல்ல, ‘நல்லா படிக்கிறியா?’ வீட்டை விட்டு கிளம்பும் போது செய்ற ஒரே advice நல்லா படிக்கணும்பான்னு!
நம்மளப் போல சாதாரண மனுஷங்கள சமூகத்துல தூக்கி நிப்பாட்ட படிப்பால மட்டும் தான் முடியும்ன்றதால தான் அந்த advice.
ஒரு வேளைகூட பெத்த புள்ளைகள பட்டினியா போட்ற கூடாதுன்ற ஒரு இலட்சியம் மட்டும்தான் நம்ம தாத்தாக்கள் காலத்துல இருந்துச்சு. படிப்புன்றது ஒரு பெரிய விஷயம் இல்ல. அப்படி படிக்காததுனால ஒரு நல்ல வேலைக்குப் போக முடியாம கஷ்டப்பட்டதால தான் நம்ம அப்பாக்கள் காலத்துல எப்படியாவது கடனை உடனை வாங்கியாவது புள்ளைய படிக்க வச்சுப்புடணும்னு எங்களைப் படிக்க வச்சாங்க. நம்மள மாதிரி நம்ம புள்ளை கஷ்டப்படக் கூடாதுன்னு தான் படி, படின்னு துரத்திட்டே இருந்தாங்க.
ஆனா இன்னைக்கு அதே advice-ஐ எவனுக்காவது சொன்னா நம்மள மேலயும் கீழயும் இந்தாளுக்கு வேறு வேலை இல்லைப்பான்ற range-க்குப் பாக்குறாய்ங்க. இவ்வளவு ஏன், நம்ம வீட்டு பிள்ளைங்கள்ட்ட இப்ப சொல்லிப் பாருங்க. ஏதோ கெட்ட வார்த்தைல பேசுன மாதிரி, ஏம்பா எப்ப பாத்தாலும் படிபடின்னு உயிரெடுக்கிறன்னு செல்லமா கோபிச்சுட்டு போயிடுதுக.
ஆனாலும் இப்பவும் நம்மெல்லாம் பிள்ளைங்கள படிபடின்னு துரத்துறதுக்குக் காரணம் என்னான்னு தெரியுமா? ஏன்னா நாம எல்லாரும் ஒன்னு ஏழ்மையான குடும்பத்துலயோ, இல்லேன்னா ஒரு lower middle class family-லயோ இருந்து வந்ததுனால தான்.
ஒரு மனுஷன் வாழ்க்கையில பெரிய நிலைமையை அடையணும்னா அவனோட குடும்ப Background, பணம், சந்தர்ப்பம்னு நிறைய விஷயம் இருக்கு. அதனால பணக்காரனா இருக்குறவனுக்கு ஏதாவது ஒன்னு இதுல கைகொடுத்திடும். ஆனா சாதாரண குடும்பத்துல பிறந்தாளு, உயர்ந்த நிலைமைக்கு வரணும்னா படிப்பு மட்டும் தான் கைகொடுக்கும்.
இன்னைக்கு இந்தியாவிலேயே நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானி இந்த இடத்துக்கு வர்றதுக்கு base அவங்க அப்பா அம்பானியோட பணமும் background-ம் தான். TATA, Birla, Adani-ன்னு யார எடுத்தாலும் இது பொருந்தும்.
ஆனால் சுந்தர் பிச்சை Google CEO ஆனதுக்கு ஒரே காரணம், அவரோட படிப்பு தான்.
ஆனா இப்ப இருக்குற பசங்ககிட்ட ஒரு புது trend வந்திடுச்சு. நல்லா படிக்கணும்டான்னு சொன்னா, உடனே ஒரு வசனம் பேசுவாய்ங்க. Sachin Tendulkar படிச்சாறா? Bill Gates College போனாறா? Mark Zuckerberg எந்த degree-ஐ முடிச்சிட்டு Facebook தொடங்குனார்னு.
உண்மைதான். படிச்சா மட்டும்தான் பெரியாளா, வெற்றியாளனா வரமுடியும்னு கட்டாயம்லாம் கிடையாது.
எத்தனையோ படிக்காத மேதைகள் வாழ்க்கைல success ஆன சரித்திரம் நம்ம முன்னாடி குவிஞ்சு கிடக்குது. ஆனா என்ன ஒன்னு அவங்களுக்கெல்லாம் family background, பணம்னு ஏதாவது கைகொடுத்துருக்கும். இல்லேன்னா, Extra-ordinary திறமையோட லட்சத்துல ஒருத்தரா இருப்பாங்க.
ஆனா balance 99,999 பேரும் விவசாயம் பாத்துக்கிட்டோ, ஜவுளிக்கடைல Salesman-ஆவோ, Auto Driver-ஆவோ இல்ல, Government Office-ல Clerk-ஆவோ வேலை பாக்குற Parents இருக்குற நம்மள போல சாதாரண குடும்பத்துல, சாதாரண திறமையோட வாழ்க்கையோட போராட்டம் நடத்துறவுங்க தான்.
சரித்திரம், பூகோளம்னு எதைப் புரட்டுனாலும் சாதாரண குடும்பத்துல இருந்து வர்ற நம்மள போல ஆளுங்க உயர்ந்த நிலைமையை அடையணும்னா அதுக்கு படிப்பு மட்டும் தான் கைகொடுக்கும்.
அம்பானி வேணும்னா அவங்க அப்பா backgroundல ஜெயிச்சிருக்கலாம்.
Sachin வேணும்னா Extra-ordinary திறமைல success ஆயிருக்கலாம்.
ஆனா மீனவ குடும்பத்துல பிறந்த அப்துல்கலாம் உன்னத நிலைமைக்கு வந்தது படிப்புனால மட்டும்தான் மக்களே!. வாத்தி படத்துல வர்ற dialogue மாதிரிதான்.
‘படிப்பு தான் மரியாதையை சம்பாதிச்சுக் கொடுக்கும்’.
அப்படி படிப்புனால தனக்கு மட்டுமில்லாம அந்தப் பகுதிக்கே மரியாதையை தேடித் தந்த ஒரு ஆளைப் பற்றித்தான் இந்த கதைல பேசப் போறோம்.
‘‘கொடிது கொடிது வறுமை கொடிது
அதினினும் கொடிது இளமையில் வறுமை’’ன்னு நம்ம ஒளவைப் பாட்டி நம்ம ஆளப் பத்தித்தான் முன்னாடியே பாட்டு பாடுச்சான்னு தெரியல. அப்படி இளமையிலேயே வறுமை வாட்டி எடுக்கிற வீட்ல, படிப்பு வேணாம்னு வேலைக்கு போகச் சொல்ல, வீட்டுக்கே தெரியாம காட்டுக்குள்ள போயி படிச்சு இன்னைக்கு காட்டுக்கே ராஜாவா வலம் வந்து ‘Mr. Kaziranga’ன்னு பேர் வாங்குன தமிழன் திரு. சிவக்குமார், I.F.S. தான் நம்ம கதை(தா)நாயகன்.
நம்ம கதை நாயகனோட சொந்த ஊர் நீலகிரி மாவட்டம், கூடலூர் வனப்பகுதியில் இருக்கிற நாடுகாணின்ற குக்கிராமம். அப்பா பெரியசாமியும், அம்மா ெரங்கம்மாளும் கூடலூர் காட்டுல கூலி வேலை செஞ்சுதான் தன்னோட மூணு பிள்ளைகளுக்கு, மூணு வேளை சோறே போட முடியும்ன்ற அளவுக்குத்தான் பொருளாதார நிலைமை. சொந்த ஊர்ல இருக்கிற ஒரு நடுநிலைப்பள்ளியில மூணாங் கிளாஸ் படிக்கும் போது பேர் கூட எழுதத் தெரியலேன்னு கூடலூர்ல ஒரு சின்ன English Medium School-இல் சேர்க்க, அங்க நம்மாளுக்குப் பரீட்சை வச்சு அவர் திறமைக்கு LKG படிக்கிறதுக்கு promotion குடுத்தாங்க. 3-ங் கிளாஸ்ல இருந்து Straight LKG என்னா ஒரு promotion… அங்க LKG படிக்க வந்த, பொட்டு பொடிசுங்களுக்கிடையில பெரியாம்பளயா திரிஞ்ச நம்மாளு, School-க்கு போனதவிட பக்கத்துல இருக்குற தங்கமணி தியேட்டர்க்கு போனதுதான் அதிகம்.
கொஞ்ச நாள் இப்படி ஓட, ஒரு நாள் பக்கத்துல இருக்குற இன்னொரு தியேட்டர்ல படம் பாக்கப் ேபாக, Interval-ல, அதே தியேட்டர்ல படம் பாக்க வந்த அப்பாவும் மகனும் சந்திக்க, ‘மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் வந்தன. இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையேன்ற’ range-ல சீனாகி, இவன் சரிப்பட்டு வரமாட்டான்னு இவங்க கிராமத்துக்கு பக்கத்துலயே இவர் தம்பி 2வது படிச்சிட்டிருந்த schoolல கொண்டு போயி இவற 1வது சேத்து விடுறாங்க. படிக்கிறதைவிட இவன எங்கயும் போகாம பாத்துக்கிறனும்தான் அந்த schoolல சேத்தாங்க.
அய்யோ வெட்கம்னு நம்மாளுக்கு நாணம் தலையை திங்க, அங்க இருந்த மகேஷ்வரி teacher நம்மாள்ட்ட ஒரு யோசனை சொல்றாங்க. நீ அரை பரீட்சைல நிறைய மார்க் எடுத்தேனா உன்னை நேரா 2-ங் கிளாஸ்ல அனுப்பிடுறேன்னு. நம்மாளும் படிச்சு மார்க் எடுக்க, தம்பி கூடவே 2-ங்கிளாஸ். அப்புறம் 3வது படிக்கும் போது இன்னொரு ஆஃபர் 450 எடுத்தா straight 5-வது, 490 எடுத்தா straight 6வதுனு. But அந்த deal எனக்கு ரொம்ப புடிச்சிருக்குனு நம்மாளு விட்டத பிடிக்க முக்கி, முக்கி படிச்சு 490-க்கு மேல மார்க் வாங்கி straight 6வது promotion. 3வதுல இருந்து LKG போட்டதுக்கு பழிக்குப் பழி… திரும்ப 3வதுல இருந்து 6வதுக்கு.
என்னா மக்களே பரமபதம் விளையாடுற மாதிரி 3வதுங்கிறாய்ங்க, 6வதுங்கிறாய்ங்கன்னு நினைக்கிறீங்களா? நம்மாளு படிச்சிட்டிருந்த 1980-காலகட்டத்துல வாத்தியார் பாத்து போடுறதுதான் கிளாசும் வயசும். இப்ப மாதிரி Certificate Register ஒன்னும் இல்ல.
அப்படி நம்மாளும் 8-ங் கிளாஸ் படிச்சு முடிக்கிறாரு. சரி, நம்ம புள்ள பெரிய படிப்பு படிச்சு முடிச்சிட்டான், இனி வீட்டுக் கஷ்டத்தை சமாளிக்கணும்னா நம்மோட சேர்ந்து இவனும் காட்டு வேலைக்கு வந்தா தான் முடியும்னு நினைச்சு அவுங்க அப்பா Forester கையில கால்ல விழுந்து மரத்துக்கு குழி எடுக்கிற வேலை வாங்கிக் கொடுக்கிறாரு. நம்மாளுக்கோ அப்பதான் படிப்பு சூடு புடிக்கிற time. ‘நான் படிக்கணும்னு சொல்ல’, ‘நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும்’னு அடிச்சு இழுத்துட்டு போயி Forester-ட்ட விட்றாரு. வேற வழி இல்லாம வேலைக்குப் போக ஆரம்பிக்குது அந்தப் புள்ள. ஒரு நாளைக்கு 40 ரூபாய் சம்பளம். அதுக்கு 200 குழி தோண்டனும்.
மனுசனுக்கு வாழ்க்கைல கிடைக்கிற எல்லாமே ஒரு அனுபவம்தான். அந்த சின்னச் சின்ன அனுபவங்களை வாழ்க்கைல சரியான முறையில் பயன்படுத்துறவன்தான் வெற்றியாளனா வர்றான்.
மனுஷன் காட்டுலயே பிறந்து அங்கயே வளர்ந்ததால, வழிநெடுக… காட்டுமல்லின்னு… ஜாலியா காட்டை நேசிச்சிட்டுத்தான் இருந்தாப்ல. இருந்தாலும், காட்டுல வேலைக்குப் போனதுக்கு அப்புறம் தான் காட்டு வளங்களை எப்படி பாதுகாக்கிறது, காடு அழிப்பு (deforestation), காடு வளர்ப்புனு (Afforestation) நிறைய பாத்து புரிஞ்சிக்கிறாரு.
இப்படி வேலை பாக்கிறதுக்கு இடையிலதான் நம்மாளு படிக்கிற ஆர்வத்துல 10-ங் கிளாஸ் privateல எழுதலாமேன்னு தேடிப் போயி அங்க famousஆ tuition centre நடத்துற சபரீசன்ற teacherஅ பாக்குறாரு.
நம்ம வெற்றியடைஞ்ச நிறைய பேரோட சரித்திரத்தைப் புரட்டுனா ஒரு உண்மை தெரியும். ஏதாவது ஒரு காலகட்டத்துல ஏதாவது ஒரு சந்தர்ப்பம் (opportunity) வரும். அதை சரியா புரிஞ்சிகிட்டு பயன்படுத்துறவங்கதான் வாழ்க்கைல உயர்ந்த நிலைமைக்கு வர்றாங்க. அப்படி நம்மாளோட ஒரு opportunityஆ கிடைச்சவர்தான் சபரீசன் Teacher.
நம்மாளோட படிக்கிற ஆர்வத்தை பாத்து அவரும் உற்சாகப்படுத்துறாரு. அவருக்குத் தெரியாது, நம்மாளு அப்பாவுக்குத் தெரியாம அங்க படிக்க வந்த கதை.
அதுமட்டுமில்ல, நம்மாளு வேறு ஒரு plan போட்டாப்ல. Daily 40 ரூபாய்னு வாரம் 240 ரூபாய் கூலியை வீட்ல கொடுக்கணும். அதுக்காக daily 200க்கு பதிலா 400 குழி தோண்ட ஆரம்பிச்சாரு. அப்ப 3 நாள் வேலை பாத்தா போதும். மிச்சம் இருக்குற 3 நாள் 10-ங் கிளாஸ் tution. அப்படியே வேலைக்கு நடுவுல அப்பாவுக்குத் தெரியாம படிப்பு. என்னா மனுஷன்யா… ஒரு ஆளுக்கு படிக்கணும்னு இவ்வளவு ஆர்வமா! ெபத்தாங்களா, செஞ்சாங்களான்னு தெரியல.
நம்மெல்லாம் படிக்கும் போது school நிப்பாட்டிட்டு வேலைக்கு அனுப்ப மாட்டாய்களான்னு இருக்கும். வேலைக்கு போற ஆர்வம் ஒன்னும் இல்ல. Schoolல பண்ற torture அதுவும் English படிக்கச் சொல்ற torture இருக்கே ஸ்ஸ்ஸ்ஸ் அப்பப்பா… இப்ப நினைச்சாலும் கண்ணைக்கட்டுது.
எந்த ஒரு திடமான நம்பிக்கைக்கும், உழைப்புக்கும் பலன் கண்டிப்பா கிடைக்கும்ன்ற மாதிரி, நம்மாளும் 10வதுல 400க்கு பக்கத்துல மார்க் வாங்க, அதுவும் கணக்குல 98 மார்க் வாங்கி பாஸ் பண்றாரு.
அவங்க அப்பாவுக்கு தெரியாம படிச்ச கதை tution teacher-க்கு தெரிய, அவர் போயி நம்மாளோட அப்பாகிட்ட பேசி ‘11வது படிக்க வைங்க, அதான் நல்லா படிக்கிறான்லனு’ advice பண்ண, முதல்ல முடியாதுன்னு மறுத்த ஆள், அப்புறம் என்ன நினைச்சாரோ தெரியல, சரி போய் தொலையட்டும், ‘எழுதுனவன் ஏட்டக் கெடுத்தான்; படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்’னு எங்க படிச்சு விளங்கன்னு கருத்தம்மா rangeல வசனம் பேசிட்டு படிக்கிறதுக்கு சம்மதிக்கிறாரு.
தெரியாம படிச்சே 400க்கு பக்கத்துல மார்க் வாங்குன ஆள், தெரிஞ்சு படிச்சப்போ District Topperஆ வர்றாரு 12வதுல. இத்தனைக்கும் 11வது, 12வது படிச்ச Governemnt Schoolல ரெண்டே teacher தான் இருந்தாங்க. அப்புறம் என்ன Entrance Exam எழுதி BDS படிக்க Counselling வருது. 1750 ரூபாய் DD எடுக்கணும். 500 ரூபாய் மட்டும்தான் எங்கிட்ட இருக்குன்னும் அதுக்குமேல கொடுக்க சல்லிக்காசில்லன்னு அப்பா சொல்ல, பல் உடையுற மாதிரி பல் டாக்டருக்கு படிக்கிற கனவு உடைஞ்சு போகுது.
மனுஷன் வெறுப்பாயி, பழனி முருகன் மாதிரி அப்பாட்ட கோவிச்சிட்டு வீட்டை விட்டு வால்பாறைல இருக்குற பெரியம்மா வீட்டுக்கு போயிடுறாரு. ஒரு வழியா சமாதானம் பண்ணி, திரும்ப கூட்டிட்டு வந்து, காட்டுக்கு வேலைக்கு போக ஆரம்பிக்கிறாப்ல. இப்படி எதார்த்தமா ஒரு நாள் காட்டுல வேலை செய்யும் போது DFO வர்றாரு.
Manoj Kumar Sarkarனு Bengalல இருந்து வந்தவர். காட்டுல கூட்டமா வேலை செஞ்சிட்டு இருந்தவங்கட்ட உடைஞ்ச தமிழில் பேச, நம்மாளு English பேசி அசத்த, துரை Englishல்லாம் பேசுதேன்னு இவர உத்து பாத்தப்பத்தான் தெரியுது, ஏய் உன்னை Paperல பாத்திருக்கேனே… நீ தான District Topperஆ வந்த பையன்னு கேட்க, நம்மாளு நடந்த கதையை சொல்ல, Emotion ஆன அந்த மனுஷன் Idea கொடுத்து help பண்ணி, மேட்டுப்பாளையத்தில் B.Sc. Forestry படிக்க சேர்த்து விடுறாரு. கடவுள் இருக்கான் குமாருன்ற மாதிரிதான் நம்ம DFO. Forestry படிக்கவும் காசு வேணுமே, அதனால படிச்சிகிட்டே STD Booth, Printing Pressனு மனுஷன் கிடைச்ச வேலையெல்லாம் செஞ்சு ‘பிச்சை புகினும் கற்கை நன்ேற’க்கு உதாரணமா நின்னாரு.
அப்படித்தான் மேட்டுப்பாளையத்துல படிக்கும் போது English படிக்க ஒரு tution centre-ஐ தேடிப் போக, அந்த tution centre owner தனபால் sir, அவரை 10வது புள்ளைகளுக்கு science tution எடுக்கச் சொல்ல, ஒருவிதமா நல்ல வருமானம் கிடைச்சு, தன்னோட தம்பியை படிக்க வக்கிற அளவுக்கு வந்தாப்ல. அப்படியே நம்மாளும் M.Sc. Forestry படிக்கிறாப்ல. காட்டை அதிகமாக நேசிச்சதாலயோ, வாழ்க்கைக்கு வழிகாட்டுன DFO-வோட தாக்கத்தாலயோ நம்மாளுக்கு அவரும் IFS ஆகணும்னு கனவு வருது. எவ்வளவோ பாத்துட்டோம்; இதை பாத்திட மாட்டோமான்னு இறங்கி படிக்கிறாப்ல. அப்பல்லாம் UPSC Forest Service Exam மதுரைலதான் எழுதணும். அதுக்குப் போகக்கூட காசில்லை நம்மாள்ட்ட. அதுக்கு Sponsor பண்ணது அவரோட ஒரு தோழி. ‘‘தோழியா… என் காதலியா… யாரடி என் கண்ணே’’ன்னு பாட்டுப்பாடி அவங்களயே பின்னாடி கல்யாணம் பண்ணிட்டாருன்றது வேற விஷயம். Sponsor பண்ணது வீண் போகல. நம்மாளு 2000-ஆம் ஆண்டு Indian Forest Service (IFS) பண்றாரு.
காட்டையும், மரத்தையும் காட்டுத்தனமா நேசிச்ச மனிசனுக்கு காட்டைப் பாதுகாக்குற உயரதிகாரியா வேலை. என்ன ஒரு கொடுப்பினை. அதுமட்டுமில்ல, அந்த வட்டாரத்துலயே முதல் IFS அதிகாரி. இவரை role modelஆ வச்சுத்தான் பின்னாடி நிறைய IAS, IFS அதிகாரிகள் அந்தப் பகுதியில் உருவானாங்கின்றது இப்பவும் வரலாறு.
நம்ம செய்யுற வேலையை நேசிச்சாலே நல்லா வேலை செய்ய முடியும். நம்ம ஆளுக்கோ எதை நேசிச்சாரோ அதுதான் வேலையாவே அமையுது. சும்மா விட்ருவாரா? மனுஷன் அசாம்ல IFSல Post ஆகி பின்னிப் பிடல் எடுக்க ஆரம்பிச்சாரு. IFS அதிகாரியா அசாம்ல இவரு செஞ்ச சாதனையெல்லாம் பட்டியல் போடணும்னா இன்னொரு Book தான் எழுதணும். அவ்வளவு சாதிசசாரு மனுஷன். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்ன்ற மாதிரி ஒரு விஷயத்தைச் சொல்றேன்.
அசாம்ல காசிரங்கானு ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் நிறைய இருக்கிற சரணாலயம் இருக்கும். 1986-லயே World Heritage Siteஆ notify பண்ணி சரணாலயத்தை சுத்தி இருந்த இடத்தை எடுக்க உத்தரவு போட்டாங்க. நிறைய எதிர்ப்பு காரணமா யாரும் அதை நடைமுறைப்படுத்தவே இல்ல. நம்மாளு Charge எடுத்து வெறும் 430 ச.கி.மீ.
ஆக இருந்த சரணாலயத்தை 1300 ச.கி.மீ. ஆக மாத்தினார். அதாவது நீலகிரி மாவட்டத்துல பாதி அளவு. அப்பா… கண்ணைக் கட்டுதா! நம்மாளும் காட்டுல இருந்து வந்ததால அதுல பாதிப்படைஞ்ச மக்களுக்கு அங்கயே சுற்றுலா மூலம் வருமானம் கிடைக்கிற மாதிரி செஞ்சு காட்டையும் மக்களையும் காப்பாத்துனதால ‘Mr. Kaziranga’ என அன்போடு அழைக்கப்படுவாயாக!னு மக்கள் வாழ்த்துனாங்க.
மூணாங்கிளாஸ்ல இருந்து LKG-க்கு reverse gearல போயி, தங்கமணி தியேட்டர்ல படம் பாத்துட்டு, காட்டுல குழி எடுத்துட்டு சுத்திட்டு இருந்த ஆள், பெத்தவங்க கஷ்டத்தையும் புரிஞ்சுகிட்டு, teacher சொல்றத தட்டாம கேட்டு மதிச்சி நடந்து, கிடைச்ச சந்தர்ப்பங்களை சரியா பயன்படுத்தி படிச்சு இன்னைக்கு அந்த வட்டாரத்துல மட்டுமில்ல, மாநிலம் விட்டு மாநிலம் போயி அசாம்லயும் கலக்கி Mr. Kaziranga-வா மாறுனது ஒரே ஒரு மாயத்தினாலதான் மக்களே! அதுதான் படிப்பு!
அசுரன் படத்துல வர்ற climax வசனம்…
‘‘காடு இருந்தா எடுத்துகிடுவாங்க. ரூபாய் இருந்தா புடுங்கிடுவாங்க. ஆனால்் படிப்பை மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது சிதம்பரம்.’’
என்ன ஒரு Powerful message. அதனால மக்களே! மீண்டும் சொல்றேன், ‘‘பிச்சை புகினும் கற்கை நன்றே!’’ ஒண்ணுமே இல்லேன்னாலும் படிப்பு மட்டும் நம்மகிட்ட இருந்தா… அப்புறம் வெற்றி நமதே! =