சாதனையாளர் பக்கம்

மதுரை ஆர். கணேசன்

மிழ் கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. தமிழ் மொழியை செவிமடுத்து கேட்போர்க்கு சேரும் பெருஞ்சிறப்பு என்றால் மிகையில்லை.! அருந்தமிழுக்கு வலுசேர்க்கும் வண்ணமாக தேசியக்கவி பாரதியின் (செப்டம்பர் 11) நினைவு நாளை முன்னிட்டு மதுரையில் ஒரு பொது அமைப்பின் சார்பில் பாரதி நினைவுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ் ஆர்வலர்கள் கூடியிருந்த சபையில் “..புதுநெறி காட்டிய புலவன்..” என்ற தலைப்பில் மா.அழகுவேலும் பேசி விட்டு மேடையிலிருந்து கீழே இறங்கியதும், பலர் கைகொடுத்து வாழ்த்துகளை தெரிவித்தனர். 

அதில் “..ஒரு பெரியவர் நல்ல உச்சரிப்புடன் நல்லா பேசின என்ன படிக்கிறப்பா? என்ற போது ‘‘அய்யா நான் மாணவன் இல்லை தமிழாசிரியர்’’ என்றதும் ‘‘அப்படியா?!.. வாழ்த்துக்கள்’’ என்று ஆசீர்வதித்துச் சென்றார்.

ஒரு மாணவர் போலத் தோற்றம் கொண்டவர் பேச்சாளராகவும், கவிஞராகவும் மட்டுமல்ல பட்டிமன்ற நடுவர், ஆன்மீகம் மற்றும் இலக்கிய சொற்பொழிவாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் திருவிளக்குப் பூஜை நடத்தி வைக்கின்ற நாயகன் என்று பன்முகத் திறமையாளராகச் சுற்றிச்சுழன்று கொண்டிருக்கிறார்.

மதுரையில் இளங்கலை தமிழ், முதுகலை தமிழ் பட்டங்களை, செந்தமிழ் கலை மற்றும் கீழ்திசைக்கல்லூரியில் படித்து முடித்தவர். தற்போது மா.அழகுவேல் (23), விகாசா ஜூபிலி பள்ளியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமல்ல தன்னுடைய குடும்ப சூழ்நிலைக்காக மாலை நேரத்தில் கூரியர் நிறுவனத்தில் பகுதி நேரப் பணியாற்றுகிறார்.

கவித்திறன் மேடை அமைப்பிற்கும் மற்றும் பைந்தமிழ் இலக்கியப் பேரவைக்கும் மதுரை மாவட்ட ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.

அத்துடன் ‘தமிழா தமிழ் பேசு’ புலனத்தில் பாட்டுப் போட்டியின் நடுவராகவும், பல்வேறு பட்டிமன்றங்களுக்கு நடுவராகவும் இருந்திருக்கிறார்.

தமிழ் சார்ந்த அமைப்புகளுக்கும், பள்ளியில் பலநிகழ்ச்சிகள் நடத்திக் கொடுத்திருக்கிறார். மாணவர்களை பல இலக்கிய போட்டிகளில் பங்கேற்க வைத்து முதல் பரிசு பெற வைத்திருக்கிறார். சமீபத்தில் மகாகவி பாரதியார் கொள்ளுப்பேத்தி உமாபாரதி அவர்களிடமிருந்து வாழ்த்தும் பெற்றிருக்கிறார்.  

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற சமையல் போட்டியில் மூன்றாம் பரிசை மாநகராட்சி ஆணையாளரிடமிருந்து பெற்றுள்ளார். 

2020 ஆண்டு முதல் “..கலாம் கனவு நாயகன் விருது, சிறந்த இளம் ஆராய்ச்சியாளர் விருது, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நட்சத்திர செல்வர், மற்றும் கலைஞர் விருட்சம் விருது உள்ளிட்ட 40க்கும் மேலான விருதுகள் அவரது திறமையைப் பறை சாற்றுகின்றன..” ஆசிரியர் அழகுவேல் நன்னடத்தைக்கு வெகுமதியாக பள்ளி தலைமையாசிரியர் சமீபத்தில் பாராட்டி நற்சான்றிதழ் கடிதம் வழங்கியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.!

தமிழாசிரியர் அழகுவேல் பற்றி அவரிடம் பயிலும் மாணவர்களில் சிலர்..,

ஹ.சாஜித் ஹமீது, ஏழாம் வகுப்பு,

“…ஒரு ஆசிரியர் என்பவர் சமூகத்தில் அறிவையும் மதிப்புகளையும் பெறுவதற்கு மாணவர்களின் வழிகாட்டியாக திகழ்பவர். அதில் எனக்குப் பிடித்த ஆசிரியர் மா.அழகுவேல் அய்யா. எங்களைப் போன்ற மாணவர்களுக்கு தமிழ் மொழியை இனிதாக கற்பிக்கிறார். அன்பானவர், ஆன்மீகப்பற்று கொண்டவர், அனைவரிடமும் கண்ணியமாகவும் நட்பாகவும் நடந்து கொள்கிறார்…”

ர.மணிகண்டன், ஏழாம் வகுப்பு,

“..எனது பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் போற்றுகிறேன்.எனக்குத் தமிழாசிரியராகவும், சகோதரனுக்கு சகோதரனாகவும் தோழமையுடன் வழிநடத்தும் எனதாளுமை என் ஆசான் திரு.அழகுவேல் அவர்களே எனக்குப் பிடித்த ஆசிரியர்.

எங்களுக்குப் பாடங்களை நடத்தும் போதே அனைவர்க்கும் புரியும் வகையில் நடத்துபவர். தமிழ் இலக்கணத்தை நடத்துவதிலும் பல நீதிக்கதைகள் கூறுவதிலும் வல்லவர். மாணவர்களை நல்வழிப்படுத்தும் நல்லாசான்..” என்று மேற்கண்ட மாணவர்கள் ஆசிரியர்க்கு அன்புச் சான்றிதழ் மட்டுமா இதோ தலைமையாசிரியர்..!

திரு. அமிர்த சுதாகரன், தலைமையாசிரியர், விகாசா ஜூபிலி பள்ளி, மதுரை,

“..எமது பள்ளியில் பணியாற்றி வரும் தமிழாசிரியர் திரு.அழகுவேல் பாடங்களைத் திறம்பட நடத்துவதில் திறமையும் கொண்டவர், மாணவர்களிடத்தில் கனிவுடன் கூடிய கண்டிப்பைக் காட்டி நல்வழிப்படுத்துவதில் வல்லவர், அவர் போன்ற நல்லாசிரியர்கள் எதிர்காலத்தை செதுக்கும் சிற்பிகள் என்பதில் கடுகளவும் ஐயம் இல்லை. அவருக்கு என் வாழ்த்துக்களும் ஆசிகளும்..” என்று கடிதம் அளித்திருக்கிறார்.

 “..என்னைத் தமிழால் செதுக்கியவர் மதுரை இலக்கிய பேரவை தலைவர் மற்றும் தமிழக அரசின் டாக்டர். ராதாகிருஷ்ணன் விருது பெற்ற முனைவர் சண்முகத் திருக்குமரன் அவர்கள் தான் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்..” என்று பெருமிதம் கொள்ளும் மா.அழகுவேல் தமிழாசிரியர் இனி நம்மோடு மனம் திறந்து பகிர்ந்து கொள்ளுகிறார்…,

“..என்னுடைய சிறுவயதில் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் போதே பேச்சுப்போட்டிகளில் கலந்து கொண்டு பேசியிருக்கிறேன் மற்றும் பொது வெளியில் பத்தொன்பது வயதிலிருந்து பேச ஆரம்பித்தேன்.

அதேபோல சிறுவயது முதல் தாய்மொழி தமிழ் பிடிக்கும். அதுவே என் தமிழ் பற்றுக்கும் தமிழார்வத்திற்கும் காரணம், தாயைப் பிடிக்காத குழந்தை யாரும் இல்லை அதுபோல தமிழே என் முதல் தாய்..!

தமிழை விரும்பிப் படித்தேன் அத்துடன் தமிழ் ஆசிரியர் ஆகவேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அந்த முயற்சியின் பலனாக இன்று தமிழாசிரியர் ஆகியிருக்கிறேன்.

அதேபோல எங்கள் வீட்டில் உள்ள அனைவர்க்கும் பட்டிமன்றம் பார்க்கும் பழக்கம் உண்டு. அதைப் பார்த்து பார்த்து நானும் ஒருநாள் மேடை ஏறி பட்டிமன்றத்தில் பேசவேண்டும் என்ற எண்ணம் இருந்தது, அதுவும் சாத்திய மாகியிருக்கிறது.

தமிழால் தன்னை உயர்த்திக் கொள்ளும் மாணவர்களுக்கு பாரதி சொன்னது போல “..யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்..” தமிழ் மொழியை நாம் நாள்தோறும் பரப்பி வளர்க்க வேண்டும் அதுவே நம்மை உயர்த்தித் தரணி புகழச்செய்யும் என்று திடமாக நம்புகிறேன்…”

இளம் வயதிலேயே ஆர்வமுடன் தமிழ் போதிக்கும், தமிழாசான் மா. அழகுவேல் தமிழன்னைக்குக் கிடைத்த ஒரு நல்ல மகன். அவர்தம் தமிழ்ப்பணி சிறக்க ‘ஆளுமைச் சிற்பி’ வாழ்த்துகின்றது. =